ஆங்கிலப் படங்கள் சிலவற்றைப் பார்க்கும் போது ஏன் இப்படி நம் தமிழில் முயற்சி செய்யாமல் இருக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். ஒரு சாதாரணக் கதைக்கு அருமையாக திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்கும் என்று கொஞ்சம் கூட என்று நம்மை யூகிக்க விடாமல் ரசிக்க வைக்கும் படங்கள் அங்கு ஏராளம் என்பது உலக சினிமா ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். அதுபோன்று அசத்தலாக நம் தமிழில் ஒரு படம் வரவேண்டும் என்று நிறைய நாட்கள் யோசித்திருக்கிறேன். அப்படி ஒரு படம் தான் “ராஜதந்திரம்”.
“Heist film, con movie” என்ற genre-ல் நம்மவர்கள் முயற்சி செய்யும் படங்கள் (தமிழில் அப்படியான படங்கள் குறைவு தான் எனும் போதும்) எல்லாம் ஆங்கில படங்கள் சிலவற்றின் காப்பி ஆகவோ அல்லது யூகிக்க முடியும் படியான திராபையான காட்சிகளுடனோ தான் பெரும்பாலும் அமைந்துவிடும். உதாரணமாக “நாணயம்” என்றொரு படம். ஆங்கிலப் படங்கள் சிலவற்றின் நகலாகவே இருந்தது. சமீபத்தில் “சதுரங்க வேட்டை” சற்று நல்ல முயற்சி. தமிழ்நாட்டில் நடந்த சில மோசடிகளை சுற்றி பின்னப்பட்டக் கதையாக சுவாரசியம் தந்தது. ஆனால் அதில் பல காட்சிகள் நாடகத் தனமாக நகர்ந்து பெரும் சோர்வை தந்தது. பல வருடங்களுக்கு முன் பாக்யராஜ் நடித்து வெளிவந்த “ருத்ரா” திரைப்படம் ஒரு சுவாரசியமான “con movie” வகை எனக் கூறலாம். புத்திசாலித்தனமானக் காட்சிகள் பாக்யராஜின் அசத்தலான நடிப்பில் பல இருக்கும். உதாரணமாக பாக்யராஜின் அறிமுகத்தில் ஜோக்கர் வேஷம் போட்டு வந்து வங்கியை கொள்ளை அடிக்கும் காட்சி. உலக சினிமாவை விரல் நுனியில் வைத்திருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தை ஈர்க்க திரைக்கதையில் அதிக சுவாரசியம் சேர்க்க வேண்டும். அதை தான் செய்திருக்கிறது “ராஜதந்திரம்”.
சிறு சிறு ஏமாற்று வேலைகள் செய்து பிழைத்து வரும் மூன்று நண்பர்கள். ஏதாவது பெரிதாக செய்து விட்டு செட்டில் ஆகத் துடிக்கும் ஒரு நண்பன். அது போன்று செய்து விட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ள விரும்பாத ஹீரோ, தான் காதலிக்கும் பெண் வீட்டின் கடன் தொல்லையை தீர்க்க கொஞ்சம் பெரிய திருட்டில் ஈடுபட அடுத்தடுத்து நடக்கும் அதிரடிகள் தான் ராஜதந்திரம். ரொம்பவும் சிக்கல் இல்லாத கதை. ஆனால் அதை சொல்லியிருக்கும் விதம் செஸ் விளையாட்டைப் போல் விறுவிறுப்பு.
படத்தில் கவனம் ஈர்த்தவைகள் என்றால் முதலில் சொல்ல நினைப்பது குள்ளனாக வரும் தர்புகா சிவா (உபயம்:விக்கிபீடியா). அவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் தியேட்டரில் கைதட்டல். சரளமான பேச்சு, அசால்ட்டான உடல் மொழி, என்று ஆரம்பக் காட்சியில் இருந்து நம்மை கவனிக்க வைக்கிறார். ஒரு பெரிய ரவுண்டு (சினிமாவில்) வருவார் என்று தோன்றுகிறது. அடுத்து ஹீரோவாக வரும் வீரா. “நடுநிசி நாய்கள்” என்ற கர்ண கொடூர படத்தில் அறிமுகமானவர். அதன் பிறகு அவருக்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு இந்த படம். நன்றாகவே செய்திருக்கிறார். முதல் பாதியில் சற்று தடுமாற்றம் இருந்தாலும் இரண்டாம் பாதியில் நடிப்பில் அசத்துகிறார். அடுத்து காஞ்சி அழகப்பனாக வரும் பட்டியல் கே.சேகர். ரொம்பவும் சாதாரணமான நடிப்பில் ரசிக்க வைக்கிறார். படம் பார்க்கும் போதே ஏதாவது தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் ஆக இருப்பார் என்று நினைத்தேன். விக்கிபீடியாவை ஆராய்ந்த பிறகு தான் தெரிந்தது தயாரிப்பாளர் சேகர் என்று. ஹீரோயின் ரெஜினா அழகாக வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்கிறார். நரேன், இளவரசு, ஹீரோவிடம் பைக் வாங்கி ஏமாறும் நபர் என்று பலர் கவனம் ஈர்க்கிறார்கள்.
இயக்குனர் A.G.அமித். தமிழில் அசத்தலான இயக்குனர்களின் வரிசையில் ஒரு புதுவரவு. இவரது இன்டர்வியூ ஒன்றை செய்திதாளில் படித்தேன். “இந்த வகை genre-ல் என்னென்ன காட்சிகள் வருமோ அதையெல்லாம் எழுதி அது போன்ற காட்சிகள் வராமல் பார்த்துக் கொண்டோம்” எனக் கூறியிருந்தார். அது உண்மை என்பது பல காட்சிகளில் ஒத்துக் கொள்ள நேர்ந்தது. தொழில் நுட்ப ரீதியாகவும் படம் சிறப்பாக உள்ளது. வசனங்கள் அட்டகாசம். குறிப்பாக தர்புகா சிவா பேசும் பல ஒன்-லைனர்ஸ்.
இந்த வருடத்தில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதையோடு முதல் திரைபடம் இதுவே.
ராஜதந்திரம் – கொடுக்குற காசுக்கு மேலே வொர்த்-ஆன மூவி.

கருத்துகள்