மொரட்டு சிங்கிள் - சிறுகதை


“எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. I love you” அப்டின்னு அந்த பொண்ணு சொல்லும் போது எனக்கே ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. மொத தடவயா ஒரு பொண்ணு எங்கிட்ட வந்து இந்த வார்த்தைய சொல்றா. ஆனா மொத மொறையா எங்கிட்ட ப்ரொபோஸ் பண்ற ஒரு பொண்ணுக்கு “நோ” சொல்ல வேண்டிய நெலமை. “நோ” சொன்னதுக்காக அந்த பொண்ணு ஏதோ மொக்கையா இருந்திருக்குமோன்னு நினைக்காதிங்க. 5 அடி உயரம். மாநெரத்துக்கு கொஞ்சம் மேல. விரிச்சி போட்டாலும், கலச்சி போட்டாலும், முடிச்சி(?) போட்டாலும் (நன்றி ரைமிங் கிங் : டி.ஆர்) அழகா இருக்குற நீளமான முடி. அளவான மூக்கு, அழகான உதடு, அப்றம் சரி போதும்ன்னு நினைக்கிறேன். இப்டி மாஞ்சி மாஞ்சி வர்ணிக்குற அளவுக்கு அழகு தான் அந்த பொண்ணு. ஸ்கூல் படிச்ச காலத்துல இருந்தே லவ்வுக்கும் எனக்கும் பல கிலோமீட்டர் தூரம் தான். வாங்க ஒரு பிளாஷ்பேக் போய்ட்டு வந்துரலாம். நான் மூணாவது படிக்கும் போது, இவளோ “பேக்”(back) வேணாம்ல? கரெக்ட்டு. எனக்கும் போரடிக்குது. இப்போ பாருங்க.

நான் பனிரெண்டாவது படிக்கும் போது டம்மியா தான் இருந்தேன் (இப்பவும் தானேன்னு கேக்காதீங்க.) பாடம் எடுக்க கிளாஸ்க்கு ஸார் யாரும் வரலன்னா பின்னாடி இருக்குற பெஞ்ச் பசங்க செம்ம குஷியாகிடுவானுங்க. பொண்ணுங்க மேல பேப்பர் ராக்கெட் விட்டு வம்பிழுக்கிறது, கலாய்க்குறதுன்னு என்னன்னவோ பண்ணுவானுங்க. ஆனா முன்னாடி பெஞ்ச்ல இருக்குற நான் பக்கத்துல உக்காந்துட்டு இருக்குற பசங்க கூட சேந்து “புக் கிரிக்கெட்” விளையாடிட்டு இருப்பேன். நீங்க விளையாடியிருக்கீங்களா? “புக் கிரிக்கெட்” அப்டினா என்னன்னு தெரியலனா சொல்றேன் கேளுங்க. ஒரு புக் எடுத்துக்கணும் (*நெறைய பேஜ் உள்ள பெரிய புக்). விளையாடுறவங்க பேஜ ஓபன் பண்ணி அதுல 2,4,6 அப்டின்னு ரெட்டைப்படை நம்பர் வந்தா அதெல்லாம் அவங்க எடுக்குற ரன். ௦ வந்தா அவுட். உதாரணத்துக்கு பேஜ் நம்பர் 124 வந்தா நாலு தான் அவனோட ஸ்கோர். அதுவே 90 அப்டின்னு ‘௦’ ல முடியுற நம்பர் வந்தா அவுட். ‘8’ல முடியுற நம்பர் வந்தா அவன் திரும்பவும் விளையாடனும். இண்ட்ரெஸ்டிங்கா இருக்குல. வீட்டுல இருக்குற யார் கூடயாவது விளையாடிப் பாருங்க. ஹா எங்க விட்டேன். ஹ்ம்ம். அந்த மாதிரி பொண்ணுங்கள கிண்டல் பண்ணிக்கிட்டு கடல போட்டுட்டு இருக்குற பசங்கல “பேட் பாய்ஸ்”டா அப்டின்னு திட்டிட்டு நான் என்ன மாதிரி இருந்த “டம்மி” பசங்க கூட கிரிக்கெட் விளையாடிகிட்டு இருப்பேன். ஆனா இந்த மாதிரி டம்மியா இருந்த எனக்குள்ளயும் ‘96’ படத்துல வர்ற மாதிரி  ஒரு “காதல்” கன்னாபின்னான்னு மொளச்சதுனு சொன்னா சத்தியமா நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும். ஆனா ப்ளீஸ் நம்புங்க. உண்மைதான் அது. அந்த பொண்ணு அது உக்காந்துட்டு இருக்குற எடத்துல இருந்து என்னை திரும்பி பாத்து சின்ன வயசு திரிஷா மாதிரி சிரிக்கும். நானும் சின்ன வயசு விஜய் சேதுபதி மாதிரி சிரிப்பேன். அவ சிரிக்க நான் சிரிக்க. நான் சிரிக்க அவ சிரிக்க. அப்டின்னு கண்ணாலயே பேசிட்டு இருந்தோம். ஒரே காதல் பாட்டா பாடிட்டு திரியுவேன். சரியா பாடத் தெரியலனாக்கூட. FLAMES போட்டு பாக்குறது, அந்த பொண்ணு பேர எங்கயாவது பாத்தா சிரிக்குறது, கவித எழுதுறதுன்னு பெரிய romantic guy-ஆ சுத்திட்டு இருந்தேன். எத்தனை நாளைக்கு தான் கண்ணால பேசுறது? சரி. ஒரு பையனா நாம தான்னே சொல்லியாகனும்ன்னு அப்டின்னு முடிவு பண்ணி ஒரு நாள் அவ கிட்ட ப்ரொபோஸ் பண்றதுக்காக அவ டுயுஷன் முடிச்சிட்டு வர வழில வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ரொம்ப நெர்வேஸா இருந்தது. ஆனாலும் இன்னைக்கே சொல்லிடுறதுன்னு ஒரு உறுதியோட நின்னேன். அவ வந்தா. என்னை பாத்ததும் என் பக்கத்துல வந்து சைக்கிள நிறுத்தினா.

