**** Spoiler alert ****
நந்த கோபால குமரன் என்கிற NGK-வாக சூர்யா. விஜய், அஜித் போலவே முழுக்க மாஸ் நிறைந்த படங்கள்
செய்தாலும் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை சூர்யா அவ்வப்போது முயல்வதுண்டு.
அப்படி கதையை பெரிதாக நம்பி இன்னும் சொல்ல போனால் செல்வராகவன் என்ற “ஜீனியஸ்”
இயக்குனரை நம்பி சூர்யா செய்திருக்கும் படம் தான் இந்த NGK. ஆண்களே ரசிக்கும்
அளவிற்கு அத்தனை அழகாக, துறு துறுவென, செம்ம எனெர்ஜியுடன் இருக்கிறார். இதுவரை பார்த்திடாத
சின்ன சின்ன எக்ஸ்ப்ரசன்களில் அப்படி கவர்கிறார். நீண்ட வசனங்களை அத்தனை சிறப்பான
உடல் மொழியோடு வெளிப்படுத்தி தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை அழுத்தமாக நமக்கு
நினைவுறுத்துகிறார் சூர்யா. சரி ஹீரோ குறித்து பேசியாகிவிட்டது.
அடுத்து சாய் பல்லவி &
ராகுல் பரீத் சிங். முதலில் சில காட்சிகளில் எல்லாம்
நல்லபடியாக தான் இருந்தது. ஒரு ஒருமணி நேர படத்திற்கு பிறகு என்னை பயங்கரமாக
வெறுப்பேற்றிய கதாபாத்திரம் Mrs.NGK-வாக நடித்திருக்கும் சாய் பல்லவி தான். அரசியல்
கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற வியூகங்கள் அமைத்துக் கொடுக்கும் பெரிய கார்பரேட்
கம்பெனியின் மேலதிகாரியாக வரும் ராகுல் பரீத் & சூர்யா இருவருக்கும் தொடர்பு
இருப்பதாக நினைத்துக் கொண்டு முதன் முதலில் சாய் பல்லவி பேசும் காட்சியில்
தொடங்கிய வெறுப்பு கடைசி வரை எனக்கு மாறவேயில்லை. “பயங்கரமா நான் நடிக்குறேன் பாரு”
என அந்தம்மா கொடுத்த நடிப்பில் “அட சைக்கோ” என நான் உள்பட பல பேர் தியேட்டரில்
முனுமுனுக்கும்படி செய்தது. ஒருவேளை கல்யாணம் ஆகாததால் இப்படி “பிஹேவ்” பண்ணும்
மனைவிமார்கள் பற்றி எனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் கொஞ்சம் அதனை டோன்டவுன்
செய்திருக்கலாம். ஒரு காட்சியில் ஒரு பக்கம் சாய் பல்லவி கத்த, இன்னொரு பக்கம்
சூர்யா கத்த, “அய்யோ ஏண்டா சாவடிகுறிங்க” என ஆடியன்ஸ் கத்த என பல கத்தல்கள் உருவாக
சாய் பல்லவி கதாபாத்திரம் உதவியது.
செல்வராகவன் ஒரு
ஜீனியஸ் இயக்குனர். சந்தேகமேயில்லை. காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி,
புதுபேட்டை, ஆயிரத்தில் ஒருவன் (துள்ளுவதோ இளமையை விட்டுவிடுவோம்) என வேறு வேறு
கதைக்களத்தில் தனக்கென்ன ஒரு முத்திரையையும், தனக்கென்ன ஒரு ரசிகர் வட்டத்தையும்
ஏற்படுத்தியவர். எல்லா படங்களிலும் அவரது கதாபாத்திரங்கள் மிகவும் “weird” ஆக
நடந்து கொள்ளக் கூடியவர்கள். “இப்டி எவனாது செய்வானா”, “இந்த விஷயத்துக்கு இப்டியா
ஒருத்தன் நடந்துகுவான்” என எண்ணும்படி செய்திடும். ஆனால் அவர்கள் செல்வராகவனின்
உலகத்தில் உருவானவர்கள். அப்படித்தான் நடந்து கொள்ளுவார்கள். அவர்களில் உங்கள்
நடத்தையை, உங்கள் நண்பர்களின் செய்கைகளை கண்டுகொள்ள முடியாமல் போகலாம். அதற்காக
அப்படி யாரும் நடந்து கொள்ளவேமாட்டார்கள் என முழுதாக ஒதுக்கிவிட முடியாது.
முக்கியமாக அவரது ஹீரோக்களில் செல்வராகனின் முக்கால்வாசியை நீங்கள் உணரலாம்.
எதற்காக மேலே அவரது
இயக்கம் குறித்து பேசினேன் என்றால், இந்த படத்தில் சில குறைகள் தெரிந்தன.
