டிராகன் பட அறிவிப்பு வெளியான போதும் படம் வெளியான போதும் எனக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை. உண்மையில் cringe படமாக இருக்கும் என்றே தோன்றியது. டிரைலர் பார்த்தபோது கூட அப்படியே உணர்ந்தேன். "48 அரியர் வைக்குறதெல்லாம் பஞ்ச் டயலாக் மாதிரி பேசிட்டு இருக்கானுங்களே" என்று தான் நினைத்தேன். ஆனால் படம் என் எண்ணத்தை முற்றிலும் மாற்றிவிட்டது.
12ஆம் வகுப்பில் 96% மதிப்பெண்கள் பெற்ற D.ராகவன் என்ற மாணவன், தான் ஒரு தலையாய் காதலித்த பெண் "பொண்ணுங்களுக்கு badboys தான் புடிக்கும்" எனக் கூறி அவனது காதலை நிராகரித்து விட D.ராகவன் என்ற பெயரை Dragon என மாற்றிக் கொண்டு கல்லூரியில் தறுதலையாய் சுற்றி தவறுகளில் இருந்து பாடம் கற்று கல்வி தான் நம்மை உயர்த்தும் என உணர்வதே "டிராகன்" படத்தின் கதை.
பிரதீப் ரங்கநாதன் நிச்சயம் ஒரு ஆச்சர்யம் தான். "என்னம்மா நடிக்குறான்ப்பா" என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அவருடைய உருவத்தை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் திரையரங்கில் அவரையும் அவருடைய நடிப்பையும் ஒவ்வொருவரும் கைதட்டி கொண்டாடுகிறார்கள். இன்டெர்வியூ காட்சியும், காலேஜ் ஹாஸ்டலில் 48 அரியரை எப்படி கிளியர் செய்ய போகிறோம் என்று தவித்து கட்டிய துண்டோடு மிஷ்கினை தேடி ஓடும் காட்சியும் பட்டாசு. மிஷ்கின் நடிப்பில் அசத்தியிருக்கிறார். மாவீரன் படத்திற்கு பிறகு மிஷ்கினின் நடிப்பு திறமைக்கு சரியான தீனி. பிரதீப்பின் அப்பாவாக மரியம் ஜார்ஜ். சின்ன கதாபாத்திரத்தில் கூட ஜொலித்து விடுபவர். மகன் எதை சொன்னாலும் நம்பும் எதை செய்தாலும் கோவப்படாத அப்பாவி அப்பா கதாபாத்திரத்தில் நன்றாக செய்திருக்கிறார்.
பிரதீப் ஹீரோவாக ஜெயித்திருக்கும் இரண்டாவது படம். கதை தேர்வில் இதே போன்று கவனமாக இருந்தால் ஏற்கனவே முன்னணியில் இருக்கும் கதாநாயகர்களை அசால்ட்டாக அடித்து தூக்கிவிட்டு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
கல்வியின் அவசியத்தை உணராமல் பெற்றோரின் உழைப்பில் பைக், மொபைல், இன்ஸ்டா ரீல்ஸ், கேர்ள் பிரென்ட், பெஸ்ட்டீ என்று சுற்றிக் கொண்டிருக்கும் அத்தனை 2கே கிட்ஸ் பிள்ளைகள் அவர்களை விட வயதில் அனுபவத்தில் மூத்தவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் "பூமர்" என்று கடந்து விடுவார்கள். ஆனால் பிரதீப் போன்ற அவர்கள் வயதையொத்த நடிகர்களின் படங்கள் இப்படியொரு கதையம்சத்துடன் வருகையில் நிச்சயம் அவர்களின் எதிர்காலம் குறித்து கொஞ்சமேனும் யோசிப்பார்கள் என்றே தோன்றுகிறது.
Audio Format:


கருத்துகள்