விபத்துக்கள் இங்கே சகஜம்..!

விபத்துகள் என்பவை தவிர்க்கப்பட முடியாதவை தான். ஆனால் விபத்துகள் நடப்பதற்க்கான சாத்தியங்களை நாமே ஏற்படுத்திடக்கூடாது. இரண்டு நாட்களுக்கு முன் சென்னை கந்தன்சாவடி அருகே ஒரு விபத்து. பேருந்து படிக்கட்டில் நின்று  பயணம் செய்த 4 மாணவர்களின் மீது பேருந்துக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மோதியதில் ஒரு மாணவன் உயிரிழந்தான். மீதி 3 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். 10 நாட்க்களுக்கு ஒருவர் சென்னையில் விபத்தின் மூலம் உயிரிழக்கிறார் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இந்த விபத்தில் யார் மீது தவறு. பின்னால் நகரும் லாரியின் மீது மோதிவிடாமல் தடுக்கத் தவறிய பேருந்து ஓட்டுனர் மீதா..? பின்னால் நின்ற பேருந்தை கவனிக்காமல் லாரியை இயக்கிய லாரி ஓட்டுனர் மீதா...? அல்லது படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த மாணவர்கள் மீதா..? 70 பேர் பயணம் செய்யக்கூடிய பேருந்தில் 120 பேரை ஏற்றிய நடத்துனர் மீதா..?



குறிப்பிட்ட சில ஏரியாக்களில் பேருந்து போக்குவரத்து குறைவாக இருப்பதே இது போன்ற ஓவர் லோடு பயணங்களுக்கு காரணம். கூட்ட நெரிசலால் சிலர் படிகளில் நின்று பயணம் செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். சென்னையை விட கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் தொகை குறைவாக உள்ள பெங்களூரில் ஏறக்குறைய 5000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சென்னையில் வெறும் 3607 பேருந்துகள் மட்டுமே இயக்கபடுகின்றன. பேருந்து கட்டணத்தை மட்டுமே ஏற்றிக்கொண்ட அரசாங்கம் பேருந்துகளின் எண்ணிக்கையை ஏற்ற தவறிவிட்டது. படியில் பயணம் செய்து மரணம் தேடிக்கொள்ளும் வேலையை சில மாணவர்கள் தானாகவே செய்கிறார்கள். பேருந்து நிற்கும் பொழுது ஏறமாட்டார்கள். பேருந்து கிளம்பியதும் ஓடிப்போய் படியில் ஏறிக்கொள்வதை ஒரு ஹீரோயிசம் என்றே எண்ணிக்கொள்கிறார்கள் . பருவத்தில் இதுபோன்று மாணவர்கள் செய்வது சகஜம் தான். அதற்காக பாதுகாப்பை மறந்துவிடலாமா..? 

இது போன்ற விபத்துகளை அரசாங்கம் கொண்டுகொள்ளமலா இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம். கண்டுகொண்டுதான் இருக்கிறது. இரண்டு நாட்க்களுக்கு முன் நடந்த இந்த விபத்தினால் படியில் பயணம் செய்யும் பயணிகளை பிடித்து அபராதம் வசூலிக்கிறார்கள். இதற்காவே முக்கியமான பேருந்து நிலையங்களில் 3 போலீசார்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கல்லூரிகளும் பள்ளிகளும் மாணவர்களுக்கு தனியாக பேருந்து இயக்கம் படி அரசாங்கத்தை கூறி இருக்கின்றன. மகளிர் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாய் அறிவிக்கபட்டிருக்கின்றன. 

இதற்க்கு முன்பும் இது போன்று நிறைய விபத்துகள் நடந்திருக்கின்றன. அரசாங்கம் அப்போது இது போன்ற முன்னேர்ப்பாடுகளை செய்யவில்லையா என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். முன்னேர்ப்பாடுகளை திட்டமிடும் அரசாங்கம் அதை செயல்படுத்தும் விதத்தில் தோல்வி பெறுவதே இது போன்ற விபத்துகள் தொடர்வதற்கு காரணம். பள்ளி பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து ஒரு சிறுமி உயிரிழந்ததும் எல்லா பள்ளிகளின் பேருந்துகளும் சரியான நிலையில் இருக்கிறதா என்று ஆராய்ந்தன. இன்னும் இந்த சோதனை நடைமுறையில் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. இதுபோலவே எல்லாவற்றிலும் நடக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது இங்கு அந்த விபத்தின் வீரியம் மக்களிடையே குறையும் வரை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இதே போக்கு இந்த முறையும் நீடிக்குமே ஆனால் இது போன்ற விபத்துகளும் இங்கே தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

கருத்துகள்

Alex Ezhilarasan இவ்வாறு கூறியுள்ளார்…
Now you concentrating on social activities too. You are grooming day by day.