"பழையன கழிதலும் புதியன புகுதலும்" எல்லா துறைகளிலும் வரவேற்க்கவேண்டிய ஒன்று. அதற்காக புகழ் பெற்ற பழைய ஒன்றை புதுசாக்குறேன் என்று கொச்சைப்படுத்தக் கூடாதல்லவா..? அதை தான் இன்று செய்து கொண்டிருக்கிறது நம் தமிழ் சினிமா உலகம்..!!
சூடாய் உணவு சமைத்து சாப்பிடும் போது இருக்கும் சுவைக்கும் பழைய உணவை சூடுபடுத்தி சாப்பிடும் போது இருக்கும் சுவைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பாடல்களில் ஆரம்பித்த இந்த ரீமேக் கலாச்சாரம் இன்று படங்களையும் ரீமேக் செய்ய உக்குவித்திருக்கிறது. பழைய படங்களின் தலைப்பை கூட விடமாட்டேன் என்கிறார்கள் நம்மவர்கள்.
வித்தியாசமான கதையமைப்பில் ஒரு திரைப்படம் வந்து வெற்றி அடைந்தால் அடுத்த சில வருடங்களுக்கு அதே போன்ற கதையமைப்பில் பல கோடிகளை விரயம் செய்து குப்பை படங்களாய் எடுத்துத் தள்ளி விடுவார்கள் நம் தமிழ் திரை உலகினர். நான் இதற்க்கு முந்தைய பதிவில் கூறியது போல திரையில் சொல்ல படாத நம் கதைகள் இன்னும் எத்தனையோ உள்ளன. ( அதுக்காக "உங்கிட்ட கதை இருந்த சொல்லுனு" கேக்காதிங்க...!)
ரீமேக் கலாச்சாரத்தின் ஆரம்பம் நன்றாகவே அமைந்தது. ரீமேக் பாடல்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவு தான் படங்களையும் ரீமேக் செய்ய திரைத்துறையினரை துண்டியது. ரீமேக் பாடல்களில் இப்பொழுதெல்லாம் டப்பாக்கள் உருளும் சத்தங்கள் மட்டுமே கேட்கின்றன. ஸ்ரீகாந்த் தேவா என்னும் இசை சக்கரவர்த்தி இசை கருவிகளால் பழைய பாடல்களுக்கு சமாதி எழுப்பி வருகிறார். ரீமேக் பாடல்கள் இப்படி என்றால் ரீமேக் படங்கள் இன்னும் மோசம்.
முதல் ரீமேக் படங்களான "நான் அவன் இல்லை" "பில்லா" படங்களின் வெற்றியே ரீமேக் மோகத்தை இன்னும் அதிகப்படுத்தியது. ஆனால் இரண்டும் எல்லை இல்லா கவர்ச்சியாலும் stylish making ஆகியவற்றால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதை மறந்து விட்டு ரீமேக் செய்கிறேன் என்று மொத்த கதையையும் மாற்றி துவைத்து தும்சம் செய்கிறார்கள் அந்த வெற்றி படங்களை. மாப்பிளை, முரட்டுக் காளை என்று காமெடி லிஸ்ட் இல் சேர்வதற்கு நாம் இன்றும் ரசித்து பார்க்கும் வெள்ளி விழா கண்ட பல திரைப்படங்கள் வரிசையில் காத்திருக்கின்றன.
தமிழ் சினிமா உலகில் தலை விரித்தாடும் கதை பஞ்சத்திற்கு என்று தான் நம் படைப்பாளிகள் ஜடை பின்னி பூ வைப்பார்கள் என்று பார்ப்போம்..
அதுவரைக்கும் இந்த ரீமேக் டார்ச்சரை பொறுத்துக் கொள்ளுங்கள் மக்களே..!


கருத்துகள்