கொஞ்ச நாட்களாக விமர்சனம் எழுதுகிறேன் என்று இங்கே எதையும் கிறுக்காமல் இருந்தேன்... காரணம் என் விமர்சனங்களுக்கு வந்த விமர்சனங்கள்.. ஒரு படம் நல்லா இருக்குனு எழுதினா
"ஏன்டா டேய்.. அது ஒரு படம்.. அத புடிச்சிருக்குன்னு வேற எழுதுறியா...?" என்று என் நண்பர் கூட்டம் சண்டைக்கு வந்தது... சரி என்று "படம் நல்லாவே இல்ல மொக்கப் படம்" அப்டின்னு எழுதினா,"டேய்.. அந்த படத்துக்கு என்னடா குறைச்சல்.. அதப் போய் நல்லா இல்லனு எழுதியிருக்க.."
என்று மீண்டும் சண்டைக்கு வந்தது அதே நண்பர் கூட்டம்.. அடப் போங்கடான்னு அதான் கொஞ்ச நாள் சும்மா இருந்தேன்... ஆனா
" நீ மறுபடியும் அதே பழைய பன்னீர் செல்வமா வரணும்.."
அப்டின்னு சத்ரியன் பட வில்லன்
மாதிரி என் நண்பன் ஒருத்தன்
"மச்சான்.. நீ கண்டிப்பா விமர்சனம் எழுதுற.."னு அன்புக் கட்டளை போட்டான்... நான் எழுதுறத படிக்குறதுக்கும் ஒரு வாசகன் இருக்கானேனு ஆனந்தக் கண்ணீரே வந்துடிச்சி... அதான் வட்டிக்கு கடன் வாங்கி
"சிங்கம் 2" படத்த பாத்துட்டு விமர்சனம் எழுதுலாம்னு வந்துட்டேன்... விமர்சனம் படிச்சிட்டு ஏதும் பாராட்டனும்னு நினைச்சா என்னையும் என் நண்பனையும் சேர்த்து பாராட்டுங்க... திட்டணும்னு தோனுச்சினா என் நண்பன மட்டும் திட்டுங்க...
சிங்கம் 2 படத்தின் டீசெரில் சூர்யா அடிக்கடி டிவியில் வந்து "வாங்கல..." என்பதும் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டே கார் கண்ணாடியை உடைப்பதுமாய் கடந்த ஒன்றரை மாதமாகவே அலப்பறை செய்துக் கொண்டிருந்தார்... அந்த விளம்பரங்களைப் பார்த்தே நண்பர்கள் பயந்தார்கள் படத்தைப் பார்க்க... தமிழ் சினிமாவில் வந்த இரண்டாம் பாகத் திரைப்படங்களின் படுதோல்வியே இந்த படத்தின் மீதும் ஒரு வித நம்பிக்கையின்மையை ஏற்ப்படுத்தியிருந்தது... ஆனால் முதல் பாகமோ இரண்டாம் பாகமோ கதையும் காட்சி அமைப்பும் பலமாக இருக்கும் பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்பதை சிங்கம் 2 நிரூபித்திருக்கிறது... சிங்கம் 2 படத்தின் கதை, சிங்கம் 1 படத்தின் இறுதியிலேயே சொல்லப்பட்டது தான்.. போலீஸ் வேலையை ராஜினாமா செய்வதைப் போல் செய்து விட்டு தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் ஆயுதக் கடத்தல் ஏதும் நடக்கிறதா என்று ஒரு பள்ளியில் என்சிசி மாஸ்டர் வேலை செய்து கொண்டே கண்காணித்து வருகிறார் துரைசிங்கம் சூர்யா... ஆனால் ஆயுதக் கடத்தல் ஏதும் நடக்கவில்லை பதிலாக போதைப் பொருள் கடத்தல் நடக்கிறது என்று கண்டுப்பிடிக்கிறார்... அந்த போதைப் பொருளை கடத்துவது ஊருக்குள் எதிரிகளைப் போல் நடித்து வரும் ரகுமான், முகேஷ் ரிஷி இருவரும்... இவர்களுக்கு ஹோல் சேல் சப்ளையர் இன்டர்நேஷனல் டிரக் டீலேர் டென்னி சபானி... இவர்களை எப்படிக் கையும் களவுமாக பிடித்து சட்டத்தின் முன் துரை சிங்கம் நிறுத்துகிறார் என்பதே சிங்கம் 2...
ஹரியின் திரைக்கதைக்கு உயிர்
கொடுத்திருக்கிறது சூர்யாவின் நடிப்பு... காட்சிக்கு காட்சி சூர்யா விளையாடி
இருக்கிறார்... சண்டை, நடனம், செண்டிமெண்ட்
என்று எல்லா ஏரியாவிலும் சூர்யா செம பிட்....என்ன எல்லாக் காட்சிகளிலும் பல்லைக்
கடித்துக் கொண்டே பேசுவதும், ஹைபிட்சில் கத்துவதும் என்று சில
இடங்களில் இம்சை செய்கிறார்...
சந்தானம் செம பார்மில் இருக்கிறார்...
