** Spoiler
Alert**
“பேட்ட” பற்றிய எனது
பார்வையை பகிர்ந்து கொள்வதற்கு முன், படம் பார்க்காதவர்களுக்காக ஒரு முறை கதையை
கூறிவிடுகிறேன்.
முதல் காட்சியில் பூட்டிய
ஒரு பெரிய அறையில் மாணவர்கள் அடைக்கபட்டிருக்க இன்னொரு அறைக்குள் ரஜினி ரௌடிகள்
சிலரை புரட்டி எடுக்கிறார். சண்டைக்காட்சி முடிந்ததும் சில மாதங்களுக்கு முன்பு என
பிளாஷ்பேக் விரிகிறது. ஊட்டியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியின் ஹாஸ்டல் (தற்காலிக)
வார்டனாக மந்திரியின் சிபாரிசின் பேரில் வந்து சேருகிறார் காளி என்கிற ரஜினி. பதவி
ஏற்றுக் கொண்ட முதல் நாளே, வசதியான வீட்டுப் பிள்ளையான பாபி சிம்ஹா முதலாம் ஆண்டு
மாணவர்களுக்கு செய்யும் ராகிங் கொடுமைகளை அடக்கி பாபி சிம்ஹாவின் பகைக்கும், மற்ற விடுதி
மாணவர்களின் அன்பிற்கும் சொந்தக்காரர் ஆகிறார். பிறகு ஹாஸ்டல் முழுவதும் அவரது
சாம்ராஜ்யம் தான். இதனால் கோபமாகும் பாபி சிம்ஹா அப்பாவின் பேச்சைக் கேட்டு
கொஞ்சம் அடங்கிப் போகிறார். அங்கே முதலாம் ஆண்டு மாணவியாக வரும் மேகா ஆகாஷின் மீது
ஆசைப்படுகிறார். ஆனால் முதலாம் ஆண்டு மாணவனான சனந்த் ரெட்டி - மேகா ஆகாஷ் இருவரும்
ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இருவரின் காதலுக்கும் உதவ மேகா ஆகாஷின்
அம்மாவான சிம்ரனை சந்திக்கும் ரஜினி, விவாகரத்து ஆன அவரை சைட் அடிக்க சிம்ரனும்
ரஜினியை சைட் அடிக்கிறார். பிள்ளைகள் ஒரு பக்கம் காதலிக்க, சிம்ரனும் ரஜினியும்
ஒரு பக்கம் காதலிக்க (அ) சைட் அடிக்க (அ) ஏதோ ஒன்று செய்கிறார்கள். மேகா ஆகாஷ் - சனந்த்
ரெட்டி இருவரையும் சீண்டும் பாபி சிம்ஹாவை ரஜினி அடித்து அனுப்ப ரஜினியை அடிக்க
பாபி சிம்ஹா அவருடைய ஆட்களோடு இரவு ஹாஸ்டலுக்குள் நுழைகிறார். ஆனால் அங்கே இன்னொரு
கும்பல் ரஜினியையும், சனந்த் ரெட்டியையும் கொல்ல முயல சண்டை போட்டு தடுக்கிறார்
ரஜினி. இருவரையும் கொல்ல வந்தது யார்? ரஜினி யார்? அவருக்கும் சனந்த் ரெட்டிக்கும்
அவருக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் பதில்.
அர்ஜுன், ரீமாசென்,
வடிவேலு நடிப்பில் சுந்தர் C இயக்கிய “கிரி” படத்தின் கதை தான். அர்ஜுனுக்கு
பதிலாக ரஜினி, பிரகாஷ்ராஜ்க்கு பதிலாக சசிக்குமார், ரீமாசென் பதிலாக சிம்ரன்,
வடிவேலுக்கு பதிலாக முனீஸ்காந்த், தேவயானிக்கு பதிலாக மாளவிகா மேனன். இதிலெல்லாம்
ஒரு பிரச்சனையும் இல்லை. கதையா முக்கியம்? சுவாரசியமான காட்சிகள் தானே முக்கியம்?
அதில் தான் எனக்கு பேட்ட படத்தின் மீது புகார்.
ரஜினி அறிமுகமானதும்
ராகிங் செய்பவர்களை டீல் செய்யும் காட்சி அருமை. துரு துருப்பான, சேட்டை செய்தபடி
இருக்கும் பழைய ரஜினியை நினைவுபடுத்தியது. ரசித்துப் பார்த்தேன். அடுத்து ஹாஸ்டல்
சாப்பாட்டு பிரச்சனையை சரி செய்கிறார் ரஜினி. சூப்பர். அடுத்து மேகா ஆகாஷ், சனந்த்
ரெட்டி காதலுக்காக சிம்ரனை சந்திக்கிறார். இந்த எபிசொட் முழுக்க எனக்கு பிரச்சனை
தான். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிப்பதற்கான எந்த உணர்வு பூர்வமான காட்சிகளும்
இல்லை. ரஜினியோட பொண்டாட்டி இறந்து போய்டாங்க. சிம்ரன் விவாகரத்து பண்ணிட்டாங்க.
