மூர்த்தி – வழக்குரைஞர் என்ற சிதிலமடைந்த போர்டு தாங்கிய அந்த ஓட்டு வீட்டின் உள்ளே அரசாங்கம் கொடுத்த டிவியில் தமிழாக்கம் செய்யப்பட்ட ஹிந்தி சீரியலின் நடிகை, அதீத மேக்கப்புடன் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். டிவியின் மேல் அசுவாரசியமாக கண்களைப் பதித்துக் கொண்டே எதிரே இருந்த பத்து வருட பழைய சோபாவில் அமர்ந்தபடி காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள் சாரதா. அவளுக்கு அருகே அரசாங்கம் கொடுத்த மின்விசிறி சத்தம் போட்டு சுற்றிக் கொண்டிருந்தது. அதன் இரைச்சல் தலைவலியாக இருந்தது. ஆனால் புழுக்கம் தாங்கமுடியாது என்பதால் பொறுத்துக் கொண்டிருந்தாள். சீலிங்கில் மாட்டியிருக்கும் மின்விசிறி பழுதடைந்து 10 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஒரு எலக்ட்ரிசியனை கூட்டி வந்து அதனை சரி செய்ய முயற்சிக்காத கணவன் மேல் ஆத்திரமாக வந்தது. “’வக்கீல் பொண்டாட்டி’ங்கற பெரும மட்டும் போதுமா? குடும்பம் நடத்த பணம் வேணாம்? நீதி நேர்மைன்னு இன்னும் காந்தி காலத்துலயே இருந்தா எப்படி?” பலமுறை கணவனோடு வாதம் செய்து பார்த்துவிட்டாள். 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்யும் போது மூர்த்தியை எப்படி பார்த்தாளோ அப்படியே தான் இன்றும் பார்க்கிறாள். ஆனாலும் கணவனின் நேர்மையை நினைத்து தனக்குள் மிகவும் பெருமைப்படுவாள். இப்போது கூட, ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் மீது அவளை ஒரு தலையாய் காதலித்து வந்த பணக்கார வீட்டு பையன் ஆசிட் அடித்துவிட்ட வழக்கில் பணம் எதுவும் வாங்காமல் அந்த பெண்ணுக்காக வாதாடிக் கொண்டிருக்கிறான். இன்று தீர்ப்பு நாள். காலையில் சீக்கிரமாக கிளம்பி போய்விட்டான். “கடவுளே.. அந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்குற மாதிரி பண்ணுப்பா..” என மனதுக்குள் வேண்டிக் கொண்டே காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள்.
நறுக்கி முடித்த காய்களை எடுத்துக் கொண்டு சமையலறை நுழைந்து மதிய உணவு தயாரிப்பில் சாரதா மும்முரமாகத் தொடங்கிய போது கூடத்தில் யாரோ நுழையும் சத்தம் கேட்கவே எட்டிப் பார்த்தாள். மூர்த்தி அவளுக்கு முதுகை காட்டியபடி சோபாவில் உட்கார்ந்திருந்தான். சமையலறையில் இருந்தபடியே மூர்த்தியிடம் கேட்டாள்.
“என்னங்க.. அதுக்குள்ள வந்திட்டிங்க..”
“----------------“
“ஏங்க.. என்னாச்சி பேச்சே காணோம்..”
“அந்த ஆசிட் கேசுல இன்னைக்கு ஜட்ஜ்மெண்ட் சொல்லிட்டாங்க சாரதா..”
அவனது குரலே அவளுக்கு சொல்லாமல் சொன்னது தீர்ப்பு என்னவென்று. அதனால் அதனைப் பற்றி பேசி அவனை காயப்படுத்த விரும்பாமல் அமைதியாக காய்களை எண்ணெய்யில் போட்டு வதக்கத் தொடங்கினாள்.
“என்ன சாரதா.. ஜட்ஜ்மெண்ட் என்னாச்சின்னு கேக்க மாட்டியா..?”
“அதான் உங்க குரல்லயே தெரியுதே.. விடுங்க..”
