கதைகளிடம் கற்போம்

 திருடுவதற்காக போன வீட்டில்  திருடிய பொருட்களுடன் வெளியேறாமல் புத்தக அலமாரியில் இருக்கும் ஒரு புத்தகத்தை எடுத்து நேரம் போவேதே தெரியாமல் படித்தபடியே இருந்து போலீஸிடம் சிக்கிய ஒருவன் என்பதாக ஒரு கதையை எழுதினால் உங்களால் நம்ப முடியுமா? நிச்சயம் முடியாது. ஆனால் மேலே நான் கூறியிருப்பது கதை அல்ல. நிஜமாகவே நடந்த சம்பவம்.

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் 38 வயது நிரம்பிய ஒருவன் பூட்டிய வீட்டுக்குள் திருடச் செல்கிறான். விலை உயர்ந்த ஆடைகளையும் இன்ன பிற பொருட்களையும் திருடிக் கொண்டு வெளியேறச் செல்லும் போது அங்கே அலமாரியில் இருக்கும் ஒரு புத்தகம் அவனது கவனத்தை ஈர்க்கிறது. அந்தப் புத்தகத்தை வாசிக்க எடுத்தவன் நேரம் போவதே தெரியாமல் அப்படியே வாசித்தபடி உட்கார்ந்து கொண்டிருக்கிறான். வீட்டின் உரிமையாளர் அவன் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் காவல்துறைக்கு தெரியப்படுத்துகிறார். காவலர்கள் வந்த பிறகு தப்பிக்க முயன்றவன் காவலர்களிடம் பிடிபட்டு இப்போது சிறையில் இருக்கிறான். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அந்த புத்தகத்தின் ஆசிரியர் அந்தத் திருடன் சிறையில் வாசிப்பதற்கு அந்த புத்தகத்தின் ஒரு காப்பியை அனுப்பி வைக்கிறார். The gods at six : The lliad at Aperitif  time என்பதே அந்த புத்தகம்.


திருட வந்த வீட்டில் திருடிக் கொண்டு ஓடுவதைக் கூட ஒரு புத்தகம் மறக்கச் செய்திருக்கிறது என்றால் புத்தக வாசிப்பின் ருசியை விளக்கிட இதை விட அருமையான எடுத்துக்காட்டு இருக்காது. புத்தகங்கள் வாசித்தால் எனக்கு என்ன கிடைக்கும் என கூகூலாரிடம் (Google) கேட்டால் பல காரணங்களை பட்டியலிடுவார். ஆனால் என்னுடைய சுய அனுபவத்திலிருந்து கூறுவதென்றால் புத்தக வாசிப்பு எதிரில் இருக்கும் சக மனிதனை மதிக்க கற்றுக் கொடுக்கும். சக மனிதனின் சுக துக்கங்களை அவனுடைய பார்வையில் (Empathy) இருந்து பார்க்க கற்றுக் கொடுக்கும். காற்றாற்று வெள்ளம்  போல் ஆர்ப்பரிக்கும் நம் மனவோட்டத்தை அமைதியான ஆறு போல் மாற்றி நம் உள்ளத்தில் இருப்பவற்றை ஒழுங்குபடுத்தி மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள கற்றுக் கொடுக்கும். இத்தனைக்கும் மேல் நீங்கள் அதுவரை வாழ்ந்து பார்த்திராத அல்லது வாழ்வதற்கு சந்தர்ப்பமே அமையப் பெறாத ஒரு வாழ்கையை உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும். பல நூறு வாழ்க்கையின் அனுபவங்களை சில நூறு பக்கங்களின் வழியே வாழ்ந்திட வழிவகை செய்பவை புத்தகங்கள்.

புத்தகங்கள் வாசிப்பதால் நான் மற்றவர்களை விட மேம்பட்டவன் அல்லது தவறுகளே செய்யாமல் யாரையும் காயப்படுத்தாமல் வாழ்பவன் என்று நிறுவ முயல்வதல்ல என்னுடைய நோக்கம். நானும் தினம் தவறுகள் செய்கிறேன். தவிர்க்க முடியாத கோபத்தில் ஆற்றாமையில் மற்றவர்களை காயப்படுத்திவிடுகிறேன். ஆனால் நான் தவறு செய்துவிட்டேன் என்ற சுயபரிசோதனை செய்து கொள்ளும் மன முதிர்ச்சியை புத்தகங்களே எனக்கு கொடுத்தன. கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

கதைகள் என்பவை வெறும் கதைகள் அல்ல. அவற்றின் வழியே கற்பதற்கு ஏராளம் இருக்கின்றன. ஆகவே கதைகளின் வழியே கற்போம். கற்பிப்போம். 

Audio Blog Link:



கருத்துகள்