ஒரு லவ் ஸ்டோரி - பகுதி 7



"எங்க வீட்டுல எல்லாம் லவ் மேரேஜ்க்கு உடனே ஓகே சொல்லிடுவாங்க அப்டி இப்டின.. கடைசில மதம் மார்ரென்னு சொன்னதுக்கு வெளக்கமாத்த கேட்டிருக்காங்க அம்மா..?"
"டேய்.. அதெல்லாம் சும்மாடா .. நான் விளையாட்டா சொன்னேன்னு நினைச்சிட்டு அவங்க பேசுனது.. ஆனா நான் லவ் பன்றேன்னு போய் சொன்னா கண்டிப்பா அப்பாவோ அம்மாவோ எதுவும் சொல்லமாட்டாங்க.. அடிச்சி சொல்லுவேன்.."
"ஹ்ம்ம்.."
இருவரும் பேசிக் கொண்டிருந்த இடம் எப்போதும் போல் ஆஃபீஸ் கேன்டீன் தான். கேன்டீனில்  மிதமான கூட்டமே இருந்தது. வினோத்திடம் பேசியபடி இருந்தாலும் மதனின் கண்கள் கேன்டீன் முழுக்க சுற்றிக் கொண்டே இருந்தது. திடீர் சுறுசுறுப்பானான் மதன்.
"மச்சான்.. உன் ஆளு வராடா..?"
ஆர்வமடைந்த வினோத்,
"எங்கடா..?" என்று நுழைவு வாயிலைப் பார்த்தான்.
"தோ.. அங்க க்ரீன் கலர் சுடிதார்.."
"ப்ச்" என உச்சி கொட்டிவிட்டு தலை குனிந்து கொண்டான் வினோத்.
"என்னடா நொச்சி..? ஏன்டா இவளத் தானே 3 மாசத்துக்கு முன்னாடி வர மாஞ்சி மாஞ்சி சைட்டடிச்சிட்டு இருந்த.. இப்போ புதுசு வந்ததும் பழசு கசக்குதா..?"
"அப்டி இல்லடா.. அழகா இருக்குற எந்த பொண்ண பாத்தாலும் சைட் அடிக்குறதும் இந்த மாதிரி ஒரு பொண்ணு ஒய்பா வந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுறதும் சகஜமா இருந்திருக்குடா.. அத தாண்டி அந்த பொண்ணுங்க மேல எனக்கு எந்த ஆர்வமும் வந்ததில்லை.. ஆனா இவள பாத்ததுக்கு அப்றம் அதுவும் லவ்வுனு ஒரு பீலிங் தோன்னதுக்கு அப்றம் எந்த பொண்ண பாத்தாலும் ஏதோ அவளுக்கு துரோகம் பண்ற மாதிரி இருக்குடா.. அப்கோர்ஸ் அவ என்னை மனுஷனா கூட மதிக்கலங்கறது வேற விஷயம்.. பட் அவள சீட் பண்ற மாதிரி எனக்கு இருக்கு.."
"ச்ச.. இப்டி ஒரு ஏகப்பத்தினி விரதனப் போய் வேணான்னு சொல்லிட்டாளேடா அவ.." எனக் கண்களை கசக்கினான் மதன்.
"கொய்யாலே.. என்னை கலாய்க்க நானே கன்டென்ட் கொடுத்துட்டேனா.." எனக் கேட்டுவிட்டு வினோத் சிரிக்க மதனும் சேர்ந்து சிரித்தான்.
"ஹாய் கைஸ்.." என்றபடி இருவரும் அமர்ந்திருக்கும் டேபிளுக்கு வந்தான் PP பிரபு.
வினோத்தும், மதனும் பதிலுக்கு ஹாய் சொல்லவில்லை. PP அதை எதிர்பார்க்கவில்லை என்பது அவனது உடல் மொழியிலேயே தெரிந்தது. அத்தனை கெத்தாக ஒரு சேரை இழுத்துப் போட்டு அவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.
"ப்ரியா, சரண்யா, ஐஷு.. நீங்க மூணு பேரும் பேசிட்டு இருங்க.. நான் 5 மினிட்ஸ்ல ஜாயின் பண்ணிக்குறேன்.." எனக் கூறிவிட்டு மொபைலை ம்யூட்டில் போட்டான்.
"என்னப்பா ரெண்டு பேரும் ஜாலியா பேசிட்டு இருந்தீங்க.. நான் வந்ததும் அமைதியாகிட்டிங்க.." PP கேட்டபோது, 
"அப்பவே தெரிய வேணாமா PP.. உன் முன்னாடி பேசுறதுக்கு விரும்பமில்லன்னு.." என்றான் மதன்.
