நான் வாசித்த நூல் : ஜெயபாரதி சிறுகதைகள்

இயக்குனர் ஜெயபாரதி அவர்களின் சிறுகதை தொகுதியைப் படித்தேன். இரண்டு மாதத்திற்கு முன்பு நூலகத்திலிருந்து எடுத்து வந்தது. ஆனால் அவருடைய "இங்கே எதற்காக?" என்ற நூலை படித்துவிட்டு இதனை படிக்கலாம் என்று வைத்திருந்தேன். "இங்கே எதற்காக?" புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும், தரமான தமிழ் சினிமாவை கொடுக்க வேண்டும் என்ற அவரது கொள்கையால் "வியாபார" சினிமா தொழிலில் அவர் அடைந்த இன்னல்களையும் பதிவு செய்திருந்தார். விறுவிறுப்பான, எளிமையான எழுத்து நடையில். அதனால் அவரது சிறுகதை தொகுதியை படித்தே ஆக வேண்டும் என்று நூலகத்தில் ஒப்படைக்காமலே வைத்திருந்தேன்.


26 சிறுகதைகள் கொண்ட இந்த புத்தகத்தில் 5 கதைகள் ஒரு தலை காதல் பற்றியது. தான் காதலிக்கும் பெண் இன்னொருவனை பார்க்கிறாள் என்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து அவனை தள்ளிவிட்டு கொலை செய்பவன், அவள் தன்னை கவனிக்கிறாளா என்பதுகூட தெரியாமல் சதா அவள் வீடு இருக்கும் முட்டுக்கு சென்று அவள் வீட்டுக்கு எதிரில் இருக்கும் பெட்டிக்கடையில் கடனுக்கு வாங்கி தம் அடிப்பவன்,  என்று ஒவ்வொருவரும் பரிதாபகரமான ஒரு தலை காதல் வாழ்வை வாழ்கிறார்கள். இவை மட்டும் என்றில்லாமல் எல்லாக்கதைகளிலும் ஒரு மென் சோகம் இழையோடுகிறது. நோய்வாய்ப்பட்ட மகனை சாவிலிருந்து காப்பாற்ற முடியாத தந்தை, விருப்பமில்லா விபச்சார வாழ்வை உதறிவிட முடியாமல் தவிக்கும் பெண்கள், படம் எடுத்து நஷ்டப்பட்டு முடிவில் பெண்ணை வைத்து விபச்சாரம் செய்யத்  தொடங்கும் தயாரிப்பாளர், தரமான, கலப்படங்கள் தான் எடுப்பேன் என்று கூறிக் கொண்டு அவதிப்படும் இயக்குனர்கள் என்று எல்லாக் கதைகளும் சோகத்தை சுமந்தபடி இருக்கின்றன.

இந்த 26 கதைகளிலும் எனக்கு ஒரு கதை மட்டும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஒரே சம்பளத்தில் குடும்பத்தை சமாளிக்க முடியாத நடுத்தர வர்க்க கணவன் தன மனைவியை முதல் முறையாக வேலைக்கு அனுப்பி வைக்கிறான். மகளை காலையில் மனைவி பள்ளியில் விட்டு செல்வதாகவும் மாலையில் இவன் அழைத்து வருவதாகவும் ஏற்பாடு. அவர்கள் வளர்க்கும் நாயை வீட்டின் பின்புறம் கட்டிவைத்துவிட்டு செல்கிறார்கள். அந்த  நாள் முழுவதும் நாய் கத்திக்கொண்டே இருப்பதால் பக்கத்து வீட்டுக்காரர் வந்து அதனை புகாராய்க் கூறி விட்டு செல்கிறார். விஷயம் தெரிந்தால் மனைவி வேலைக்கு செல்வது தடைபடும் இல்லை  நாயை எங்காவது விட்டுவரலாம் என்றால் அது மீண்டும் எப்படியாவது வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடும் என்பதால் துணிகாயப்போடும் நைலான் கயிறை நாயின் கழுத்தில் கட்டி வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தொங்கவிட்டு கொன்று பிறகு அதனை எடுத்துக் கொண்டு போய் குப்பை தொட்டியில் போடுகிறான். நடுத்தரவர்க்கத்தின் கையாலாகாத்தனம் எத்தனை  குரூரமான முடிவை எடுக்க வைக்கிறது என்பதை  சுட்டுவதாக இருந்தாலும் அவனது அந்த முடிவு கொஞ்சம் மிகையாகப்பட்டது.

எளிமையான, சரளமாக வாசிக்க கூடிய சுவாரசியமான எழுத்துநடை. கிடைத்தால் நண்பர்கள் வாசித்துப் பாருங்கள்.

கருத்துகள்