ஒரு லவ் ஸ்டோரி - பகுதி 8



பாட்டுப் போட்டியில் பெயரை பதிவு செய்து கொண்டதிலிருந்து பதட்டமாகவே இருந்தான் வினோத். வெற்றி பெற வேண்டும் என்பதல்ல அவனது பதட்டத்திற்கு காரணம். ரேகா மனம் கவரும் விதம் பாட வேண்டுமே என்பது தான். தான் ஒரு சுமாரான பாடகன் என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் இதன் மூலம் அவளை கொஞ்சம் தன் பக்கம் ஈர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அதனை இழந்திட அவனுக்கு மனமில்லை. இரண்டு நாட்களாக பாடலை ஓட விட்டு அதோடு  சேர்ந்து பாடுவதும்  பிறகு நிறுத்திவிட்டு தனியாக பாடுவதுமாக இருந்தான். மகேஷ் முதல் நாள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இரண்டாம் நாளும் இப்படியே தொடரவும் வினோத்திடம் கேட்டான்.

“டேய்.. என்னா ரெண்டு நாளா  ஒரே  கச்சேரியா இருக்கு என்ன விஷயம்..?”
சிரித்துக் கொண்டே வினோத் சொன்னான்.

“மச்சி.. ஆபிஸ்ல அடுத்த வாரம் பாட்டு போட்டி ஒண்ணு வச்சிருக்காங்க.. அதுல கலந்துக்குறேன்.. அதான் ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்..”

சந்தேகமானான் மகேஷ். விடாமல் கேட்டான்.

“இந்த ஆபீஸ் ஜாயின் பண்ணதுல இருந்து இந்த மாதிரி எதுலயும் கலந்துகிட்டது இல்லையே நீ.. என்ன திடீர்ன்னு புதுசா..?”
“இல்லடா.. இதுல கலந்துகிட்டு பாட்டுப் பாடி என் ஆள இம்ப்ரெஸ் பண்ணலாம்னு தான்.”
“ஹ்ம்ம்.. அத சொல்லுடா மொதல.. சரி.. பாடி அந்த பொண்ண லவ் பண்ண வைக்கப் போற அதானே..”
“லவ் பண்றாளோ இல்லையோ ஏதோ அவள இம்ப்ரெஸ் பண்றதுக்கு என்னால முடிஞ்சத பண்றேன்..”
“சரி ஒரு வேளை நீ மொக்கையா பாடி அந்த பொண்ணுக்கு உன் மேல இருக்குற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சினா என்ன மச்சி பண்ணுவ..?”
“டேய்.. ஏன்டா என் லவ்வுக்கு  மட்டும் எவனும் நல்ல விதமாவே பேச மாட்டேங்குறீங்க..?”
உடனே முகத்தை சோகமாக வைத்தபடி  சலித்து கொண்டான் மகேஷ்.
“ச்சே.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த பாட்டு போட்டி விஷயத்த சொல்லியிருக்க கூடாது நீ..?”
“ஏன்டா..?”
“இல்ல நம்ம விஜய் டிவி புகழ் அனந்த் வைத்தியநாதன் கிட்ட கூட்டிட்டுப் போய் உனக்கு நல்லா வாய்ஸ் ட்ரைனிங் எடுத்திருக்கலாமேடா.. இப்போ பாரு அந்தாளு பிக் பாஸ் போய்ட்டாரு.. நூறு நாலு புடிக்கவே முடியாது..”
கொஞ்சமாக காண்டானான் வினோத்.
“டேய்.. நக்கலா..? இரு டா.. போட்டில ஜெயிச்சிக் காட்டுறேன்..”
“பாக்கலாம்.. பாக்கலாம்..” என சிரித்துவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான் மகேஷ்.

