ரயில் பயணம் - சிறுகதை

65 வயதை கடந்த கனகசபை புதுக்கோட்டை மாவட்டம் ஆலநகர் கிராமத்தில் வசித்த அமைதியான மனிதர்களில் ஒருவர். யாரிடமும் எந்த வம்பிற்கும் போக மாட்டார். யாரேனும் எகனை மொகனையாக பேசினாலும் எதிர்த்து பேசி, வம்பு வளர்ப்பதை தவிர்த்து விலகிப் போய்விடுவார். நன்கு விடியும் முன்பே தோட்டத்திற்கு சென்று விடும் அவருக்கு, அவருடைய மனைவி மருதாயி, பழைய சாதமும், மோர் மிளகாயும் எடுத்து சென்றுவிடுவாள். உச்சி வெயில் தாண்டி சிறிது நேரத்தில் எல்லாம் கிணற்றில் ஒரு குளியலைப் போட்டு விட்டு பூட்டிய மாட்டு வண்டியில் மாடுகளுக்கு அறுத்த புல் கட்டினை எடுத்துக் கொண்டு மனைவியோடு வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். பெரும்பாலும் மாலை நேரங்களில் மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் வேப்பமரத்தின் கீழே அமர்ந்தப்படி அவர் வயது கிழவர்களோடு பேசிக் கொண்டிருப்பார்.

மகன் ஆறுமுகம் பள்ளிப்படிப்பு ஏறாமல் எட்டாம் வகுப்போடு பள்ளி செல்வதை நிறுத்திக்கொள்ள பிறகு தன்னோடு அவனையும் சேற்றில் இறக்கி விட்டார். பழக்கவழக்கம் சரியில்லை. குடியும், சீட்டாட்டமும் அவன் புத்தி முழுவதையும் ஆக்கிரமிக்க வயலுக்கு செல்லும் வழியை மறந்து போனான். மகள் செண்பகத்தை அடித்துப் பிடித்து பக்கத்து ஊர் செட்டியார், கவுண்டர் என சாதிபேதம் பார்க்காமல் கடன் வாங்கி கோயம்புத்தூர்  அருகே மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் மணிமாறனுக்கு திருமணம் செய்து வைத்தார். அதற்கு இன்னும் ஒவ்வொரு நெல்லருப்பின் போதும் தவணை செலுத்தி வருகிறார்.

ஆறுமுகத்தை தவிர மற்றதெல்லாம் அவர் வாழ்வில் சரியாகத் தான் இருந்தது. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக மழை காணாத வயல், வற்றிய கிணறை வைத்துக் கொண்டு விவசாயம் சொல்லிக் கொள்ளும்படி இல்லாமல் போனதால் மனைவியோடு அடிக்கடி கட்டிட வேலைக்கு போகத் தொடங்கினார். சிறுவயதில் இருந்து நிலத்தில் உழைத்துப் பழகிய உடல் என்பதால் அந்த வயதிலும் செங்கல், ஜல்லி சுமப்பதை இளவயதுகாரனைப் போல் செய்து வந்தார். அதில் கிடைத்த சம்பளம் முழுதும் வயிற்றுக்கும் வட்டிக்கும் சரியாகப் போய் கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக அந்த வேலையும் இல்லாமல் போனதால் மாரியம்மான் கோவில் அருகே ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தார்.
என்னய்யா உன் சம்சாரம் வேகவேகமா வருதுஎன்றார் கனகசபைக்கு எதிரில் அமர்ந்திருந்த வீரமலை.

