நான் வாசித்த நூல் : கம்பா நதி - வண்ண நிலவன்

வண்ணநிலவன் எழுதிய சிறுகதை, நாவல், கட்டுரை என்று எதையும் நான் வாசித்து இல்லை.. ஆனால் அவரது கம்பா நதி, ரெயினிஸ் ஐயர் தெரு, கடல்புரத்தில் போன்ற நாவல்கள் பற்றி சமூக வலைதளங்களில் படித்ததுண்டு.. அதனால் வண்ணநிலவன் எழுத்தினை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தேன்.. ஆகவே தான் எங்கள் ஊர் நூலகத்தில் கம்பா நதி, ரெயினிஸ் ஐயர் தெரு புத்தகங்களை பார்த்ததும் எடுத்துக் கொண்டேன்... 



புத்தகத்தின் முன்னுரையில் "புதுமையான முறையில் கதை சொல்ல வேண்டும் என்ற உந்துதலில் உரையாடலை குறைத்து வர்ணனைகளில் கதையினை நகர்த்திட முயன்றிருக்கிறேன்" என்று கூறியிருந்தார்... இருப்பினும் கதை படிக்க தொடங்கியதும் வர்ணனைகளாகவே நகர்ந்ததும் சற்று ஆயாசமாக இருந்தது... ஆனால் படிக்க படிக்க நல்லதொரு வாசிப்பனுவத்தை ஏற்படுத்தியது இந்த நாவல்.. வட்டார பேச்சு மேலும் நாவலை ரசிக்க வைத்தது... நிறைய கதாபாத்திரங்கள் முதலில் கொஞ்சம் குழப்பின... பின்பு எளிதில் மனதில் பதிந்து கொண்டார்கள்.. ஒரு வேளை எனக்கு தான் அப்படி தோன்றியதோ தெரியவில்லை... 

நாவலில் வந்த வர்னைனைகள் சில என் செயல்கள் சிலவற்றை ஒத்து இருந்தன.. எல்லோரும் அமர்ந்திருக்கும் பேருந்தில் தான் மட்டும் நின்றபடி இருந்ததும் அமர்ந்திருக்கும் பயணிகளின் கண்களை பாராமல் மும்முரமாக எதையோ வெளியே வேடிக்கை பார்ப்பதை போன்று பார்ப்பது, துணைக்கு நிற்ப்பதற்கு இன்னொருவன் ஏறியதும் தைரியமாக பயணிகளை எதிர் கொள்வது, இந்த ரோட்டை கடப்பதற்குள் எதிரே ஒரு லாரி வந்தால் நான் நினைப்பது நடந்து விடும் என்று சிறுப்பிள்ளை தனமாக நம்புவது, அப்படி லாரி வராமல் போனதும் எதற்காக அப்படி நினைத்துக் கொண்டோம் என்று தன்னை தானே நொந்து கொள்வது என்று அழகாக கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்...

நாவல் ஒரு சிறுகதைப் போன்று முடிந்தாலும் ரசிக்கும் படியாகவே இருந்தது... வாய்ப்பு கிடைத்தால் படித்துப் பாருங்கள்...

கருத்துகள்