ஒரு லவ் ஸ்டோரி - பகுதி 1



வினோத்திற்கு நிச்சயமாக தெரியவில்லை. இதனை காதல் என்றழைப்பதா அல்லது எதிர்பாலின ஈர்ப்பா அல்லது கிரஷ் (Crush) என்பதா? என்ன பெயர் வைப்பது. ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு நிச்சயம் தெரிந்தது. அவளை மிகவும் பிடித்திருந்தது. அதை மட்டும் தான் அவனால் உறுதியாக சொல்ல முடிந்தது. 

வினோத்தின் அலுவலகத்தில் புதிதாய் சேர்ந்திருந்தாள் அவள். அவளைப் பார்த்த அந்த முதல் கணம்  அவனுக்குள் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருந்தது. பூ மழை அவன் மீது பொழியவில்லை. காற்று வந்து அவனது கேசம் கலைத்து செல்லவில்லை. அவளைத் தவிர சுற்றி இருப்போர் எல்லாம் மறைந்து போகவில்லை. மொத்தத்தில் சினிமாத்தனம் எதுவும் அங்கே அரங்கேறவில்லை. ஆனால் அவன் மட்டும் தன்னை மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது பெயர் அறிந்து கொள்ள துடித்தான். எப்போது அவளை மீண்டும் பார்ப்போமென அப்போதே யோசிக்கத் தொடங்கிவிட்டான். 

பார்த்த நொடியே காதல் செய்யும் கதாநாயகனை திரையில் பார்த்தால் "இதுவரைக்கும் இவரு அழகான எந்த பொண்ணையும் பாத்ததே இல்லையாமா?" எனக் கிண்டலடிப்பான். ஆனால் நிஜத்தில் அவனே கேலி செய்யப்பட்ட கதாநாயகனாய் மாறுவான் என ஒருநாளும் நினைத்ததில்லை.

வினோத் பற்றிய அறிமுகம் உங்களுக்கு இப்போது நிச்சயம் தேவை. இல்லையென்றால் அவனை நீங்கள் இந்த கதையில் ரசிக்காமல் போகும் ஆபத்துள்ளது. இதோ வினோத் பற்றிய விபரங்கள்:

பெயர் : வினோத் 
பிறந்த இடம் : திருச்சி
படிப்பு : B .E (63.5%)
வயது : 29 (இந்த வயதில்லையே தங்கிவிடத் தான் அவனுக்கு விருப்பம்)
பிடித்தவை : சினிமா, புத்தகம், அஜித், பிரியாணி, தந்தூரி சிக்கன், சனி மற்றும் ஞாயிறு
பிடிக்காதவை : டயட், உடற்பயிற்சி, அவனை அங்கிள் என அழைக்கும் சிறுவர்கள், அவன் தங்கியிருக்கும் வீட்டு ஓனரின் நாய் 
வேலை : சாப்ட்வேர் இன்ஜினீயர் (6+ வருட அனுபவம் ஆனால் பாவம் குறைவான சம்பளம்)
திறமை : உண்மையில் அப்படி ஒன்றும் இல்லாத போதும், அவனிடம் கேட்டால்  "நன்றாக கவிதை எழுதுவேன், பாட்டு பாடுவேன்" என்பான் 
குடும்பம் : அதட்டல் செய்யாத அப்பா, அன்பை மட்டுமே கொட்டும் அம்மா, வாடா போடா என திட்டித் தீர்த்தாலும் பாசம் காட்டும் தங்கை, இன்னொரு அம்மாவாய் கண்டிப்பு செய்யும் அக்கா.
லட்சியம் : காதல் திருமணம் 
லட்சியத்திற்கு தடை : காதல் செய்யவே தெரியாத மூளை 

வினோத் - அவளைப் பார்ப்பதற்கு முன்பு 

"மச்சான்.. ஒரு பொண்ண பார்த்துட்டு  அழகா இருக்கா அப்டிங்கிறதுக்காக லவ் பண்றதெல்லாம் என்னை பொறுத்தவரைக்கும் லவ்வே இல்ல.. மொதல்ல பொண்ணும் பையனும் நல்லா பழகணும்.. ஒருத்தருக்கொருத்தர் நல்லா புரிஞ்சிக்கணும்.. இவங்க கூட இருந்தா நம்ம லைப் நல்லா இருக்கும் அப்டின்னு  ரெண்டு பேருக்கும் தோணனும்.. அதான் லவ்.."

