இந்த வருடத்தில் படித்து முடித்த முதல் புத்தகம், சுஜாதாவின் "தூண்டில் கதைகள்". ஒவ்வொரு சிறுகதையின் முடிவிலும் எதிர்பாராத திருப்பத்தை கொடுக்கும் அவருடைய இந்த "தூண்டில் கதைகளை" அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேன். ஆனால் 10 சிறுகதைகள் அடங்கிய தொகுதியை படிப்பது இதுவே முதல் முறை.
சுஜாதாவின் கதாபாத்திர வர்ணனையும் கதாபாத்திரங்களின் உரையாடலும் படிப்பதற்கு எப்போதும் வசீகரமானவை. உரையாடல்களை படிக்கும் போது ஒருவேளை இது 2000-க்கு பிறகு எழுதப்பட்டதோ என நினைக்கும் அளவிற்கு அவருடைய பழைய கதைகளும் அத்தனை "ப்ரெஷாக" இருக்கும்.
"யாருக்கு" என்ற சிறுகதையில் கதை நடக்கும் வருடம் எதையும் முதலில் குறிப்பிடாமல் "வெப்ஸ்டர்" எனும் சிங்கப்பூரின் பெரும் நிறுவனத்திற்கு அடுத்த தலைமை பொறுப்பாளர் யார் என்ற கேள்வியோடு கதையை நகர்த்திக் கொண்டு செல்லும் சுஜாதா, அதன் முடிவினை "போபால் விஷவாயு" விபத்தோடு இணைத்து முடித்தது அந்த கதையின் உண்மைத்தன்மை குறித்து இணையத்தில் தேட வைத்தது. உண்மையாகவே "வெப்ஸ்டர் கார்போரேஷன்" என்ற பெயரில் ஒரு சிங்கப்பூர் நிறுவனம், போபால் பேரழிவிற்கு காரணமான "யூனியன் கார்பைடு நிறுவனத்தோடு கூட்டணி வைத்திருந்ததா என்று தேடிப்பார்த்தேன். ஒரு பெரும் நிறுவனத்தில் நடக்கும் "அதிகாரப் போட்டி அரசியல்" போல் இருந்த கதைக்குள் இப்படி ஒரு "தூண்டிலை" இணைப்பதுதான் சுஜாதாவின் சாமர்த்தியம்.
"சுயம்வரம்" என்ற சிறுகதை கொஞ்சம் முற்போர்க்குத்தனமாகவும், பெண்ணியம் பேசுவதை போலவும் எனக்கு தோன்றியது. இந்தியாவின் முதல் நான்கு பணக்காரர்களில் ஒருவரான சுரேஷ் மெக்லானியின் பெண் சுரேகாவைத் திருமணம் செய்ய இரண்டு இளைஞர்கள் விரும்புகிறார்கள். அவளது தந்தை தேர்வை அவளிடமே விட, இருவரும் எல்லாவற்றிலும் சரிசமமாக இருக்க பெரிதும் குழம்புகிறாள். அப்போது தன் தாயோடு விவாகரத்து செய்து கொண்ட தந்தை இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைப்பது தெரிந்து அவரிடம் அது குறித்து கேட்கிறாள். "இருவரையும் சந்தோஷமாக வைத்திருக்கும் போது இரண்டு திருமணம் தப்பில்லை" எனும் தத்துவத்தை தந்தை உதிர்க்க, முடிவில் அந்த இரண்டு இளைஞர்களையும் ஒருவருக்கொருவர் தெரியாமல் அடுத்தடுத்த நாட்களில் அதிக ஆடம்பரமில்லாமல் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள். "நான் சுதந்திரமாக வளர்ந்தவள். திருமணத்திற்கு பிறகு எங்கிருந்து வருகிறாய், எங்கு போயிருந்தாய் போன்ற கேள்விகளை என்னிடம் கேட்கக்கூடாது" எனும் நிபந்தனையோடு இருவரையும் தனித்தனியே அழைத்து தன் விருப்பத்தை தெரிவிக்கிறாள். இந்த சிறுகதை வெளிவந்த சமயம் ஏதேனும் அதிர்வலையை ஏற்படுத்தியதா அல்லது வெறும் 'வணிக சிறுகதை" எனும் பார்வையில் கலாச்சார காவலர்கள் இதனை கடந்து போய்விட்டார்களா எனத் தெரியவில்லை.
அதே போல சோழப் பின்னணியில் எழுதப்பட்ட கதையின் முடிவு நகைச்சுவையாகவும், "மற்றொரு பாலு" என்ற சிறுகதை "The Prestige" படத்தை நினைவுப்படுத்துவதாகவும் இருந்தது.
இந்த வருட வாசிப்பை சுஜாதாவோடு தொடங்கியதில் "மகிழ்ச்சி".

கருத்துகள்