கனகசபை திரும்பி பார்க்க இடுப்பில் ஏற்றி சொருகிய சேலையை இறக்கிவிட மறந்து கையில் செல்போனை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள் மருதாயி.
என்னாடி சேலையைக் கூட இறக்கி விடாம சாவடிக்கு வந்திருக்க..என கனகசபை கேட்டப்பின் தான் மருதாயி குனிந்துப் பார்த்து சேலையை இறக்கி விட்டாள்.
இந்தா.. உன் மவ போன் போட்டா.. உங்கிட்ட பேசணுமா
என்னவாம்..
அவ மவளுக்கு வர செவ்வாக்கிழம பொறந்தநாளாம். கோயமுத்தூருக்கு வர சொல்றா..மருதாயி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் கையில் வைத்துக் கொண்டிருந்த நோக்கியாவின் ஆதிகால போன் அலறியது. செண்பகம் சொல்லிக் கொடுத்திருந்த பட்டனை அழுத்திப் பேசினாள் மருதாயி.
செண்பகம்.. இந்தா உங்கப்பங்கிட்ட நீயே சொல்லு.. இங்க தான் இருக்காரு..என மருதாயி போனை நீட்ட கனகசபை வாங்கிக் கொண்டார்.
சாமீ.. சொல்லுயா.. நல்லா இருக்கீயா..எனக் கேட்க,
நல்லா இருக்கேன்ப்பா.. வர செவ்வாக்கிழம பாப்பாக்கு பொறந்த நாளுப்பா.. அம்மாவும், நீயும் வாப்பா..என்றாள் செண்பகம் மறுமுனையில்.
எங்கம்மா வர்றது.. அடுத்த வருசம் வரேன்மா..
யப்பா.. இப்பிடியே சொல்லித்தான் ரெண்டு வருசாம பொறந்த நாளுக்கு வரவே இல்ல.. ஒழுங்கா இந்த வருசமாச்சும் வாங்க.. இந்தா உம்பேத்தி பேசணுமா..
என செண்பகம் மகளிடம் போனை நீட்டி,
தாத்தா, பாட்டிய புதுசட்ட, பொம்மஎல்லாம் பாப்பாக்கு வாங்கிட்டு வரசொல்லு..எனக் கூற
தாத்தா.. என் பொறந்த நாளுக்கு புது சட்ட, புது பொம்ம எல்லாம் வேணும்.. அப்றம் உன்ட்ட பேஸ் மாட்டேன்..என்றது குழந்தை.
சங்கடத்தில் கொஞ்சம் நெளிந்த கனகசபை
சரியா சாமீ.. பாப்பாக்கு சட்ட, பொம்ம எல்லாம் வாங்கிட்டு தாத்தா அங்க வரேன்..எனக் கூறிவிட்டு செண்பகத்துடன் சிலபல வார்த்தைகள் பேசிவிட்டு வைத்தார்.

பேசிமுடித்துவிட்டு அமைதியாக நின்ற கனகசபையின் மனவோட்டம் மருதாயிக்கு நன்றாகப் புரிந்தது. சென்று வர பயணச் செலவு, குழந்தைக்கு புது சட்டை, பொம்மை அனைத்திற்கும் எங்கே போவது என கவலைப்படத் தொடங்கினாள் மருதாயி. ஆனால் கனகசபை அன்று மாலையே கவுண்டரைத் தேடிச் சென்றார். ஏற்கனவே தர வேண்டிய பணம் நிறைய உள்ளது எனக் கூறி மறுத்தார் அவர். கனகசபை மிக வேண்டிக் கேட்கவும் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தார். நிச்சயம் போதாதுஎனத் தெரிந்தாலும் வேறு வழியின்றி வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். மறுநாள் மாலை இருவரும் ரயில் நிலையம் அருகில் இருக்கும் ஒரு துணிக்கடைக்கு சென்று விலை மலிவாகத் தேடி கடைசியாக 400 ரூபாய்க்கு ஒன்றைத் தேர்வு செய்தார்கள். இதை விடவும்  மலிவாக எடுத்தால் மகள் கோபித்துக் கொள்வாள் என்பது தெரியும். பொம்மை வாங்கப் போதிய பணம் இல்லாததால் சரி.. ஏதாவது கூறி சமாளித்துக் கொள்ளலாம்என ரயில் பிடிக்க கிளம்பி விட்டார்கள்.

முன்பதிவு அல்லாத பெட்டிக்கு உண்டான டிக்கெட்டை வாங்கி கொண்டு அடித்துப் பிடித்து இருவரும் உள்ளே சென்று பார்த்த போது அத்தனை சீட்டும் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்படிருந்தது. வேறு வழியின்றி இருவரும் கீழேயே அமர்ந்து கொள்ள இவர்களுக்குப் பின்னே வந்த 25 வயது கொண்ட ஒரு இளைஞன் சடக்கெனபாய்ந்து பெட்டிகள் வைக்கும் கம்பியின் மீது ஏறிப் படுத்துக் கொண்டான். இவர்கள் வீட்டில் செய்து, கொண்டு வந்திருந்த புளியோதரையைப் பிரித்து சாப்பிடத் தொடங்கினார்கள். ரயில் கிளம்புகையில் மணி 11ஐத் தாண்டியிருந்தது. திருச்சியை கடந்து ரயில் செல்லத்  தொடங்கும் போது இருவரும் உறங்கத் தொடங்கியிருந்தனர்.