அவ : “என்னடா இங்க நிக்குற..?”
என் மனசாட்சி : என்ன இப்படி கேக்குறா?
அவ: சொல்லுடா. என்ன விஷயம்.
என் மனசாட்சி : சரி. வந்துட்ட. சொல்லித்தொல டா.
நான் : அது வந்து.. என்னன்னா.. அது.
அவ : டேய். சீக்கிரம் சொல்லு டா. லேட் ஆகுது.
என் மனசாட்சி : என்ன இவ கிட்ட ஒரு எதிர்பார்ப்பே இல்லயே.
அவ : டேய். என்ன?
நான் : I love you **** (பேர் சொல்ல மாட்டேன். ஏன்னா அவ இப்போ Married & blessed with two babies)
அவ : டேய். என்னடா இப்படி வந்து சொல்ற. உன்னை நான் எப்பவும் அப்டி நினைச்சதே இல்லடா. உன்ன இத்தன நாளா ஒரு பிரெண்டா தாண்டா பாத்தேன்.
என் மனசாட்சி : ஏது பிரெண்ட்டா தான் பாத்தியா? அப்றம் ஏண்டி என்னை சும்மைக்கும் திரும்பி திரும்பி பாத்து கிளாஸ் ரூம்ல சிரிச்சிட்டு இருந்த?
நான் : Sorry ****.. என்னை மன்னிச்சிடு.
அவ : சரி சரி. இத மறந்துடுவோம். நாம எப்பவும் போல நல்ல பிரெண்ட்ஸ் தான் சரியா?
நான் : சரி ****
அவ : வரட்டுமா?
நான் : ஹ்ம்ம்
சைக்கிள்ல அவ போக அந்த எடத்துலயே நான் நின்னுட்டு இருந்தேன்.
என் மனசாட்சி : அவளோதானா? இதுக்கு தான் இத்தனை நாளா லூசு மாதிரி சுத்திட்டு இருந்தேனா? ச்சே.. உனக்கும் இன்னும் வேணும்டா.. இதுல பீலிங் வேற. கெளம்பு.

நான் என்னமோ விஜய் சேதுபதியா தான் இருந்தேன். ஆனா அவ த்ரிஷாவா இல்லன்னு இப்படி தான் தெரிஞ்சிகிட்டேன்.