"இப்படியெல்லாம் கலாய்ச்சா நான் போய்டுவேன்னு நினைச்சியா மச்சி.."
"சாணிய கரைச்சி மூஞ்சில ஊத்துனா கூட நீ போகமாட்டன்னு எங்களுக்குத் தான் தெரியுமே மச்சான்.."
"அப்புறமும் ஏன்டா ட்ரை பண்ற.." எனக் கேட்டுவிட்டு மதனும் PP-யும் கைகளை குலுக்கியபடி சிரித்துக் கொண்டனர். வினோத் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அமைதியாக இருந்தான். மதன் தான் பேசினான்.
"மச்சான் PP.. எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்.. இந்த பொண்ணுங்ககிட்ட பேசுறத தவிர ப்ரீ டைம்ல வேற என்ன மச்சான் பண்ணுவ..?"
"உலகத்துலயே ரொம்ப கஷ்டமானது என்ன மச்சான்.."
"இந்த மாதிரி அறிவு பூர்வமான கேள்வியெல்லாம் எங்கிட்ட கேக்காதPP.." என மதன் கூறவும்,
"வினோத்.. நீ சொல்லுடா" என்றான் PP.
"வேற என்ன PP.. உங்கிட்ட பேச்சு கொடுக்குறது தான்.."
வினோத், மதன் இருவரும் PPயை பார்த்து கேலியாக சிரிக்க கொஞ்சம் கடுப்பானான் PP.
"சிரிச்சி முடிச்சிட்டீங்களா..? இப்ப சொல்லவா..? உலகத்துலயே ரொம்ப கஷ்டமான விஷயம் பொண்ணுங்கள புரிஞ்சிகிட்டு ஹாண்டில் பண்றதுதான். அவங்கள எப்ப பாராட்டணும், எப்ப கலாய்க்கணும், எப்ப கலாய் வாங்கணும்,  எந்த விஷயத்துக்கு நாம கோவப்படணும், அவங்க கோவப்படும் போது நாம எப்படி ரியாக்ட் பண்ணனும், அவங்க மொக்க ஜோக்குக்கு எப்படி சிரிக்கணும், சோகமாக இருந்தா எப்படி ஆறுதல் சொல்லணும், எவளோ டைம் அவங்க கூட ஸ்பென்ட் புடிக்கும், அவுட்டிங், கிப்ட், பர்த்டே விஷ், ட்ரீட்.." என PP இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கும் போது,
"மச்சான் PP.. போதும் நிறுத்து.. ரொம்ப லெங்த்தா போகுது.." என்றான் மதன்.
"ஆஹ்.. கேக்குறதுக்கே நீ டைர்ட் ஆகிட்டியே.. அதையே தினமும் எல்லா பொண்ணுங்ககிட்டயும் பன்றேனே எனக்கு எப்படி இருக்கும்.. என்னமோ ரொம்ப சாதாரணமான விஷயமாதிரி பேசிட்ட.. இந்தா இப்ப கூட மூணு பொண்ணுங்க கூட கான்பிரென்ஸ்ல கடலை போட்டுட்டு இருக்கேன்.. இங்க.. முடிஞ்சா நீ பண்ணிக் காட்டேன்.. தோ.. வினோத் கூட ஒரு பொண்ண லவ் பண்ணா.. கரெக்ட் பண்ண முடிஞ்சதா..? என்னாச்சி.. மொக்க வாங்கிட்டு தானே வந்தான்.."
"PP.. அவனை ஏன்டா கலாய்க்குற..? ரிவென்ஜா.."
"ஆமா.. எண்ணிய மட்டும் கலாய்ச்சான்.."
வினோத் எதுவும் பேசவில்லை. 
"PP.. நீ பெரியாளுதான்.. தெரியாம தப்பா பேசிட்டேன்.. மன்னிச்சுடு.. சிஸ்டர்ஸ் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. சீக்கிரம் போய் பேசு.."
"மூடு.. எனக்கு தெரியும்.." எனக் கூறிவிட்டு ம்யூட்டினை ஆப் செய்து, "ஐஷு.. என்ன சொன்ன.. மறுபடியும் சொல்லு.." என்றபடியே எழுந்து சென்றான் PP.
மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது இருவருக்கும்.
"என்னா மச்சான்.. அசிங்கப்படுத்திட்டு போய்ட்டான்.." என்றான்மதன்.
"ஆனா உண்மையத்தான் சொன்னான்.." என வினோத் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு பெண்ணுடன் கேன்டீன் உள்ளே நுழைந்தாள் ரேகா.
"மச்சான்.. என் ஆளு வந்துட்டா.."
