கடந்த இரண்டு நாட்களாக சோக முடிவுகள் கொண்ட பருத்தி வீரன், பொற்காலம், போன்ற திரைப்படங்களை தொலைக்காட்சியில் பார்த்து நொந்து கிடந்த மனதிற்கு படம் முழுவதும் ஒரு வித பாஸிடிவ் எனர்ஜியை பரவ விட்டிருந்த "பண்ணையாரும் பத்மினியும்" ஒரு புத்துணர்வு கொடுத்தது. கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அனைவரின் பாராட்டு பெற்ற படம் குறும்படமே இந்த முழுநீள திரைப்படம். ஆனால் அந்த குறும்படம் தான் இது என்று கூற முடியாத அளவிற்கு புது கதாபாத்திரங்கள் சேர்த்து அருமையான திரைக்கதையால் ரசிக்க வைக்கிறார் இயக்குனர் S.U.அருண்குமார்.
பண்ணையாராக ஜெயபிரகாஷ் வெளுத்து வாங்குறார். எனக்கு மிகவும் பிடித்த நடிகர். மிகையில்லாத நடிப்பால் மனம் நிறைகிறார். இவரை விட பொருத்தமாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க யாருமில்லை என்று நினைக்க வைக்கிறார். அவர் மட்டுமல்ல. படத்தில் உள்ள அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு தங்கள் நடிப்பின் மூலம் உயிரூட்டி உள்ளனர். விஜய்சேதுபதி அறிமுக காட்சி மட்டும் மாஸ் ஹீரோவுக்கான என்ட்ரி. ஆனால் அதையும் நகைச்சுவையாய் மாற்றி சிரிக்க வைக்கிறார்கள். பீடை என்ற கதாபாத்திரத்தில் வரும் பாலா வரும் அத்தனை காட்சியிலும் சிரிக்க வைத்து செல்கிறார்.
படத்தின் உயிர்நாடியாக வரும் பத்மினி கார். ஒரு கதாபாத்திரமாகவே படம் பார்க்கும் ரசிகனின் மனதில் பதிந்து விடுகிறது. பால்ய வயதில் நாம் ஆசைப்பட்டு கிடைக்காதவை என்றும் வடுவாகவே நம் மனதில் வாழும் என்பதை "அட்டக்கத்தி " தினேஷ் கதாபாத்திரத்தின் மூலம் உணர வைக்கிறார்கள். இரண்டரை மணி நேரம் ஒரு கிராமத்திற்குள் வாழ்ந்து விட்டு வந்த உணர்வு படம் முடிந்து வெளியில் வரும் பொழுது மனதினை ஆக்கிரமித்திருந்தது. வன்மம், குரோதம், ரத்தம், சத்தம், அரிவாள் என்று ஏதுமில்லாத வெள்ளந்தி மனிதர்கள் வாழும் "பண்ணையாரும் பத்மினியும்" நிறைவான படம்.
கோடிகளை கொட்டி குப்பைகள் தரும் இயக்குனர்கள் விட சில கோடிகளில் சிறந்த படங்கள் தரும் இது போன்ற இயக்குனர்களே தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த தளத்திற்கு இட்டு செல்வார்கள் என்பது நிச்சயம்.

கருத்துகள்