தடம்

ஒரு கொலை நடக்கிறது. கொலை நடந்த இடத்தில் எதேச்சையாக எடுக்கப்பட்ட ஒரு போட்டோவில் கொலையாளியின் உருவம் பதிவாகிவிடுகிறது. ஆனால் கொலையாளியைப் பிடிக்க முடியாத அளவிற்கு போலீசுக்கு பெரும் சிக்கல் எழுகிறது. போட்டோவில் பதிவாகியிருப்பது,  கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி, உயிருக்கு உயிராக ஒரு காதலி என எல்லாம் சரியாக அமையப்பெற்ற எழிலா அல்லது எழிலைப் போலவே உருவ ஒற்றுமைக்கொண்ட, சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து கொண்டு அப்படி திருடி சேர்த்த பணத்தையும் சீட்டாட்டத்தில் அடிக்கடி தொலைத்துவிடும் கவினா என்பது தான் அந்த குழப்பம்.


கவின், எழில் என முதன்முறையாக இரட்டை வேடத்தில் அருண்விஜய். Youtube-ல் sneak peak-ஆக வெளியான கதாநாயகியை காபி சாப்பிட அழைக்கும் காட்சி தான் படத்தின் ஆரம்பமே. அது தான் எழில் கதாபாத்திரத்திற்கான அறிமுகமும் கூட. பிறகு கவின் கதாபாத்திரத்தின் அறிமுகம். எழிலின் காதல், தொழில் சம்பந்தப்பட்ட காட்சிகளும், கவினின் தொழில் மற்றும் பெண்களுடனான காட்சிகளும் மாறி மாறி காட்டப்படுகின்றன. படத்திற்கு தொடர்ப்பில்லாமல் வழக்கமாக தமிழ் சினிமாவில் வரும் காதல் காட்சிகளைப் போல தோன்றினாலும் பின்னால் வரவிருக்கும் காட்சிகளுக்கும் கதையோட்டத்திற்கும் தேவையான காட்சிகள் தான் அந்த ஆரம்ப காட்சிகள் என்பது புரிகிறது.

அருண்விஜய், இயக்குனர் மகிழ் திருமேனி இருவரும் இதற்கு முன்பு இணைந்த "தடையற தாக்க" அட்டகாசமான ஆக்சன் திரைப்படம். ஒரு மாஸ் ஹீரோவிற்கான கதையில் அருண் விஜய் அனாயசமாக நடித்து 'இந்தாளு தான்யா இந்த படத்துக்கு சரியான ஆளு' என நினைக்க வைத்திருப்பார். அப்படி ஒரு ஆக்சன் படமாகத் தான் இந்த "தடத்தினை" எதிர்பார்த்தேன். ஆனால் சண்டைக்காட்சிகளை குறைத்து விட்டு ஒரு இன்வெஸ்டிகேசன் திரில்லராக படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தின் பாதிக்கு மேலான காட்சிகள் 'காவல் நிலையத்திற்க்குள்ளாகவே நடக்கின்றன. "யாரு தான் கொலைய பண்ணியிருப்பா" என நாமும் போலீஸோடு சேர்ந்து, நமது புலனாய்வு திறனை உபயோகிப்பதால் படம் ஒரே இடத்தில் தங்கிவிட்டதை போன்ற பிரமை நமக்கு எழுவதே இல்லை.

சின்ன சின்ன கதாபாத்திரங்களும், பேசும் வசனங்களும் படத்தின் சுவாரசியத்தை கூட்டுகின்றன. குறிப்பிட்டு சொல்ல ஒரு காட்சி. மீண்டும் ஏதாவது தடயம் கிடைக்கிறதா எனப் கண்டுப்பிடிக்க போலீஸ் கொலை நடந்த இடத்திற்கு செல்கிறது. அங்கே ஒரு ஏட்டு குளித்துவிட்டு துணி காயப்போடும் பெண்ணை ஒளிந்து பார்ப்பதற்காக தடயத்தை அழித்துவிடும் காட்சி. இது போன்று சின்ன சின்ன சுவாரஸ்யமூட்டும் காட்சிகள், வசனங்கள் படம் முழுக்க இருக்கின்றன. 

கதை தான் முதல் ஹீரோ. அதன் பிறகு அருண் விஜய். செம்ம பிட்டாக அத்தனை அட்டகாசமாக கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்தும் முதல் நிலை நாயகனாக வர முடியாமல் தவிக்கிறார். ஆனால் என்னளவில் கடந்த பத்து வருடங்களாக மாபெரும் ஹிட் என்று ஏதும் கொடுக்காத போதிலும் பார்க்கும் படியான படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இந்த தடம் ஒரு வேளை அவரது சினிமா தடத்தினை மாற்றலாம். தேவையில்லாத கதாபாத்திரம் என்று எதுவும் இல்லாமல் கச்சிதமாக எழுதி எடுக்கப்பட்ட படமிது.

நகத்தை கடித்தபடி, "எவன் கொலைகாரனா இருப்பான்" என நம்மை படத்தின் இறுதி காட்சி வரை யோசிக்க வைத்தபடியே படம் பார்க்க வைப்பதில் ஜெயித்திருக்கிறது தடம் டீம்.

கருத்துகள்