நான் வாசித்த நூல் : பீக்கதைகள்

“மாதொருபாகன்” சர்ச்சையினால் மட்டுமே பெருமாள்முருகன் என்றொரு எழுத்தாளரை தெரியும். நூலகத்தில் அவருடைய நூலை பார்த்ததும் அவரை வாசித்துப் பாப்போம் என்று எடுத்தேன். ஆனால் இந்த புத்தகத்தின் தலைப்பு என்னை யோசிக்க வைத்தது. இப்படி ஒரு தலைப்பு வைப்பதற்கு நிச்சயம் தைரியம் வேண்டும் அதனால் உள்ளே இருக்கும் கதைகளும் வித்தியாசமாக இருக்கும் என எடுத்து வந்தேன்.


சரளமாக படிக்க தூண்டும் எழுத்து நடை. விவரணைகளால் நகர்த்திச் செல்லப்படும் கதைகளில் அத்தனை எதார்த்தம். எல்லாக் கதைகளின் பேசுப்பொருளும் “பீ”. இதைக் கேட்க்கும் போதே பலரும் முகம் சுளிப்பார்கள். அப்படி இருக்கும் போது அத்தனை கதைகளிலும் “பீயை” விவரமாக வர்ணிக்கும் போது அதன் நாற்றத்தை நாசிகள் உணர்வதை போன்ற ஒரு பிரமை.

“பீ” என்ற தலைப்பில் வரும் கதையில் நண்பர்கள் ஐவர் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள். அவர்களின் தங்கியிருக்கும் வீட்டின் செப்டிக் டெங் குழாய் உடைந்து அதன் நாற்றம் அவர்களின் அறை முழுக்க நிரம்பிக் கிடப்பதாய் வரும். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு சூழல் இப்போது நண்பர்களுடன் நான் தங்கியிருக்கும் அறையிலும் நிலவுகிறது. கதையில் வரும் அளவிற்கு மோசம் இல்லை என்றாலும் அந்த கதையில் வரும் நண்பர்களின் நிலையில் நாங்கள் இருப்பதாய் நினைத்துக் கொண்டேன்.

“மஞ்சள் படிவு” என்ற சிறுகதையில் கெத்தாக வாழ்ந்த, வயதான பிறகும் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காத ஒரு பெண்மணி, படுத்த படுக்கையாய் ஆனப் பிறகு தன் மகளின் உதவியுடன் மலம், ஜலம் கழிக்கும் நிலைக்கு ஆளாகிறாள். அந்த கிழவி ஒரு நாள் தன்னுனர்வற்று சேலையில் மலம் கழித்துவிட மகள் சற்று கோவமாக பேசிவிட வைராக்கியமாக சாப்பிடாமல் கிடந்து தன் உயிரை விடுவதாய் முடியும். படித்து முடித்தப் போது என்னையும் அறியாமல் கண்கள் கலங்கி விட்டது. என் பாட்டியின் நியாபகம். என் பாட்டியும் சுற்றி இருந்த மகன், மருமகள் ஆகியோரின் சுடு சொற்களால் மனமுடைந்து சாப்பிடாமல் கிடந்து சாவைப் பெற்றுக் கொண்டார்.

இப்படி ஒவ்வொரு கதைகளும் நான் வாழ்ந்த, நான் கேள்விப்பட்ட, நான் பார்த்த, சம்பவங்களை நினைவுப்படுத்துவதாய் இருந்தது. இத்தனை சுவாரசியமாய், ஆர்வத்தோடு ஒரு சிறுகதை தொகுப்பினை நான் படித்தாய் நியாபகம் இல்லை.

எல்லோரும் உச்சரிப்பதற்கு கூட தயங்கும் ஒரு வார்த்தையை, தன் கதைகளின் கருப்பொருளாய் கொண்டு இப்படி ஒரு தலைப்பினை புத்தகத்திற்கும் வைத்துக் கொண்ட பெருமாள்முருகன் நிச்சயம் பாராட்டத் தக்கவர். இவரின் எழுத்து நடை இவரது மீதி புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. 

கருத்துகள்