நான் வாசித்த நூல் : மதில்கள்

வைக்கம் முகமது பஷீரின் படைப்பொன்றை வாசிப்பது இதுவே முதல் முறை. ஆனால் படிக்கத் தொடங்கும் முன் "ஒரு மாபெரும் படைப்பாளியின் எழுத்தை வாசிக்க போகிறோம்" என்ற முன்முடிவுடனே தொடங்கினேன். காரணம் சமீபமாக பஷீர் பற்றிய நிறைய பதிவுகளை இங்கு முகப்புத்தகத்திலும் வெளியேயும் வாசித்தேன். "புனைவுலகின் சுல்தான்" என்றெல்லாம். அதனாலேயே ஐந்து வருடங்களுக்கு முன்பு புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் எல்லாம் படிக்கப்படாமலேயே இருக்கும் போது, நேற்று வாங்கிய இதனை இன்றே படித்து முடித்தேன்.
எனக்கு எப்போதுமே மொழிபெயர்ப்பு புத்தகங்கள் என்றாலே ஒரு தயக்கம் தான். காரணம், அதன் மொழிநடை ஒரு மாதிரி கடினமாக இருக்கும் என்பதே. ஆனால் சமீபத்தில் எம்.டி.வாசுதேவன் நாயரின் "நாலுகட்டு" நாவலை சிவன் மொழிபெயர்ப்பில் படித்ததும் நான் கொண்டிருந்த எண்ணம் கொஞ்சம் மாறியது. மேலும் "மதில்கள்" மொழிபெயர்ப்பு கவிஞர் சுகுமாரன் என்பதால் நிச்சயம் ஏமாற்றம் இருக்காது என்று நம்பினேன் (அவருடைய கவிதைகளை இதுவரை வாசித்திராத போதும்.)

தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. அது ஒரு சில பக்கங்களே. பிறகு பஷீரின் எள்ளலும், குதூகலமும் நிறைந்த கதையாடல் அட்டகாசமாக இருக்க குறுநகையுடன் வாசிக்க தொடங்கினேன்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு செல்கிறார் பஷீர். அங்கு அவரைப் போன்றே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தனி பிளாக்-ல் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்த ஆண்கள் சிறைக்கு பக்கத்திலேயே , பெரிய கல் மதிலைத் தாண்டி பெண்கள் சிறை இருக்கிறது. அங்கிருக்கும் நாராயணி என்ற பெண்ணுக்கும் பஷீருக்கும் ஏற்படும் நெருக்கமே மதில்கள்.

பஷீருக்கு சிறையில் ஏற்பட்ட சின்ன அனுபவம் தான் இந்த "மதில்கள்". ஆனால் "கதைசொல்லியாக" ஒரு  பேரனுபவத்தை நமக்கு "அனாயசமாக" அளித்துச் செல்கிறார். செடி கொடிகளுடனும், அணில்களுடனும் அவர் உரையாடல் நிகழ்த்துகிறார். இயற்கையை மிகவும் நேசித்து வாழ்ந்த மனிதர் போலும்.  மிகச் சுலபமாக மனிதர்களை தன் வசமாக்கிவிடுபவர் என்பது "நாவலில்" மட்டுமல்ல பின்னிணைப்பிற்காக கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரையின் மூலமும் நிரூபணமாகிறது.

பஷீரின் கண்களின் வழியாகவே நாம் "மதில்களின்" உலகத்தை பார்க்கிறோம். இரும்பு கம்பி போட்ட சிறை அறையையும், அவர் அமைத்த பூந்தோட்டத்தையும், மரத்திலேறி தாவி ஓடும் அணில்களையும். அதனால் மதிலுக்கு அந்த புறம் இருக்கும் பஷீர் பார்க்காத "நாராயணியை" நாமும் பார்க்க முடிவதில்லை. அதுவே பஷீரின் உணர்வினை நமக்கும் கடத்துகிறது.
"மதில்கள்" நாவலைப் போலவே பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டிருக்கும், நாவல் எழுதப்பட்ட சூழலை உடனிருந்து பார்த்த பழவிள ரமேசனின் "மதில்களின் பணிமனை" கட்டுரையும், "மதில்கள்" நாவலை திரைப்படமாக்கிய எம்.டி.வாசுதேவன் நாயரின் கட்டுரையும் படுசுவாரஸ்யமாக இருந்தன.

பஷீர் - அறிமுகத்திலேயே மிகவும் சுவாரசியமாக இருக்கிறார். இன்னும் இந்த "சுல்தான்" பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள்