தினமும் அவளுக்கு Good morning, Good evening, Good night தவறாமல் WhatsApp செய்தான். அவளிடமிருந்து பதிலை எதிர்பார்க்கவில்லை அவன். ஒரு வேளை அவள் அவனை 'ப்ளாக்' செய்துவிட்டால்? அப்படி எதுவும் அவள் செய்து விடக் கூடாது என்பதால் Good morning போன்ற வகையராவைத் தவிர ஒரு வார்த்தையையும் அவளுக்கு அனுப்பவில்லை. அவளுடைய Profile Picture-ஐ சேமித்து வைத்து தினமும் குறைந்தபட்சம் 50 முறையாவது பார்த்துக் கொண்டிருந்தான். எப்போதும் போல் ஞாயிற்றுக்கிழமையான அன்றும் Good morning ஒன்றினை அவளுக்கு அனுப்பி வைத்தான். ஒரு மணி நேரம் கடந்திருக்கும். "டிங்" என்று ஒலி எழுப்பியது அவனது மொபைல். எடுத்துப்பார்த்தவனுக்கு பேரானந்தம்.
Good morning.. Have a nice day
Message from Darling. ஆம். அந்த பெயரில் தான் அவளது எண்ணை சேமித்து வைத்திருந்தான். அவளிடமிருந்து பதில் வந்தபிறகு எப்படி பேசாமல் இருப்பது?
Me:
Hi Reka.. How are you?
Hi Reka.. How are you?
Darling:
That's my question Vinoth.. How are you?
Me:
I am feeling great from LAST WEEK 

Darling:
Good.. Get well soon.
இப்படித்தான் சம்பிரதாயமாக தொடங்கியது அவர்களின் பேச்சு. பிறகு தினமும் தொடர்ந்த உரையாடல்கள் மூலம் தொலைவிலிருந்து பார்த்த போது அவன் நினைத்த ரேகாவிற்கும் அவளோடு பேசிய பிறகு தெரிந்து கொண்ட ரேகாவிற்கும் நிறைய முரண்கள் இருப்பதைப் புரிந்து கொண்டான். வாழ்வின் அழகே தவறாமல் நிகழும் முரண்பாடுகள் தான் எனும் போது இதை மட்டும் அவன் குறை கூறுவானா? முன்னை விடவும் பல மடங்கு அவளைப் பிடித்துப் போயிருந்தது அவனுக்கு. பிறவியின் பயனே அவளைச் சேர்வதில் தான் உள்ளது என்பதாக அவனுக்கு தோன்ற தொடங்கியது. 'வாங்க போங்க' எனும் பன்மையெல்லாம் முடிந்து போய் 'வா போ' என்றழைத்துப் பேசும் நெருக்கம் அவர்களுக்கிடையே முளைத்திருந்தது. 'அந்த நெருக்கத்தினை தான் உணரும் அளவிற்கு அவள் உணர்கிறாளா?' எனும் கேள்வி வினோத்தின் மூளையை அரித்துக் கொண்டே இருந்தது. அவளிடம் பேசிக்கொண்டே இருப்பதும் அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதுமே அவனை அத்தனை உயரிப்புடன் வைத்திருந்தது. மருந்து, மாத்திரைகளின் உதவி இல்லாமலே காயங்கள் அவனிடமிருந்து விலகிக் கொண்டிருந்தன.
ஒரு நாள் இரவு 10.40-ஐ கடந்தும் அவர்களின் WhatsApp உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. அம்மா, அப்பா, தங்கை அனைவரும் தூங்கிவிட வினோத் மட்டும் அவனுடைய அறையில் இன்னும் முழுதாக குணமாகாத காலுக்கு தலையணையை முட்டு கொடுத்தபடி அவளோடு பேசிக் கொண்டு படுத்திருந்தான். இனி நிச்சயம் கோபப்பட மாட்டாள் எனும் நம்பிக்கையில் அவளிடம் அது குறித்தான பேச்சைத் தொடங்கினான்.
Me:
Reka..?
Darling:
Hmm
Me:
Naan eluthuna kavithai ellam padicha thane..?
Darling:
Hmm
Me:
Pidichirunthadha..?
Darling typing.. நீண்ட நேரம் இப்படியே காட்டிக் கொண்டிருந்தது. 'என்ன இவ்ளோ நேரம் டைப் பண்றா..? முட்டக் கண்ணி ஏதும் திட்ட போறாளா ..?
Darling:
Hmm romba sumara than irundhadhu. Mostly mokkaiya than irunthadhu. Idha eppadi thairiyama kavithai nu solra ne?
