நான் வாசித்த நூல் : முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் - மருதன்

உலகமே போரில் கலந்து கொள்வதற்கு என்ன காரணமாக இருந்திருக்க முடியுமென்று, இரண்டு உலகப் போர்கள் குறித்தும் நீண்ட நெடு நாட்களாகவே தெரிந்து கொள்ள விரும்பினேன். சமீபத்தில் பார்த்த டாம் ஹாங்ஸ் நடித்து வெளியான "Grey hound" திரைப்படம் இன்னும் என் ஆர்வதைத் தூண்ட மருதன் அவர்கள் எழுதிய "முதல் உலகப் போர்", "இரண்டாம் உலகப் போர்" இரண்டு புத்தகங்களையும் வாசித்து முடித்தேன். 

இரண்டாம் உலகப் போருக்கான காரணமாக  ஹிட்லரை சுட்டிக் காட்டியதைப் போன்று முதல் உலகப் போருக்கான காரணமாக ஒரு தனி நபரையோ அல்லது தனி ஒரு நாட்டையோ குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதோடு "முதல் உலகப் போர்" புத்தகம் தொடங்குகிறது. 

ஐரோப்பிய நாடுகளுக்கிடையே "மௌனமாக" நிலவி வந்த யார் பெரியவன் என்ற போட்டியும், மற்ற நாடுகளை காலனியக்கி கொள்வதின் மூலம் தனது நாட்டின் பொருளாதாரத்தை பெருக்கி கொள்ளும் திட்டமும் முதல் உலகப் போருக்காக எல்லா நாடுகளையும் தயார்படுத்தி இருந்தன. 

300-க்கும் மேலான அரசாங்கங்களாக பிளவுண்டு கிடந்த ஜெர்மன் அரசாங்கம் மற்ற ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்தும் மற்ற சிறு சிறு ஜெர்மன் அரசாங்கங்களின் கலவரங்களில் இருந்தும்  தன்னை பாதுகாத்து கொள்ள நினைத்தது. நெப்போலியன் தலைமையில் வலிமையாக இருந்த பிரான்ஸை ஜெர்மனின் ஒரு பகுதியான பிரஷ்யா எதிர்க்க, நெப்போலியனின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத பிரிட்டனும் ஜெர்மனின் மற்ற அரசாங்கங்களும் பிரஷ்யாவிற்கு  உதவ 1815ஆம் ஆண்டு நெப்போலியன் போரில் தோற்கடிக்கப்படுகிறார். இதனால் ஜெர்மன் அரசாங்கங்களில் மிகவும் வலிமை பெற்ற அரசாங்கமாக பிரஷ்யா மாறுகிறது. 39 அரசாங்கங்களை கொண்ட தேசமாக ஒன்றுபட்ட ஜெர்மனி பிரஷ்யாவின் தலைமையில் உருவாகிறது.

1862 ஆம் ஆண்டு பிரஷ்யாவின் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிஸ்மார்க் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியை வலுவான, பொருளாதாரமிக்க நாடாக மாற்றினார். ஆனால் அதற்கு  தடையாக இருந்த ஜனநாயகத்தை வெறுத்தார். பிரான்சின் ஐரோப்பிய ஆதிக்கத்தை முறியடிக்க நினைத்த பிஸ்மார்க், முதல் அடியை பிரான்ஸ் எடுத்து வைக்கட்டும் என்று காத்திருக்க, பிரஷ்யாவின் (ஜெர்மனியின்) வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாத பிரான்சும் பிரஷ்யா மீது போர் தொடங்கியது. அதற்காகவே காத்திருந்த பிஸ்மார்க், பிரான்சின் வட கிழக்குப் பகுதியில் படைகளைத் திரட்டி பிரான்ஸை முறியடித்து, பிரான்சின் முடியாட்சியை முடித்து வைத்தார். பிரான்சில் புதிதாக ஆட்சியில் அமர்ந்த ஜனநாயக அரசு போரை நிறுத்திக் கொள்ளுமாறு பிஸ்மார்க்கை கேட்க அதற்கு அவர் சில நிபந்தனைகள் விதித்தார். முதலில் அதனை ஏற்க மறுத்த பிரான்ஸ், போரை தொடர்ந்து சமாளிக்க முடியாமல் மாபெரும் தொகையை இழப்பீடாகவும் இருநூறு ஆண்டுகளாக பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்த ஆல்சேஸ்லோரெயின் பகுதிகளை பிரஷ்யாவிற்கு விட்டுக்கொடுக்க சம்மதித்தது. பிஸ்மார்க்கின் இந்த ஆக்கிரமிப்பு முதல் உலகப் போருக்கான காரணங்களில் முக்கியமான ஒன்று. 

