**Spoiler
Alert**
நீண்ட நாட்களுக்குப்
பிறகு நடக்கும் ஊர் திருவிழாவில் எல்லோரும் தம்பதிகளாக, குடும்பமாக இருக்க அஜித்
மற்றும் தனி ஆளாக இருக்கிறார். அதைப் பார்த்து வருத்தப்படும் அவரது உறவினர்கள்,
அவரைப் பிரிந்து மும்பையில் வாழும் மனைவியையும், மகளையும் அழைத்து வரும்படி
வற்புறுத்த ரோபோ ஷங்கர், தம்பி ராமையா துணையோடு மும்பை பயணப்படுகிறார் அஜித். பயணத்தின்
போது பிளாஷ்பேக் விரிகிறது. அரிசி மண்டி வைத்திருக்கும் தூக்குதுரையாக அஜித்,
அடிதடி, பஞ்சாயத்து என்று ஊருக்குள் அலப்பறை செய்து கொண்டு திரிகிறார். ஊருக்கு
மருத்துவ முகாம் நடத்த தன் குழுவோடு அந்த ஊருக்குள் வருகிறார் நயன்தாரா.
அறிமுகத்திலேயே அஜித்தின் அடிதடி கண்டு அவர் மீது போலீசில் புகார் செய்ய நயனின்
தைரியம் பிடித்துப் போகிறது அஜித்துக்கு. நயனின் மருத்துவ முகாமுக்கு காசு கேட்டு
தொந்தரவு செய்யும் லோக்கல் கும்பலை விரட்டி விட்டு, தன் அரிசி மண்டி இருக்கும்
இடத்திலேயே முகாமை நடத்திக் கொள்ளும்படி கூறுகிறார் அஜித். அப்படியே இருவருக்குமிடையே
சொல்லிக் கொள்ளாத காதல் துளிர்க்கிறது. முகாமை முடித்து நயனை வழி அனுப்பி
வைக்கிறார் அஜித். ஆனால் தன் அப்பாவோடு வந்து நயன் மாப்பிள்ளை கேட்க ‘படிக்காத நான்
எப்படி உங்களுக்கு பொருத்தமா இருப்பேன்’ என அஜித் தயங்குகிறார். நயனின் உறுதியைப்
பார்த்து பிறகு சம்மதிக்க திருமணம் நடந்து சந்தோஷமாக வாழ்கிறார்கள். வெளிநாட்டில்
படிப்பதற்கான இடம் கிடைத்தும் அந்நேரத்தில் தான் கர்ப்பம் தரித்திருப்பது
தெரிந்ததும் படிக்கும் ஆசையை துறந்து அக்மார்க் தமிழ் அம்மாவாக மாறுகிறார் நயன்.
பிள்ளை பிறந்தும் ஊருக்குள் அடிதடி, பஞ்சாயத்து என சுற்றுவது கண்டு அவ்வபோது அஜித்
மீது கோபம் கொள்கிறார் நயன். எதிர்பாராத சந்தர்ப்பத்தில் குழந்தை தன்னோடு
இருக்கும் போது ஏற்படும் அடிதடியில் குழந்தைக்கு அடிபட இனி உன்னோடு வாழ்ந்து
பிள்ளையின் உயிர்க்கு ஆபத்து ஏற்ப்பட வேண்டாம் என கூறிவிட்டு பிரிந்து செல்கிறார்
நயன். தன்னையும், குழந்தையும் மீண்டும் பார்க்க முயற்சித்தால் தான் இறந்து
போவதாகவும் மிரட்டிவிட்டு செல்கிறார். பத்து வருடங்கள் கழித்து கோவில்
திருவிழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பதற்காக செல்லும் அஜித், தன் மகளை ஒரு
கும்பல் கொலை செய்ய முயல்வதை தடுத்து நிறுத்துகிறார். ஓட்ட பந்தயத்தில் கலந்து
ஜெயிக்க வேண்டும் என்ற தன் மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நயனின் அனுமதியோடு தான்
யார் என்ற அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஒரு பாதுக்கப்பாளானாக மகளின் அருகில்
இருக்கத் தொடங்குகிறார்? அஜித் மகளை கொல்ல முயல்வது யார்? ஏன்? மகளின் ஆசையை அஜித்
நிறைவேற்றினாரா? மனைவி மற்றும் குழந்தையோடு மீண்டும் சேர்ந்தாரா? என்ற
கேள்விகளுக்கு பதிலோடு சுபம் போடுகிறது விஸ்வாசம்.
