குற்றமே தண்டனை

ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் நடக்கும் கொலை. அதற்க்கு “Tunnel Vision” என்ற பார்வைக் குறைபாடு உள்ள விதார்த் சாட்சி. அதைச் சுற்றி நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள் என தனது முதல் படமான “காக்கா முட்டை”க்கு நேரெதிரான கதைக்களத்தை தேர்ந்தெடுத்த இயக்குனர் மணிகண்டன் கதை சொல்லாடலை “காக்கா முட்டை”யை போலவே “reality” தன்மையோடு படமாக்கியிருக்கிறார்.


மெதுவாக நகரும் காட்சிகள், குறைவான வசனங்கள், தேவையான இடங்களில் மட்டும் இசை, நடிகர்களின் இயல்பான நடிப்பு என்று ஒரு வித கலைப்பட தன்மையை கொண்டிருக்கிறது படம். அதுவே ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை நம்மை மறக்க செய்கிறது. முக்கிய பாத்திரமான விதார்த்தின் “பார்வை குறைபாடு” தன்மையை காட்டிய விதம், அவரின் குணாதிசயங்களை விளக்கும் காட்சிகள் எல்லாம் இயக்குனரின் தெளிவைக் காட்டியது. பரபரப்பான காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகள் என எதுவும் இல்லாமல் இயல்பான ஒரு “thriller”. பொறுமையில்லாமல் பார்ப்பர்வர்கள் “அட என்னடா படம் இது” என நொந்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். அதுபோன்ற வணிக ரீதியான வட்டத்துக்குள் சிக்காமல் ரசிகர்களின் திரைப்பட ரசனையை உயர்த்தும் விதமான முயற்சியாகத் தான் மணிகண்டனின் இந்த படத்தை பார்க்கத் தோன்றுகிறது.

பாராட்டும்படியான இந்த படத்தில் அந்த கொலை நிகழ்வதற்கான காரணம் வருத்தமளித்தது. பெண்கள் மீதான வன்முறை அதிகரித்திருக்கும் சூழலில் படத்திலும் அப்படியான காட்சியமைப்பு இருப்பது “இதை வேறுவிதமாய் சொல்லியிருக்கலமோ” என யோசிக்க வைத்தது.

ஆனால் வழக்கமான தமிழ் மரபு thriller படங்களில் இருந்து மாறுபட்ட இந்த படம் பாரட்டப் படவேண்டிய முயற்சியே.

கருத்துகள்