ஆஸ்திரிய-ஹங்கேரியின் சாம்ராஜ்யத்தில் இருந்த பல மொழி பேசும் மக்கள் போராட்டத்தில் குதிக்க எவற்றை அதிகார பூர்வ மொழியாக தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க முடியாமல் திணறினார் ஆஸ்திரிய-ஹங்கேரியை ஆட்சி செய்த பிரான்ஸ் ஜோசப். இது பால்கன் மொழிப் பிரச்சனை என அழைக்கப்படுகிறது. முதல் உலகப் போருக்கான காரணங்களில் முக்கியமான ஒன்று இது.

ஆஸ்திரியாவால் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட போஸ்னியா-ஹெர்சகோவ்னியா பகுதியின் தலைநகர் சரஜேவோவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார் ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் பெர்டினான்ட் மற்றும் அவரது மனைவி. ஆஸ்திரியா மீது கடும் கோபத்தில் இருந்தார்கள் செர்பிய மக்கள். ஒரு புரட்சி குழுவை சேர்ந்த ஒரு இளைஞன் இளவரசரையும் அவரது மனைவியையும் காரில் ஊர்வலமாக வரும் போது படுகொலை செய்ய பற்றிக் கொண்டது முதல் உலகப் போருக்கான தீ.


செர்பியா மீது ஆஸ்திரிய-ஹங்கேரி போர் தொடுக்க, ஜெர்மனி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க, ரஷ்யா ஆஸ்திரிய-ஹங்கேரியின் ஆக்கிரமிப்பை தடுக்க அப்படியே பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என ஒவ்வொரு நாடாக ஒவ்வொரு காரணங்களுக்காக முதல் உலகப் போரில் பங்கு கொள்ளத் தொடங்கின.

1914 தொடங்கி மாபெரும் உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்திய முதல் உலகப் போர் 1918 நவம்பர் 11 ஜெர்மனி நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி நாடுகளிடம் சரணடைந்தது. ஆனால் ஜெர்மனியின் மீது பல வித கட்டுபாடுகளும் பல குற்றச்சாட்டுகளும் நேச நாடுகளால் வைக்கப்பட்டன. 1919 ஜூன் 28-ல் வெர்சைல்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட ஜெர்மனி மாபெரும் தொகையை இழப்பீடாக நேச நாடுகளுக்கு கொடுக்க வேண்டும் எனவும், தனது ராணுவத்தை அதிகரிக்க கூடாது எனவும் பல நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது. ஜெர்மனியின் வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளியாக இந்த வெர்சைல்ஸ் ஒப்பந்தம் கருதப்பட்டது. ஜெர்மனிக்கு நிகழ்ந்த இந்த அவமானமே இரண்டாம் உலகப் போருக்கான முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது.