இது போதுமா இருவரும் காதலிக்க? சரி. “இளமை திரும்புதே”ன்னு ஒரு பாட்டும், சிம்ரன்
கால்ஷீட்டும் வாங்கியாச்சி அதுக்காக இருக்கட்டும்னு தான் விடத் தோணுது. ரஜினி –
சிம்ரன் எபிசொட் முழுக்க ரொம்ப செயற்கைத்தனம். அப்புறம் பாபி சிம்ஹா மற்றும்
அவருடைய அப்பாவான “ஆடுகளம்” நரேன் உடனான மோதல், அதனை தொடர்ந்து வரும் சண்டை, பாபி
சிம்ஹா ஆட்கள் இல்லாமல் இன்னொரு கும்பல் நுழைவது, விஜய் சேதுபதி மற்றும் மந்திரி
அனுப்பும் ஆட்களோடு ஹாஸ்டலுக்கு வெளியே காத்திருந்து அடித்து நொறுக்கும் ரஜினி என
முதல் பாதி ஆஹா ஓஹோ ரகம் இல்லையென்றாலும் குறையென்று (சிம்ரன் போர்ஷன் தவிர்த்து)
பெரிதாக ஒன்றுமில்லை.
இரண்டாம் பாதி தான்
மொத்த பங்கம். கிடா மீசையுடன் சசிக்குமார் நண்பனாக, மதுரையை பூர்வீகமாக கொண்டு ‘பேட்ட’
வேலனாக வரும் ரஜினி கெட்-அப்பில் கவர்ந்தாலும் போக போக கொட்டாவி விட வைக்கிறார்.
அவர் செய்யும் எதுவும் பெரிதாக சுவாரசியமோ, ‘செம்ம’ என்பதாகவோ இல்லாமல் வெறுமனே
தன் பாட்டுக்கு போகிறது. சசிக்குமார் காதலிக்கும் மாளவிகா மேனனின் இரண்டாவது அண்ணனாக
வரும் நவாசுதீன் சித்திக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ஸ் சுத்தமாக செட் ஆகாமல்
தனியாக துருத்திக் கொண்டிருக்கிறது. மாளவிகா மேனனின் முதல் அண்ணனைக் கொல்லும்
காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதம் ‘கொலை பண்றதும், அதுல இருந்து வெளிய வர்றதும்
அவ்ளோ ஈஸியா?’ என என்னும் படியாக அமைக்கபட்டிருப்பது ஒரு சமூகத்தின் அங்கமாக, ஒரு
படைப்பாளியாக கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் பொறுப்புணர்வின் மீது கேள்வி
எழுப்புகிறது. சசிக்குமார், திரிஷா, ரஜினியின் மகன் என அனைவரும் நவாசுதின்
வைக்கும் வெடிகுண்டில் இறந்து போகும் போது எந்த விதமான உணர்வையும் எனக்குள்
ஏற்படுத்தவில்லை. அத்தனை செயற்கைத்தனம் அந்த காட்சியில் தெரிந்தது. சும்மா கொன்று
விடுவேன் என மிரட்டியதற்காவே, அந்த நிமிடமே ஊர் பார்க்க துப்பாக்கி எடுத்து சுட்டு
தள்ளும் ‘பேட்ட’, தன் உயிர் நண்பனையும், தன் குடும்பத்தையும் அழித்த சிங்காரம்
எங்கே இருக்கிறான், என்ன செய்து கொண்டிருக்கிறான், பட்டபகலில், பொது மக்கள்
பார்க்க, வெடிகுண்டு வைத்தும், துப்பாக்கிகள் சகிதமும் கொலை செய்யும் அளவிற்கு சிங்காரத்திற்கு
தைரியமும், சக்தியும் எப்படி வந்தது? என்று எதுவும் செய்யாமல் ‘இத்தனை நாள் போனா
போகுதுன்னு விட்டேன்’ என கதை விடுவது ஏன்? ஏன் சனந்த் ரெட்டி ஆஸ்திரேலியாவில்
இருக்கும் போதே சிங்காரத்தை கொல்லாமல் விட்டார்?
ஸ்ப்பா.. முடியல..
இது போல எண்ணிலடங்கா
கேள்விகள் அடுக்கடுக்காக மனதுக்குள் எழுந்து கொண்டே இருக்கும்படியான சுவாரசியமற்ற
காட்சிகள் எண்டு கார்டு போடும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தன. கிளைமாக்ஸ்ல் வில்லன்
வீட்டில் PubG கேம் விளையாடி விட்டு ராமாயணம் கதை சொல்லி சூழ்ச்சி பண்றதுல தப்பே
இல்ல என்று சப்பைக்கட்டு கட்டிவிட்டு ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டுக்கு நடனமாடும் போது
ரஜினி தான் எனக்கு வில்லனாக தெரிந்தார். அந்த நொடியே எனக்கு கொஞ்சமாக கிடைத்த rajinified-ம் வற்றிப் போனது.
பேட்ட படத்தில் பழைய
ரஜினி கிடைத்திருக்கலாம் ஆனால் பழைய கார்த்திக் சுப்புராஜ் காணாமல் போனார்.

கருத்துகள்