“ப்ச்..ஆமா சாரதா.. பணக்கார பயலுங்க.. போதாதுக்கு அந்த பையனோட அப்பாக்கு சென்ட்ரல் மினிஸ்டர் ஒருத்தன் தூரத்து சொந்தமா.. ஒரு சாட்சியும் இல்லாம பண்ணிட்டானுங்க..”
சாரதா பதிலுக்கு எதுவும் பேசவில்லை. அவளுக்கு தெரியும். மூர்த்தி அவளிடம் எந்த பதிலையும் எதிர்பார்த்து பேசவில்லை. தனக்கு தானே பேசிக் கொள்வதைப் போல் சில நேரங்களில் இப்படி புலம்பிக் கொண்டே இருப்பான். மனதில் இருப்பதை எல்லாம் அவனுக்கு சொல்லிவிட வேண்டும். அதனால் அவள் அமைதியாக சமையலை தொடர்ந்து கொண்டே இருந்தாள்.
“காசு இருந்தா போதும் சாரதா. இங்க என்ன வேணாம் பண்ணலாம்.. உன்ன இந்த சட்டமும், போலீஸும் எதுவும் பண்ண முடியாது..”
பேசிக் கொண்டே அவன் அணிந்திருந்த கருப்பு அங்கியை கழட்டி அருகில் இருந்த மர பெஞ்சின் மீது போட்டான்.
“சாரதா.. டவல் எடுத்து போடு..”
சமையற்கட்டை தாண்டி இருந்த அறைக்குள் நுழைந்து டவல் ஒன்றினை எடுத்து வந்தாள். அவனது பின்பக்கமாக நின்றபடி முதுகின் மீது டவலைப் போட்டுவிட்டு மீண்டும் சமையலறை நுழைந்து கொண்டாள். மூர்த்தி டவலை எடுத்து கழுத்துப் பகுதியினையும், முகத்தையும், கைகளையும் துடைத்துவிட்டு கொண்டான்.
“ஜட்ஜ்மெண்ட் சொன்னதும் அந்த பொண்ணோட அப்பன் அழுததை நீ பாத்திருக்கணும் சாரதா.. நெஞ்சில அடிச்சிட்டு அழுறான்..”
அவனது குரல் தடுமாற்றம் அடைந்ததை போல உணர்ந்தாள் சாரதா.
“நம்மள மாதிரி மிடில் கிளாஸ்க்கு எல்லாம் போலீஸும், கோர்ட்டும் தான் கெதி. அங்கயே ஒரு நியாயமும் கிடைக்கலனா வேற எங்க போறது..”
“அந்த பேச்சை விடுங்க.. ஒண்ணுமில்லாதவங்களுக்கு தான் எல்லாக் கஷ்டமும் வருது.. நாம என்ன செய்ய முடியும்.. சரி.. காபி ஏதும் போடவா..”
“ஆமா சாரதா.. காபி போடு..”
ஒரு அடுப்பில் சாம்பார் கொதித்துக் கொண்டிருக்க மற்றொரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து பாலைப் பிரித்துக் கொட்டினாள் சாரதா. அந்த நேர அமைதி போதுமென மீண்டும் பேச ஆரம்பித்தான் மூர்த்தி.
“நீ அந்த பொண்ண பாக்கணும் சாரதா.. சும்மா தங்க சிலை மாதிரி அப்படி ஒரு அழகு.. நமக்கு கொழந்த பொறந்து அது பொண்ணா இருந்திருந்தா இந்த வயசு தான் இருந்திருக்கும்..”
அவன் இல்லாத பிள்ளையை நினைவுப்படுத்தியதும் சாரதாவின் கண்கள் கசியத் தொடங்கின. குழந்தை பேறு இல்லாமல் எத்தனை வசை சொற்கள் மூர்த்தியின் குடும்பத்தினரிடம். பார்த்த அத்தனை மருத்துவர்களும் பிரச்சனை சாரதாவிடம் தான் என சொல்லியப் பிறகும் இன்னொரு திருமணம் என்ற பேச்சே இல்லை என தன் குடும்பத்தினரிடம் முடிவாக சொல்லிவிட்டான் மூர்த்தி. பழைய நினைவுகள் மனதை குடைய கண்களை சேலை நுனியில் துடைத்துக் கொண்டாள் அவள்.