வினோத் - அவளைப் பார்த்த பிறகு 

"இன்னமும் எனக்கு தெரியல.. ஏன் அவளை எனக்கு இவளோ புடிச்சிருக்குன்னு.. ஆனா அவளைப் பாத்துட்டே இருக்கனும்ன்னு தோணுது.. அவளைப் பத்தி யோசிச்சிட்டே இருக்கனும்ன்னு தோணுது.. அவளுக்கு என்னை மாதிரி ஒரு கேரக்டர் இருக்குன்னு கூட இன்னும் தெரியாது.. ஆனா நான் கல்யாணம் எங்க வச்சிக்கலாம் அப்படிங்கற லெவல்க்கு போய்ட்டேன்.. ஒரு வேளை நான் மெண்டல் ஆகிட்டேனோ"

வினோத்திற்கு காதல் அனுபவமே இல்லை என சொல்லிவிட முடியாது. உண்டு. ஆனால் அதற்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை. மேலும் அதைப் பற்றி இங்கே பேசினால் வினோத் கோபித்துக் கொள்ள கூடும். அதனால் விட்டுவிடுவோம். 

"இத்தனை வருடங்கள் ஏன் காதலிக்காமல் இருந்தாய்?" எனக் கேட்டால் அவன் சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா?
"ஒரு பொண்ணு பின்னாடி லொலொன்னு அலைஞ்சி, அவ போற இடத்துக்கெல்லாம் வேலைய விட்டுட்டு போய் நிக்குறது அசிங்கம் . பரவால்ல இவளுக்காக எந்த அசிங்கத்தையும் தாங்க நான் ரெடியா இருக்கேன் அப்படின்னு ஒரு பொண்ண பாக்கும் போது தோணனும்.. அப்படி எனக்கு தோணுனா கண்டிப்பா போய் நிப்பேன்.. இதுவரைக்கும் என் தன்மானத்தை விட்டுக்கொடுத்துட்டு அப்படி போய் நிக்கணும்ன்னு எந்த பொண்ண பாக்கும் போதும் தோணல.. அதான் இன்னும் நான் சிங்கிள்.."

அவனது "காதல் என்றால் என்ன தெரியுமா" என்பதன் விளக்கமும், தன்மான உணர்ச்சியும்  அவள் முன்னே செல்லா காசுகளாக போயிருந்தன.
"அந்த பொண்ணு பேரு என்ன..?" எனக் கேட்டான் வினோத்தின் அறைத்தோழன் மகேஷ்.
"ரேகா"
"எந்த ஊரு..?"
"சென்னை தான்.."
"சொந்த ஊரே சென்னை தானா..?"
"ஆமா.."
"அப்போ கஷ்டம்.. பேசாம வேற வேலைய பாரு.."
"ஏண்டா.."
"டேய்.. அவங்க எக்ஸ்பேக்டேசன் எல்லாம் வேற லெவல்ல இருக்கும்டா.."
"மச்சி.. எல்லா ஊரு பொண்ணுங்களுக்கும் அவங்கள உண்மையா விரும்புற, அன்பா பாத்துக்குற, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பையன் வேணும் அப்படிங்கிறது தாண்டா விருப்பமா இருக்கும்.."
"மயிறு.. இந்த தமிழ்நாட்டுல நீ மட்டும் தான் அப்படி இருக்கியா..?"
"அப்படி இருக்குறதுல நான் மட்டும் தானே அவளை லவ் பண்றேன்.."
"நான் சொல்லிட்டேன்.. அப்றம் உன் இஷ்டம்.. பின்னாடி கஷ்டப்படாத.."
மகேஷ் சொன்னது ஒரு புறம் அவனது நம்பிக்கையை சிதைத்தது. அதனால் உடன் பணிபுரியும் நண்பர்களின் ஆலோசனை கேட்டான்.
"டேய்.. மொதல்ல அந்த பொண்ணுக்கிட்ட நல்லா பிரெண்ட்லியா பேசு.." என்றான் குரு.
"இப்படி பரட்டைத் தலையா இருக்காத.. பொண்ணுங்களுக்கு புடிக்காது.. மீசை மெல்லிசா இருக்கு உனக்கு.. நல்லா மொத்தமா இருந்தா தான் பொண்ணுங்களுக்கு புடிக்கும்.. அதனால பென்சில்ல கோடு போடு.." என்றான் மதன்.
"என்னாது.. பென்சில்ல கோடா? என்னடா கைப்புள்ள வடிவேல் ரேஞ்சுக்கு சொல்ற.."
"டேய்.. நெஜம்மா தாண்டா.. நிறைய பொண்ணுங்களே இதை சொல்லியிருக்காங்க.. அதான் சொன்னேன்.. கேக்காட்டி போ.."
"மச்சி.. இப்படி தொப்பையும் தொந்தியுமா இருக்காத.. நல்லா பிட்டா இருக்குற பசங்கள தான் பொண்ணுங்க விரும்புவாங்க.." என்றான் குணா.
மொத்தமும் வினோத்தின் மண்டைய குழப்பின. அடுத்த நாள் முதல் உடல் எடையை கூட்டும் நொறுக்குத்தீனிகளையும், நூடுல்ஸ், புரோட்டா, பிரைடு ரைஸ் போன்ற உணவுகளையும் தவிர்த்தான். தினமும் காலை 3 கிலோமீட்டர் ஓட்டம், உடற்பயிற்சி செய்தான். காரட், மாதுளை, கீரை போன்றவற்றை விரும்பி சாப்பிட்டான். இதுவரை அவனுக்காக கவிதைகள் எழுதிடாத அவன் முதன் முறையாக அவள் குறித்து அவனுக்கு தோன்றும் அனைத்தையும் தினமும் கவிதைகளாக எழுதி வைத்தான். இத்தனை செய்தும்  வேறொரு டீமில் இருக்கும் ரேகாவிடம் எப்படி பேச்சினை தொடங்குவது என்பது மட்டும் அவனுக்கு தெரியவில்லை. 