வினோத்தின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு நிமிடம் ஏறிக் கொண்டே இருந்தது. தன்னம்பிக்கையை மீறி பயமும் பதட்டமும் கண் முன்னே நின்றது. பேசாமல் எழுந்து அமைதியாக வெளியேறிவிடலாமா என்று கூட யோசித்தான். கேன்டினில் போடப்பட்டிருந்த டேபிள்கள் அகற்றப்பட்டு வரிசையாக போட்டப்பட்டிருந்த சேர்களில் ஆண்களும் பெண்களுமாய் கூட்டம் அமர்ந்திருந்தது. அவர்களுக்கு எதிரே போட்டியில் பங்கேற்றுப் பாடப் போகும் பாடகர்கள் வரிசையாக சேர்களில் அமர வைக்கப்பட்டிருந்தார்கள். வினோத்தையும் சேர்த்து மொத்தம் 14 பங்கேற்பாளர்கள். ஒவ்வொரு போட்டியாளர்களும் தாங்கள் பாட வேண்டியப் பாடலை முணுமுணுத்தப்படி அமர்ந்திருக்க வினோத்தின் கண்கள் மட்டும் கூட்டத்தில் ரேகாவை தேடின. கூட்டத்தில் அமர்ந்திருந்த மதன், PP, வினோத்தின் TL அஜய், மேனேஜர் விஜய் மற்ற சிலரும் வினோத்திற்க்கு கைகளை உயர்த்தி “தம்ப்ஸ்-அப்” காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் வினோத்தின் கவனம் முழுவதும் ‘அவள் எங்கேனும் தென்படுகிறாளா’ என்பதிலேயே இருந்தது. போட்டி ஆரம்பமாகியது. முதலாவது நபரின் பெயர் அழைக்கப்பட்டது. ரேகாவை பார்க்காத நொடி ஒவ்வொன்றும் வினோத்திற்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. முதல் போட்டியாளர் பாடி முடித்ததும் அடுத்துப் பாட வேண்டியவரின் பெயர் அழைக்கப்பட்டது. ரேகா வரும் வரை தனது பெயர் அழைக்கப்பட்டு விடக் கூடாது என மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான். 8-வது போட்டியாளர் பாடத் தொடங்கும் போது கூட்டத்தின் வலது மூலையில் சிறு புள்ளியாகத் தோன்றினாள் ரேகா. அவளைப் பார்த்த நொடியே பிரகாசமானான் வினோத். அவளைப் பார்த்து சிரித்தான். அவனை அங்கே ஒரு போட்டியாளராகப் பார்த்த ரேகாவும் முகத்தில் ஆச்சர்யத்தைக் காட்டிவிட்டு  பதிலுக்கு சிரித்தாள். சைகையில் அவள் வாழ்த்து சொல்ல ‘ஜில்’லென உணர்ந்தான் வினோத். பதட்டம் தொலைந்து போனது. இதுவரை அவன் உணராத ஒரு வித தன்னம்பிக்கை அவனுக்குள் புதிதாக முளைத்தது. அவனது பெயர் அழைக்கப்பட காத்திருக்க பத்தாவது நபராக அழைக்கபட்டான் வினோத். எழுந்து மைக்கை வாங்கிக் கொண்டவனின் கண்களுக்கு மொத்த கூட்டமும் மறைந்து ரேகா மட்டும் தெரிந்தாள். அவளைப் பார்த்தபடியே பாடத் தொடங்கினான்.

“உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே..
என் நினைவு தெரிந்து நான்
இது போல இல்லையே..”

ஒவ்வொரு வார்த்தைகளையும் அவளை நினைத்து அவளைப் பார்த்தே பாடிக் கொண்டிருந்தான். சிரித்தபடியே ரசித்துக் கொண்டிருந்தாள் அவள். ஒரு நொடியும் வேறொரு திசையில் அவனது பார்வை செல்லவில்லை. பாடலின் வரிகளை உணர்ந்து, உருகிப் பாடினான். பயமோ பதட்டமோ கொஞ்சமும் அவனைத் தடுமாறச் செய்யவில்லை. 5 நிமிடங்களுக்கு அரங்கம் மொத்தமும் வினோத்தைக் கவனித்தப்படி இருக்க, பாடி முடித்தான். கைதட்டல்களும் விசில்களும் பறந்தன. ரேகாவும் சந்தோஷமாக உற்சாகத்துடன் கைதட்டினாள். மைக்கை கொடுத்து விட்டு தன்னுடைய இருக்கையில் வந்தமர்ந்தான் வினோத். நிமிர்ந்து ரேகாவைப் பார்த்தான். கைகளை குவித்து “சூப்பர்” என்பதாக அவள் சைகை  செய்ய மொத்தப் பற்களையும் காட்டி சிரித்தான் வினோத். இத்தனை உற்சாகத்துடன் தான் பாடுவோம் என அவனே நினைத்துப் பார்க்கவில்லை. கைகள் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்ததையே அப்போது தான் கவனித்தான். மீதி இருந்த போட்டியாளர்களும் பாடி முடித்தார்கள். போட்டியின் முடிவு அறிவிக்கப் பட இருப்பதாகவும் பார்வையாளர்கள் சில நிமிடங்கள் காத்திருக்கும்படியாகவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை வைக்க கூட்டம் கலையாமல் இருந்தது. அப்போதும் வினோத்தின் கண்கள் ரேகாவையேப் பார்த்துக் கொண்டிருந்தன. வினோத் வெற்றி குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை. ‘அவள் ரசித்துக் கொண்டிருந்தாள் அதுவே போதும்’ என்ற மனநிலையில் இருந்தான். போட்டியின் நடுவர் ஒருவர் எழுந்து முன்னே வந்து வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அறிவித்தார். 

