காக்கி சட்டை

எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு படத்திலாவது போலீஸாக நடித்து விட வேண்டும் என்ற கனவிருக்கும். காரணம் படம் வெற்றிப் பெற்றால் மாஸ் ஹீரோக்களின் வரிசையில் சேர்ந்து விடலாம் என்பதால். மக்கள் எல்லா ஹீரோக்களையும் போலீஸ் வேடத்தில் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் முதலில் காமெடி படங்கள், காதல் படங்கள், குடும்ப படங்கள் என்று நடித்து மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். பிறகு கொஞ்சம் ஆக்சன் கலந்த படங்கள் நடிக்க வேண்டும். முடிவில் ஒரு போலீஸ் படம். (காமெடி போலீஸ் படங்களை இங்கு சொல்லவில்லை..) இந்த பார்முலா இன்று வரை தொடர்கிறது. இந்த பார்முலாவை கடைபிடித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “காக்கி சட்டை”.


மிமிக்கிரி ஆர்டிஸ்ட் டூ காம்பயர், காம்பயர் டூ நடிகர், என்று வளர்ந்து வந்திருக்கும் சிவா, நடிகர் டூ ஆக்சன் ஹீரோ என்ற அடுத்த தளத்திருக்கு முன்னேற இந்த சட்டையை அணிந்திருக்கிறார். காமெடி ஹீரோவை ஆக்சன் வேடத்தில் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற பயத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அங்கங்கே ஆச்சனை தூவி இந்த சட்டையை தைத்திருக்கிறார்கள். இந்த சட்டை எந்த அளவிற்கு சிவாவிற்கு பொருந்தி இருக்கிறது.

கதை என்று பெரிதாக சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. சமீபகால திரைப்படங்கள் பெரும்பாலானவை கதைகள் கொண்ட திரைப்படங்களாக வருவதில்லை. காட்சிகளை கொண்ட படங்களாவே வருகிறது. வெறும் காமெடி, காதல் காட்சிகள், பாடல்கள் கொண்டே முதல் நாற்பத்தைந்து நிமிடங்களை நகர்த்திவிட்டு நாற்பத்தாறாவது நிமிடத்தில் கதை என்று ஏதோ கதை விடும் மற்ற சிலப் படங்களைப் போலவே இந்த படமும் நகர்கிறது. சரியாக மூன்று பாடல்கள் முடிந்து இடைவேளை விடுவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன் கதை என்று ஆரம்பிக்கிறது. உடல் உறுப்பு திருட்டு தான் படத்தின் கதை. “என்னை அறிந்தால்” படமும் இதே கருவை கொண்டதே. ஆனால் இந்த படத்தை காமெடியாகவே நகர்த்தி செல்கிறார்கள். ஆனால் ரசிக்கும் படி சொல்லவில்லை. இடைவேளையின் போது வரும் மழை சண்டை நன்றாகப் படமாக்கபட்டிருக்கிறது. சிவாவும் நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் சிவா Uncomfortable – ஆக சண்டை செய்வது நன்றாக தெரிந்தது. காமெடி காட்சிகளில் வழக்கமான அதே ரியக்ஸான்ஸ் தான் சிவாவிடம். அது சற்று அலுப்பாகவே இருந்தது. இப்படியே போனால் சிவா, சலித்துப் போய் விடுவார் என்றே தோன்றுகிறது. மிர்ச்சி சிவா, கார்த்தி இருவரும் ஒரே மாதிரியான ரியக்ஸான்ஸ் மூலமே தொடர் தோல்விகளை சந்தித்தார்கள். கார்த்தி, “மெட்ராஸ்” மூலம் மீண்டு விட்டார். ஆனால் மிர்ச்சி சிவா.? சிவகார்த்திகேயன் உஷாரானால் அதை தவிர்க்கலாம்.

ஸ்ரீதிவ்யா பல காட்சிகளில் ஏக மேக்கப். நடிக்கும் வாய்ப்பு என்று பெரிய அளவில் காட்சிகள் இல்லை. “வருத்தப் படாத வாலிபர் சங்கம்” சிவா-ஸ்ரீதிவ்யா காதல் கலந்த காமெடி படம் என்பதால் இவருக்கு காட்சிகளும் அதிகம், நடிக்கும் வாய்ப்பும் அதிகம். இங்கு சிவா ஆக்சன் பக்கம் போய் விட்டதால் பாடல் காட்சிகளுக்கும், சில காதல் காட்சிகளுக்கும் மட்டுமே பயன்பட்டிருக்கிறார். பிரபு, இமான் அண்ணாச்சி, கல்பனா, மயில் சாமி, மனோபாலா என்று நடிகர்கள் சிலர் இருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் விஜய் ராஸ் அமைதியான அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இடைவேளை முடிந்து பத்து நிமிடத்தில் வில்லன், அவரின் கொள்கை, அவரின் பலம் அனைத்தும் நமக்கு தெரிந்து விடுவதால் காட்சிகளில் பெரிய சுவாரசியம் தோன்றவில்லை. மனோபாலாவை வைத்து வில்லனை பிடிக்க திட்டம் இடம் காட்சிகள் எல்லாம் தொன்னூறுகளில் வரவேண்டிய காட்சிகள். அவரை வைத்து காமெடி செய்கிறோம் என்று நிறைய கடுப்ஸ். இதே போன்ற காட்சிகளோடு மனோபாலாவை வைத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் “மாப்பிள்ளை” வேறு வந்தது. மீண்டும் ஏன் அதே போல இங்கே காமெடி காட்சிகள் என்று தெரியவில்லை.

வழக்கமான அனிருத் பாடல்கள். கேட்கவும் பார்க்கவும் நன்றாகவே இருந்தது.
“எதிர் நீச்சல்” படம் எடுத்த இயக்குனர் துரை செந்தில் குமாரின் இரண்டாவது படம் இந்த காக்கி சட்டை. கதையில் புதுமை இல்லாவிடினும் காட்சிகளில் ஏனும் புதிதாக செய்திருக்கலாம். “அதற்குள் இவரிடம் சரக்கு தீர்ந்து விட்டதா என்ன” என்று யோசிக்கத் தோன்றுகிறது பல காட்சிகள்.

சிவாவிற்கு பெண் ரசிகைகளும், குடும்ப ரசிகர்களும் நிறைய என்பதை தியட்டரில் இருந்த கூட்டம் உறுதி செய்தது. சில தரப்பு ரசிகர்களை இந்த காக்கி சட்டை திருப்தி செய்து விடும். சிவாவின் தற்போதைய மார்க்கெட்டும் அவருக்கு இருக்கும் சிறிய ரசிகர்கள் கூட்டமும் இந்த காக்கி சட்டையை வெற்றிப் படமாக்கி விடும் என்பது மட்டும் உறுதி.

கருத்துகள்