முதல் உலகப் போரில் ஒரு ராணுவ வீராக பங்கு பெற்ற ஹிட்லர் ஜெர்மனிக்கு நிகழ்ந்த அவமானத்தை வன்மத்தோடு மனதில் குறித்துக் கொண்டார். அத்தோடு போரின் போது அரசாங்கத்திற்கு எதிரான மனநிலையில் இருந்த கம்யூனிஸ்ட்களையும், ஜெர்மனிக்கு விஸ்வாசமாக இல்லாத (ஹிட்லரின் பார்வைக்கு) யூதர்களையும் இந்த நாட்டிலிருந்து அழிப்பது எனவும் சேர்த்தே குறித்துக் கொண்டார். யூதர்கள் மீதான ஹிட்லரின் இனவொழிப்பு தாக்குதல் இப்போது பிரதானமாக பேசப்படும் அளவிற்கு அதனை அவர் தொடங்கியிருந்த காலத்தில் ஐரோப்பிய நாடுகள் அவற்றைப் பெரிதாக பேசவில்லை. உள்நாட்டு விவகாரம் என்பதாகவே அதனை பேசாமல் தவிர்த்திருக்கிறார்கள். 

1919 வெர்சைல்ஸ் ஒப்பந்தம் மூலம் அடைந்த அவமானத்தை போக்கி ஜெர்மனியை ஐரோப்பிய நாடுகளில் வலிமைமிக்கதாகவும் வல்லரசாகவும் மாற்றிட நினைத்த ஹிட்லர் என்ற ஒற்றை மனிதரே இரண்டாம் உலகப் போரின் காரணகர்த்தா. கம்யூனிஸம் இருந்த வெறுப்பின் காரணமாக ஸ்டாலினையும் சோவியத் ரஷ்யாவையுமே ஐரோப்பிய நாடுகள் எதிரியாய் பார்த்தன. ஆனால் போலந்து, பெல்ஜியம், பாரிஸ் என்று ஹிட்லர் ஆடத் தொடங்கிய பின்பே அவை சுதாரித்துக் கொண்டன. இரண்டாம் உலகப் போரின் மூலம் உலகின் வல்லரசு நாடாக அமெரிக்கா தன்னை நிறுவிக் கொண்டது.

இரண்டு போர்களும் ஏராளமான உயிர் சேதத்தையும் பொருள் சேத்தையுமே ஏற்படுத்தின. ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பு ஆசையும் பொருளாதார விஸ்தரிப்பும் லட்சக்கணக்கானவர்களுக்கு கண்ணீரையே பரிசளித்திருக்கிறது. போருக்கு எந்த சம்மந்தமும் இல்லாத அப்பாவிகள் வீடிலந்து, சொந்த பந்தங்களை இழந்து சொல்லமாளாத துயரங்களை நெஞ்சில் சுமந்து திரிந்திருக்கிறார்கள். எங்கோ தொடங்கிய எத்தனை பகுதிகளில் எத்தனை மக்களை வதைத்திருக்கிறது. 

ஜெர்மனியோடு கூட்டு சேர்ந்து கொண்டு பிரிட்டனின் காலனியை பிடிக்க நினைத்த ஜப்பான், மலேயா சிங்கப்பூர் என்று ஆக்கிரமிப்பு செய்தது. அங்கு தேயிலை தோட்டங்களில் வேலை செய்த நூற்றுக்கணக்கான தமிழர்களை சிறைப்பிடித்து சயாம்-பர்மா ரயில் பாதை அமைக்கத் தொடங்கியது. காடுகளையும், மலைகளையும் கொண்ட அந்த பிரதேசத்தில் ரயில் பாதை அமைத்திட சொல்லில் அடக்கிட முடியாத துன்பங்களையும் சித்ரவதைகளையும் அனுபவித்து இறந்து போனவர்கள் ஏராளம். ஜப்பானிய ராணுவம் இப்படி மற்ற நாட்டின் மக்களை துன்புறுத்திக் கொண்டிருந்த போது, அமெரிக்கா சக்தி வாய்ந்த அணு குண்டுகளை நாகசாக்கி, ஹிரோஷிமா மீது போட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஜப்பானிய மக்களை கூண்டோடு அழித்தது. இரண்டு போர்களும் கிட்டத்தட்ட இரு தலைமுறையையே அழித்திருக்கிறது என்று சொல்லலாம்.

அழிவைத் தவிர எதையும் போர்கள் தருவதில்லை.

கருத்துகள்