துரோகத்தின் சம்பளம் - சிறுகதை

“அர்ஜுன்.. எந்திரி.. தூங்காத...நாம எறங்குற இடம் வரப் போகுது...”
என்று தன் அருகில் ஜன்னலோரமாய் தூங்கிக் கொண்டிருந்த மகனைத் தட்டி எழுப்பினாள் நர்மதா.... விழித்து எழுந்த அர்ஜுன் மலங்க மலங்க நர்மதாவை பார்த்தப்படி,
“என்னம்மா...” என்று சினுங்கியப் படியே கேட்டான்... நர்மதா,”இன்னும் கொஞ்ச நேரத்துல எறங்கப் போறோம்... தூங்கக் கூடாது...” எனக் கூற, “அப்ப பாப்பா மட்டும் ஏன்ம்மா தூங்குது... எழுப்பி விடு..”
என்று அர்ஜுன் நர்மதாவின் மடியில் தூங்கிக் கொண்டிருந்த தன் 8 மாதத் தங்கையை எழுப்ப முற்ப்படலானான்... நர்மதாவிற்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அர்ஜுனின் செய்கையைப் பார்த்து சிரித்தப்படியே நர்மதாவிடம்,“ பையன் ரொம்பச் சுட்டியா இருப்பான் போல...” என்றுக் கூற நர்மதா அந்த பெண்மணியைப் திரும்பிப் பார்த்து ஒரு விரக்தியான சிரிப்பை மட்டும் பதிலாய்த் தந்தாள்...
 “சைதாப்பேட்டை எல்லாம் எறங்கு..” என்று கண்டக்டர் கூறியதும் நர்மதா தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தோளில் சுமந்துக் கொண்டு அர்ஜுனைக் கைப்பிடித்தப் படியே நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டாள்... தான் வரப் போவதை முன்பே தெரிவித்திருந்தப் படியால் அவளை வரவேற்க தன் ஸ்கூட்டி சகிதம் தயாராக நின்றுக் கொண்டிருந்தாள் நர்மதாவின் தோழி ரம்யா... நர்மதாவைக் கண்டதும் அவளின் அருகில் வந்த ரம்யா,
“எப்படி இருக்க நர்மதா..?” எனக் கேட்க அந்தக் கேள்விக்கு நர்மதாவின் முகபாவனையைப் படித்தவள் தன் கேள்வியின் அபத்தம் உணர்ந்தவளாய், “சரி வா... வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்...” என்றபடியே அர்ஜுன், நர்மதா, நர்மதாவின் தோளில் உறங்கியப் படியே இருக்கும் குழந்தை மூவரையும் தன் பின்னே அமர வைத்துக் கொண்டு வண்டியை விரட்டலானாள்...
 திருச்சியில் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே ரம்யாவும் நர்மதாவும் நெருங்கியத் தோழிகள்.. டைரியில் எழுதுவதற்குக் கூட தயங்கும் சில விஷயங்களை இருவரும் சகஜமாக பகிர்ந்து கொள்வது வழக்கம்... ரகசியம் என்ற சொல் இருவருக்குமிடையே மட்டும் என்றும் அர்த்தமற்றதே... இருவருக்கும் சொந்த ஊர் திருச்சியாக இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு சென்னையிலேயே தங்கிவிட்டார்கள்...  ரம்யாவின் கணவன் வெளிநாட்டில் வேலைப் பார்ப்பதால் ரம்யாவும் அவளின் விதவை அம்மாவும் மட்டும் இங்கே வசித்து வந்தார்கள்... ரம்யா ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் வேலைப் பார்த்து வந்தாள்...
 ரம்யாவின் வீட்டில் நுழையும் பொழுதே ரம்யாவின் அம்மா மரகதம் நர்மதாவை சிரித்த முகத்துடன்,
“வாம்மா நர்மதா... நல்லாயிருக்கியா...?” என்று வரவேற்றாள்... சற்று முன்பு ரம்யாவிடமிருந்து இதே கேள்வியை எதிர் கொண்டவள் இந்த முறை மரியாதை நிமித்தமாக, “நல்லா இருக்கேன்ம்மா... நீங்க எப்டி இருக்கீங்க..” என்று கேட்டு வைத்தாள்...
“சவுக்கியமா இருக்கேன்ம்மா... சென்னையில தானே இருக்க.. அடிக்கடி வந்துட்டு போகலாம்ல..?” என்று மரகதம் கேட்ட பொழுது நர்மதா வெறுமனே சிரித்து வைத்தாள்...