ஒரு முறை கான்டீன்  செல்லும் வழியில் போனில் பேசுவதை போல் நடித்துக் கொண்டே அவளுக்காக காத்திருந்தான் வினோத். "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல்" என்றொரு பழமொழி உண்டு. அப்படித்தான் பார்க்கத் தொடங்கினான் அவனுக்கு எதிரே நடந்து வரும் அவளை. வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்து நட்பாக சிரித்து வைத்தாள் அவள். போதாது? அவளை எங்கே பார்த்தாலும் டூத் பேஸ்ட் விளம்பரத்தில் வருவதைப் போல சிரிக்கத் தொடங்கினான். ஒரு பெண் சிரிப்பதால் மட்டுமே அவளும் விரும்புகிறாள் என நம்பும் அளவிற்கு வினோத் முட்டாள் இல்லை. அதனால் அவளோடு பேச்சினைத் தொடங்க வேண்டும் என ஒரு திட்டம் தயார் செய்தான். ஒரு நாள் அவளுக்காக அலுவலகத்தின் கீழே காத்திருந்தான். அவள் தூரத்தில் வருவதைப் பார்த்ததும் இவனும் எதார்த்தமாக வருவதைப் போல் அவளோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினான். அவளோடு லிஃப்டுக்குள் ஏறினான். இருவர் மட்டுமே அங்கே இருந்தனர். வினோத்திற்கு கைகள் வேர்த்திருந்தன. மண்டை சூடாகியிருந்தது. ஏற்கனவே பலமுறை மனதுக்குள் ஒத்திகை பார்த்ததை சின்ன சிரிப்பின் பின்னே  பேசினான் வினோத்.
"நீங்க புதுசா ஜாயின் பண்ணியிருக்கீங்களா?" என்றான்.
"ஆமா.."
"ஓ.. இது தான் உங்களுக்கு பர்ஸ்ட் கம்பெனியா?"
"ஆமா.."
"ஓகே ஓகே.. ஜாப் செட் ஆகிடிச்சா..?"
"ஹ்ம்ம்.. பரவால்ல.."
அவன் தயார் செய்திருந்த கேள்விகள் அனைத்தும் முடிந்ததும் மேற்கொண்டு என்ன பேசுவதென தெரியாமல் லிப்ட் நம்பரை பார்க்கத் தொடங்கினான். அவர்களது அலுவலகத்தின் தளத்தை அடைந்திருந்தது லிப்ட். அவளை முன்னே செல்ல விட்டு லிஃப்ட் சுவரில்  முட்டிக் கொண்டு வெளியே வந்தான் வினோத்.

