வீர தீர சூரன் - விமர்சனம்

 வீர தீர சூரன் படத்தின் அறிவிப்பு வீடியோ, போஸ்டர்ஸ், டீஸர், ட்ரைலர் என எல்லாமே நிச்சயம் இது நல்ல படமாக இருப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியபடியே இருந்தன. ஆனாலும் மொக்கைப் படங்களைக் கொடுப்பதை consistent ஆக விக்ரம் அவர்கள் செய்து கொண்டிருந்ததால் ஒரு புறம் சந்தேகமும் இருந்தது. அருண்குமாரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான சித்தா சிறப்பான படமாக இருந்தாலும் அவரும் சிந்துபாத் போன்ற மொக்கைப் படங்களை எடுத்தவர் தான் என்பதாலும் சந்தேகம் இருந்தது. ஆனால் நான் சந்தேகப்பட்டது போல் அல்லாமல் ஒரு அட்டகாசமான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

தன் மனைவியும் மகளையும் காணவில்லை அதற்கு பெரியவர் என்றழைக்கப்படும் ரவியும் அவனது மகன் கண்ணனும் தான் காரணம் என போலீஸ் ஸ்டேஷனில் ஒருவன் புகார் அளிக்கிறான். அதை கற்பழிப்பு & கொலையாக மாற்றி பெரியவர் என்ற ரவியையும் அவனது மகனையும் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார் SP யாக வரும் எஸ்.ஜே. சூர்யா. அதையும் அன்றைய இரவே செய்து முடிக்க திட்டமிட அதற்குள் எஸ்.ஜே. சூர்யாவை கொலை செய்ய அவர்களிடம் பத்து வருடங்களுக்கு முன்பு வேலை செய்து விட்டு தற்போது குடும்பம், குழந்தைகள் என அமைதியாக மளிகை கடை வியாபாரம் செய்து வாழ்ந்து வரும் காளியாக வரும் விக்ரமை களமிறக்குறார்கள். அவர்கள் சொல்வதை செய்யாவிட்டால் தன் குடும்பம் ஆபத்தில் மாட்டிக்கொள்ளும். அவர்கள் சொல்வதை செய்தால் மீண்டும் வன்முறை வாழ்க்கைக்குள் சென்று நிம்மதியை இழக்க நேரிடும் என்ற நிலையில் எப்படி தன்னையும் தன் குடும்பத்தையும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்புவித்தான் காளி என்பதே "வீர தீர சூரன்".