“சரி பையன் பேரு என்ன..? குழந்தை பேரு என்ன..? எத்தனை மாசம் ஆகுது..?” என்ற மரகதத்தின் கேள்விகளுக்கு வறண்ட புன்னகையோடு பதிலளித்துக் கொண்டே இருந்தாள் நர்மதா.. ரம்யா மரகதத்தை இடைமறித்து “ அம்மா போதும்மா... அவ இங்க தான் இருக்கப் போறா... உன் கேள்வி எல்லாத்தையும் ஒரு பேப்பர்ல எழுதி வை.. மறக்காம கேட்டுக்கலாம்.. அவ வெயில்ல வந்தது கசகசன்னு இருக்கும்.. குளிச்சிட்டு வந்துடட்டும்...” என்றபடியே ஒரு டவலை நர்மதாவிடம் நீட்டி குளியலறையை காண்பித்துவிட்டு மரகதத்திடம் வந்தாள்..
குழந்தை மரகதத்தின் மடியில் இன்னும் தூங்கியபடியே இருந்தது... ரம்யா குழந்தையை தூக்கிச் சென்று தன் படுக்கை அறையின் கட்டிலில் கிடத்தி விட்டு வந்தாள்.. அர்ஜுனுக்கு புது வீடும் புது மனிதர்களும் அந்நியமாய் தெரியவே தன் குறும்பைக் குறைத்துக் கொண்டு ஹால் சோபாவிலேயே நல்லப் பிள்ளையாய் அமர்ந்திருந்தான்... ரம்யா அவனிடம் வந்து, “அர்ஜுன் போர் அடிக்குதா..? டிவி பாக்குறியா..?” என்றாள்.. அர்ஜுன், ”ஹ்ம்..” என்று கூறவே ரம்யா டிவியை ஆன் செய்துவிட்டு “அம்மா” என்று அழைத்தப்படியே சமையலறை நோக்கி நடந்தாள்..
“அம்மா..”
“சொல்லு ரம்யா..” என்றுக் கூறிக் கொண்டே டீ போடும் வேளையில் இறங்கினாள் மரகதம்...
“அம்மா... நர்மதாவுக்கு அவ ஹஸ்பன்ட் கூட ஏதோ ப்ராப்ளம் போல... என்ன ப்ராப்ளம்னு எங்கிட்டயே இன்னும் சொல்லல... அதனால நீ ஏதும் கேட்டு அவள கஷ்டப்படுத்தாத...”
“ஓ அப்படியா.. முகத்தை பாக்கும் போதே நினைச்சேன்... குடும்பத்துல ஏதோ சண்டைனு... சரிடி.. நான் ஏதும் கேக்கல.. போதுமா..?”
“போதும்..” என்று கூறிவிட்டு மீண்டும் ரம்யா அர்ஜுனிடம் வந்து பேசிக் கொண்டிருந்தாள்...
 குளித்து முடித்து வெளியில் வந்த நர்மதா, ரம்யா கொடுத்த உடையை மாற்றிக் கொண்டாள்... மரகதம் எல்லோருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்து விட்டு சற்றும் தாமதியாமல் மதிய உணவு தயாரிக்கும் வேலையில் இறங்கலானாள்.. ரம்யாவும் நர்மதாவும் வெறுமனே டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அர்ஜுன் போகோ, சுட்டி டிவி என்று சேனலை மாற்றிக் கொண்டே இருந்தான்... இடையில் குழந்தை விழித்துக் கொண்டு அழ நர்மதா அதற்கு பாலூட்டி சிறிது நேரம் தோளில் தூக்கி வைத்தப்படியே ரம்யாவின் அறையினுள் நடந்தாள்... குழந்தை மீண்டும் தூங்கி விடவே கட்டிலின் மெத்தைக்கு மீண்டும் சென்றது... மரகதம் சமையல் முடித்ததும் எல்லோரும் சாப்பிட்டார்கள்...  உண்ட மயக்கத்தில் மரகதம் தன் அறைக்குத் தூங்க செல்ல அர்ஜுன் சோபாவிலேயே தூங்கிவிட்டான்... நர்மதாவிற்கு தூக்கம் பிடிபடவில்லை... டிவியைப் பார்த்துக் கொண்டே ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள்... ரம்யாவும் அவளை ஏதும் கேட்காமல் “அவளாக சொல்லட்டும்” என்று காத்திருந்தாள்.. தவம் கலைந்த ஒரு முனிவரைப் போல ரம்யாவின் பக்கம் திரும்பிய நர்மதா, “ரம்யா.. ஈவ்னிங் அடையார் வரைக்கும் போகணும்... ஒரு சின்ன வேலை.. வர்றீயா..?” என்றாள்...