அலுவலக கான்டீன். சொற்பமான கூட்டத்தில் குணாவும், வினோத்தும் இருந்தனர்.
"மச்சான்.. அவளுக்கு உன் பேர் தெரியுமா?" என்றான் குணா.
"டேய்.. நான் மட்டும் தான் அவளை "அவ" போட்டு பேசலாம்.. நீ பேசக் கூடாது.." சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான் வினோத்.
"டேய்.. இதெல்லாம் ஓவர்டா.."
"பின்ன.. நான் லவ் பண்ற பொண்ண மரியாதை இல்லாம நீ பேசுனா நான் எப்டி சும்மா இருக்க முடியும்..?"
"க்கும்.. விளங்கிடும்.. நீ பைத்தியம் புடிச்சித்தான் சுத்த போற.."
"நான் பைத்தியம் புடிச்சி சுத்துறேனா.. இல்ல அந்த பொண்ணுகூட சுத்துறேனான்னு நீ பக்கத்தாண்டா போற.."
"முத்திடிச்சி.." சொல்லிவிட்டு எழுந்து சென்றான் குணா.

மகேஷ் மொபைலை நொண்டிக் கொண்டிருந்தான். அமைதியாக அமர்ந்திருந்த வினோத் பேச்சை தொடங்கினான்.
"மச்சி.. ரேகா கிட்ட போய் ப்ரொபோஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன்.."
"டேய்.. அந்த பொண்ணுக்கு மொதல்ல உன் பேர் தெரியுமா..?"
"தெரியாது.."
"அப்றம் என்ன நம்பிக்கைல அந்த பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பன்றேன்னு சொல்ற.."
"மச்சி.. எனக்கு எந்த வேலையும் ஓட மாட்டேங்குதுடா.. ஒரு வேளை அவ பின்னாடி இப்படியே பிரெண்ட்ஷிப் கிரியேட் பன்றேன்னு ரொம்ப நாள் சுத்திட்டு இருந்துட்டு கடைசியா சொல்லி பல்பு வாங்கி கஷ்டப்படுறதுக்கு இப்பவே சொல்லிட்டு விலகிக்கலாம்ன்னு இருக்கேன்.."
"இதுக்கு எதுக்கு அந்த பொண்ண லவ் பன்றேன்னு சுத்துன.. மூடிட்டு இருந்திருக்க வேண்டியதுதானே.."
"டேய்.. நான் ஒரு லவ் பண்ணியே ஆகணும்ன்னு இந்த பொண்ணு பின்னாடி சுத்தலைடா.. அது தானா நடந்தது.. மொத நாள் பாத்தேன்.. ரொம்ப புடிச்சிருந்தது.. அடுத்தடுத்த நாள் பாக்க பாக்க என் கண்ட்ரோல் இல்லாமலேயே அவள லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.. ஆனா எனக்கு இந்த லவ் பண்றது, பிக்கப் பண்றது இதெல்லாம் தெரியாதுடா.. அதனால தான் இவளோ நாள் சிங்கிளாவே இருந்துட்டேன்.."
"டேய்.. 12 வருஷமா நாம பிரெண்ட்ஸா இருக்கோம்.. ஆனா ஒரு தடவை கூட இந்த மாதிரி எந்த பொண்ண பத்தியும் என்கிட்ட பேசுனதில்ல.. மொத தடவையா இப்படி ஒரு பொண்ண புடிச்சிருக்குனு சொல்ற.. முயற்சி பண்றா.. ஒரு வேளை அந்த பொண்ணுக்கும் உன்ன புடிச்சி போச்சின்னா.."
"இப்போவே விலகிக்கிட்டேனா சீக்கிரம் இதுல இருந்து வெளிய வந்துடுவேன்.. அதனால இத முடிச்சி வைக்கலாம்ன்னு தான்.."
"அந்த பொண்ணு கண்டிப்பா நோ தான் சொல்லும்.."
"ரெண்டு மூணு தடவை சிரிச்சதுக்காகவும், ஒரு தடவை பேசுனதுக்காகவும் நான் ப்ரொபோஸ் பண்ணும் போது அவ "ஓகே" சொல்லிடுவான்னு நம்புற அளவுக்கு நான் முட்டாள் இல்லடா.."
"அதுக்கு  ஏண்டா அந்த பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ற.. சும்மாவே இருந்துடலாம்ல.."
"இல்ல மச்சி.. இந்த பொண்ணு அளவுக்கு என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணதில்ல.. அழகா இருக்குற நெறைய பொண்ணுங்கள பாத்திருக்கேன்.. சைட் அடிச்சிட்டு போய்ட்டே இருந்திருக்கேன்.. பட் இந்த பொண்ணுக்கிட்ட என்னால அப்டி போக முடியல.. வெயிட் குறைக்கணும், கலராகணும் இதெல்லாம் எந்த பொண்ண பாத்தும் எனக்கு தோணல.. "இங்க பாருங்க.. இந்த மாதிரி எல்லாம் உங்களப் பாக்கும் போது தான் எனக்கு தோணுச்சி.." அப்டின்னு என் மனசுல இருக்குற எல்லாத்தையும் அவ கிட்ட சொன்னா மட்டும் போதும்.. "
"சரி.. அந்த பொண்ணு நோ சொல்லிடிச்சி.. அப்றம்..?"
"அப்றம் என்ன.. End of Story..அவ இருக்குற பக்கமே இனி போக மாட்டேன்.."
"எனக்கு இதுல விருப்பமே இல்ல.. ஆனா  உனக்கு சரின்னு தோணுனா பண்ணு.."
பேச்சை முடித்துக் கொண்டான் மகேஷ். யோசனையில் ஆழ்ந்தான் வினோத்.