படித்துவிட்டு மனம் விட்டு சிரித்தான். அவளது குறும்பினை மிகவும் ரசித்தான். அவள் இத்தனை "சுட்டியாக" இருப்பாள் என சிறிதும் அவன் நினைக்கவில்லை. 'கவிதை எல்லாம் மொக்கை' என்று விளையாட்டாகத் தான் சொல்லிருப்பாள் என்றும் 'அதுவே உண்மையாக இருக்க வேண்டுமென்றும்' வேண்டிக் கொண்டு அவளுக்கு பதில் அனுப்பினான்.
Me:

Nijamava? Onnu kooda unaku pidikalaiya?
Darling:
Onnu nallaa irundhadhu
Me:
Yedhu..?
என்
அத்தனை
அறிவும்
மொத்தமாய்
போனது.!
உன்னை
கண்ட அந்த
நொடி முதல்.!
Me:
Idhu unaku pidichirunthadha..?
Darling:
ama
Me:
Yen..?
Darling:
Unaku arivillainnu unmaiya sonnala adhan
Me:

Darling:

அவளைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் வினோத் தெரிந்து கொண்டான். பிடித்த திரைப்படம், படித்த புத்தகங்கள், பிடித்த விளையாட்டு, ரசித்து கேட்கும் இசை, சர்ச் செல்லும் நாட்கள், குடும்பத்தோடு சென்ற சுற்றுலா, உயிர் தோழிகளும் அவர்களுடன் செய்த சேட்டைகளும், அம்மாவின் கைப்பக்குவத்தில் பிடித்த உணவு, அவளுக்கு சமைக்க தெரிந்த பதார்த்தங்கள், ஒரே பிள்ளையான அவளுக்கு கிடைத்த பெற்றோரின் அன்பு, தோழியைப் போல் பழகிடும் அம்மா, எப்போதும் எல்லாக் காரியங்களிலும் தைரியமும் நம்பிக்கையும் கொடுத்திடும் அப்பா என ஒவ்வொன்றையும் அத்தனை கவனத்துடன் கேட்டுக் கொண்டான். எத்தனை நாட்கள் ஆசை இது? அவளை முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும். அவளை அவளை விடவும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவனது பேராசை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டே வந்தது.
விபத்து நடந்து இரண்டு மாதங்கள் முடிந்திருந்தன. அவன் எதிர்பார்த்தது போலவே நன்றாக எதையும் தாங்கிக் கொள்ளாமல் நடக்க முடிந்தது. வீட்டாரின் அனைத்து அறிவுரைகளையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு இரவு சென்னைக்கு பேருந்து ஏறினான். 'தான் கிளம்பிவிட்டதாக' அவளுக்கு WhatsApp செய்தான். அவள் online வரவில்லை. அவனது தகவல் blue tick-க்கு மாறியதா என ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் பார்த்துக் கொண்டே இருந்தான். உறக்கம் வரவில்லை. 'நாளை அவளைப் பார்க்கப் போகிறோம்' என்ற குறுகுறுப்பும் தவிப்பும் அவனைத் தூங்கவிடவில்லை. அவளோடு 'வா போ' என்று உரிமையாக பேசத் தொடங்கியதற்குப் பிறகு நடக்கவிருக்கும் முதல் சந்திப்பு. 'என்ன பேசுவது? எப்படி தொடங்குவது?' அவனது மூளைக்குள் ஒரு பெரும் உரையாடலை நிகழ்த்தினான் அவளோடு. திக்காமல், இப்போது யோசித்ததை எல்லாம் பேசவிட வேண்டும். இருட்டில் கடந்து போகும் மரங்களையும் கட்டிடங்களையும் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டே வந்தவன் தன்னையுமறியாமல் உறங்கிய பிறகு 1 Message Received from Darling என்றது அவனது மொபைல்.
விபத்து ஏற்படுத்திய எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டு வந்திருக்கும் வினோத்தை கண்டு சந்தோஷமடைந்தான் மகேஷ். கட்டிப்பிடித்து வரவேற்றான். இருவரும் குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு ஹோட்டல் சென்றனர். பிறகு வழக்கமாக செல்லும் டீக்கடைக்கு பைக்கை விரட்டினான் மகேஷ். அதுவும் முடிந்த பிறகு வினோத்தை அவனது அலுவலக வாசலிலேயே இறக்கி விட்டுச் சென்றான் மகேஷ்.
