எனது ஆல் டைம் பேவரைட் திரைப்படங்கள்-2

இந்த தலைப்பில் நான் கடைசியாக எழுதியது போன வருடம் ஆகஸ்ட். மறுபடியும் இந்த ஆகஸ்ட் மாதம் தான் எழுத நேர்ந்திருக்கிறது. சரி இந்த முறை நான் எழுத போகும் திரைப்படம் என்னவென்று பார்ப்போம்.

1992 அக்டோபர்  25 தீபாவளி அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "தேவர் மகன்" இந்த முறை எனது ஆல் டைம் பேவரைட் திரைப்படம். சென்ற முறை எழுதிய கட்டுரையில் நான் ஒரு ரஜினி ரசிகன் என்று கூறியிருந்தேன். ஆனால் அப்படி கூறியிருந்த நான் இரண்டு முறையும் பேவரைட்  திரைப்படங்கள் என கமல் படங்களையே குறிப்பிட்டிருக்கேன். இது தான் கமலின் பலமும், ரஜினியின் பலவீனமும். 

ரஜினி வணிகரீதியான வெற்றிப் படங்களை தேர்வு செய்ய கமல் வணிகப் படம், கலைப் படம், வணிகரீதியான கலைப்படம் எனக் கலந்துக் கட்டி அடித்தார். இப்போது நாம் ஆகா ஓஹோ வென கூறும் பல கமல் படங்கள் எல்லாம் ரிலீசான பொழுது அவருக்கு பல்பு கொடுத்தன என்பதை மறுப்பதற்கு இல்லை. ராஜபார்வை, குணா, ஆளவந்தான், ஹே ராம், அன்பே சிவம் என இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இருப்பினும் அவை காலம் கடந்தும் பார்க்கபடுகின்றன நினைவில் வைத்துக் கொள்ளப்படுகின்றன. அதுவே கமலின் வெற்றி. சரி இப்போது "தேவர் மகன்" ஏன் எனது "ஆல் டைம் பேவரைட்" என்பது பற்றி பார்ப்போம்.

இந்த படம்  எனக்கு மிகவும் பிடித்துப் போக மிக முக்கியமான காரணங்கள். கமல், சிவாஜி, இளையராஜா. கமல் சக்தியாகவும், சிவாஜி பெரிய தேவராகவும் மட்டுமே இந்த படம் முழுவதும் தெரிவார்கள். ஒரு சாதாரணக் காட்சியை எப்படி நடிப்பின் மூலம் மிகச்சிறந்த காட்சியாக சினிமாவில் நிலை நிறுத்துவது என்பதை பல இடங்களில் இருவரும் நிருபித்துக் கொண்டே வருவார்கள். முக்கியமாக மழை பொழியும் இரவில் இருவரும் பேசிக் கொள்ளும் காட்சி. அந்த காட்சி தமிழ் சினிமாவின் கிளாசிக் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். எனக்கு அந்த காட்சியினை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் புதியதாய் பார்ப்பதை போன்ற ஒரு உணர்வு. சிவாஜி கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு பலர் பரிசிலிக்கப்பட்டர்கள். விஜயகுமார், எஸ்.எஸ்.ஆர். போன்றோர். ஆனால் சிவாஜி நடிப்பில் இந்த படத்தினை பார்த்தப் பின்பு சத்தியமாக அவரை விட யாரும் சிறப்பாக செய்து விட முடிந்திருக்காது என்றே தோன்றுகிறது. குறிப்பிட்டு சொல்ல ஒரு காட்சி. பஞ்சாயத்தில் நாசர் மரியாதைக் குறைவாக பேசிவிட கோபத்துடன் வீதியில் நடந்தப்படியே பேசி வரும் காட்சியில் கமலிடம், "உன் ஹோட்டல்-ல எனக்கும் ஒரு வேலை போட்டு கொடுப்பா.. இந்தா இது பண்ணுவாங்களே.. இந்தா இப்படி.. என்னடா அது.." எனக் கூறிகொண்டே மாவு ஆட்டுவது போல சைகை செய்வார். ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் "க்ளாஸ்".

அடுத்ததாக இளையராஜா. காலம் கடந்தும் நம்மை ரசிக்க வைக்கும் பாடல்களை கொடுத்திருந்தார் இந்த படத்தில். இளையராஜா இசையமைத்த கமலின் ஒவ்வொரு படங்களும் மியூசிக்கல் ஹிட். கமல் படங்களின் பெரும் தூண் இளையராஜா என்றால் மிகையில்லை. அதனால் தான் ஏ.ஆர்.ரகுமான் வருகைக்குப் பின் எல்லோரும் அவர் பின்னால் செல்ல கமல் மட்டும் இளையராஜாவின் ஆர்மோனிய பெட்டியில் தலை சாய்த்திருந்தார். கமல் தயாரித்த படத்தில் இளையராஜா இசையமைக்காமல் போனது விஸ்வரூபம் படத்திற்குப் பின் தான். 

படத்தின் ஒவ்வொரு நடிகர்களும் நாம் ஒரு படம் பார்க்கிறோம் என்ற உணர்வு நம்மில் எழாமல் பார்த்துக் கொண்டார்கள். நாசர், ரேவதி, கௌதமி, வடிவேலு, காக்கா ராதாகிருஷ்ணன் என அனைவரும் தேவர்மகனில் குறிப்பிடத் தகுந்தவர்கள் தான்.

கமல் ஒரு நடிகனாக எந்த அளவிற்கு என்னை கவர்ந்தரோ அதை போல் வசன கர்த்தாவாகவும் என்னைக் கவர்ந்தார். மிக கூர்மையான வசனங்கள். குறிப்பிட்டு சொல்ல படம் முழுவதும் நிறைய உள்ளன.

நான் கமல் பக்தன் எல்லாம் இல்லை. ஆனால் ஏனோ இந்த படம் பார்க்கும் பொழுது மட்டும் ஒரு வெறித்தனமான கமல் பக்தனாக எனை உணர்கிறேன். எனது ஆல் டைம் பேவரைட்  திரைப்படங்கள் வரிசையில் சொல்ல இன்னும் நிறைய கமல் படங்கள் உள்ளன. ஒவ்வொன்றாக எழுதுவோம்.

கருத்துகள்