அஞ்சனம் அழகியபிள்ளை என்ற ஈ, எறும்புகளை கூட கொல்லத்துணியாத வள்ளலார் பக்தன் புதிதாக வாங்கிய வீட்டுக்குள் இருந்து கொண்டு தொல்லை கொடுக்கும் ஒரு எலி பற்றிய கதைதான் இந்த "மான்ஸ்டர்".
SJ சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன், மற்றும் எலியார் என அனைவரும் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். SJ சூர்யாவின் நடிப்பை நிச்சயம் இறைவிக்கு முன்பு இறைவிக்கு பின்பு என பிரித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். "ஹான்" என்று நடிக்கிறேன் என்ற பெயரில் வெறுப்பேற்றிக் கொண்டிருந்த அவர் இறைவிக்கு பின்பு கொஞ்சம் முதிர்ச்சியான நடிப்பை கொடுக்கத் தொடங்கிவிட்டதைப் போல் தெரிகிறது. ஆனாலும் இந்த படத்திலும் ஒரு காட்சியில் "இருக்கு ஆனா இல்லை" என்பது போல் ஒரு காட்சி வரும். ஐயையோ மறுபடியும் பழைய SJ சூர்யாவா என்பது போல் பயந்தேன். நல்லவேளை. நான் பயந்தது போல் எதுவும் இல்லை. கருணாகரன் காமெடி செய்ய வேண்டுமென்று பெரிதாக மெனக்கெடவில்லை. போற போக்கில் அவர் பேசும் சிறு வசனங்கள் கூட சிரிப்பை வரவழைத்தன. முக்கியமா பால் வாங்கும் செல்லும் காட்சி, சோஃபா எரியும் காட்சி. எலியும் அதே போல் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறது. அல்லது வாங்கியிருக்கிறார்கள். அல்லது செய்திருக்கிறார்கள். சில காட்சிகளைத் தவிர, இது அனிமேஷனா இல்லை ஒரிஜினலா என்பது தெரியாத அளவிற்கு தொழிநுட்ப ரீதியாக துல்லியமாக இருக்கிறது. அதே போல பின்னணி இசை. ஒரு ஜாலியான, பீல் குட் மூவி தான். என்றாலும் ஆரம்பத்தில் எலிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணி இசை, படம் பற்றி முன்பே அறியாதவர்கள் பேய் படம் போல என நினைத்துக் கொள்ளும் அளவிற்கு பயமுறுத்துகிறது.
இரண்டாம் பாதியின் கடைசி 30 நிமிடங்கள் வரை ஜாலியாக நகர்ந்த படம் எலி பாஷாணம் வைக்கும் காட்சிகளுக்கு பிறகு கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் ஆகிறது. எலியை கொல்ல முயற்சிக்கும் காட்சியில் வரும் பின்னணி பாடலும் அதை படமாக்கிய விதமும் உண்மையாகவே மனதை நெகிழச் செய்துவிட்டது. இதற்கு முன்பு நான் இருந்த அறையில் கரப்பாண்பூச்சி அதிகம் இருந்தது. பாத்ரூம் ஓட்டை வழியே உள்ளே நுழைந்து தரையில் படுத்துறங்கும் போது உடல் மீது அடிக்கடி ஊறி தூக்கம் கலைக்கும் படி தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்ததால் "சுந்தரா டிராவல்ஸ்" படத்தில் வடிவேலு எலியை பார்த்ததும் முகம் சிவந்து அடிக்க துரத்துவதைப் போல வாங்கி வைத்திருக்கும் "ஹிட்" ஸ்பிரேவை கரப்பான்கள் மீது தெளித்து கொல்வேன். ஒன்றல்ல இரண்டல்ல அதிகபட்சம் 50 கரப்பான்களை தாண்டியிருக்கும் கணக்கு. எலி, கரப்பான், எறும்பு, மனிதன் என எதுவானாலும் உயிர்வலி ஒன்றுதான். நான் அஞ்சனம் அழகியபிள்ளை இல்லை . இருந்தாலும் ஒருவேளை அந்த கரப்பான்களை கொன்றதை என்னால் தவிர்த்திருக்க முடியுமா என்று படம் முடிந்த பின் நெடுநேரம் யோசித்தபடியே இருந்தேன்.
தியேட்டரில் நிறைய காட்சிகளுக்கு கைதட்டல் பலமாக இருந்தது. பெண்களின் சிரிப்பொலியே அதிகம் கேட்டன. குழந்தைகளின் கோடை விடுமுறை "எலி" படம் என்ற அளவில் அவர்களை திரையரங்கு நோக்கி இழுத்து வந்திருக்கும் போல.
என் குழந்தைகள் அருகிலிருந்து
பார்த்துக் கொண்டிருந்தார்கள்"
என்பதாக ஒரு கவிதையை எஸ்.ராமகிருஷ்ணன் அவரது "துணையெழுத்து" கட்டுரை தொகுப்பில் குறிப்பிட்டிருந்தார். நாம் எதை செய்கிறோமோ அதை தான் குழந்தைகள் செய்கிறார்கள். நாம் எதை பேசுகிறோமோ அதை தான் குழந்தைகள் பேசுகிறார்கள். குழந்தைகள் பெரியவர்களின் செயல்களையும், வார்த்தைகளையும் அப்படியே உள்வாங்கி பிரதிபலிக்க கூடியவர்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு (ஆனால் விஷயம் குழந்தைகளுக்கு மட்டுமானது அல்ல), எல்லா உயிர்களுக்கும் உயிர்வலி ஒன்றுதான் என்பதை சிரிப்போடு சிந்திக்க சொல்லித்தரும் இந்த "மான்ஸ்டர்" நிச்சயம் பெரும் பாராட்டுக்குரியது.

கருத்துகள்