"மெட்ராஸ்" திரைப்படத்தினை வெளிவந்த பொழுதே திரையரங்கில் பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் படத்தினைப் பற்றி அப்பொழுது பதிவு எழுத முடியாமல் போய்விட்டது. சமீபத்தில் மறுபடியும் மெட்ராஸ் படத்தினை இருமுறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுதியே தீர வேண்டும் என்று தோன்றியது.
தோல்வி படங்களாக மட்டுமல்லாமல் மகா மொக்கைப் படங்களாகவும் நடித்து வந்த கார்த்தியின் மீது மீண்டும் சிறு நம்பிக்கையை ஏற்ப்படுத்தியது இந்த திரைப்படம். வட சென்னை மக்களின் வாழ்க்கையை, அரசியல் அவர்கள் வாழ்வில் ஏற்ப்படுத்தும் தாக்கங்களை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லி இருக்கும் படம். வட சென்னை மக்கள் என்றாலே கத்தியோடும், அருவாளோடும், கொலைகாரகளாகவும் முரடர்களாகவும் காட்டி வந்த தமிழ் சினிமாவில் அவர்களையும், அவர்களின் பாஷையையும் மிகவும் விரும்பச் செய்கிறது இந்த திரைப்படம். எனக்கு சென்னை பற்றி முன்பு அதிகம் தெரியாது.(இப்பொழுது முன்பை விட கொஞ்சம் தெரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்). வடசென்னை என்றாலே சினிமாவில் காட்டும் முடி அதிகம் வளர்ந்த, முரட்டு தனமான, ஜிம் பாய் போன்ற மனிதர்கள் தான் நியாபகம் வருவார்கள். ஆனால் சென்னை வந்த பிறகு கிடைத்த சில வடசென்னை நண்பர்களால் அந்த எண்ணம் கொஞ்சம் மாறியது. (ஆனால் அந்த நண்பர்களில் ஒருவன் அவன் ஏரியா வில் நடந்த சினிமாவில் வரும் காட்சிகளைப் போல சில சம்பவங்களை சொல்லி சமயங்களில் திகில் கிளப்புவான் ). என் போன்ற, சென்னை அதிகம் பரிச்சயம் அல்லாதவர்களின் வடசென்னை மக்கள் மீதான எண்ண ஓட்டங்களை இந்த படம்கொஞ்சமேனும் கொஞ்சம் மாற்றி இருக்கும் என்றே நினைக்கிறேன்.
படத்தில் கார்த்தியை விட அன்புவாக வரும் கலையரசன் தான் பட்டையை கிளப்பியிருக்கிறார். பேசும் பாசையிலும் சரி, நடிப்பிலும் சரி அந்த கதாப்பாத்திரத்திற்கு சரியான தேர்வு. அவர் மதயானை கூட்டம் திரைபடத்திலையே நல்ல கவனம் ஈர்க்கும் நடிப்பினை கொடுத்திருப்பார். விரைவில் கதாநாயகனாக எதிர்ப்பார்க்கலாம்.
கார்த்தி சென்னை பாஷை ஆரம்பத்தில் செயற்கையாக தெரிந்தாலும் போக போக நல்ல நடிப்பால் கவர்ந்து கொள்கிறார். பெண் பார்க்கும் படலத்தில் அம்மா படுத்தும் போதும் , "கலையரசி என்னை 'டா' போட்டு பேசிட்டா மச்சி.." என்று தண்ணி அடித்து விட்டு புலம்பும் போதும் "அதான் நல்லா நடிக்க வருதே அப்புறம் ஏன் அலெக்ஸ் பாண்டியன், அழகு ராஜா மாதிரி படங்கள்ல நடிக்கிராப்ல.." என யோசிக்க வைக்கிறார்.
காதரின் தெரஸா.. அந்த சூழலில் அவர் சற்று உறுத்தவே செய்கிறார். ஆனால் நடிப்பும், பின்னணிக் குரலும் கனகச்சிதம். எல்லோரும் அந்த அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருந்தி போவதே இந்த படத்தின் ஆகச் சிறந்த பலம் என்று நினைக்கிறேன். மாரி, விஜி, கண்ணன், ஜானி என்று சரியான நடிகர்கள் தேர்வு.
இன்னும் என்னை இந்த திரைப்படத்தில் கவர்ந்த இரு விஷயங்கள். ஒளிப்பதிவும், இசையும். சந்தோஷ் நாராயணன். சமீப காலமாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த இசை அமைப்பாளர். பின்னணி இசையிலும் சரி, பாடல் இசை அமைப்பிலும் சரி வெளுத்து வாங்குகிறார். இடைவேளையின் போது வரும் சண்டை காட்சியில் இவரின் பின்னணி இசை அந்த காட்சியை இன்னும் ஒருபடி மேலே தூக்கி இருக்கிறது. ஒளிப்பதிவும் அந்த காட்சியில் அபாரம். சம்பவங்களை நேரில் பார்ப்பதை போன்றதொரு உணர்வு.
"அட்டக்கத்தி" என்ற காமெடி படத்தின் மூலம் அனைவரின் கவனம் ஈர்த்த பா.ரஞ்சித் தனது அடுத்த படத்தினை யாரும் எதிர்ப்பார்க்காத வேறு ஒரு தளத்தில் இந்த படத்தினை எடுத்திருக்கிறார். "வெறும் சுவத்துக்காடா இவளோ சண்டை" என நம்மை யோசிக்க வைக்காமல், யோசிப்பவர்களையும் ஏமாற்றாமல் வேகமான காட்சிகளாலும், சரியான வசனங்களாலும் திருப்தி செய்கிறார் . நிச்சயம் நிச்சயம் அடுத்தடுத்து சில நல்ல படங்களை இவரிடம் எதிர்ப்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.
உலக சினிமா என்பது வேறு ஒன்றும் அல்ல. நமது வாழ்கையையும், நமது மக்களையும் பிரதிபலிக்கும் சினிமாக்கள் தான் என்று இயக்குனர் சீனு ராமசாமி ஒரு பத்திரிக்கையில் சொல்லி இருந்தார். அப்படி பார்த்தால் "மெட்ராஸ்" ஒரு முக்கியமான உலக சினிமா.

கருத்துகள்