ரொம்ப ரொம்ப சிம்பிளான
கதை. அதை எந்த சிக்கலும் இல்லாமல் சொல்ல முயற்சித்திருப்பது தான் விஸ்வாசம்
படத்தின் பலம். பண்டிகை விடுமுறையில் குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏற்ற விதமாக
முகம் சுழிக்க வைக்காத நகைச்சுவை, கொஞ்சம் அதிகமான அப்பா-மகள் செண்டிமெண்ட், கொண்டாட்டமான
பாடல்கள் என்று பக்காவாக பார்த்து பார்த்து U சர்டிபிகேட் படமாக
கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஜாலியாக ஊருக்குள்
அலப்பறை செய்து கொண்டு திரியும் அஜித் நயனிடம் செய்யும் சேட்டைகள் தான் முதல்
பாதியின் முக்கால்வாசி. ஜெயிலுக்குள் உட்கார்ந்து கொண்டு சொந்த பந்தங்களோடு சீட்டு
விளையாடுவது, மயக்க மருந்தின் வீரியத்தில் நயனின் அழகை வர்ணிப்பது, மறுநாள் தான்
செய்தது தெரிந்ததும் பதறி ஓடுவது, ரோபோ சங்கரிடம் கேட்டு கேட்டு இங்கிலீஷ் பேசுவது
என அஜித்தும் ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகி பாபு கூட்டணியும் சேர்ந்த காட்சிகள்
தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக முதல் பாதியின் நகைச்சுவை
காட்சிகள் சிரிக்கும்படி இருந்தாலும் பல காட்சிகள் நம் பொறுமையை சோதிப்பது என்னவோ
நிஜம். சில காட்சிகளில் அஜித் மிகப் பரிதாபமாகவே தெரிந்தார். “‘தல’ உனக்கு காமெடி
செட் ஆகல தல” என மனதுக்குள் முனுமுனுக்கும்படி சில காட்சிகளில் செயற்கைத்தனம்
அதிகமாக இருந்தது. ஆனால் இடைவேளை வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் மழையில்
நடக்கும் சண்டைக்காட்சி ஆறுதலாக இருந்தது. தன் மகளின் உயிருக்கு ஆபத்து என
தெரிந்ததும் மகளை ஆஸ்திரேலியா அனுப்ப நயன் நினைப்பதும், ஆனால் நடக்கவிருக்கும்
ஓட்டபந்தய போட்டியில் கலந்து கொண்டு ஜெயிக்க வேண்டுமென்ற மகளின் கனவு நிறைவேற
வேண்டும் என்பதற்காக, ஒரு ‘பாடிகார்டாக’ மகளின் அருகில் இருக்க அஜித்
வேண்டுவதுமென, ‘மாஸ்’ என்ற தளத்தில் இருந்து செண்டிமெண்ட் நிறைந்த டிராமா என்ற
தளத்திற்கு படம் மாறுகிறது. கொஞ்சம் சீரியல் டைப் தான் என்றாலும் அஜித் – அனிக்கா
இருவரின் நடிப்பும், நீண்ட நாட்களுக்குப் பிறகான விவேக்கின் காமெடியும், படத்தை
பார்க்க வைக்கின்றன.
செண்டிமெண்ட் தான்
முக்கியம் என்பதாலோ என்னவோ வில்லனை படு பலவீனமாக எழுதியிருக்கிறார்கள்.
‘ஜெயிப்பவர்களுக்கே வாழ்க்கை.. தோற்பவர்களுக்கு மரணமே’ என்ற தாரக மந்திரத்தோடு
மகளை வளர்க்கும் NO 1 பிசினஸ்மேன் ஜெகபதி பாபு, தன் மகள் தற்கொலை செய்து கொல்ல அனிக்கா
தான் காரணம் என சொல்லி அவரைக் கொல்ல முயல்வது வில்லன்னாலே ‘லூசுத் தனமா’ தான் இருக்கனுமா
என யோசிக்க வைத்தது. ‘அட போங்கடா’ என சோர்ந்து போகும் போதெல்லாம் டாய்லேட்டில்
நடக்கும் பைட், டீக்கடையில் வைத்து ஜெகபதி பாபுவை எச்சரித்து அனுப்பும் காட்சி,
கண்ணானே கண்ணே லீட் காட்சி என சுவாரசியம் கொடுத்தது படம். பழக்கதோஷம் என்பது போல்
சில அபத்தமான காட்சிகளும் அங்கங்கே ஆஜர் ஆகிக் கொண்டே வந்தன. மிகப்பெரும் தொழிலதிபர்,
எப்போதும் பாடிகார்ட்ஸ் சகிதம் வலம் வரும் பிசினஸ்மேன் ஜெகபதி பாபு, கிளைமாக்ஸ்
என்பதற்காக அஜித்தோடு ‘சிங்கள்ஸ்’ செய்வதெல்லாம் தமிழ் சினிமாவில் சகஜம். கடைசியாக
வாட்ஸ்-அப்பில் அனுப்புவது போல் ஆடியன்ஸ்க்கு அப்படியே மெசேஜ் ஒப்பிப்பதெல்லாம் சீரியலுக்கே
டப் கொடுக்கும் காட்சிகள்.
அஜித்தின் மாஸ்
என்பதாக இல்லாமல் அப்பா – மகள் உணர்வினை முன் நிறுத்தியமைக்காக விஸ்வாசம் ஓகே
ரகம்.

கருத்துகள்