உறியடி 2

உறியடி முதல் பாகம் எனக்கு பிடித்தற்கான முதல் காரணம் அதன் சண்டை காட்சிகள். முக்கியமாக இடைவேளையின் போது வரும் தாபா சண்டைக்காட்சி. அந்த காட்சி எடுக்கப்பட்டிருந்த விதமும், அதற்கு கொடுக்கப்பட்டிருந்த "தத்தகிட தத்தகிட" பின்னணி இசையும் "அட" போட வைத்தது. ஆனால் அந்த படம் பேச முனைந்தது சாதியை வைத்து நடந்து கொண்டிருக்கும் அரசியல் விளையாட்டு பற்றியது. சுவாரசியமான காட்சிகளும், சண்டை காட்சிகளும், குறைவான அளவே அமைந்த படத்தின் நீளமும் உறியடி முதல் பாகத்தின் பலம். 


இப்போது உறியடி 2. இது முதல் பாகத்தின் Proper sequel அல்ல. ஆனால் மக்கள் பிரச்சனை குறித்தும், சாதியை வைத்தும் மக்களின் அறியாமையை வைத்தும் நடக்கும் அரசியல் குறித்தும், அரசும் அரசு அதிகாரத்தில் இருப்பவர்களும் முதலாளிகளின் கைகளில் எப்படி பொம்மைகளாக ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் பேசியிருக்கிறது உறியடி 2.

செங்கதிர்மலை என்ற சிறிய ஊரில் அமைந்திருக்கும் உரங்கள் தயாரிக்கும் ரசாயன ஆலையில் வேலைக்கு சேர்கிறார்கள் என்ஜினீரிங் முடித்த கதாநாயகன் மற்றும் அவரது நண்பர்கள். MIC எனப்படும் விஷ வாயு கசிந்து முதலில் ஒருவர் இறந்து போக அது தற்கொலை என முடிக்கப்படுகிறது. மீண்டும் அதே போன்ற ரசாயன கசிவு. கதாநாயகனின் நண்பனும் இன்னும் சிலரும் இறந்து போக அதை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் உள்ளூர் சாதிக்கட்சி தலைவர். சம்பந்தப்பட்ட கம்பெனியிடமிருந்து பெட்டி நிறைய பணம் பெற்றுக் கொண்டு மூடிய ஆலையை மீண்டும் திறக்க உதவுகிறார். இம்முறை பெரிய அளவில் ரசாயன கசிவு ஏற்பட்டு அவ்வூரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இறந்து போக, பலர் கண்பார்வை இழக்க, கருவில் இருக்கும் குழந்தைகளும் பாதித்திட, போராட்டம் தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்ததா? இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? என்பது தான் உறியடி 2-ன் மீதி.

மத்திய பிரதேசம், போபாலில் 1984-ம் வருடம் நிகழ்ந்த விஷ வாயு கசிவினை ஆதாரமாக படம்  எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. Union Carbide India Limited என்ற அந்த ஆலையில் இருந்து இரவில் வெளியேறிய விஷ வாயு பலரை இரவோடு இரவாக கொன்றழித்தது. பல வருடங்கள் நிகழ்ந்த அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிட சென்ற வருடம் உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த கம்பெனியின் பொறுப்பில் இருந்த வெளிநாட்டு அதிகாரிக்கு இன்று வரை எந்த தண்டனையும் அளிக்கப்படவில்லை. 



இந்த விஷ வாயு கசிவு விபத்தினால் இறந்து போன இந்த குழந்தையின் புகைப்படம், இத்தனை அலட்சியமாக இருந்த அரசின் மீதும், அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை அளிக்க முடியாத அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் மீதும் காறி உமிழச் செய்திடும். 

சரி. படம் எப்படி? படம் பேச முனைந்த களம் பாராட்டுக்குரியது. காற்றினை மாசுபடுத்தும் ஆலையை மூடச் செய்திடும் படி போராடும் மக்கள், அதை அரசு அதிகாரம் கொண்டு ஒடுக்கிடப் பார்க்கும் முதலாளிகள், அதை அரசியலாக்கும் தலைவர்கள் என்று சென்ற வருடம் நிகழ்ந்த, நாம் மறக்க முடியாத, மறக்க கூடாத தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தினை நினைவுறுத்தியது. போராட்டக்காரர்களை போலீஸ் தாக்கும் காட்சிகளில் கண்கள் கலங்கியது. ஆனால் ஒரு திரைப்படம் என்ற வடிவத்தில் உறியடி 2 அத்தனை ஈர்ப்பாக இல்லை. படம் முழுக்க செயற்கைத்தனம் துருத்தியபடியே இருந்தது. நடிகர்களின் body language, dialogue delivery, ஒரு காட்சி தொடங்கும் விதம், வசனங்களை கேட்க முடியாதபடி உறுத்திய பின்னணி இசை, என்று அத்தனையும் "நான் ஒரு படம் பாத்துட்டு இருக்கேன்" என்று நினைவுறுத்திக் கொண்டே இருந்தன. அதனாலேயே ஒரு Intense drama-வாக படம் என்னை ஈர்க்கவில்லை. ட்ரைலரில் இருந்த வசனங்களைத் தவிர குறிப்பிட்டு சொல்லும்படியான வீரியமான வசனங்கள் இல்லை. ஆனால் நிஜ உலகில் மக்களுக்கு கிடைக்காத நீதி நிழல் உலகில் கிடைக்கும் படி படத்தினை முடித்திருப்பது கொஞ்சமல்ல நிறையவே ஆறுதலாக இருந்தது.

படம் முடிந்து வெளியே வரும் போது எனக்குள் எழுந்த கேள்வி, தன் சுய லாபத்துக்காக மக்களையும், மக்களின் நலனையும் பெரும் முதலாளிகளிடம் அடகு வைக்கும் அரசையும் அரசு அதிகாரத்தில் இருப்பவர்களையும் எப்படி ஒழிப்பது? 

கருத்துகள்