LKG

வார்டு கவுன்சிலராக இருக்கும் லால்குடி கருப்பையா காந்தி தமிழகத்தின் முதல்வராவது  தான் LKG. 

இந்த ஒரு வரிக்கதைக்கு 2016-ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அட்மிட் ஆனதிலிருந்து, இப்போது வரை தமிழகத்தில் நடந்த, நடக்கும் அத்தனை அரசியல் அவல நகைச்சுவைகளையும் பட்டியலிட்டு மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறார் RJ பாலாஜி. கல்லூரி ஆசிரியை நிர்மலா தேவி, தன் சம்பந்திக்காக 5 வழி சாலை, 8 வழி சாலை என கிடைக்கும் இடமெல்லாம் ரோடு போட காண்ட்ராக்ட் பிறப்பிக்கும் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடியார், தெர்மாக்கோல் தெய்வம் செல்லூர் ராஜ், கட்சியின் கொள்கை குறித்து கேட்டதும் ஒரு நிமிஷம் தலை சுத்திடிச்சி என புலம்பிய ரஜினி, 100 நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தியதும் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன், குழந்தைக்கு வீர தமிழச்சியின் பெயர் வைப்பதாக கூறி ஜுலீ என பெயர் சூட்டுவது என ட்ரெண்டிங்கில் வந்த அத்தனை நிகழ்வுகளும் பகடியாக்கப்பட்டிருக்கிறது. சரி இதையெல்லாம் ட்ரைலர்-ல் பார்த்தாகிவிட்டது. ஒரு முழு திரைப்படமாக LKG எப்படி?



தோற்றுப் போன ஒரு அரசியல்வாதியின் மகனான லால்குடியின் ஆறாவது வார்டு கவுன்சிலர் கருப்பையா காந்தியின் தினசரி நிகழ்வுகள்ஆரம்ப காட்சிகளில் காட்டப்படுகின்றன. தன் அப்பாவை போல் ஆகிவிடக் கூடாது என்பதற்காக பணம், பதவி இரண்டையும் எப்படியேனும் சீக்கிரம் சம்பாதித்திட வேண்டும் என்று LKG செய்யும் செயல்களில் நம்பகத்தன்மை பெரிதாக இல்லை. லால்குடியில் இவர் ஒருவரே என்பது போன்ற காட்சிகளில் வழக்கமான ஒரு ஹீரோ மெட்டீரியலாக பாலாஜியை பார்ப்பது கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. சில காட்சிகளில் மூச்சி விடாமல் பேசிவிட்டு ஸ்லோ மோஷனில் அவர் BGM-மோடு திரும்பி நடக்க "இவருமா" என தான் தோன்றியது. பிரியா ஆனந்த் இவருக்கு ட்ரைனிங் கொடுக்கும் காட்சிகள் ஆரம்பத்தில் ரசிக்கும் விதமாக இருந்தாலும் போக போக கொட்டாவி விட வைக்கிறது. படத்தில் மயில்சாமி ஒரு காட்சியில் சொல்வார். "நீ வேற என்னம்மா லூசு மாதிரி அவன் சொல்றதுக்கெல்லாம் சூப்பர் சூப்பர் சொல்லிட்டு இருக்க" என்று. அதே வசனம் தான் எனக்கும் தோன்றியது. 

ராமராஜ் பாண்டியனாக வரும் ஜே.கே.ரித்தீஷ். கதாபாத்திரத்திற்கு இடைவேளைக்கு முன்பு ஏக பில்டப் கொடுப்பட்டது. ஆனால் இடைவேளைக்கு பின்பு பழைய கதாநாயகன் ராமராஜனாக சித்தரித்து காமெடி செய்த போது கே.ரித்தீஷ் கதாபாத்திரத்தை சீரியஸாக பார்ப்பதா இல்லை கேலியாக பார்ப்பதா என்று தெரியாமல் குழப்பம் வந்துவிட்டது. அதனாலேயே ராமராஜ் பாண்டியனை ஜெயிப்பதற்கு என்ன செய்வதென தெரியாமல் சீரியஸ் மோடில் LKG திணறும் போது நமக்கு எந்த தவிப்பும் ஏற்படுவதில்லை. கதையின் முக்கியமான, இரண்டாம் பாதியின் கதை மொத்தத்தையும் நகர்த்தி செல்லும் கதாபாத்திரம் அது தான் எனும் போது ஏன் ஜே.கே.ரித்தீஷ்ஷை போட வேண்டும், பிறகு ஏன் அந்த கதாபாத்திரத்தை இப்படி பகடி செய்ய வேண்டும்? மயில்சாமி கதாபாத்திரம் பேசும் வசனங்களும், அவரது நடிப்பும் மட்டுமே நாடகத்தனம் இல்லாமல் படத்தில் வந்த கதாபாத்திரம். நாஞ்சில் சம்பத்தை  நடிகராக குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை.