அப்புறம். காலேஜ். காலேஜ் லைப்-அ என்னால மறக்கவே முடியாது. அப்படி இப்படின்னு நெறைய பேரு பீலிங்-ஆ பேசுவானுங்க. எனக்கு அப்டி எல்லாம் ஒண்ணுமே இல்ல. அங்கயும் நான் டம்மியா தான் சுத்திட்டு இருந்தேன். கிளாஸ் ரூம்க்கு ‘ஸார்’ யாரும் வரலனா ஸ்கூல்ல “புக் கிரிக்கெட்” விளையாடுனேன். இங்க, பாட்டுக்கு பாட்டு, சினிமா கத பேசுறது அப்டின்னு ஓடும். பத்தாததுக்கு வீட்டுல இருந்து வர பசங்களோட மதிய சாப்பாட புடுங்கி சாப்பிட்டுட்டு இருப்பேன். என் கிளாஸ் ரூம்ல இருந்த சில பொண்ணுங்க பேரு கூட தெரியாத அளவுக்கு தான் காலேஜ்ல பொண்ணுங்களுக்கும் எனக்குமான தொடர்பு இருந்தது. ஒரு பொண்ணுக்கிட்ட எப்டி பேசுறதுனு தெரியாது அப்டிங்கறது தான் உண்மைனாலும் “ச்சே.. பொண்ணுங்க கிட்ட நானா போய் பேசுறதா? அதெல்லாம் எனக்கு தேவையே இல்ல.” இந்த மாதிரி எனக்கு நானே சொல்லிட்டு கெத்தா இருக்குறதா நினைச்சி சுத்திட்டு இருந்தேன். ஆனா இந்த மாதிரி இருக்கும் போது ஒரு பொண்ணு மேல லைட்டா, ரொம்ப மைல்டா ஒரு “லவ்” மாதிரியான பீலிங் வந்தது ஆனா தனியா இருந்த ஒரு நாள் அப்போ “ஸ்கூல்” லவ்வுக்கு ஒரு பிளாஷ்பேக் போயிட்டு வந்தேன். அப்புறம் இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு டம்மியா சுத்துறத கண்டினியு பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

அப்புறம். ஆபிஸ். இங்க மட்டும் என்ன மாறியிருக்க போகுதுன்னு தானே கேக்குறீங்க? அப்டி எல்லாம் நினைக்காதீங்க மக்கா. உண்மைலேயே மாறிடிச்சி. சைட் அடிக்குறது, சைட் அடிக்கும் போது ஒரு பொண்ணு பாத்தா அப்டியே விடாம “அடிச்சி” பாக்குறது அப்டின்னு என் பிரெண்ட்ஸ் ஸ்கூல், காலேஜ்ல பண்ணிட்டு இருந்தத நான் அப்போ தான் பண்ண ஆரம்பிச்சிருந்தேன். சில பொண்ணுங்க கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வரும். சில பொண்ணுங்க “பாக்குறான் பாரு பொறுக்கி பையன்” அப்டிங்கற மாதிரி பாப்பாங்க. “எக்ஸ்க்யூஸ் மீ.. ஸாரி நான் கொஞ்சம் டிசன்ட்டான ஆளு தான்” அப்டின்னு மனசுக்குள்ளயே சொல்லிட்டு அந்த பொண்ண பாக்குறத நானும் நிறுத்திடுவேன். சரி. இவ்ளோ நேரம் கத சொல்லிட்டு வரேன்னே என் பெர்சனாலிட்டி பத்தி சொல்லலே? எங்க அம்மா, “என் பையனுக்கு என்னா எம்.ஜி.ஆர். மாதிரி இருக்கான், சூர்யா மாதிரி இருக்கான்” அப்டின்னு அடிக்கடி சொல்லுவாங்க. நான் அத நம்ப மாட்டேன். ஆனா அடிக்கடி கண்ணாடி பாக்கும் போது “அழகன்டா நீ” அப்டின்னு மட்டும் சொல்லிக்குவேன். சரி நாம எவளோ அழகா இருக்கோம்னு தெரிஞ்சிக்கலாம்னு என் க்ளோஸ் பிரெண்ட் ஒருத்தன் கிட்ட கேட்டேன்.

நான் : மச்சான்.. நான் அழகாடா?
என் பிரெண்ட்டு : ஏண்டா திடீர்னு இப்டி கேக்குற?
நான் : சொல்லுடா?
என் பிரெண்ட்டு உனக்கென்னடா அழகுடா நீ
நான் : நெஜமாவா மச்சான்.
என் பிரெண்ட்டு ஆமா டா..
நான் : நூத்துக்கு எவளோ மச்சான் மார்க் தருவ எனக்கு?
என் பிரெண்ட்டு ஒரு முப்பது முப்பத்தஞ்சி தருவேன் மச்சி
நான் : போடா *******
என் பிரெண்ட்டு ஏன்டா
நான் : உங்கிட்ட போய் கேட்டேன் பாரு

எனக்கு தெரியும். அவன் சும்மா வெளயாட்டுக்கு என்ன கிண்டல் பண்றதுக்காக அப்டி சொன்னன்னு. கண்டிப்பா ஒரு 6௦ தரலாம் எனக்கு. அட நம்புங்க. சரி நம்பலனா விடுங்க. நாம மறுபடியும் கதைக்கு வருவோம்.

