Good Bad Ugly - விமர்சனம்

 அஜித் ரசிகர்கள் - மன்னிக்கவும் - AK வின் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடித் தீர்க்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் எடுக்கப்பட்ட படமாக வந்திருக்கிறது Good Bad Ugly. வழக்கமாக படம் முழுக்க ஒரே மாதிரி வரும் AK இந்த படத்தில் விக்ரமிற்கு போட்டியாக பல வித கெட்டப்களில் வருகிறார். ஆச்சர்யமாக அனைத்திலும் அட்டகாசமாக - இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது கூட படத்தின் வசனங்கள் தான் நினைவில் வந்து போகின்றன. அந்த அளவிற்கு படம் முழுக்க அஜித் படங்களின் ரெபெரென்ஸ்கள் குவிந்து கிடக்கின்றன - இருக்கிறார்.

மனைவிக்காகவும் மகனுக்காகவும் கேங்ஸ்டர் வாழ்க்கையை துறந்து போலீஸில் சரணடைந்து 14 வருடங்களுக்குப் பிறகு வெளியே வரும் AK வேண்டாமென விட்ட வன்முறையை மீண்டும் மகனுக்காக கையில் எடுக்க வேண்டியதாகிறது. இத்தனை நாட்கள் Good ஆக இருந்து வெளியே வரும் AK மீண்டும் Bad ஆகவும் Ugly ஆகவும் ஏன் மாறுகிறார் என்பது தான் மீதி.


AK வாக வரும் AK படம் முழுக்க full எனர்ஜியில் இருக்கிறார். நீண்ட நாட்கள் ஆகிவிட்டன அஜித்தை இப்படி உற்சாகமாக பார்த்து. பழைய வின்டேஜ் அஜித்தை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்படியான லுக்கும் வசனங்களும் வரிசைக் கட்டி வந்து கொண்டே இருக்கின்றன. போதும் போதுமெனும் அளவிற்கு வந்து ஒரு கட்டத்தில் திகட்டவும் ஆரம்பித்து விட்டது. கதை என்னவோ நாம் ஏற்கனவே பார்த்த அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தான். எனக்கு தெரிந்து கதை இது தான் என முடிவானதும் இயக்குனர் ஆதிக், அஜித் நடித்த அத்தனைப் படங்களையும் பார்த்து ஒவ்வொரு படத்தின் ரெபரென்ஸையும் எங்கெங்கே காட்சியாக வைக்கலாம் வசனமாக வைக்கலாம் என்பதை தான் படப்பிடிப்பு முன்பு வரை செய்து கொண்டிருந்திருப்பார் என நினைக்கிறேன்.

பக்கா தியேட்டர் மெட்ரியல் தான் படம். அஜித் ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசிக்கிறார்கள். 2K கிட்ஸை கவரும் அத்தனை சோஷியல் மீடியா டிரெண்டிங் விஷயங்களையும் அப்படியே மழைச்சாரல் போல படம் முழுக்க தூவி இருக்கிறார்கள். அது நன்றாக ஒர்க் அவுட் ஆகவும் செய்திருக்கிறது.

ஆதிக் இயக்கத்தில் மார்க் ஆண்டனி தான் முதன் முதலாகப் நான் பார்த்த திரைப்படம். அதற்கு முந்தைய திரைப்படங்களை நல்லவேளையாக பார்க்கவில்லை. மார்க் ஆண்டனி சத்தம் அதிகம் நிறைந்த படம். அதனை OTT-ல் தான் பார்த்தேன். அதனால் காதுகள் தப்பின. ஆனால் இந்த படத்தில் மாட்டிக் கொண்டேன். படம் முழுக்க சத்தமிருந்தாலும் "புலி புலி" பாடலின் போது காதுகள் கதறிவிட்டன. மைல்ட் மைகிரேன் வந்துவிட்டது.

AK வின் ஃப்ளாஷ்பேக் என சொல்லப்படும் கதையில் சவுத் கொரியாவின் டாங் லீ, ஜான் விக், professor ஆகியோர் வரும் போது "இவ்ளோ நேரம் அஜீத் படங்களைத் தான் reference-ஆ காமிச்சிட்டு இருந்தாய்ங்க.. இப்போ இன்டர்நேஷனல் லெவல்-க்கு போய்டாய்ங்களே.. ஒரு வேளை இது ஸ்பூப் மூவியா?" என யோசிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டார்கள்.

படம் முடிந்து வெளியே வருகையில் பல கெட்டப்களில் பயங்கர எனர்ஜியுடன் சமீபகாலப் படங்களில் வெளிப்பட்டு வந்த பூமரை உள்ளே ஒளித்து வைத்து விட்டு ட்ரெண்ட்க்கு ஏற்ற vibe பான படத்தை கொடுத்த அஜீத் தான் மனம் முழுக்க நிறைந்து கிடக்கிறார். இது சந்தேகமில்லாமல் அஜீத்தின் ஒன் மேன் ஷோ தான். 




கருத்துகள்