படத்தின் ஆகப்பெரும் குறையாக என்னை தொந்தரவு செய்த விஷயங்கள் சிலவற்றில் முதலிடம் டப்பிங். பல இடங்களில் ஏதோ டப்பிங் படம் போல் பேசும் வசனத்திற்கும், வாய் அசைப்பிற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. பாலாஜி, ப்ரியா ஆனந்த், மயில்சாமி, நாஞ்சில் சம்பத் என்று எல்லாக் கதாபாத்திரங்களும் இப்படியே பேசுகின்றன. ஷூட்டிங்கில் பேசிய வசனத்தை டப்பிங்கில் இம்ப்ரூவ் செய்து விட்டார்களா என்று தெரியவில்லை. அத்தனை குறைபாடு. இரண்டாவது குறை பாலாஜியின் வசன உச்சரிப்பு. காது கிழியும் அளவிற்கு சிங்கம் சூர்யாவிற்கு போட்டியாக கத்திக் கொண்டே இருக்கிறார். மூன்றாவது வசனங்கள். அரசியல் படம் என்பதால் இஷ்டத்திற்கு எழுதப்பட்ட வசனங்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் பக்கம் பக்கமாக பேசிக் கொண்டே இருக்கின்றன. ப்ரியா ஆனந்த் ஒரு காட்சியில் பேசிக் கொண்டே இருந்த போது "அட போமா" என தோன்றிவிட்டது.

டேட்டா  பிரீ என்பதால் தனக்கு வரும் எந்த விஷயத்தையும் குறித்தான உண்மைத்தன்மை அறியாமல் அதை அப்படியே உண்மையென நம்பி பார்வார்ட் செய்யும் இன்றைய இளைய சமுதாயத்தின்  மீதான கேலி படம் முழுக்க இருக்கிறது. எப்படிப்பட்ட கையறு நிலையில் தமிழக மக்கள் இன்றைய ஆட்சியை சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கிளைமாக்ஸ் காட்சியில் பாலாஜி பேசும் வசனங்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால் அவை எல்லாம் நாம் சமூக வலை தளங்களில் ஏற்கனவே படித்தவை தான். என்றாலும் படத்தில் ஒரு காதாபாத்திரம் பேசும் வசனமாக வரும் போது கொஞ்சம் உரைக்கத் தான் செய்கிறது. ஒரு வார்டு கவுன்சிலர் கூட கோடி கோடியாக அரசியலில் சம்பாதிக்க கிடைக்கும் வாய்ப்புகள், தேர்தலில் ஜெயிக்க கேண்டிடேட்-க்கு கார்போரேட் கொடுக்கும் பயிற்சிகள் என்று பரவலாக மக்கள் அறியாத சில விஷயங்களை அறிமுகம் செய்கிறது படம். MEME-ஆக சமூக வலைத்தளங்களில் வந்த விஷயங்கள், அரசியல் காமெடிகள், ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்கள் செய்யும் தவறுகள் என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டு பேசியிருப்பதை பாராட்டலாம் ஆனால் ஒரு திரைப்படமாக முழுமையான உணர்வை கொடுத்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

ட்ரைலர் கொடுத்த ஹைப்-க்கு படம் இல்லையென்றாலும் அங்கங்கே சிரிக்க வைக்கும் காமெடி, தமிழக அரசியல் சூழல் குறித்து கொஞ்சம் அக்கறையாக பேசியது போன்ற காரணங்களுக்காக ஒரு முறை பார்க்கக் கூடிய படம் தான் LKG. 

கருத்துகள்