இந்த மாதிரி பொண்ணுங்க கண்ண மீட் பண்ற அளவுக்கு தைரியம் வந்திருந்த பெறகு கூட சிங்கிளா தான் சுத்திட்டு இருந்தேன். ஆமா. நூத்துல 70 சதவீதம் பொண்ணுங்க ஸ்கூல், காலேஜ் லெவல்லயே கமிட் ஆகிடுறாங்க. மீதி இருக்குறவங்க லவ்ல இண்ட்ரெஸ்ட் இல்ல, வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க, அப்டி இப்டி சொல்லிடுறாங்க. அதாவது யாரையும் நான் அப்ரோச் பன்னால. பட் ஜெனரலா சிங்கிளா இருக்குற சில பொண்ணுங்க சொன்னது இதெல்லாம். அப்டியே சிங்கிளா இருந்தாலும், லவ் பண்றேன்னு எந்த பொண்ணுக்கிட்டயும் சொல்ல தோணவே இல்ல. அதான் சிங்கிள் வாழக்கை கண்டினியு ஆகிட்டே இருந்தது. அந்த மாதிரி ஒரு சமயத்துல தான் அவள பாத்தேன். பாத்த ஒடனே “இவ உனக்குனே பொறந்தவடா” அப்டின்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். ஆனா, நீங்க நினைக்குற மாதிரி ப்ரொபோஸ் பன்னால. பட் டெய்லி வேடிக்கை மட்டும் பாத்துட்டே இருந்தேன். நாள் கணக்கா, வாரக் கணக்கா, மாசக் கணக்கா. ஆனா போய் பேசவே இல்ல. ஏன்னா அவ வேற ப்ராஜெக்ட். எப்டி பேசுறது. என்ன பேசி ஆரம்பிக்கிறது.

“ஹலோ.. நான் தான் உங்கள ரொம்ப நாளா சைட் அடிச்சிட்டு இருக்குற பையன்” - ச்சே.

“ஹலோ.. என் பேரு ராஜா. உங்க பேரு என்ன?” – த்தூ.

“ஹலோ.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. நாம பிரெண்ட்ஸா இருக்கலாமா?” – கண்றாவி.

இந்த மாதிரி பேசி அவகிட்ட மொக்கை வாங்கிட வேணாம்னு தான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன். கடவுள் அந்த பொண்ணுகிட்ட பேசுறதுக்கு நமக்கு ஒரு வாய்ப்ப ஏற்படுத்தி தருவாருன்னு. ஆனா என் ஸ்டேடஸ “சிங்கிள் டூ கமிட்டட்” அப்டின்னு மாத்துறது கடவுளோட high priority லிஸ்ட்ல இல்ல போல. கடைசி வரைக்கும் நான் எதிர்பாத்த வாய்ப்பு கெடைக்கவே இல்ல. ஆனா அன்னைக்கு அந்த பொண்ணு வந்து ப்ரொபோஸ் பண்ணும் போது மனசக் கல்லாக்கிட்டு அந்த பொண்ணுக்கு “நோ” சொன்னேன். அவளோ அழகா இருந்த பொண்ணுக்கு “நோ” சொன்னத நினைச்சி பெருமை படுறதா வருத்தப்படுறதா தெரியல.

அந்த பொண்ணு : ஹாய்.. என் பேரு *****
நான் : ஹாய்.. என் பேரு ராஜா
அந்த பொண்ணு : நான் நேரா வந்த விஷயத்தை சொல்லிடுறேன்..
நான் : சொல்லுங்க..
அந்த பொண்ணு : எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. I love you
நான் : ..................
அந்த பொண்ணு : என்னாச்சி..
நான் : இல்ல..
அந்த பொண்ணு : ஐ ஆம் ஸாரி.. இப்படி வந்து சொல்றதுக்கு. நாம ரெண்டு பேரும் ரொம்ப நாளா ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டே இருந்தோம். ஸோ உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு நினைச்சி தான் வந்து சொன்னேன்.. தப்பா இருந்தா..
நான் : ஐயோ.. இல்லங்க.. எனக்கும் உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது தான்.
அந்த பொண்ணு : ‘பிடிச்சிருந்தது’ னா.. அப்போ இப்போ பிடிக்கலையா?
நான் : இப்பவும் புடிச்சிருக்கு.. பட்..
அந்த பொண்ணு : பட்?
நான் : எனக்கு போன வாரம் தான் மேரேஜ் ஆச்சி..

இப்போ தெரிஞ்சிக்கிட்டிங்களா ஏன் அவளோ அழகான பொண்ணுக்கு “நோ” வேண்டிய நெலமை எனக்கு வந்ததுன்னு. ஆனா இப்போ யாரா இருந்தாலும் எவளோ அழகான பொண்ணா இருந்தாலும் எல்லாருமே “என் பொண்டாட்டிக்கு” அப்புறம் தான். Yes I am married to a world’s most beautiful girl.

The End

கருத்துகள்