“வர்றேன்டி.. போய்ட்டு வரலாம்.. அடையார்ல யார பாக்கணும்...”
“கிருஷ்ணவேணினு ஒரு லாயர்... அவங்களதான் பாக்கணும்...”
“லாயரா..? ஏன்..?”
“டிவோர்ஸ் அப்ளை பண்ண...”
ரம்யா நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை... கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை என்று யூகித்தவள் அதற்கு இத்தனை பெரிய முடிவு எடுப்பாள் என்று யூகிக்கவில்லை...
“என்னடி சொல்ற... டிவோர்ஸ் அப்ளை பண்ற அளவுக்கு இப்ப என்னடி ஆச்சி...?”
ரம்யாவின் கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் எழுந்து ரம்யாவின் அறைக்குள் சென்றாள் நர்மதா.. ஜன்னலோரமாய் சென்றவள் மழையாய்ப் பொழிய தயாராகிக் கொண்டிருக்கும் மேகங்களை வெறித்துப் பார்க்கத் தொடங்கினாள்... ரம்யா டிவியை அணைத்துவிட்டு நர்மதாவின் அருகில் வந்து தோளைத் தொட்டு திருப்பினாள்...
“கேக்குறேன்ல... சொல்லுடி... டிவோர்ஸ் பண்ற அளவுக்கு அப்படி என்னடி நடந்துச்சி..” என்றாள்...
சில நொடிகள் அமைதியாக ரம்யாவைப் பார்த்தவள் அதுவரை தன்னுள் அடக்கி வைத்திருந்த அத்தனை சோகத்தையும் கொட்டித் தீர்க்க தீர்மானித்தவள் போல அழத் தொடங்கினாள்... அவள் அழுது முடிக்கட்டும் என்று ரம்யாவும் அமைதி காத்தாள்... நர்மதாவின் கதறல் தேம்பலாக மாற நீண்ட நேரம் பிடித்தன.. தேம்பிக் கொண்டே பேசத் தொடங்கினாள்...
“உனக்கு தெரியும்லடி... நான் அவரை எவளோ லவ் பண்ணேன்னு... அவருக்காக என் படிப்பைக் கூட பாதிலயே விட்டுட்டு, வீட்டை எதிர்த்து எவளோ போராடி அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... இவ்ளோ கஷ்டப்பட்டு அவரை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது எதுக்குடி... அவரும் அவருடையக் காதலும் எனக்கு கடைசி வரைக்கும் வேணும்னுதானடி... ஆனா அவரு...” என்றுக் கூறியபடியே தேம்பத் தொடங்கினாள்.. ரம்யா கண்ணிமைக்காமல் தேம்பும் நர்மதாவையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்...
“அவரு வேற ஒரு பொண்ணுக் கூட தொடர்பு வச்சிருக்காருடி...” எனக் கூறிவிட்டு மீண்டும் பெரிதாக அழத் தொடங்கினாள் நர்மதா..  ரம்யாவுக்கும் இந்த செய்தி பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது... நர்மதாவின் கணவனோடு பெரிய பரிச்சயம் இல்லாவிடினும் நர்மதா கூறியவற்றிலிருந்து அவளின் கணவன் பற்றி சில நல்ல அபிப்ராயமேக் கொண்டிருந்தாள் ரம்யா...
 நர்மதாவின் கணவன் அசோக்.. திருச்சியில் நர்மதாவின் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளிதான் அவன் வீடு... அவளை விட நான்கு வயது பெரியவன்... சிறுவயது முதலே அவனுக்கு நர்மதா மீது ஒருவித ஈர்ப்பு... நர்மதாவுக்கும் அவனைப் பிடிக்குமென்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை... அவன் இன்ஜினியரிங் முடித்து சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் அமர்ந்தான்... ஒரு சுபயோக சுபதினத்தில் அவன் தன் காதலை அவளிடம் தெரிவிக்க அன்றே இருவரின் இதயமும் இடமாற்றம் செய்யப்பட்டன...  அவர்களின் இரண்டு வருடக் காதல் இருவர் வீட்டிலும் தெரியவர வழக்கம் போல் எதிர்ப்பு வெடிக்க அசோக் தன் நண்பர்கள் உதவியோடு நர்மதாவின் படிப்பு முடியும் முன்பே அவளைத் திருமணம் செய்து கொண்டு சென்னையில் குடியேறிவிட்டான்...