காளியாக விக்ரம். அட்டகாசமாக செய்திருக்கிறார். ஒரு நல்ல நடிகராக இருந்தும் தொடர்ந்து மொக்கை படங்களாக நடிக்கிறாரே என வருத்தமாக இருந்தது. ஒரு காலத்தில் நான் அவருடைய ரசிகனாக இருந்தேன் என்பதே மறந்து போய்விட்டேன். ஆனால் இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்கு காட்சியின் போது பின்னணியில் ஒலித்த "மதுர வீரன் தானே" பாடல் நினைவுபடுத்த என்னையறியாமல் கைத்தட்டி ரசித்தேன். தங்கலான் விக்ரம் அவர்களுக்கு நீண்ட நாள் கழித்து ஒரு வெற்றிப்படமாக (பொன்னியின் செல்வனின் வெற்றி விக்ரமின் வெற்றி மட்டுமே அல்ல. அதனால் அதை சேர்க்கவில்லை) அமையுமென நினைத்தேன். படம் சொதப்பிவிட்டது. ஆனால் வீர தீர சூரன் நிச்சயம் விக்ரம் அவர்களுக்கு வெற்றிப்படம் தான். தில், தூள், சாமி பட காலத்தில் அவருக்கு இருந்த மாஸை வெளிக்கொண்டு வந்திருக்கிறது இந்த படம். எஸ்.ஜே.சூர்யா வழக்கம் போல பட்டையை கிளப்பியிருக்கிறார். பெரியவர், கண்ணன் இருவரையும் எவ்வாறு என்கவுண்டர் செய்ய வேண்டுமென குரூரத்துடன் ரசித்து ரசித்து சொல்லும் காட்சியும் கிளைமாக்ஸ் காட்சியில் இருவரிடமும் மாறி மாறி டீல் பேசும் காட்சியும் அந்த கதாப்பாத்திரம் எப்படிபட்டது என சொல்லிவிடுகின்றன. கண்ணனாக வரும் சுராஜ் வெஞ்சிரமூடு தொடக்கத்தில் கொஞ்சம் மலையாள வாடை வீச பேசும் தமிழ் உறுத்தினாலும் போக போக செட் ஆகிவிட அவரையும் ரசிக்க முடிகிறது. விக்ரமின் மனைவியாக வரும் துஷாரா, வெங்கட்டாக வருபவர், சுராஜின் தங்கையாக நடித்திருக்கும் பெண் என பலரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்த கதையின் முக்கியமான சிறப்பாக நான் கருதுவது கதை நடக்கும் களம். ஒரு சிறிய கிராமம். அங்கே நடக்கும் திருவிழா. திருவிழா காலத்தில் தன் பகையை தீர்த்து கொள்ள நினைக்கும் மனிதர்கள் என அட்டகாசமான ஒரு கதை களத்தை பிடித்த விதத்திலேயே இயக்குனர் S.U அருண்குமார் ஜெய்த்துவிட்டார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்ததன் மூலம் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார். மளிகை கடை, கட்டி முடிக்கப்படாத வீடு, திருவிழா காலத்து கடைகள் மேடைகள், போலீஸ் ஸ்டேஷன் என அனைத்தும் கொஞ்சமும் சினிமாத்தனம் தெரியாமல் அசலாக இருக்கின்றன. பாடல்கள் ஒண்ணும் மனதில் பதியவில்லை என்றாலும் பின்னணி இசை படம் முடிந்து வெளியே வந்த பின்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க்கிறது. சிலர் இரண்டாம் பாதி சுமார் என சொல்லிக் கேட்டேன். ஆனால் என்னளவில் சிறப்பாகவே இருந்தது. வெறும் ஆக்சன் மட்டுமே இருந்தால் கதையோடும் கதாப்பாத்திரங்களோடும் ஒன்ற முடியாமல் போய்விட வாய்ப்புண்டு. எனவே டிராமா + ஆக்சன் என்றே நகர்த்திக் கொண்டு போகிறார். அது சிலருக்கு இழுவையாக தோன்ற வாய்ப்புள்ளது.

நிறைய இடங்களில் சின்ன சின்னதாக சுவாரசியங்களை அளித்துக் கொண்டே இருக்கிறார். "கிழங்கு" என்ற கண்ணிவெடியை வைத்து கொலை செய்ய நினைக்கும் இடத்தில் வலிப்பு வந்து மயிரிழையில் உயிர் தப்புவது, விக்ரம் தான் போலீஸ்-க்கு தகவல் சொல்லியிருக்க வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும் காட்சி, விக்ரம் - துஷாரா பேசுவதைக் கேட்டுவிடும் வெங்கட் என நிறைய. எல்லாவற்றிலும் முக்கியமாக "அந்த ஒரு சம்பவம்". அல்டிமேட்.

ஆனால் SP இறந்து கிடைக்கும் இடத்திற்கு போலீஸ் வந்த பிறகும் அருகிலேயே அத்தனை பேர் அடித்துக் கொண்டிருக்க ஒரு போலீசும் அங்கே வரவில்லை. கன்னி வெடி வைத்து அத்தனைப் பேரைக் கொன்றுவிட்டு அரசுப் பேருந்தில் குடும்பச் சுற்றுலா செல்வதைப் போல கிளம்பி போய்க்கொண்டிருக்கிறார் விக்ரம். என்னடா இது போலீசுக்கு வந்த சோதனை என்று தான் தோன்றியது. அதே போல இடை வேளைக் காட்சி. "என்ன இன்டெர்வல்லா?" என மாறி மாறி கேட்டுக் கொள்ள விளக்கைப் போட்டபின்பே உறுதியானது இது இடைவேளை தான் என்று. ஏன் இது போன்ற ஒரு ஆக்சன் படத்திற்கு அப்படி ஒரு இடைவேளைக் காட்சி வைத்தார் என புரியவில்லை. துள்ளாத மனமும் துள்ளும் குட்டியின் அம்மா, 96 ஜானுவின் கணவன் வரிசையில் வீர தீர சூரன் திலீப்.

நீண்ட நாள் கழித்து திரையரங்கை விட்டு முழு மனதிருப்தியுடன் நான் வெளியே வந்த விக்ரம் படம் வீர தீர சூரன். பார்ட் 1 க்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

நீங்களும் நிச்சயம் திரையரங்கில் சென்று பாருங்கள்.

கருத்துகள்