மறுநாள் அவளுக்காக அலுவலகத்தின் தரைதளத்தில் காத்திருந்தான் வினோத். ஒரு பக்கம் அவளிடம் இன்று எல்லாவற்றையும் பேசி முடித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தாலும், மறுபக்கம் அவள் இன்று வராமல் போய்விட்டால் தேவலை என்றும் நினைத்துக் கொண்டான். ஆனால் அவள் எதிரே வந்து கொண்டிருந்தாள். அவள் அருகே செல்ல செல்ல வினோத்தின் இதய துடிப்பு அதிகரித்துக் கொண்டே போனது. எங்கே பதட்டத்தில் மயங்கி கீழே விழுந்து விடுவோமோ என்று கூட அஞ்சினான். ஒரு வழியாக அவளை நெருங்கி பேசினான்.
"ஹாய்.."
"ஹாய்.."
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.."
"ஹ்ம்ம்.. சொல்லுங்க.."
அமைதியாக இருந்தான். பேச்சே வரவில்லை. அவள் முகம் பார்த்தால் பேச முடியாது என்பதை புரிந்து கொண்டு தரையை நோக்கினான்.
"எனக்கு உங்கள மொத தடவ பாத்தப்பவே ரொம்ப புடிச்சிப்போச்சி.."
"அய்யோ.. எனக்கு இதெல்ல.."
"இல்லல்ல.. நான் முழுசா சொல்லிடுறேன்.. அதுக்கு அப்புறம் நீங்க சொல்லுங்க.."
"நான் மொத தடவை உங்கள பாக்கும் போது இப்படி வந்து உங்ககிட்ட பேசுவேன்னு எனக்கு தெரியாது.. நான் யார்கிட்டயும் போய் இந்த மாதிரி பேசுனதும் இல்ல.."
"இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க.. எனக்கு புடிக்காது.. எனக்கு இதெல்லாம் செட் ஆகாது.. இப்படி பேசுறதா இருந்தா எங்கிட்ட பேசாதீங்க.."
"இல்ல.. நீங்க ஓகே சொல்லுவீங்கன்னு நினைச்சி நான் வரல.. நான் சொல்றத மட்டும் கேளுங்க.."
என பேசிக் கொண்டே இருக்க அவள் நடக்கத் தொடங்கினாள். அவனும் அவளோடு நடந்தான்.
"ஒண்ணு நீங்க முன்னாடி போங்க.. இல்ல என்னை முன்னாடி போக விடுங்க.." என்றாள் அவள்.
அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாத வினோத் அப்படியே நின்று விட்டான். அவள் நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கையில் நோட்டுப் புத்தகம்.  அவளுக்காக அவன் எழுதிய கவிதைகள் அவளால் வாசிக்கப்படாமல் இருந்தன.

நிறைவேறாமல் போன பல்லாயிரக் கணக்கான ஒரு தலை காதல் வரிசையில் வினோத்தின் காதலும் ஜம்மென போய் சேர்ந்து கொண்டது.

(தொடரும்..)

கதையை ஆடியோ வடிவில் கேட்க:



கருத்துகள்