 காதலித்தப் பொழுது நர்மதா அவனைப் பற்றி தினமும் ரம்யாவிடம் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பாள்... அவன் வாங்கிக் கொடுத்த பரிசுப் பொருள், வாழ்த்து அட்டைகள் என்று ஏதாவது ஒரு விதத்தில் நர்மதா ரம்யாவின் உரையாடல்களில் அசோக் இடம் பெற்று விடுவான்… அப்பொழுதெல்லாம் ரம்யா தனக்கும் இப்படி ஒரு காதலன் கிடைக்கமாட்டானா என ஏங்குவாள்... ஆனால் “பெரியோர்கள் நிச்சயிக்கும் திருமணம் தான்” என்று கடவுள் ரம்யா பிறக்கும் போதே எழுதி வைத்து விட்டதை அவள் அன்றிலிருந்து ஐந்து வருடங்கள் கழித்தே தெரிந்து கொண்டாள்... நர்மதாவின் திருமணத்திற்குப் பிறகு அவள் கணவனை மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே பார்த்திருப்பதாய் ரம்யாவிற்கு ஞாபகம்.. பார்ப்பதற்குப் பவ்யமாய், பேசுவதற்கு இனிமையாய் இருக்கும் அவனா தன்னைக் காதலித்து கலியாணம் செய்து கொண்ட பெண்ணுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்தான் என்று அவளால் நம்ப முடியவில்லை...
“நல்லாத் தெரியுமாடி... அவருக்கு வேற ஒரு பொண்ணுக் கூட தொடர்பு இருக்குன்னு..” என்ற ரம்யாவின் கேள்வியை எதிர் கொண்ட நர்மதா, “நல்லாத் தெரியும்டி.. அவரு கூட ஆபீஸ்ல வேலை பாக்குற பொண்ணுதான்.. கடந்த ஒன்றரை வருசமா இது இருந்திருக்கு.. ஆனா நான் அவரு மேல வச்சிருந்த நம்பிக்கைல “அப்படி எல்லாம் இருக்காதுனு” என்னை நானே சமாதானப் படுத்திக்கிட்டேன்... ஒரு நாள் அவரு மொபைல சார்ஜ் போட்டுட்டு குளிக்க போயிருக்கும் பொது ஒரு மெசேஜ் வந்தது.. நான் எடுத்து ஓபன் பண்ணா, “ ஹாய் டியர்.. குட் மார்னிங்.. ஷெல் வி கோ டு மூவி டுடே..”னு இருந்தது.. பேரு பாத்தா தினேஷ்னு இருக்கு... எந்த பையன் “டியர்”னு போட்டு மெசேஜ் பண்றானு டவுட் வந்து போன் பண்ணேன் அந்த நம்பருக்கு.. எதிர் முனையில ஒரு பொண்ணு “ஹலோ”னு சொன்ன நான் “ஹலோ” சொன்னதும் போனக் கட் பண்ணிட்டா... குளிச்சிட்டு அவர் வந்ததும் “யாரு அது தினேஷ்.. டியர்னு போட்டு மெசேஜ் பண்ணியிருக்கான்..”னு கேட்டேன்.. அவளோதான்.. “நீ யாரு என் போன எடுக்குறதுக்கு”னு புடிச்சி என்னை திட்டித் தீத்துட்டாரு.. அன்னைல இருந்தே அவரு எங்கிட்ட சரியா பேசுறதே இல்ல... ஆபீஸ்க்கு சீக்கிரம் கிளம்பி போனா நைட் லேட்டாதான் திரும்பி வருவாரு... அவரோட ஆபீஸ் ப்ரென்ட் ஒருத்தருக்கு போன் பண்ணி, “என்ன அண்ணா.. ஆபீஸ்ல வொர்க் ஜாஸ்தியா.. இவரு டெய்லி லேட்டா வராருன்னு” கேட்டேன்.. அப்பதான் அவரு அந்த பொண்ணுக்கும் என் ஹஸ்பெண்டுக்கும் இருக்குற தொடர்பு பத்தி சொன்னாரு... சரி.. இதுக்கு ஒரு முடிவுக் கட்டணும்னு அவர்கிட்ட கேட்டா, “இது உனக்கு தேவையில்லாதது..” சொல்லிட்டாரு... எப்பவும் ஆபீஸ் விட்டு வந்ததும் அர்ஜுன் கூட விளையாடுறவரு இப்பெல்லாம் அவன் பக்கத்துல போனாவே எரிஞ்சி விழுறாரு.. நானும் குழந்தை பொறந்ததும் சரியாகிடுவாருனு நினைச்சேன்.. ஆனா அவரு மாறுரு மாதிரி தெரியல.. அதுதான் அவர்கூட வாழ்ந்த வாழ்க்கை போதும்னு கிளம்பி வந்துட்டேன்.. வீட்ட எதிர்த்து கல்யாணம் பண்ணிட்டதால அங்கேயும் இப்ப போக முடியாது.. அதுதான் உன்னை தேடி வந்தேன்..” என்று முடித்தாள் நர்மதா.. எல்லாவற்றையும் கேட்ட ரம்யா அவளின் பரிதாப நிலையை எண்ணி மிகவும் வருந்தினாள்...
 “சரிடி.. பிள்ளைங்க வாழ்க்கை என்ன ஆகுறது... அவங்களுக்காகவாது இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துப் பாரேன்டி அவரு மாறுறாறனு..”
“துரோகத்தோட வலி ரொம்பக் கொடுமையானதுடி.. அதுவும் நாம யார் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கோமோ அவங்க நமக்கு துரோகம் பண்ணும் பொது செத்து போறதே மேல்னு தோணும்.. நான் இவ்ளோ லவ் பண்ண என் புருஷன் எனக்கு இப்டி ஒரு துரோகத்த பண்ணது தெரிஞ்சும் இத்தனை நாள் அவரு கூட நான் வாழ்ந்ததுக்கு காரணம் என் பிள்ளைங்க... அவங்க மேல கூட அவருக்கு அக்கறையோ பாசமோ இல்லனு தெரிஞ்ச பிறகு இனி யாருக்காகடி அவர்கூட வாழணும்.. “இன்ஷியலுக்காக மட்டும்தான்” அப்படின்னு ஒரு அப்பா என் பிள்ளைங்களுக்கு தேவை இல்ல... இனி அவங்களுக்கு அப்பா அம்மா எல்லாமே நான் தான்...”
ரம்யாவுக்கு நர்மதாவின் வலியை நன்றாக உணர முடிந்தது...  அவள் முடிவைத் தேடி இங்கு வரவில்லை... ஒரு முடிவோடு தான் இங்கு வந்திருக்கிறாள் என்று புரிந்தவளாய் அமைதி காத்தாள்..
“கொஞ்ச நாள் உங்க வீட்ல தங்கிக்குறேன்.. ஒரு வேலைக் கிடைச்சதும் வேற வீடு பாத்துக்குறேன்..”
“அதெல்லாம் நீ எங்கயும் போக வேணாம்.. நானும் அம்மாவும் மட்டும் தானே இருக்கோம்.. நீயும் குழந்தைங்களும் இங்க இருக்குறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல... இனிமே வேற வீடு அது இதுன்னு ஏதாவது சொன்ன கெட்ட கோவம் வரும்..” என்று ரம்யா உரிமையோடு சொன்னது வலி சுமக்கும் நர்மதாவின் நெஞ்சத்திற்கு சற்று இதமாகவே இருந்தது...
 சில நிமிடங்களுக்கு இருவருக்குமிடையே அமைதி குடி கொண்டிருந்தது.. அந்த அமைதி விரும்பாதவளாய் நர்மதா, “ஒரு வேளை ப்யூச்சர்ல நானும் என் பிள்ளைங்களும் கூட இல்லாதத நினைச்சி என் புருஷன் வருத்தப்பட்டா அதுதான் அவர் எனக்கு செஞ்ச துரோகத்துக்கு நான் கொடுக்குற சம்பளம்..” என்று ஜன்னல் பக்கம் திரும்பினாள்..
 இருண்டு கிடந்த வானம் மழையாய் பெய்யத் தொடங்கியது.. ஜன்னல் கம்பிகளில் பட்டுத் தெறித்த மழைத்துளிகளில் சில நர்மதாவின் முகம் தழுவின..அவளின் காதல் வாழ்வு இப்படிக் கசந்து விட்டதால் வருத்தம் கொண்ட மேகம் அழுவதாய் இதனை அர்த்தம் கொள்ளாமல், பிள்ளைகளோடு அவள் இனி வாழப் போகும் ஓர் அர்த்தமுள்ள வாழ்விற்கு தன் நீர்க் கரங்களால் மேகம் அவளை ஆசிர்வதிப்பதாய் அர்த்தம் கொள்ளலாமே.. ஆம்... அன்பானவர்களோடு வாழும் பொழுதுதான் நம் வாழ்வு அர்த்தப்படுகிறது.. நம் நர்மதாவின் வாழ்வும் அர்த்தப்படட்டுமே...

கருத்துகள்