எல்லோரும் அதனை உணர, எல்லோருக்கும் உறுத்திட வாய்ப்பில்லை. ஆனால் செல்வராகவன் என்ற
ஜீனியஸ் இயக்குனரின் படத்தில் அந்த உறுத்தல்கள் பெரிதாக எனக்கு தோன்றின. ஒரு
காட்சியில் கரை வேட்டியின் சக்தியை காட்டுகிறேன் என்று பாலாசிங் கதாப்பாத்திரம்
வேட்டியை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டு நடுரோட்டில் நின்றபடி கத்தி கூப்பாடு
போட்டு போக்குவரத்து காவலர்கள் இருவரை அசிங்கமாக திட்டுவார். வயதான பெண்மணி ரோட்டை
கடக்க முடியாமல் நடுவே நிற்கிறார் என்று. உடனே பொம்மை போல அத்தனை நேரம் நின்ற காவலர்களில்
ஒருவர் இன்னொருவரைப் பார்த்து “யோவ்.. வண்டி எல்லாம் நிறுத்துயா.. இந்தம்மா
போகட்டும்” என்பார். உடனே அந்த காவலர் வலது பக்கம் வரும் வண்டிகளை நிறுத்துவார்.
ஆனால் வயதான பெண்மணி இடது பக்கம் செல்வார். அப்பட்டமான செயற்கைத்தனம் அந்த
காட்சியில் தெரிந்தது. இது போலவே நிறைய காட்சிகளில் ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரம்
பேசி முடிப்பதற்காக பொம்மை போல் காத்திருந்து விட்டு “அய்யோ.. என் டயலாக்
வந்துடிச்சி” என்பது போல பேசும். அடுத்து சூர்யாவின் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி.
ஒரு காட்சியில் நிழல்கள் ரவியின் காது கேட்கும் மிஷின் வலது பக்கம் இருக்கும்,
இன்னொரு காட்சியில் இடது பக்கம் இருக்கும். அவருக்கு எந்த பக்கமிருந்து ஷாட்
வைக்கபட்டிருக்கிறதோ அந்த பக்கம் அவரது காது கேட்கும் மிஷின் சொருகப்பட்டிருக்கும்.
செல்வராகவனின் படம் என்பதாலேயே எனக்கு இவை பெரிய உறுத்தல்களாக இருந்தன.
படத்தில் எனக்கு
மிகவும் பிடித்திருந்த விஷயங்கள். சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு, பல இடங்களில்
பொருத்தமாக இருந்த வசனங்கள், சூப்பராக எடுக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சிகள்.
அதுவும் ஹாஸ்பிட்டல் சண்டைக்காட்சி “அடடா” ரகம்.
நிறைய பேருக்கு இந்த
படம் பிடிக்கவில்லை என்பது படம் முடிந்து வெளியே செல்லும் போது பேசியதிலிருந்து
புரிந்தது. அவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற விசாரணைக்குள் நான் செல்ல
விரும்பவில்லை. ஆனால் என்னுடைய புரிதல், சூர்யா கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பில்
இருக்கும் சிக்கல்கள் தான் காரணம் என்றே தோன்றுகிறது. ஆர்கானிக் விவசாயம், மக்கள்
தொண்டு, எதையும் எதிர்பார்க்காமல் உதவிடும் பண்பு, அத்தனை அன்பான வயதானவர்களுக்கு
மரியாதை கொடுக்கும் NGK அரசியலுக்குள் வந்த பின்பு நடத்தைக்களில் காட்டும்
வேறுபாடு ஒரு மாதிரி குழப்பமூட்டுகிறது. MLA கொடுக்கும் தொல்லையால் ஒரே நாளில்
மொத்தமாக உருமாறி அடிமட்ட லெவலில் இறங்கி மட்டையாக மடிவதெல்லாம் “என்ன ட்ரை
பண்றான் இவன்” என கலங்கிய குட்டையாகவே என்னை வைத்திருந்தது.
இணையத்தில் இப்போது
சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், சூர்யா கதாப்பாத்திரம் தான் பதவியை
அடைவதற்காக, மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக அவரது அம்மா, அப்பா இருவரையும்
வெடிகுண்டு வைத்து கொன்றது என. மக்களே இதனை “decode” செய்து புரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக தான் அதனை செல்வராகவன் வெளிப்படையாக சொல்லவில்லை என்று எழுதி
இருந்தார்கள். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பெற்ற தகப்பனை கொல்ல சொல்லும்
கொக்கி குமாரை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாடு மீது பைத்தியம் கொண்ட NGK,
மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திட வேண்டும் என நினைத்து அரசியலுக்கு வரும் NGK,
பதவிக்காக தன் சொந்த அப்பா, அம்மாவையே கொல்லும் அளவிற்கு அரசியல் அவனது குணத்தை
மாற்றிடுமா என புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை NGK கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பதால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லையா என்று தெரியவில்லை. NGK கதாப்பாத்திரத்தை அப்படிதான் வடிவமைத்து செல்வராகவன்
இந்த படத்தை எடுத்திருப்பார் என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.



கருத்துகள்