முதல் பரிசு – சிவரஞ்சனி.
இரண்டாம் பரிசு – பிரகாஷ்.
மூன்றாம் பரிசு – வினோத்.

அவனது பெயர் படிக்கப்பட்ட போது ரேகா மகிழ்ச்சியுடன் கை தட்டினாள். ‘I love you darling’ என மனதுக்குள் சொல்லியபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் வினோத். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அடுத்த மாதம்  ஆஃபீஸ் சார்பில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படும் என அறிவிக்கப் பட கூட்டம் கலையத் தொடங்கியது. இருக்கையை விட்டு எழுந்த வினோத்தின் கால்கள் நேராக ரேகாவை நோக்கி நடந்தது. தன்னை நோக்கி வரும் வினோத்தை கவனித்த ரேகாவும் அவனுக்காக அங்கேயே நின்றாள்.

“என்ன வினோத்.. பாட்டுலாம் பயங்கரமா பாடி கலக்கிட்டீங்க.. நீங்க பாட போறீங்கன்னு சொல்லவே இல்ல..” என்றாள் ரேகா.
“சொல்லாம சஸ்பென்சா இருக்கட்டும்ன்னு தான் சொல்லல..” என்றான் வினோத்.
“ஒரு வேளை நான் வராம போய் நீங்க பாடுறத பாக்காம மிஸ் பண்ணிருந்தேனா..?”
“கண்டிப்பா நீங்க வந்துடுவீங்கன்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சி.. நல்ல வேளை என் வேண்டுதல் வீணாப் போகாம வந்துட்டீங்க..”
“சரி சரி..”
“பாடுனது பிடிச்சிருந்ததா உங்களுக்கு..?”
“பிடிச்சிருந்ததாவா..? சூப்பரா பாடுனீங்க.. அதனால தானே ஜெயிச்சிங்க.. என் பக்கத்துல நின்னுட்டிருந்த பொண்ணுங்க நீங்க தான் பர்ஸ்ட் வருவீங்கன்னு பேசிட்டு இருந்தாங்க.. பட் தேர்ட் பிளேஸ் வந்துட்டீங்க.. ஆனா நிறைய பேருக்கு நீங்க பாடுனது தான் புடிச்சிருந்தது..”
அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வினோத்திற்கு இனிப்பாக இருந்தது. இப்படியே அவளிடம் பேசிக் கொண்டே இருக்க முடியாதா என தவித்தான்.
“பாட்டு செலக்சன் எப்டி..?” என்றான்.
“ம்.. நைஸ் சாங்.. எனக்கு புடிச்ச சாங்..”
“ஒரு உண்மைய சொல்லவா..?”
“ம்.. சொல்லுங்க..”
“உங்களுக்காகத் தான் இந்த போட்டிலயே நான் கலந்துகிட்டேன்.. உங்கள நினைச்சி தான் பாட்டோட ஒவ்வொரு வார்த்தையையும் பாடுனேன்.. I mean it. “ என வினோத் சொல்லிய போது ரேகா முகத்தில் இருந்த புன்னகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.
“வினோத்.. ஏன் நீங்க புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க.. நான் உங்கள இப்டி பாராட்றதையோ உங்க கிட்ட சிரிச்சிப் பேசுறதையோ லவ்ன்னு நினைச்சீங்கனா நான் உங்ககிட்ட பேசுறதையே நிறுத்திடுறேன்..”
“ஓகே ஓகே.. கோவப் படாதிங்க.. நெஜம் அது தான் அதனால தான் உங்ககிட்ட சொன்னேன்.. ஸாரி..” என அவளை அமைதிப்படுத்த முயன்றான்.
“Anyway Congratulations.. நான் வரேன்..” எனக் கூறிவிட்டு முகத்தை கொஞ்சமே கொஞ்சம் கடுமையாக வைத்துக் கொண்டு திரும்பி நடந்தாள் ரேகா. இன்ஸ்டன்ட் கவிதை உடனே குதித்தது.

