பெயற்றவர்களின் கதைகள் - கதை 3

7 வருடங்களாக இருவரும் எதிரெதிர் வீடு. தன்னை விட மூன்று வயது மூத்தவளான அவளை “அக்கா” என்று அழைக்க அவன் ஒரு நாளும் நினைத்ததில்லை. சந்தேகமே வேண்டாம். அவள் அத்தனை அழகு. விடுமுறை என்றால் அவள் இருக்கும் வீடே கதி எனக் கிடப்பான். அவள் வீட்டில் அவனும் ஒருவனாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டான். அவனின் குறும்பும், துறுத்துறு குணமும் அவள் மனதில் இடம் பிடிக்க அவனுக்கு உதவின.
நெடுநாள் யோசனைக்குப் பின் கல்லூரியில் முதல் ஆண்டு சேர்ந்த பிறகு அவளிடம் தன் விருப்பத்தை கூறினான் அவன். வயது வித்தியாசம் அவளை யோசிக்க வைத்தது. தனக்கும் அவனைப் பிடிக்கும் என்றும் ஆனால் தன்னை விட மூன்று வயது குறைந்தவனை விரும்பும் பெண்ணை வீட்டாரும், உறவினர்களும், சுற்றி இருப்போரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றாள் அவள். முடிவில் அவன் பிடிவாதம் அவளை ஜெயித்தது. ஆனால் அவன் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரும் வரை இருவர் வீட்டிலும் காதல் விஷயம் தெரிந்து விடக் கூடாது என்பது அவளது நிபந்தனை. அவளுக்கு தெரியாது காதலில் விழுந்தப் பிறகு சுற்றிருப்போர் எவரும் காதலர்களின் கண்களுக்கு தெரியமாட்டார்கள் என்பது.
எதிர் வீட்டுக் காதல் இருவர் வீட்டிலும் தெரிந்தது. சில மாதங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக இருந்த காதல் தடுமாற்றம் கொள்ள ஆரம்பித்தது. அவள் வீட்டில் திருமணத்திற்கு வற்புறுத்தினார்கள். அவன் வீட்டில் சிறு கண்டிப்போடு நிறுத்திக் கொண்டார்கள். அவள் அவனிடம் முடிவைத் தேடும் உரையாடலை ஒரு நாள் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியில் தொடங்கினாள்.
“வீட்ல இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியாதுடா.. ஓடிப் போய் கல்யாணம் பண்ணலாம்ன்னு கூப்டாத.. எனக்கு அதிலெல்லாம் விருப்பமில்ல.. அதனால நான் வீட்ல சொல்றவன கல்யாணம் பண்ணிக்க போறேன்..”
“என்னடி சொல்ற.. படிப்ப முடிச்சிட்டு அடுத்த வருஷம் வேலைக்கு போய்டுவேண்டி.. அது வரைக்கும் வீட்ல கொஞ்சம் சமாளிச்சிக்கடி..”
“நடக்குறத பேசு.. நான் முன்னயே சொன்ன மாதிரி.. வயசு வித்தியாசம் வேற பிரச்சனையா இருக்கும்.. உங்க வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க.. விட்டுடு.. அவளோதான்..”
இடிந்து போனான் அவன். வீட்டில் அவனது சோகம் குறித்து யாரும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. அவளது திருமணத்திற்கு நிச்சயம் வருவதாக அவளிடம் சத்தியம் செய்தபடி அவன் போனான். அவள் கண்களில் விழும்படி நின்றான். தாலிக் கட்டி முடித்த நொடி அழுதபடியே வெளியில் வந்தான்.
இனி “இப்படி ஒருத்தி” தன் வாழ்வில் இருந்ததே நினைவில் இருக்கக் கூடாது என நினைத்தான். அவள் குறித்த நியாபகத்தை முழுவதும் அழித்திட வேண்டும் என்ற வெறி அவனுள் அப்போது அதிகம் இருந்தது. அதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழி நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் அது இந்த கதைக்கு தேவையில்லை என்பதால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்