நான் வாசித்த நூல் : நாலுகட்டு

எம்.டி. வாசுதேவன் நாயரின் “நாலுகட்டு” என்ற நாவலை வாசித்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக விரைவாகவும், மிக ஆர்வத்துடனும் படித்து முடித்திருக்கும் ஒரு நாவல். 

எம்.டி. வாசுதேவன் - பள்ளி ஆசிரியர், நாவலாசிரியர், பத்திரிக்கையாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட ஆளுமை. இவர் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பினும் நான் வாசித்த இவரது  முதல் நூல் இதுதான். மலையாள சினிமாவின் தரம் உயர்த்திய இயக்குனர்களில் ஒருவரான இவர் பல தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். அவரது முதல் நூலான இந்த நாலுகட்டு நாவலை எழுதும் போது அவரது வயது 23 தான்.


டால்ஸ்டாயின் “அன்னா கரீனினா” தமிழ் மொழிபெயர்ப்பு படித்துவிட்டு இனி மொழிபெயர்ப்பு நூலே வாசிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். அத்தனை மோசமாக மொழிபெயக்கப்பட்டிருந்தது அந்த புத்தகம். ஆனால் அதன் பிறகு நான் வாசித்த எழுத்தாளர் முருகவேள் மொழிபெயர்த்திருந்த “எரியும் பனிக்காடு” நாவல் அற்புதமான வாசிப்பனுபவத்தை கொடுத்தது. அதைப் போலவே எழுத்தாளர் சிவன் அவர்கள் இந்த நாலுகட்டு நாவலை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்ந்து நான்கு மணிநேரம் உட்கார்ந்து வாசிக்கும் அளவிற்கு “தன்னுள்” என்னை ஈர்த்துக் கொண்டது நாவல்.

1958-ஆம் ஆண்டுக்கான கேரள சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த நாவல், 1972-ஆம் ஆண்டு வரை கேரளத்திலும், தமிழகத்தின் தென் கோடி மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்த மருமக்கத் தாயம் என்ற முறையை பின்னணியாக கொண்டு எழுதப்பட்டது. “மருமக்கத் தாயம்” முறைப்படி குடும்பத்தின் சொத்துக்கள் பெண்களுக்கே உரியவை. ஒரு வீட்டில் ஆண்களும் பெண்களும் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களில் மூத்த ஆண் மகன் இந்த சொத்துகளை நிர்வகிக்கவும், கையாளவும் அனுமதிக்கபாடுவார். அவர் “காரணவர்” என்று அழைக்கபடுவார். அவர் தான் அந்த குடும்பத்தின் தலைவராக கருதப்படுவார். அவரது காலத்துக்குப் பிறகு, அவர் சகோதரிகளில் மூத்த மகன் “காரணவர்” ஆக்கப்படுவார். இவ்வாறு தாய்மாமாவுக்குப் பிறகு, மருமகன் சொத்துரிமை பெறுவது “மருமக்கத் தாயம்” எனப்பட்டது. இந்த முறை 1972-ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட, “நாயர் ரெகுலேஷன் ஆக்ட்” சட்டத்தின் படி மருமக்கத் தாயம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நாவல் அப்புண்ணி என்ற மையக் கதாபாத்திரத்தின் வழியே விவரிக்கப்படுகிறது. வீட்டு வேலையும் தோட்ட வேலையும் செய்து அவனை படிக்க வைக்கும் அவனது அம்மா பாருக்குட்டி, அப்பாவை விஷம் வைத்து கொன்றதால் வளர்ந்து பெரியவனானதும் அவன் பலிவாங்கத் துடிக்கும் செய்தாலிக்குட்டி, அவனுக்கும் அவனது அம்மாவிற்கும் உதவ வரும் திருமணம் செய்து கொள்ளாத சங்கரன் நாயர், அப்புண்ணிக்கு அவனது அப்பாவின் தாயத் திறமையை பற்றியும் அவனது பெற்றோர் திருமணம் குறித்தும் செய்தாலிக்குட்டி அவனது அப்பாவிற்கு விஷம் வைத்தது குறித்தும் சொல்லும் முத்தாச்சி பாட்டி, அவனை எப்போதும் ஆதரவாக பேசியபடி நெருங்கும் பாவப்பட்ட மாளு, அவனை “நாலுகட்டு” வீட்டிலிருந்து அடித்து விரட்டும் பெரிய மாமா, அவனை நினைத்து மருகும் பாட்டி, அவனது அறைக்குள் வந்து அவனை கனவுலகம் அழைத்துச் செல்லும் பெரிய மாமாவின் பெண் அம்மினியக்கா என்று எல்லா கதாப்பாத்திரங்களும் அப்புண்ணி வழியாகவே நமக்கு அறிமுகம் ஆகிறார்கள். அப்புண்ணி ஆரம்பம் முதலே துன்பங்களை சுமந்த வண்ணம் இருந்தாலும் முடிவில் அவனுக்கு உயர்ந்த நிலை அடைகிறான். ஆனால் நாவல் முழுதும் துன்ப ஜென்மங்களாக தெரிந்த கதாப்பாத்திரங்கள் கணவனையும், ஒரே ஆதரவான பிள்ளையையும் இழந்து தவிக்கும் அவனது அம்மா பாருகுட்டியும், சந்தோஷமே அறியாத வீட்டு வேலை செய்தபடியே திரியும் மாளுவும், சமையலறையே கதியாய் கிடக்கும் மீனாக்ஷியக்காவும்.

முதலில் சற்று சிரமமாகத் தெரிந்த சில மலையாள வார்த்தைகள் போகப்போக உறுத்தாமல் உட்கார்ந்து கொண்டன. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவர்களின் சூழ்நிலையை அவர்கள்  தரப்பு நியாயத்தோடு மட்டுமே அணுகுவதும் அதற்க்கு மற்றவர்களின் எதிர்வினையும் என்று வெகு இயல்பான கதையோட்டம் நாவல் முழுவதும்.  நல்லதொரு வாசிப்பனுபவத்தை கொடுக்கும் நாவல்.

கருத்துகள்