நான் வாசித்த நூல் : துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்

"துணையெழுத்து" - எஸ்.ராமகிருஷ்ணனின் அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு. சந்தித்த மனிதர்கள், தனக்கு நேர்ந்த அனுபவங்கள் என அத்தனையையும் எழுதாக்கியிருக்கிறார். வாசிக்க வாசிக்க ஒவ்வொரு கட்டுரையும் விதவிதமான எண்ணங்களையும், மனவோட்டத்தையும் ஏற்படுத்தியபடியே இருந்தன. 


மனக்குகை என்ற கட்டுரையில் தனது முதல் கதை வெளியாகியிருந்த சமயம் அவரது அண்ணன் கொஞ்சம் பணம் கொடுத்து புத்தகம் வாங்கிக் கொள்ளச் சொல்ல எஸ்.ராமகிருஷ்ணன் தான் படித்திருந்த, விழுப்புரம் அருகே சிறுகிராமத்தில் மலை குகையில் இருக்கும் ஓவியங்களை பார்ப்பதற்காக கிளம்பிவிடுகிறார். அங்கே வருவதற்கு துணையாக முன்பு ஒரு முறை இலக்கிய கூட்டத்தில் சந்திருந்த நண்பர் ஒருவரின் வீட்டைக் கண்டுப்பிடித்து இரவில் போய் சேர்கிறார். இரவு சாப்பாட்டை அங்கே சாப்பிடும்படி நண்பர் சொல்ல எஸ்.ரா பயணம் ஏற்படுத்திய களைப்பில் 4 சப்பாத்திகளை கடந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது "இதுக்கு மேல மாவு தான் சலிக்கனும்" என நண்பரின் மனைவி கூறிவிட்டு எழுந்து போகிறார். "யாரு இந்தாளு இப்படி சாப்பிடுறாரு" என நண்பரோடு சண்டை போடும் மனைவின் குரல் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கும் எஸ்.ராவின் காதுகளில் விழுந்து அவமானத்தால் கூனி குறுகியதாக எழுதியிருப்பார். இதைப் போலவே வேறொரு நண்பரோடு மைசூர் அருகே இருக்கும் கோவில்  சிற்பங்களை பார்க்கச் சென்று வசமிருக்கும் பணம் முழுவதையும் செலவழித்து விட்டு சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் வழி இல்லாமல் குளிரில் வெட்ட வெளியில் படுத்திருந்து விட்டு மறுநாள் ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் கடன் வாங்கி வீடு வந்து சேர்ந்ததாய் எழுதியிருந்தார். இரண்டையும் படிக்கும் போது ஏன் எழுத்தாளன் சிற்பங்களின் மீது இப்படி ஆவல் கொண்டிருக்க வேண்டும்? அப்படியே ஆர்வமிருந்தாலும் ஏன் எவ்வித முன்னேற்பாடும், வழிச் செலவுக்கு பணமும் இல்லாமல் போய் கஷ்டப்பட வேண்டும்? ஒருவேளை எழுத்தாளன் என்பவன் இப்படித்தானா? எதிர்காலம் குறித்த எந்த திட்டமிடலும் இல்லாமல் கண நேரத்தில் தோன்றும் எண்ணங்களின் படி காற்றில் அலைக்கழிக்கப்படும் சருகினை போன்றவனா? அதுபோன்ற தருணங்களில் ஏற்படும் அனுபவங்கள் தான் அவனது எழுத்துக்கான விதைகளா? கேள்விகள் தோன்றிக் கொண்டே இருந்தன. இதோடு கவிஞர் பிரமிள் பற்றிய கட்டுரை எழுத்தாளர்கள் என்பவர்களே கொஞ்சம் விநோதமானவர்கள் தான் போலும், அதனால் தான் இந்த மனித கூட்டத்தில் ஒன்ற முடியாமல் தனி உலகில் வசிக்கிறார்கள் எனத் தோன்றியது.