நிமிர்ந்து பார்த்தான் மதன்.
"டேய்.. நான் அவ்ளோ சொல்லியும் திருந்த மாட்ட.. அதானே.. நீ நடத்து.."
"இரு.. அவ கிட்ட பேசிட்டு வந்துடுறேன்.."
எழுந்து அவளும் அவளது தோழியும் உட்கார்ந்திருந்த டேபிள் அருகே சென்றான் வினோத்.
"ஹாய் ரேகா.."
"ஹலோ.."
"உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. அந்த டேபிள் போலாமா?"
அருகில் இருந்த அவளுடைய தோழியைப் பார்த்தாள்.
"அய்யோ.. பிரென்ட் கூட வந்திருக்கேனே..?" என்றாள்.
"அந்த டேபிள பாருங்க.. அவன் என் பிரென்ட் தான்.. என் கூடத்தான் வந்தான்.. உங்ககிட்ட தனியா பேசணும்னு தான் அவன அத்துவிட்டுட்டு வந்தேன்.. அதே மாதிரி.." என அவன் இழுக்க,
"என்னையும் அத்துவிட சொல்லுறாரு.." என்றாள் ரேகாவின் தோழி.
சொல்லிவிட்டு ரேகாவின் தோழி சிரிக்க வினோத்தும் ரேகாவும் இரண்டு டேபிள் தள்ளி உட்கார்ந்தார்கள்.
"சொல்லுங்க வினோத்.."
தொண்டையை செருமிக் கொண்டு பேசினான் வினோத்.
"லாஸ்ட் வீக் டூ டேஸ் லீவ் போட்டுட்டு ஊருக்கு போயிருந்தேன். திருச்சில என் பெரியப்பா பையன் மேரேஜ். என்னை விட ரெண்டு வயசு சின்ன பையன்."
"ஒரு நிமிஷம்.. இதெல்லாம் எங்கிட்ட ஏன் சொல்லிட்டு இருக்கீங்க.."
"சொல்றேன் இருங்க.. அங்க மேரேஜ்ல தூரத்து சொந்தக்காரர்  ஒருத்தர்கிட்ட  அம்மா பேசியிருக்காங்க.. அவர் எனக்கு மாமா முறை தான் வேணும்.. அவரோட பொண்ணு காலேஜ்ல பைனல் இயர் படிச்சிட்டு இருக்காம்.. படிப்ப முடிச்சதும் கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்காராம்.. அந்த பொண்ணுக்கு என்னை கேட்டிருக்காரு அம்மாகிட்ட.."
நிறுத்தினான் வினோத்.
"சூப்பர்.. நல்ல விஷயம் தானே.. காங்கிராட்ஸ்.." என்றாள் ரேகா.
'இவ புரிஞ்சி பேசுறாளா இல்ல கலாய்க்கிறாளா' எனக் குழம்பிக் கொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தான்.
"நான் வேணாம்னு அம்மாகிட்ட சொல்லிட்டேன்.. சரி வேற பொண்ணு பாக்கலாம்ன்னு பேசிட்டு இருந்தாங்க.. நீங்க உங்க வீட்டு அட்ரஸ் தர முடியுமா..?"
கோபமானாள் ரேகா. இறுக்கமான முகத்துடன் கேட்டாள்.
"எதுக்கு..?"
"நீங்க தானே சொன்னீங்க.. அப்பா அம்மா சொல்ற பையனத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு.. என் அப்பா அம்மாவோட உங்க வீட்டுக்கு வந்து பேசுறேன்.."
"வினோத்.. இப்படியெல்லாம் பண்ணாதீங்க.."
"இல்ல நெஜமாத்தான் சொல்றேன் ரேகா.. எங்க  வீட்டுல வந்து பேசி உங்க வீட்டுலயும் சரின்னு சொல்லிட்டா உங்களுக்கு ஓகே தானே..?"
சிரித்துக் கொண்டாள் ரேகா.
"வினோத்.. உங்களோட காண்பிடென்ஸ் லெவல் சான்சே இல்ல.. பட் அது நடக்க வாய்ப்பே இல்ல.. ப்ளஸ் நீங்க உங்க பேமிலியோட வந்து எங்க வீட்டுல நின்னா எனக்கு உங்கள புடிச்சதால தான் இப்டி வந்து நிக்குறீங்கன்னு அவங்க நினைச்சிட்டா.. அந்த மாதிரி ஒரு சின்ன தாட் கூட என் பேரெண்ட்ஸ் வரக்  கூடாதுன்னு நினைக்கிறேன்.. ஸோ ப்ளீஸ்.. இந்த ஐடியாவ விட்டுடுங்க.."
