தெருவுக்குள் நான் நுழைந்த
போது மணி 10-க்கு மேல் ஆகியிருந்தது. சில வீடுகளில் விளக்குகள் எரிந்து
கொண்டிருந்த போதிலும் தெரு மட்டும் கழுவி வைத்ததைப் போல் சுத்தமாக இருந்தது. வார
இறுதி நாள் என்பதால் அலுவலக நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு வந்ததில் எப்போது
படுக்கையில் விழுவேன் என்ற எண்ணத்துடன் வந்து கொண்டிருந்தேன். கையில் சின்ன
பார்சல் ஒன்றை வைத்துக் கொண்டு ஒரு 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அங்குமிங்குமாய் நடந்து
கொண்டிருந்தார். தெரு விளக்கு இல்லாத அந்த இருட்டில் அவர் அப்படி அலைந்து கொண்டிருப்பது
எனக்கு கொஞ்சம் நெருடலாகப்படவே அவரைக் கடந்து செல்ல முற்ப்பட்டவன் நின்றேன்.
“பாட்டி.. என்னாச்சி..
என்ன தேடுறீங்க..?” என்றேன்.
குரல் கேட்டு என்னைப்
திரும்பிப் பார்த்தவர் தனக்குள்ளேயே ஏதோ முணுமுணுத்தார். பேசாமல் போய் விடலாமா
என்ற யோசனை எனக்குள் தோன்றினாலும் இன்னொரு முறைக் கேட்போம் என மீண்டும் கேட்டேன்.
“என்ன பாட்டி
தேடுறீங்க..?”
“இல்ல கடைக்கு
போகலாம்ன்னு வந்தேன்.. இப்ப வீடு எதுன்னு தெரியல..”
தள்ளாடியபடி முன்னோக்கி
நடந்தவர் அந்த அரை இருட்டில் ஏதோ ஒன்றின் மீது கால் இடறி கீழே விழப் போக நான்
பிடித்துக் கொண்டேன். என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டவர் ஒவ்வொரு வீட்டையும் அந்த வீட்டை
ஒட்டி இருக்கும் படிக்கட்டுகளையும் பார்த்துக் கொண்டே வந்தார். ஒரு வீட்டின்
முன்னே நின்று சிறிது அவர் யோசிக்கவும்,
“இந்த வீடாப் பாட்டி..
உள்ள போறிங்களா..?” என்றேன்.
இல்ல இந்த வீடு இல்ல..
அது படிக்கட்டு இப்படி இருக்காது..” எனக் கூறிவிட்டு மீண்டும் எங்கு நான் வரும்
போது நின்றாரோ அங்கேயே சென்று நின்று கொண்டார். அங்கிருந்து தெரு தொடங்கும்
இடத்திற்கு அழைத்துச் சென்றார். நான் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழக்கத்
தொடங்கினேன். மறுபடியும் ஒவ்வொரு வீடாக பார்த்தபடியே என் கைகளைப் பிடித்துக்
கொண்டு நகரத் தொடங்கினார். ‘பேசாம போயிருக்கலாம்’ என மூளைக்குள் ஒரு குரல்
கேட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு வீட்டின் அடையாளத்தையும் பார்க்கும் படலம்
மீண்டும் 10 நிமிடங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.
அந்த தெருவின்
முடிவில் தான் நண்பர்களுடன் அறை எடுத்து கடந்த 3 வருடங்களாக நான் தங்கியிருக்கிறேன்.
இந்த பெண்மணியை ஒரு முறைக் கூட இங்கே தெருவில் பார்த்ததில்லை. எந்த வீட்டைச்
சேர்ந்தவர் என்பது சுத்தமாக எனக்கு பிடிபடவில்லை. வேறு யாரேனும் தெருவில்
வருகிறார்களா? அப்படி வந்தால் ஒரு வேளை இவரை அடையாளம் தெரியலாம் என நானும்
கவனித்துப் பார்த்தேன். யாருமே வருவதாக தெரியவில்லை.
“பாட்டி என் கூட
கொஞ்சம் வாங்க..” என அவரை அழைத்துக் கொண்டு முன்னோக்கி நடந்தேன்.
“இங்க தான்பா வீடு
இருக்கும்.. மேல மாடி இருக்கும்.. கீழ வீடு..” என முணுமுணுப்பதைப் போல்
அவருக்குள்ளேயே பேசிக் கொண்டு என் கைகளைப் பற்றியபடி நடக்கத் தொடங்கினார்.
என் அறைக்கு
பக்கத்தில் இருக்கும் வீட்டு கேட்டினை தட்டினேன். வெளியே வந்த அந்த வீட்டின்
அம்மாள் என்னை அடையாளம் கண்டுகொண்டார்.
“என்ன தம்பி..” எனக்
கேட்டுக் கொண்டே நெருங்கியவர் என் அருகில் நின்ற வயதான பெண்மணியைக் கண்டதும், “இவங்க
எங்க இருந்தாங்க..?” என்றார்.
“தெருமுக்குல
நின்னுட்டு இருட்டுல அவங்க வீடு தெரியாம திணறிட்டு இருந்தாங்க.. சரி அதான்
உங்களுக்கு இவங்கள தெரியுமான்னு கேக்க வந்தேன்..” என்றேன்.
“தெரியும்.. தெரியும்..