அவனுடைய ப்ராஜெக்ட் ஷேக்ஷனுக்குள் நுழைந்தான். ஒவ்வொருவரும் அவனை சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்தார்கள். அடிப்பட்ட இடங்களையும், அது ஏற்படுத்திய தழும்பையும் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். விபத்து நடந்த விதத்தை அவனை சொல்லச் சொல்லி அந்த துயரத்திற்க்காக மீண்டும் வருந்தினார்கள். எல்லோரும் தத்தமது இருக்கைக்கு சென்ற பிறகு வினோத் மேனேஜர் விஜய்யை அவருடைய கேபினுக்கு சென்று பார்த்து சிறிது நேரம் பேசி விட்டு வந்து அவனுடைய இருக்கையில் அமர்ந்தான். அருகிலிருந்த மதன் ஆரம்பித்தான்.
"என்னடா எதுவும் பிரச்சனை இல்லல..?"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல மச்சி.. I am totally perfect" என உற்சாகமாக பதிலளித்தான் வினோத்.
பிறகு ரேகா பற்றி பேசினான். அவள் குறித்து ரசித்து ரசித்துப் பேசியதைக் கவனித்த மதன் கொஞ்சம் சீரியசான முகத்துடன் சொன்னான்.
"மச்சி.. நீ ரொம்ப ஆழமா எறங்கிட்ட.. பாத்துக்கோ.. அப்புறம் அவ இல்லனா பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவ.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.."
மதன் சொல்வது வினோத்திற்கு புரியாமலில்லை. அவளிடமிருந்து விலகுவது அல்லது அவளைத் தவிர்ப்பது என்பது இனி அவனால் முடியுமென அவனுக்குத் தோன்றவில்லை. மதன் சொல்வதைப் போல் வினோத் அவளோடு வெகு தூரம் சென்றிருந்தான். தொடங்கிய இடத்திற்கு திரும்பி வருவது என்பது இயலாதக் காரியம். 'காதல் வேண்டாம்' என்பதிலேயே அவள் கடைசிவரை உறுதியாக இருந்துவிட்டால்? அந்த கேள்விக்கு பதில் தேடுவதை அவன் தவிர்த்துக் கொண்டே வந்தான்.
இரண்டு மாத விடுமுறையின் காரணமாக படிக்கப்படாமலிருந்த அத்தனை மெயில்களையும் பொறுமையாக படித்தான். பிறகு மதனிடமும், TL அஜய்யிடமும் ப்ராஜெக்ட்டின் தற்போதைய நிலை குறித்தும் இரண்டு மாதங்களில் ப்ராஜெக்ட்டில் நடந்த ஒவ்வொரு தகவல்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டான். லஞ்ச் டைம் நெருங்கிக் கொண்டிருந்த போது வினோத்தின் மொபைல் 'சைலன்ட் மோடில்' அதிர்ந்தது. திரை 'Darling' என்று காட்டியது. ஆர்வத்துடனும், சின்ன பதட்டத்துடனும் ஆன் செய்தான். செவிகளில் இனிப்பாக இறங்கியது அவளது குரல்.
"வினோத்..?"
"சொல்லு ரேகா.."
"நான் கேன்டீன்ல தான் இருக்கேன்.. வரியா..?"
"டூ மினிட்ஸ்.. வந்துடுறேன்.."
"ஓகே.."
மதனிடம் சொல்லிக் கொண்டு அவசர அவசரமாக வெளியே வந்தான் வினோத். கேன்டீன் செல்லும் வழியில் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்தான். முகம் கழுவி தலைவாரிக் கொண்டு வந்தான். கேன்டீனுக்குள் முழுதாக நுழையும் முன்பே அவளைத் தேட தொடங்கின அவனது கண்கள். சுவர் ஓரமாக இரண்டு பேர் அமரும் டேபிள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்திருந்தாள். பிங்க் நிற சுடிதாரில் உள்ளே நுழையும் அவனை பார்த்து சிரித்தாள். அவளை நோக்கி நடந்தவனின் கால்கள் அவனது பதட்டத்தை அப்பட்டமாக கூறியது. கால்களுக்கு கீழே பூமி நழுவுவதைப் போல ஒரு பிரமை. அவளைப் பார்த்துக் கொண்டே நடந்தவன் கடைசியாக அவள் அமர்ந்திருந்த டேபிள் முன்னே நின்றான். அவனைப் பார்த்தவள் சினேகமாக சிரித்தாள். பதிலுக்கு அவன் வெளியே சிரித்தாலும் உள்ளே அவனது மூளை அவளுக்காக அவசரமாக சில வார்த்தைகளை உற்பத்தி செய்து கொண்டிருந்தது.
புகைப்படமாக
மனதில்
பதிந்துவிட்டதடி..!
எனக்காக
நீ
புன்னகைத்த
இந்த
அழகிய தருணம்..!
(தொடரும்..)
கருத்துகள்