அதனால் வழக்கம் போல இதிலும் ரசிக்க முடிகிறது... விவேக் முதல் பாகத்தில் சிங்கிள்
காமெடியன் என்பதால் காட்சிகள் அதிகம்... இதில் சிரிப்புக்கு ஏற்கனவே சந்தானம் இருப்பதால் விவேக்கை வைத்து காமெடி செய்கிறேன்
என்று நல்ல வேலை எந்த காமெடியும் செய்யவில்லை... அனுஷ்காவிடம் முதல் பாகத்தில்
இருந்த இளமையும் துறுதுறுப்பும் மிஸ்ஸிங்... காரணம் ஹன்சிகாவா என்று தெரியவில்லை...
பாடல் காட்சிகளுக்கு லீடு கொடுக்க மட்டுமே அனுஷ்கா உதவி இருக்கிறார்...
சிங்கம் 1ல் பிரகாஷ் ராஜை மட்டுமே வேட்டையாடிய சூர்யா இதில் ரகுமான், முகேஷ் ரிஷி,
வெளிநாட்டு
வில்லன் டென்னி சபானி என்று மூன்று பேரை வேட்டை ஆடுகிறார்... வில்லன் எவளோ பெரிய
ஆளா இருந்தாலும் ஹீரோ முன்னாடி சும்மா தூசு அப்டிங்கரதால டென்னிக்கு முதலில்
கொடுக்கப்படும் பில்டப் எல்லாம் கிளைமாக்ஸில் சூர்யா டென்னியை தூக்கி போட்டு
எத்தும் போது சுக்குநூறாகப் போகிறது...
சண்டைக் காட்சிகள் படத்திற்கு
இன்னுமொரு பலம்... குறிப்பாக மழையில் நடக்கும் சண்டைக் காட்சி... ஒளிப்பதிவும்
அந்த சண்டை காட்சியில் பயங்கரம்... சிங்கம் 2வில் பிடித்த இன்னொரு விஷயம்
ஹன்சிகா... சூர்யாவை காதலிக்குறேன் என்று அவரை சுற்றி
சுற்றி வரும் காட்சிகளெல்லாம் "ரொம்ப நல்ல புள்ளையா இருக்காளே.. ப்ளீஸ் ஏத்துக்குங்க
சிங்கம்" என்று கெஞ்ச தோன்றுகிறது.. விவேக்கிடம் பலித்துக் காட்டும்
காட்சியில் "வாவ் " என்று எனக்குள்ளே ஒரு குரல் கேட்டது...
படத்தில் வரும் எல்லாக்
கதாப்பாத்திரங்களும் ஒரு விதப் பதட்டத்தோடே திரிகிறார்கள்... குறிப்பாக "நான்
கடவுள்" ராஜேந்திரன் ... ராஜேந்திரன் கொடுத்தக் காசுக்கு
அதிகமாகவே கூவி இருக்கிறார்... அவர் படபடப்போடு வரும் காட்சியெல்லாம்
நானும் என் நண்பனும் சந்தானத்திற்கு சிரிப்பதை விட அதிகமாகவே சிரித்துக்
கொண்டிருந்தோம்...
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை சுமார்
ரகமே... பாடல்கள் பெரிதாக ரசிக்கும் படி இல்லை.. பின்னணி இசை இம்சை... படத்தில்
நடிகர்கள் கத்துவது பத்தாது என்று இவர் வேறு காதுக்குள் குச்சியை விட்டு
ஆட்டுகிறார்.... ப்ரியனின் ஒளிப்பதிவு நன்று... டாப் ஆங்கிள் காட்சிகள் நன்றாகப்
படமாக்கப்பட்டிருக்கின்றன... ஹரியின் திரைப்படங்களில் இதுவரை இல்லாத அளவு
காட்சிகள் ஸ்டைலிஷாக இருந்தன.. குறிப்பாக சவுத் ஆப்ரிக்கா சேசிங் காட்சிகள்....
கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு
காட்சியை நகர்த்தி சென்று விடுவதும் ஒரு வசனத்தை கவனித்து அதன் அர்த்தத்தைப் புரிந்துக்
கொள்வதற்குள் அடுத்த வசனத்தை முடித்து விடுவதும் ஹரியின் ஸ்டைல்... படம் முடிந்து
வெளியே வந்த பிறகு தான் "ஆமா இந்த
படத்தோட கதை என்ன...?" என்று யோசிப்போம்... இந்த படமும் அதற்க்கு விதிவிலக்கல்ல... ஜெட் வேகத்தில்
நகரும் காட்சிகள் ஒரே நிமிடத்தில் ஒரு பக்க வசனம்
என்று அதே ஹரி டெம்ப்ளட்... இருப்பினும் படத்தை ரசிக்க முடிகிறது..
பொதுவாக நல்ல தரமான கதை அம்சத்துடன்
வரும் வரும் திரைப்படங்களை நல்ல
படம் என்று தலையில் தூக்கி
வைத்துக் கொண்டாடுவதும் மற்ற திரைப்படங்களை
அரைத்த மாவையே அரைக்கிறார்கள், குப்பை என்றும் விமர்சனங்கள் சாடுவது
உண்டு... ஆனால் என்னைப் பொறுத்த வரை
காசுக் கொடுத்து படம் பார்க்க வரும்
ரசிகனையும் பணம் போட்டு படம்
தயாரித்த தயாரிப்பாளரையும் திருப்திப்படுத்தும்
அனைத்து திரைப்படங்களும் நல்ல
திரைப்படங்களே... அந்த வகையில் "சிங்கம் 2
"
நல்ல படம்...

கருத்துகள்