எஸ்.ராமகிருஷ்ணனின் "உறுபசி" நாவல் வாசித்தேன். சம்பத் என்பவனின் மரணத்தில் தொடங்குகிறது நாவல். அவனது மரணம் அவனோடு கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்த அழகர், ராமதுரை, மாரியப்பன் என்ற மூன்று நண்பர்களை மீண்டும் சந்திக்க வைக்கிறது. சம்பத்தின் மனைவி ஜெயந்தி. சம்பத் கல்லூரியில் காதலித்த பெண் யாழினி. ஓவ்வொருவரின் பார்வையின் வழியே சம்பத் என்ற கதாப்பாத்திரம் வாசகனுக்கு விவரிக்கப்படுகிறது. முதலில் "லூஸா" இருப்பானோ என்பதை போல நம்மை யோசிக்க வைக்கும் அந்த கதாப்பாத்திரம் பக்கங்கள் செல்ல செல்ல நமக்குள் ஒருவித சுவராசியத்தையும் வாசகனின் உள்ளத்தில் இரக்கத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழ் பிரிவில் முதல் வருடம் எந்த பெண்களும் சேராமல் இருந்து இராண்டாம் வருடத்தில் ஒற்றை தென்றலாக வந்து சேருகிறாள் யாழினி. யாழினியின் அப்பா கடவுள் மறுப்பு கொள்கைகள் கொண்டவர். யாழினியின் நட்பு சம்பத்தையும் கடவுள் மறுப்பாளனாக மாற்ற கடவுள் மறுப்பு கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலமும் கல்லூரியில் கலகக்காரனாக இருப்பதன் மூலமும் வாழ்க்கை தடம் புரள்கிறது. கல்லூரிக்கு முழுக்கு போடுகிறான், கூட்டங்களில் கலந்து கொள்ள பணம் வாங்குகிறான், வாங்கிய பணத்தில் குடித்து குடித்து குடிக்கு அடிமையாகிறான், கிடைக்கும் வேலைகளுக்கு அவ்வப்போது செல்கிறான், அதை பல காரணங்கள் சொல்லி கைவிடுகிறான், லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக்கி கொள்கிறான், அதன் மூலம் அறிமுகமான ஜெயந்தியை 42 வது வயதில் திருமணம் செய்து கொள்கிறான், வேலைக்கு செல்வதும் பிறகு ஏதேனும் காரணங்கள் சொல்லி கைவிடுவதுமாக இருக்கிறான், முடிவில் இறந்து போகிறான். சம்பத் கதாப்பாத்திரம் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என நாம் எரிச்சல் கொள்ளும் போது அதற்கான தொடக்கபுள்ளியாக அவனது சிறுவயது சம்பவம் ஒன்றினை அவனது நண்பன் மாரியப்பனிடம் சம்பத் கதாப்பாத்திரம் சொல்லும். அது சம்பத்தின் மீது இரக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆனாலும் என்னை நாவலில் மிகவும் கவர்ந்த கதாப்பாத்திரம் சம்பத்தின் மனைவி ஜெயந்தி. தாயில்லாமல் வீட்டு வேலை செய்து அவள் மீது அக்கரையற்ற அப்பாவோடு வாழ்ந்து வருகிறாள் ஜெயந்தி. வேலை விஷயமாக கேரளா செல்லும் அவளது அப்பா 25 வயது பெண்ணை மறுமணம் செய்து கொண்டு வந்து பகல்களில் கூட உடலுறவு கொண்டிருக்க அந்த அருவருப்பான சூழ்நிலையை தவிர்க்க காலையிலிருந்து இரவு வரை ஒரு லாட்சிற்கு கீழே இருக்கும் டெலிபோன் பூத்திற்கு வேலைக்கு செல்கிறாள். அந்த லாட்சில் அடிக்கடி தங்கும் சம்பத் அவளோடு பேசி நட்பாக அவனது வித்தியாசமான செய்கைகள் அவளுக்கும் பிடித்துப் போகிறது. ஒரு நாள் திடீரென என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா எனக்கெட்டு அவள் சம்மதமென மறுநாளே சொல்ல அடுத்த 1 மணி நேரத்தில் மாலை மாற்றி தாலி கட்டி வீட்டில் சொல்லிக் கொள்ள விருப்பமில்லை எனக் கூறி அவனோடு சேர்ந்து கிளம்புகிறாள். அதன் பிறகு எப்போதும் அவனோடு சண்டையோ, அவன் மீது வெறுப்போ, அவன் செய்கைகளின் மீது சந்தேகமோ கொள்ளாமல் அவன் கூடவே எல்லா இடங்களுக்கும் மறுபேச்சில்லாமல் பயணிக்கிறாள். அவன் நோய்வாய்ப்பட்டு மரணத்தின் தருவாயில் மருத்துவமனையில் கிடக்கும் போதும் உடனிருக்கிறாள். அந்த கதாப்பாத்திரத்தின் சகிப்புத்தன்மை எல்லையற்றதாக இருந்தது.
நினைத்ததை செய்து கொண்டு எந்த வரைமுறைகளுக்குள்ளும் சிக்காமல், வாழ்க்கை ஓட்டத்தில் ஒரு இறகை போல சம்பத் போன்று நம்மில் பலர் இருக்க கூடும். அவர்களுக்கு நாம் "அப்நார்மல்" என்ற பெயர் வைத்திருக்கிறோம். காரணம் அவர்கள், பிறந்து பெற்றோர் சொல்படி கேட்டு பள்ளி, கல்லூரிகளை முடித்துவிட்டு கைநிறைய சம்பாதிக்கும் உத்தியோகத்திற்கு சென்று பெற்றோர் சம்மதத்தோடு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெற்று அவர்களையும் தன்னைப் போலவே இந்த சமூகத்தில் உலவவிடும் வேலையை சிறப்பாக செய்துவிட்டு நிம்மதியாக செத்துப்போக வேண்டும் என்ற வழக்கமான வரைமுறைகளை மீறுபவர்கள். சம்பத்தை நாவலில் புரிந்து கொள்ள முயல்வதை போல நிஜ வாழ்வில் உலவும் சம்பத்துகளை நாம் புரிந்து கொள்ள தவறிவிடுகிறோம்.
எஸ்.ராமகிருஷ்ணன் தான் ஒரு தேர்ந்த கதைசொல்லி என்பதை நாவலின் ஒவ்வொருபக்கத்திலும் நிரூபித்துக் கொண்டே செல்கிறார். விறுவிறுப்பான திருப்பங்களும் முடிச்சிகளும் இல்லாமல் சம்பத் என்ற கதாபாத்திரத்தின் வழியே சுவாரசியமான வாழ்க்கை விசாரணையை நடத்திச் செல்கிறார்.

கருத்துகள்