ஊரே ஒன்றுகூடி கழுவி ஊற்றிய அஞ்சான் என்கிற ராஜுபாயை கடந்த சனிக்கிழமை பார்க்க நேர்ந்தது.. "ஏன்டா படத்தை பத்தி இவளோ தெரிஞ்ச பிறகும் அத பாத்திருகனா எவளோ தைரியம் இருக்கணும்டா உனக்கு " அப்டின்னு நினைக்குரிங்களா..? வேணாம் வேணாம்னு என் நண்பன் கால்ல விழுந்து கதறுன்னே.. விடாம இழுத்துட்டு போய்ட்டான்... சரி கடவுள் மேல பாரத்த போட்டுட்டு போவோம்னு போய்ட்டு வந்துட்டேன்...
அஞ்சான் படத்தை தியேட்டரில் பார்த்தேன் என்று கூறினாலே கேவலமாக ஒரு பார்வை பார்க்கிறார்கள்.. அந்த அளவிற்கு படம் சமூக வலைதளங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறது... படம் எப்படி இருக்கு என்று என்னிடம் கேட்பவர்களிடம் "சுமாரா இருக்கு " என்று சொன்னால் கூட சண்டைக்கு வருகிறார்கள்.. 20 நிமிடக் காட்சிகளை கத்தரி போட்டுவிட்டதால் படம் பெரிய அளவில் என்னை துன்புறுத்தவில்லை.. ஆனால் படம் பற்றி வந்த எதிர்மறை விமர்சனங்கள் படம் பார்க்க வந்திருந்த அனைவரின் மனோபாவத்தையும் பாதித்திருந்தது என்பதை காண நேர்ந்தது.. எந்த காட்சியில் கலாய்க்கலாம் என்ற எண்ணத்துடனே சிலர் படம் பார்த்தனர் என்பது அவர்கள் அடித்த கமெண்ட்டில் நன்றாக தெரிந்தது.. இது போன்ற மொக்கை படங்கள் எத்தனையோ வந்திருப்பினும் அஞ்சான் மட்டும் இத்தனை கேலிகளுக்கு ஆளாக காரணம் என்ன..?
நிச்சயமாக அஞ்சான் படக்குழுவினர் கொடுத்த மொத்த பில்ட்அப் தான் காரணம்.. படக்குழுவினர் என்று சொல்வதை விட லிங்குசாமி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.. "அஞ்சான் பாத்திங்கனா அப்புறம் நீங்க பாட்சாவ மறந்துடுவிங்க.." "அஞ்சான்ல சூர்யா நடந்து வரதே செம்ம ஸ்டைல்லா இருக்கும்.." என்று படம் பேசும் முன்னே படத்தை பற்றி இவர் பேசியது தான் "டேய்.. இவன் ரொம்ப ஓவரா பேசுறான்டா.. பாரேன் படம் மொக்கையாத் தான் இருக்கும்.." என்று எல்லோரும் பேசிக் கொள்ள செய்து விட்டது.. டீசர்க்கு வெற்றி விழா வைத்ததெல்லாம் "ரொம்ப ஓவரா பண்றாங்களே.." என்ற முணுமுணுப்பை ஏற்படுத்தியது.. "படத்துக்கு யாராவது போறிங்களா.."னு நான் கேட்ட அத்தனை நண்பர்களும் சொல்லிவைத்தார் போல் "ட்ரெய்லர் பாத்தாலே மொக்கையா இருக்கு.. இத வேறப் போய் பாக்கணுமா.." என்று சொன்னார்கள்.. அவர்கள் சொன்னதை போலவே நடந்துவிட்டது...
தமிழ்சினிமா ரசிகர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள்... நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைப் போல் வருடத்தில் எப்போதாவது மட்டுமே நடைபெறுகிறது... மற்ற நாட்களில் இது போன்ற படங்களையே பார்த்துத் தொலைக்க வேண்டி இருக்கிறது.. சரி... புதிதாக கூட கதை வேண்டாம்.. பழையக் கதையாகவே இருந்தாலும் அதை ரசிக்கும் படி சொன்னால் மட்டும் போதும் என்ற நிலைக்கு வந்த பின்பும் விஷ்வா பாய், ராஜுபாய் என்று கட்டம் கட்டிக் கொல்கிறார்கள்...
பலமுறை பார்த்து சலித்த காட்சிகள், அதையும் சுவாரசியம் இல்லாமல் மொக்கை வசனங்கள் கொண்டு சொல்லிய விதம், டப்பிங் படம் பார்ப்பதைப் போன்ற நடிகர்களின் வசன உச்சரிப்பு என்று ஏழரை நாட்டு சனியன் அஞ்சானைப் பிடித்து ஆட்டியிருக்கிறது... யுவனின் இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் விழலுக்கு இரைத்த நீராகிவிட்டது...
அமீர் - ஆதிபகவன், மிஷ்கின் - முகமூடி, மணிரத்னம் - கடல், வரிசையில் இந்த வருடம் லிங்குசாமி - அஞ்சான்.. வந்த எதிர்மறை விமர்சனங்களால் படம் வசூல் ரீதியில் பெரிய பாதிப்படையாமல் போனாலும் தனிப்பட்ட முறையில் சூர்யாவிற்கும், லிங்குசாமிக்கும் அஞ்சான் பெரிய தோல்வி தான்... இதிலிருந்து மீண்டு அனைவரும் விரும்பவில்லை என்றாலும் கேளிக்குல்லாகாத படங்களை இருவரும் தருவார்கள் என்று நம்புவோம்...

கருத்துகள்