ஒன்று இரண்டு என்றில்லை ஒவ்வொரு கட்டுரையும் அத்தனை சுவாரசியம். சிறு வயதில் ஒரு பொய் சொல்லி உடன் படிக்கும் மாணவனின் மிரட்டலுக்கு பயந்து பணம் கொடுப்பது, ரிஷிகேஷ் சென்ற இடத்தில மகனோடு வந்திருக்கும் தாய் மகனுக்கு இனியும் தொல்லை தர விரும்பாமல் கங்கையில் குதிப்பது, பக்தி பாடல்கள் எழுதும் கவிஞர் தன் 12 வயது மகளை சுற்றி இருக்கும் வீடுகளுக்கு அனுப்பி கடன் வாங்கிடச் செய்வது, மொட்டைமாடியில் வைத்திருக்கும் தொட்டிச் செடிக்கு தண்ணீர் வார்ப்பது பற்றி யோசிக்காமல் குடும்பத்தோடு வெளியூர் சென்றுவிட்டு திரும்பியதும் தண்ணீரின்றி வறண்டு பழுத்துப் போய் கிடக்கும் செடியைக் கண்டு வருந்துவது, அந்த தொட்டிச் செடியை மனிதர்களோடு ஒப்பிடும் அவரது மனைவி, ஜிம் கார்பெட் என்ற பிரிட்டிஷ் இந்தியாவின் நைனிடாலில் தங்கியிருந்த ஆங்கில எழுத்தாளரின் வசிப்பிடம் தேடிச் சென்று அவர் வேலை செய்த தபால் நிலையம் தேடுவதும் அவர் வேட்டையாடிய காட்டை சுற்றிப் பார்ப்பதும் அவரை தரிசித்த நைனிடாலின் புகழ்பெற்ற ஏரியின் கண்களுக்கு தன்னை தருவதும், என்று சொல்லிக் கொண்டே போகுமளவிற்கு அத்தனை கட்டுரைகளும் "அடடா" ரகம். இவை அனைத்தையும் குறிப்பேதும் எடுக்காமல் நினைவிலிருந்தே எழுதுகிறேன். இது ஒன்றே போதுமென நினைக்கிறேன் "துணையெழுத்து" என்னை எப்படி கவர்ந்திருக்கிறது, எத்தனை ஆழமான பாதிப்பை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள.

புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு  தோன்றிய கேள்விகள். ஒரு மனிதனுக்கு இத்தனை அனுபவங்களா இருக்கும்? அல்லது நடந்த சம்பவங்களை அப்படியே சொல்லாமல் கொஞ்சம் சுவாரசியம் கூட்டுவதற்காக புனைவினை கலந்திருக்கிறாரா? அல்லது ஒரு எழுத்தாளன் என்பதாலேயே நடந்த சம்பவங்களை வேறு கோணத்தில் உணர்ந்து வாழ்வின் சிக்கல் குறித்தும், வாழ்க்கை சொல்லித் தரும் படிப்பினைக் குறித்தும் பேசுகிறாரா?
எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து எப்போதும் பனித்துளியை கைகளில் ஏந்துவதைப் போன்றது. படித்து முடிக்கும் வரை நம்மை குளிர்ச்சியான மனநிலையிலேயே வைத்திருக்க கூடியவை. எத்தகைய மனநிலையில் படிக்கத் தொடங்கினாலும் ஊற்றப்படும் நீரை தன்னுள்ளே விரைந்து இழுத்துக் கொள்ளும் வறண்ட நிலத்தினைப் போல வாசகனைத் தன்னுள்ளே இழுத்துக் கொள்வதுதான் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து. ஏதோ உணர்ச்சிவயப்பட்டு இதனை நான் சொல்லவில்லை என்பதை எஸ்.ராமகிருஷ்ணனை வாசித்தால் நீங்களும் உணர்வீர்கள். கட்டுரை, சிறுகதை, புத்தக விமர்சனம் என எதுவாக இருந்தாலும் சுவாரசியமாக இருப்பவை அவரது எழுத்து. 

அனுபவ கட்டுரை புத்தகங்கள் நான் அதிகம் வாசித்ததில்லை. அதில் அப்படி என்ன சுவாரசியம் இருந்துவிடப் போகிறது என்ற எனது முன்முடிவே அதற்கு காரணம். ஆனால் இந்த புத்தகம் அனுபவ கட்டுரைகள் குறித்த என் பார்வையை மாற்றியிருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களும் நமக்கு ஏதோ ஒன்றை கற்றுத் தர முயல்கிறது. கற்றுக் கொள்ள, இந்த சிக்கலான வாழ்க்கையை மற்றவர்களின் அனுபவங்களின் வழியே புரிந்து கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதே நமக்கு முன்னிருக்கும் கேள்வி.


கருத்துகள்