"இல்ல ரேகா.." என அவன் மேற்கொண்டு பேச முயல,
"வினோத்.." என்று கொஞ்சம் குரலில் கடுமை காட்டினாள் ரேகா.
வினோத் பேச்சை நிறுத்திக் கொண்டான். 
"சரி.. ஓகே.. அவ்ளோதானே.. பாப்போம்.." எனக் கூறிவிட்டு எழுந்து உடன் வந்த தோழியுடன் இணைந்து கொண்டாள் அவள். வினோத் மதனை அழைத்துக் கொண்டு அவர்களுடைய ப்ராஜெக்ட் கேபினுக்கு சென்றான்.

"என்னடா.. ரொம்ப நேரம் பேசிட்டு இருந்த.." என உள்ளே நுழைந்து சீட்டில் அமரும் முன் கேட்டான் மதன்.
"ஒண்ணுமில்ல.. அவளோட வீட்டு அட்ரஸ் கேட்டுட்டு இருந்தேன்.."
"அட்ரஸா..? எதுக்கு..?"
"என் அப்பா அம்மாவோட அவங்க வீட்டுல போய் பொண்ணு கேட்க.."
கொஞ்சம் அதிர்ச்சியுடன் கேட்டான் மதன்.
"டேய்.. உண்மையாவா..?"
"ஆமாடா.. அவ தான் சொன்னா.. அப்பா அம்மா சொல்ற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு.. சரி வீட்டுல வந்து உங்க பேரெண்ட்ஸ் கிட்ட பேசுறேன்.. அட்ரஸ் கொடுன்னு சொன்னா முறைக்குறா.. PP சொன்னமாதிரி பொண்ணுங்கள புரிஞ்சிருக்குறது ரொம்ப கஷ்டம் தான் போல.."
"மச்சான்.. PP கிட்ட பேசாம டெய்லி ஒன் ஹவர் 'பெண்களைப் புரிந்து கொள்வது எப்படி?' கிளாஸ் போலாமா..?"
மதனின் கேள்விக்கு வெறுமனே சிரித்துவிட்டு, வினோத் தன்னுடைய  கம்ப்யூட்டரில் லாக்-இன் செய்தான்.
புதிதாக வந்திருந்த மெயில் ஒவ்வொன்றையும் திறந்து படித்துக் கொண்டிருந்தவன் திடீர் உற்சாகமானான். அருகில் இருந்த மதனை அழைத்தான்.
"மச்சான்.. இங்க பாரு.. நம்ம ஆஃபீஸ்ல நெக்ஸ்ட் வீக் சிங்கிங் காம்பெடிஷன் வச்சிருக்காங்க.."
"அதுக்கு நீ ஏன்டா இவ்ளோ சந்தோசப்படுற..?"
"மச்சி.. நான் இதுல கலந்துக்க போறேன்.."
"ஏன்டா உனக்கு இந்த வேலையெல்லாம்..?"
"ப்ச்.. கலந்துக்கிட்டு பாடி ரேகாவ இம்ப்ரெஸ் பண்ண போறேன்.."
"இம்ப்ரெஸ் பண்ணி..?"
"என்னை அவளுக்கு புடிச்சி போகலாம்ல.."
"ஆஹ்.. அப்புறம்.. ஏன்டா பாட்டு பாடுறவனுக்கெல்லாம் பொண்ணு உஷாராகும்னா அவனவன் குழந்தையா இருக்கும் போதே பாட்டு கிளாஸ் தான் போயிருப்பானுங்க.. சரி அப்டியே இருந்தாலும் நீ என்ன SPB-யா இல்ல ஹரிஹரன்னா..? அப்படியே பாடியே அந்த பொண்ண மயக்குறதுக்கு.."
"நீ என்ன வேணாம் சொல்லிக்கோ.. நான் கண்டிப்பா இதுல பார்ட்டிசிப்பேட் பண்ண போறேன்.. என் டார்லிங் முன்னாடி பாட போறேன்.." எனக் கூறிவிட்டு வினோத்  பாடலை முணுமுணுக்கத் தொடங்கினான்.
"சீக்கிரம் உன்ன கீழ்ப்பாக்கத்துக்கு கூட்டிட்டு போக வேண்டிய நிலமை வந்துடும்ன்னு நினைக்கிறேன்.. கடவுளே.. இந்த புள்ளைய காப்பாத்துப்பா.." என்ற மதனின் எந்த வார்த்தைகளையும் கேட்காமல் அவன் பெயரை பாட்டு போட்டியில் சேர்ப்பதற்காக மெயில் தட்டிக் கொண்டிருந்தான் வினோத்.

(தொடரும்..)


கருத்துகள்