ஓரிருவரைத் தவிர பெட்டியில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கனகசபையின் மீது சற்று கனமான ஒன்று விழுந்தது. உறக்கத்திலிருந்து பதறி எழுந்த கனகசபை என்ன விழுந்தது எனப் பார்க்க அவர் மடி மீது ஒரு செல்போன் கிடந்தது. பெட்டிகள் வைக்கும் கம்பியின் மீது படுத்திருந்த அந்த இளைஞனின் பாக்கெட்டில் இருந்து தவறி விழுந்த அதனை உற்றுப் பார்த்த கனகசபைக்கு "விலை ஜாஸ்தி இருக்கும் போல" எனத் தோன்றியது. "அவனை எழுப்பிக் கொடுத்துவிடலாம்" என எழுந்தவர், அவனை எழுப்பாமல் தயங்கியபடி நின்றார். பல வித யோசனைகள் கன நேரத்தில் அவருக்குள் ஓடத் தொடங்கின. சில நிமிடங்கள் அப்படியே நின்றவர் அவர்கள் கொண்டுவந்திருந்த கட்டைப்பையை எடுத்துக் கொண்டு கழிவறை நோக்கி நடந்தார். 20 நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவர் பையை அருகில் வைத்துக் கொண்டு அப்படியே உறங்கத் தொடங்கினார். இத்தனை நேரமும் எந்த அசைவும் காட்டாமல் மருதாயி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