பெண்ணே..!
எத்தனை முயற்சிகள்
வேண்டுமானாலும் 
செய்வேன்..
எனக்குள் 
காதல் விதைத்த
உனக்காக..!

‘போடி முட்டக்கண்ணி’ என நடந்து செல்லும் அவளை மனதுக்குள் திட்டியபடி  சிரித்துக் கொண்டான்.

அவனுடைய ப்ராஜெக்ட் கேபினுக்குள் நுழைந்த போது எல்லோரும் வந்து வாழ்த்து சொல்லி கை குலுக்கி சென்றார்கள். ‘எல்லாப் புகழும் என் டார்லிங்குக்கே’ என நினைத்து கொண்டு அத்தனை வாழ்த்தினையும் ஏற்றுக் கொண்டான். அன்று முழுவதும் மிதந்தபடியே இருந்தான். மாலை 7 மணிக்கு அலுவலகம் முடிந்து கிளம்பினான். நிறுத்தத்தில் சில நிமிட காத்திருப்பிற்கு பின் அவனுக்கான பேருந்து வந்தது. ஆண்கள் பகுதியில் ஒரே ஒரு இருக்கையைத் தவிர மற்ற அனைத்து இருக்கைகளிலும்  பயணிகள் அமர்ந்திருந்தார்கள். இருக்கையில் அமர்ந்து கொண்டவன் டிக்கெட் வாங்கிக் கொண்டு தனது மொபைலை எடுத்து மகேஷை அழைத்தான்.

“மச்சான்.. பாட்டுப் போட்டி முடிஞ்சிடிச்சிடா..” என்றான் உற்சாகத்துடன்.

மறுமுனையில் மகேஷ்,
“என்னடா.. செம்ம எனெர்ஜியாப் பேசுற.. ஜெயிச்சிட்டியா என்ன..?” என்றான்.
“ஆமா மச்சான்.. ஏன் ஆளும் வந்துப் பாத்தா.. சூப்பரா பாடுனீங்கன்னு சொன்னா.. இன்னும் நெறைய சொன்னா.. ரூம்ல வந்து சொல்றேன்.. வந்துட்டியா ரூம்க்கு..?”
“இல்லடா.. இன்னும் ஆபிஸ்ல தான் இருக்கேன்.. கெளம்ப இன்னும் அரைமணி நேரம் ஆகும்..? நீ எங்க இருக்க..”

“ரூம்க்கு தான் போய்ட்டு இருக்கேன் மச்சான்.. சரி நீ வா.. பேசுவோம்..” எனக் கூறிவிட்டு போனை அனைத்து பாக்கெட்டில் போட்டான் வினோத். 

பேருந்து மத்திய கைலாஷ் தாண்டி IIT கல்லூரி எதிரே இருக்கும் பாலத்தில் ஏறிக் கொண்டிருந்தது. எதிரே வந்த காரின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் இடது பக்கமாக சிறிது  திருப்ப வண்டி பாலத்தை உடைத்துக் கொண்டு தலைகீழாக கவிழ்ந்தது. சீட் கம்பியைப் பிடிக்காமல் ரேகாவுடன் பேசியதை நினைத்து சின்ன புன்னகையுடன் அமர்ந்திருந்த வினோத் முன்னும் பின்னுமாக இடித்துக் கொண்டு தூக்கி எறிப்பட்டான். தலை எதிலோ முட்டியதில் முகத்தில் சூடாக ரத்தம் வழியத் தொடங்கியது. கண்ணாடி சில்லுகள் கைகளை கிழித்திருந்தது. கால்களை அசைக்க முடியவில்லை. அவனுக்கு அருகே கிடந்த ஒரு பெண்மணியின் அலறல் சில நொடிகள் மட்டும் தெளிவாக கேட்டது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவினை இழந்து கண்களை மூடினான் வினோத்.


(தொடரும்..)

கருத்துகள்