சுஜாதாவின் “ஆ..”
என்ற நாவலில் “மண்டைக்குள் குரல் கேட்கும் நாயகன்” என்ற கருவைத் தழுவி
எடுக்கப்பட்டிருக்கும் விஜய் ஆண்டனியின் “சைத்தான்” முதல் நாளே பார்த்தாகிவிட்டது.
இப்படி முதல் நாளே பார்க்கும் ஆர்வத்தை தூண்டிய “YouTube-ல் முதலில் ரிலீஸ் செய்த
ஒன்பது நிமிடக் காட்சிகளும் மீண்டும் ரிலீஸ் செய்த 4 நிமிடக் காட்சிகளும்”
நல்லதொரு விளம்பர யுக்தி. கதையை கணிக்க முடியாமல் நல்லதொரு ஆர்வத்தையும் தூண்டின
அந்த காட்சிகள்.
IT நிறுவனத்தில் நல்ல
வேலையில் இருக்கும் நல்ல “புத்திசாலியான” விஜய் ஆண்டனி அனாதைப் பெண்ணான கதாநாயகியை
Matrimony தளத்தில் பார்த்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்த சில
நாட்களில் திடிரென விஜயின் மண்டையில் ஒரு குரல் கேட்க தொடங்குகிறது. அவரை தற்கொலை
செய்து கொள்ளும்படியும் ஜெயலக்ஷ்மியை கொள்ளும்படியும் தூண்டுகிறது. மனநல
மருத்துவரின் உதவியை நாடும் விஜய்க்கு தன் பூர்வ ஜென்மம் குறித்த சில விஷயங்கள்
நினைவுக்கு வருகிறது. அவரது பூர்வ ஜென்மம் குறித்த தேடலும், அடுத்தடுத்து நடக்கும்
விஷயங்களுமே “சைத்தான்”. (இப்படி கதை சொல்றதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு)
முதல் காட்சியிலையே
கதையினை தொடங்கியது நல்ல விஷயம். ஒரு வித ஆர்வத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து
கதை கொஞ்சம் கொஞ்சமாக முதல் பாதி முழுவதும் யாருடைய குரல் அது, பேயா, இல்லை
கற்பனையா என்று கதாநாயகன் போலவே அதனை தெரிந்து கொள்ள நமக்கும் ஆர்வத்தை
தூண்டுகிறது. முதல் பாதியில் அப்படி சுவாரசியத்தை ஏற்படுத்திவிட்டு அதை இரண்டாம்
பாதியில் தவற விட்டுவிட்டார்கள். நீளமான, தமிழ் சினிமாவுக்கே உரித்தான சில காட்சிகள்,
இரண்டாம் பாதியின் வேகத்தை குறைத்து விடுகிறது. திடிரென முளைக்கும் வில்லன் கதையில்
பொருந்தாமல் போனதைப் போல் இருந்தது. வில்லனின் இடமும், கிளைமாக்ஸ் சண்டை நடக்கும்
அந்த அறையும் “The Equalizer” படத்தினை நினைவூட்டியது. “End credits”
போடும் போது அவிழும் ஜெயலக்ஷ்மி குறித்தான அந்த ட்விஸ்ட் இன்னும் கொஞ்சம்
எல்லோரும் புரிந்துக் கொள்ளும்படி அல்லது இன்னும் விவரமாக காட்டி இருக்கலாம் என்று
தோன்றியது.
விஜய் ஆண்டனி “இந்தியா-பாகிஸ்தான்”
தவிர்த்து மற்ற எல்லாப் படங்களிலும் ஒரு வித இறுக்கமான, அதிகமான முகப்பாவனைகளை
காட்டத் தேவைப்படாத கதாப்பாத்திரங்களையும் கதைக் களத்தினையுமே தேர்வு செய்து
நடித்து வருகிறார். இந்த படமும் அது போலவே. கதாநாயகியுடன் வரும் சில காட்சிகள் மட்டும்
சிரித்த முகமாக கொஞ்ச நேரம் வலம் வருகிறார்.
ஒளிப்பதிவும்,
பின்னணி இசையும் நன்றாக இருந்தது. முக்கியமாக “ஜெயலக்ஷ்மி” பாடலும், அந்த தீம்
இசையும் காட்சிகளை சுவரசியப்படுத்தியது.
சமீபகாலமாக வரும் “சென்ஸ்”
இல்லாத படங்களுக்கு மத்தியில் “சைத்தான்” நன்றாகவே இருக்கிறது. வித்தியாசமான ஒரு
அனுபவத்தைக் கொடுக்கும் விறுவிறுப்பான திரைப்படம். விஜய் ஆண்டனிக்கு இதுவும்
வெற்றிப்படமாகவே இருக்கும்.

கருத்துகள்