கோயம்புத்தூர்  நெருங்குவதற்கு ஒரு மணி நேரம் இருக்கும் போது அந்த இளைஞன் கனகசபையை எழுப்பினான். விழித்துப் பார்த்த அவர்,
"என்ன தம்பி..?" எனக் கேட்க
"என் போன் எங்க.." என்றான் அவன்.
"என்னா போனு.. நான் எதையும் பாக்கலையேப்பா.."
"யோவ்.. பொய் சொல்லாத இந்த எடத்துல ராத்திரில இருந்து நீ மட்டும் தான் உக்காந்து இருக்க.. பாக்கெட்டுல இருந்த போனு கீழ விழுந்திருந்தா ஒண்ணு இங்க இருந்திருக்கனும்  இல்ல உங்க ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் எடுத்திருக்கனும்.. எடுத்திருந்தா ஒழுங்கா கொடுத்துடுங்க.."
அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த மருதாயி அந்த "சின்னப்பயல்" தங்கள் மீது திருட்டுப்பட்டம் சுமத்தியதும்,
"ஏன்பா.. என்னப்பா பேசுற நீயி.. எங்கயோ போனை தொலைச்சிப்புட்டு எங்க மேல பழி போடுற.." என்று சத்தம் போடவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்களும், அரைத்தூக்கத்தில் இருந்தவர்களும் விழித்துக் கொண்டார்கள்.
"என்னம்மா.. சும்மா சத்தம் போடுற.. எதுவும் எடுக்கலைனா பைய தொறந்து காட்டு.."
"நான் எடுத்துக்குடா என் பைய காட்டணும்.. எந்த ஊரு நாயோ வந்து பையத் தொறந்து காட்டுனா நான் காட்டணுமாக்கும்.."
"ஏய் இங்கப்பாரு.. நாய் கீய்ன்னு சொன்னா மரியாத இருக்காது ஆமா"
சற்று நேரம் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என்ன விஷயம் என்று விசாரிக்க இளைஞன் நடந்த அனைத்தையும் விவரித்தான்.
கூட்டத்தில் ஒருவர்,
"ஏம்மா.. பைய தான் கொடுங்கம்மா.. அந்த பையன் தேடிப் பாக்கட்டும்.. வீண் சந்தேகம் தீரும்ல.." என்றார்.
"என்னம்மா யோசிக்கிற.. சும்மா சவுண்ட் உட்டல.. பயம் இல்லனா பையக் கொடு.." என இளைஞன் கேட்க,
"எங்களுக்கு என்னடா பயம்.. இந்தா பையி .. நல்லாத் தேடிப் பாரு.." என்றபடி பையை நீட்டினாள் மருதாயி.
கூடியிருந்த அனைவரும் ஆர்வமுடன் பார்க்க இளைஞன் பையைத் துலாவத் தொடங்கினான்.
மருதாயி கோபத்துடனும் கனகசபை ஒரு வித பதட்டத்துடனும் நின்றார்கள். பையில் இருந்து ஒவ்வொருப் பொருளாக எடுத்துப் பார்த்தான். புளியோதரைக் கொண்டு வந்திருந்த தூக்குவாளி பை, செண்பகத்திற்கு கொடுப்பதற்கு மருதாயி எடுத்து வந்த உடைக்காத உளுந்து அடங்கியப்பை, அவர்கள் இருவருக்கும் மாற்றுத் துணி என எடுத்துப் பார்த்தவன் தன் பேத்திக்காக அவர்கள் வாங்கிய பிறந்த நாள் துணி இருந்த பாக்ஸை எடுத்தான். வெறும் துணி மட்டும் உள்ள பாக்ஸ் இத்தனை கனமாக இருக்காது என அந்த பாக்ஸை பிரிக்க முயன்றான்.
"ஏய்.. அத ஏண்டாப் பிரிக்குற.. வெறும் துணிடா அது.."
"இரும்மா.. இவளோ வெயிட்டா இருக்கு.. பாக்க வேணாமா.." எனக் கூறிக்கொண்டே பிரிக்க உள்ளே அவனுடைய போன் அந்த பட்டு பாவாடைச் சட்டைக்கு நடுவே இருந்தது.
"பாருங்க ஸார்.. இவளோ பேசுனிச்சே இந்த அம்மா இங்க பாருங்க போனை திருடி உள்ள வச்சிருக்குறத.." என்றான் இளைஞன்.
"அவளுக்கு தெரியாது.. நான் தான் எடுத்தேன்.." என கனகசபை கூறவும், மருதாயின் வார்த்தைகளால் கடும் கோபத்தில் இருந்த இளைஞன், நொடி நேரத்தில் பாய்ந்து கனகசபையின் சட்டையை கொத்தாகப் பிடித்துக் கொண்டான். மற்றவர்கள் சுதாரித்து அவனை இழுத்துப் பிடிப்பதற்குள் கனகசபையின் கன்னம் சிவக்கும் அளவிற்கு இரண்டு முறை அறைந்து விட்டான்.
"ஏம்ப்பா.. அதான் போன் கிடைச்சிருச்சில.. அப்றம் ஏம்ப்பா கையெல்லாம் நீட்டிட்டு இருக்க.. பாவம் பெரியவர்.." என்றார் கூட்டத்தில் ஒருவன்.
"ஏங்க.. என் போனை திருடி வச்சிக்கிட்டு இந்த பொம்பள என்னாப் பேச்சு பேசுச்சு.. நாய் கீய்ன்னுச்சு.. இப்ப பேசுமா" என்றான் அவன் மருதாயியைப் பார்த்து. அவள் அடிவாங்கி கலங்கிய விழிகளுடன் நிற்கும் கனகசபையை பிடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.
கூட்டத்தில் ஒருவன், "ஏங்க பெரியவரே.. இந்த வயசான காலத்துல பண்ற வேலையா இது.. அந்த போனை வச்சி நீங்க என்னப் பண்ண போறீங்க.." எனக் கேட்டான்.
கூட்டம் கலைந்து அவரவர் இடம் தேடி எல்லோரும் சென்று அமர்ந்தனர். இளைஞன் மருதாயியை முறைத்துப் பார்த்துவிட்டு கதவிற்கு அருகே சென்று நின்று கொண்டான்.
கனகசபையின் செயல் குறித்து காரணம் கேட்கவில்லை மருதாயி. புரிந்தவளைப் போல அவரை தோளோடு அணைத்துக் கொண்டு முதுகினை தேய்த்துக் கொடுத்தாள். அங்கிருப்போரின் அத்தனைக் கண்களும் இன்னும் தன்னையே உற்றுப் பார்ப்பதைப் போல ஒரு பிரமை கனகசபைக்கு. குனிந்த தலை நிமிரவே இல்லை. அவருக்கு அடியை விட அவமானமே அதிகமாக வலித்தது.

ரயில் கோயம்புத்தூர்  ஸ்டேஷன் அடைந்த போது நன்றாக விடிந்துவிட்டிருந்தது.

கதையை ஆடியோ வடிவில் கேட்க :


கருத்துகள்