“வீட்டில் திருமணம் குறித்து தெரிவித்துவிட்டோம் ஆனால் அவர்கள் வர மாட்டேன் எனக் கூறிவிட்டார்கள் என நண்பர்களிடம் பொய் சொல்லிவிட்டு அவர்களின் உதவியோடு பதிவுத் திருமணம் செய்து கொள்வோம். நேரம் வரும் போது வீட்டில் இதனை தெரியப்படுத்துவோம்” என்பது அவளும் அவனும் சேர்ந்து எடுத்த முடிவு. இந்த திருமணம் “உனக்கு நான் எனக்கு நீ” என்ற அவர்களின் முடிவில் எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருந்திடச் செய்யும் என நினைத்தார்கள். இதை ஒருவகையில் தங்கள் மன உறுதியின் மீது அவர்கள் கொண்ட அவ நம்பிக்கை என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் நிச்சயம் கோபித்து கொள்ளமாட்டார்கள்.
“வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வாழ்வது” – எங்கேயோ ஏற்கனவே பார்த்ததைப் போல்இருக்கிறதா? ஆனால் அவன் சத்தியம் செய்தான். தான் “அலைபாயுதே” பார்த்து இந்த முடிவை எடுக்கவில்லை என்று.
தன் சொந்த ஊரில், ஒரே கல்லூரியில் படித்த நாள் முதல் இருவரும் காதலித்து வந்தனர். வேறு வேறு மதம் என்பதால் இணைவது கடினமென்று தோன்றவே பதிவு திருமணம் செய்து கொண்டு சில நாட்களுக்குப் பிறகு புது வீடு பார்த்து குடியேறும் வரை தோழிகளோடு லேடீஸ் ஹாஸ்டலில் அவளும் தோழர்களோடு சேர்ந்து வாடகைக்கு எடுத்த வீட்டில் அவனும் இருப்பதாக திட்டம்.
திருமணம் முடிந்த பின்பு ஒரு நாள் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றார்கள். தாலியை கழட்டி ஹாஸ்டலில் இருக்கும் தன் பெட்டியில் வைத்துவிட்டு வந்திருந்த அவளின் சாமர்த்தியம் அவனுக்கு இல்லை. அம்மாவின் கையால் செய்த சமையலை அவள் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த நிமிடம், பதிவுத் திருமண ரசீதை மறந்து போய் சட்டைப் பையில் வைத்திருந்து அதைக் கண்டுபிடித்த அம்மா அப்பா இருவரிடத்தும் அடிவாங்கிக் கொண்டிருந்தான் அவன்.
கருத்துகள்