நான் வாசித்த நூல் : உயிர்த்தேன்

தி.ஜானகிராமனின் “உயிர்த்தேன்” நாவலை வாசித்தேன். இதற்கு முன்பு இவருடைய “மரப்பசு” நாவலை வாசித்திருக்கிறேன். அது பல பேருடைய பாராட்டுதலுக்கும் விருப்பப்பட்டியலிலும் இருப்பதைக் கண்டு, நான் வாசிப்பதற்கு முன்பே நண்பர்களுக்கு பரிந்துரை செய்து என் புத்தகத்தை இரவலாகத் தந்தேன். ஆனால் இருவரும் சொல்லி வைத்தார் போல் 20 பக்கங்களை கூட தாண்டாமல் “வாசிப்பதற்கு கடினமாக” இருப்பதாக கூறி திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்படி என்ன கடினமாக இருக்கிறது என்று “மரப்பசுவை” நானும் வாசிக்கத் தொடங்கினேன்.

“ஆமா.. தி.ஜா. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்காரு..” என தனிமையில் சொல்லிக் கொண்டே “மரப்பசுவின்” அம்மணியை வாசித்து முடித்தேன். அம்மணியை புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். “மரப்பசுவை” படித்து முடித்ததும் “நல்லா இருக்கு.. ஆனா கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்பதே தி.ஜா.வின் எழுத்து பற்றிய என் மதிப்பீடாக இருந்தது.

ஆனால் “உயிர்த்தேன்” படிக்கத் தொடங்கியதும் தி.ஜா. பற்றிய என் மதிப்பீடு முற்றிலும் மாறிப்போய்விட்டது. “மனிதர் இப்படி கிறங்கடிக்கும்படி எழுதக் கூடியவரா?” என வியந்து, “அதனால் தான் தி.ஜா.வை நிறைய பேர் கொண்டாடுகிறார்கள்” என என் புதிய மதிப்பீடுக்கு நியாயம் சேர்த்துக் கொண்டேன்.

“உயிர்த்தேன்” நாவலில் ஆறுகட்டியை வர்ணிப்பதிலும், அவர் படைத்த மனிதர்களின் குணநலன்களை வாசகனுக்கு கடத்துவதிலும், சூழ்நிலைக்கு தகுந்தாற் போன்ற கதாபாத்திரங்களை உரையாடல்களிலும் என்று மனிதர் புகுந்து விளையாடுகிறார்.

“மரப்பசு” நாவலில் அம்மணி போல் “உயிர்த்தேன்” நாவலில் செங்கம்மா என்ற முதன்மை கதாப்பாத்திரம். தி.ஜா. வின் எழுத்து வாசகனையும் அவளை விரும்ப வைத்துவிடுகிறது. அவளுக்கு நாவலில் எந்த தீங்கும் நேர்ந்து விடக் கூடாது என்ற பதைபதைப்பை கொடுத்துவிடுகிறது.

செங்கம்மா கதாப்பாத்திரத்தைத் தாண்டி பட்டணத்தில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஊருக்கும் செங்கம்மாவின் பேச்சைக் கேட்டு ஊர் மக்களுக்கும் நல்லது செய்யும் பூவராகன், மனைவின் மீது மதிப்பும் அவளது புத்திக் கூர்மையை வியந்தும் பார்க்கும் கணேசப்பிள்ளை, பூவராகன் மீது சிறுவயதிலிருந்து அன்போடு பழகி வரும் நண்பனும் மாமன் மகனுமாகிய நரசிம்மன், இன்னொரு பெண் பேச்சைக் கேட்டு நடக்கிறாரே என கணவன் மீதும் “இவள் யார் என் வீட்டை அதிகாரம் செய்ய” என்று செங்கம்மா மீதும் துளியும் வெறுப்பு கொள்ளாத பூவராகனின் மனைவி ரங்கநாயகி, ஊரே ஒத்துப்போனாலும் பூவராகனின் மீது வெறுப்போடு இருப்பதும் முடிவில் திருந்தி வருந்தும் பழனிவேலு என அனைவரும் “தி.ஜா.வின்” எழுத்து மூலம் உயிர் பெற்று நாவல் முழுவதும் நடமாடுகிறார்கள்.

இத்தனை இருந்தாலும் நாவல் வாசிக்கும் பொது “விக்ரமன் படம்” மாதிரி இருக்கே என்று தோன்றாமலும் இல்லை. காரணம் நாவலில் வரும் அனைவருமே நல்லவர்கள். பூவராகனை முறைத்துக் கொண்டே திரியும் ஒரே நெகட்டிவ் கதாப்பாத்திரமான பழனிவேலு கூட. வாசகனின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டே வரும் பழனிவேலும் முடிவில் மனம் திருந்தி எழுதும் ஒரு கடிதத்தில் கணேசபிள்ளை, செங்கம்மாவோடு சேர்ந்து நம்மையும் கண் கலங்க செய்துவிடுகிறார்.

“மரப்பசுவின்” அம்மணிதான் இந்த நாவலில் வரும் அனுசூயாவா எனத் தெரியவில்லை. அந்த கதாப்பாத்திரமும் நாவலின் மையக் கருத்தான “சக மனிதர்கள்” மீது அன்பினை பொழிய வேண்டும் என்பதற்கு வலு சேர்க்கிறது.

நாவல் முழுவதும் அன்பு பற்றியே பேசியிருக்கும் தி.ஜா. நிஜ வாழ்வில் எப்படி சக மனிதர்களோடு பழகியிருப்பார் என தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் மேலிடுகிறது.

நாவலில் அனுசூயா கதாப்பாத்திரம் ஒரு இடத்தில் சொல்லும், “தவளையை தராசுல நிறுத்துற மாதிரி என்று”. அதற்கு அர்த்தமாக “10 தவளையை தராசுல நிறுத்த முடியுமா. ஒண்ண வச்சி இன்னொன்னு எடுக்குறதுக்குள்ள முன்னாடி வச்சது தாவி ஓடிடும். அந்த மாதிரி என் மனசுல இருக்குறத வார்த்தைல சேர்த்து சொல்ல முடியாதபடி ஒவ்வொண்ணும் தாவி ஓடிடுது" என்று. அதுபோல இத்தனை பெரிதாக எழுதியும், இந்த நாவலின் அனுபவத்தை சொல்ல எனக்கு “தவளையை தராசுல நிறுத்துற மாதிரி தான் இருக்கு”.

தி.ஜா. நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவர் தான்.

கருத்துகள்