“நிறைய தடவை யோசிச்சிருக்கேன் சாரதா ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்ன்னு.. நான் என்னமோ பெருசா சட்டத்தை காப்பாத்துவோம் அப்படி இப்படின்னு பெரிய கனவோட வந்தேன்.. இங்க வந்து பாத்தா கொள்ளை அடிக்குறவன், கொலை பண்றவன், அடுத்தவன் சொத்தை புடுங்கித் திங்குறவன்னு ஊர்ல இருக்குற மொத்த திருட்டுப் பசங்களையும் பாக்க வேண்டியதாப் போச்சி.. அவனுங்கள ஒண்ணும் பண்ணவும் முடியல.. பாத்துட்டு சகிச்சிட்டு போகவும் முடியல.. என்னை மாதிரி நீதி, நேர்மைன்னு பேசுறவனெல்லாம் மத்தவன் கண்ணுக்கு பைத்தியக்காரன் மாதிரி தெரியிறோம்..”
நிறுத்தினான். சாரதா காபி பொடியை பொங்கிய பாலில் கொட்டினாள்.
“நான் வக்கீலு படிச்சி முடிச்சிட்டு வந்ததும் எங்க அப்பா காய்கறி விக்குறவன், பேப்பர் போடுறவன்ன்னு தெருவுல ஒருத்தரையும் விடாம “என் பையன் வக்கீலுக்கு படிச்சிருக்கான்.. என் பையன் வக்கீலுக்கு படிச்சிருக்கான்னு” அவளோ சந்தோசமா சொல்லிட்டு இருந்தாரு.. ஆனா என்னை பாரு.. இன்னும் ஓட்டை வீட்டுல ஒண்டிக் குடித்தனம் பண்ணிட்டு இருக்கேன்..”
“இப்ப ஏங்க இதெல்லாம் பேசிட்டு இருக்கீங்க.. விடுங்க.. உங்களுக்கு காபில சக்கரை போடவா வேணாமா..”
“ஒரு ஸ்பூன் போடுமா போதும்..”
பேச்சை மாற்றி விட்டோம் என சாரதா நிம்மதியடையும் போது மீண்டும் ஆரம்பித்தான் மூர்த்தி.
“ஜட்ஜ்மெண்ட் சொன்னதும் அந்த ஆசிட் அடிச்ச பொறுக்கி ராஸ்கல் “என்னை ஒண்ணும் பண்ண முடியாதுடா” அப்படிங்கற மாதிரி என்னைப் பாத்து சிரிச்சான் பாரு.. இதுவரைக்கும் அப்படி ஒரு கோவம் எனக்கு வந்ததே இல்லை சாரதா.. அப்படியே மண்டை சூடாகிப் போச்சி..”
“ஐயோ.. அந்த பேச்சை இப்போ விடப் போறிங்களா இல்லையா.. இப்படி நீங்க பொலம்பிட்டு இருக்குறதால எந்த பிரயோஜனமுமில்ல..” எனக் கூறிவிட்டு காபியை மூர்த்தியிடம் கொடுப்பதற்காக அவள் சமையலறை விட்டு வெளியே வரும் போது,
“நீ சொல்றதும் கரெக்ட்டு தான் சாரதா.. நான் இப்படி பொலம்பிட்டு இருக்குறதால எந்த பிரயோஜனமுமில்ல.. அதான்.. கோர்ட் கொடுக்காம போன தண்டனையை நானே கொடுக்கலாம்ன்னு அந்த பொறுக்கிப் பையல குத்திக் கொன்னுட்டேன்..” என முடித்தான் மூர்த்தி.
அவன் முன்பக்கமாக வந்த சாரதா அப்போது தான் கவனித்தாள். அவனது வெள்ளைச்சட்டை முழுவதும் அடர்த்தியாக ரத்தத் தீற்றல். அதிர்ச்சியில் அவள் காபி டம்ளரை கீழே போடும் போது வாசலில் நிழலாடியது. கையில் விலங்குடன் நான்கு காவலர்கள் அங்கே நின்றார்கள்.
கதையை ஆடியோ வடிவில் கேட்க :

கருத்துகள்