எங்க வீட்டுல வேலை செய்யுற பொண்ணோட மாமியார் தான்.. இதோ இங்க தான் வீடு இருக்கு..
பாட்டிமா எங்க போனிங்க இந்த நேரத்துல” என கூறிவிட்டு மூதாட்டியின் கைகளைப்
பிடித்துக் கொண்டு அழைத்து செல்லத் தொடங்கினார் பக்கத்து வீட்டு அம்மாள்.
‘சரி.. ஒருவேளை
எதிர்காலத்தில் மீண்டும் தான் இது போல இரவு நேரம் கழித்து வரும் போது இவர் இப்படி
நின்று கொண்டிருந்தால்? அதனால் இவருடன் சென்று வீட்டைத் தெரிந்து கொள்வோம்’ என
நானும் அவர்களைப் பின்தொடர்ந்தேன்.
எங்கள் வீட்டிற்கு
எதிரே செல்லும் குறுகிய பாதையில் நெருக்கியப்படி கட்டி வைக்கபட்டிருந்த சில
வீடுகளை தாண்டி சென்றவுடன் இருவரும் நின்றார்கள். ஒரு வீட்டை நெருங்கியதும், “ஆஹ்..
இதா இருக்கு வீடு.. இதான் இதான்..” என்றபடியே மூதாட்டி வேகமாக அந்த வீட்டை
நெருங்கினார். வீட்டின் கதவைத் தட்டிய பக்கத்து வீட்டு அம்மாள் கதவைத் திறந்த
பெண்மணியைப் பார்த்ததும், “பத்மா.. உன் மாமியார் தெருமுக்குல நின்னுட்டு வீடு
தெரியாம அல்லாடிக்கிட்டு இருந்துருக்காங்க.. இந்தா நம்ம பக்கத்து வீட்டுல
தங்கியிருக்குற இந்த தம்பி தான் பாத்துட்டு கூட்டிட்டு வந்துச்சி..” என்றார்.
“அய்யோ.. நைட்
ஷிப்டுக்கு போயிருக்க அந்தாளுக்கு தெரிஞ்சா என்னியத்தான் திட்டுவான் ஏண்டி இந்த
நேரத்துல வெளிய வுட்டன்னு.. ஏய் கெழவி.. உள்ள வந்து தொல..” பத்மா என்றழைக்கப்பட்ட
பெண் மூதாட்டியின் கைகளைப் பிடித்து வேகமாக வீட்டின் உள்ளே கிட்டத்தட்ட தள்ளினார்.
“அதான் உன்
மாமியாருக்கு நிதானம் இருக்க மாட்டேங்குதே ஏன் வெளிய விடுற...?”
“அய்யோ.. நான் எங்கமா
வுடுறேன்.. இங்க தான் உக்காந்துட்டு இருந்துச்சி.. எப்போ எங்க போனதுனே தெரியல..
இவ்ளோ நேரமா தேடிட்டு இருந்தேன்..”
மாமியாரைத் திட்டிக்
கொண்டிருந்த அந்த பெண்மணியைத் தாண்டி மூதாட்டியைப் பார்க்க முற்பட்டேன். அரை
டிராயரோடு நின்றுக் கொண்டிருந்த 7 வயது மதிக்கத்தக்க சிறுவனோடு மூதாட்டி கையில்
வைத்திருந்த பார்சலைக் கொடுத்து விட்டு ரகசியம் போல் எதுவோ பேசிக் கொண்டிருந்தார்.
“ஏய்.. கெழட்டு
சிறுக்கி.. எங்க போயிருந்த இந்த நேரத்துல..” எனக் கத்தினாள் பத்மா என்ற பெண்மணி.
“புள்ள ஆசையா
புரோட்டா சாப்டனும்னு கேட்டான்.. அதான் வாங்க போனேன்..”
“புரோட்டா வாங்க
இதுதான் நேரமா..? ஏன் வாங்கித் தர நானும் உன் மவனும் இல்ல?”
“இருக்கீங்க.. ஆனா
புள்ளை எங்கிட்ட தானே கேட்டான்..”
“இந்த பேச்சு
மசுருக்கு ஒண்ணும் கொறச்சலில்ல.. ஆனா போயிட்டு வீட்டுக்கு தான் கரெக்ட்டா வர
தெரியாது..” எனக் கூறிவிட்டு பக்கத்து வீட்டு அம்மாளிடம் புகார் வாசிக்கத்
தொடங்கினாள் பத்மா.
“இப்படித்தான்மா..
வயசான காலத்துல சும்மா இல்லாம எங்க உசுர வாங்குது.. பெரிய மவன் வுடு தாம்பரத்துல தான்
இருக்கு.. போய் அங்க கொஞ்ச நாள் இருக்கலாம்ல.. எங்க கூட இருந்துட்டு டெய்லி
ரோதனையா போச்சி இது கூட..”
“விடு பத்மா..
வயசானவங்க.. அப்படி தான் இருப்பாங்க.. என் மாமியார் கூட..” என இருவரும் சுவாரசியமாகப் பேசத் தொடங்க நான் எட்டி உள்ளே பார்த்தபோது பத்மாவின் வசைகள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத மூதாட்டி பேரக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
நான் திரும்பி என்
அறையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஒரே ஒரு கேள்வி என்னுள் முளைத்தது.
“முதுமை - மீண்டும்
குழந்தைப் பருவம் செல்வதற்கான இன்னொரு வாசலோ..?”
கருத்துகள்