லாரி கோவிலை அடைந்த போது வெயில் உச்சத்தில் இருந்தது. மண்டையைப் பிளக்கும் இந்த வெயிலில் “கிடாக்கறி சாப்பிட வரணுமா” என சிலர் சலித்துக் கொண்டனர். அவர்களுக்கு தெரியும் கறியைக் கண்டுவிட்டால் இந்த சங்கடங்கள் எல்லாம் மறந்து போகும் என்பது. இருந்தாலும் சலிப்பாய் உணர்ந்தனர். நா வறண்ட சிலர் அங்கு சைக்கிளில் பெட்டியை வைத்துக் கொண்டு ஐஸ் விற்கும் சிறுவர்களிடம் தஞ்சம் அடைந்தனர். சில பெருசுகள் மரத்தடி ஓரமாக அமர்ந்துகொண்டனர். மல்லிகா தன் இரண்டு வயது மகனை தூக்கி கொண்டு குளிப்பாட்டி வரச் சென்றாள். உடன் வந்த சொந்தங்கள் லாரியில் இருக்கும் சமையல் சமாச்சாரங்களை எடுத்துக் கொண்டார்கள். மல்லிகாவின் பெரிய அண்ணன் கருப்பையா பலி கொடுக்கப் போகும் ஆட்டையும் சேவலையும் லாரியை விட்டு இறக்கி அவர்கள் சமைத்து சாப்பிடுவதற்காக அங்கு வாடைகைக்கு எடுத்த கொட்டகையின் அருகில் இருந்த மரத்தில் கட்டிப் போட்டான்.

மணப்பாறை அருகில் இருக்கும் வீரப்பூர் என்ற சிறு கிராமம் அங்கு வீற்றிருந்த மகாமுனியால் பிரபலமாக விளங்கியது. பல குடும்பங்களுக்கு மகாமுனியார் குலதெய்வம் என்பதால் தன் பிள்ளைகளுக்கு முதல் முடியிறக்கி கிடாவெட்டி சொந்தங்களுக்கு விருந்து வைக்க வீரப்பூர் நோக்கி மக்கள் வந்தவண்ணமிருப்பர். விசேஷ நாட்கள் என்றால் கூட்டம் அலைமோதும். சுற்றிலும் வயலும், மலைக் குன்றுகளும் கொண்ட வீரப்பூர் மக்களுக்கு கோவில் நல்லதொரு வியாபார வாசலைத் திறந்துவிட்டிருந்தது. தேங்காய், வாழைப்பழம், பத்தி, சூடம், வெற்றிலை, டீ, காபி, போண்டா, பொம்மை, பலூன், சோடா, ஐஸ் வண்டி என எல்லாப்பக்கமும் வியாபாரம் நடந்தபடியே இருக்கும். சிலர் தன் விவசாய நிலத்தை சமையல் செய்யும் கொட்டகையாக மாற்றி வாடைகைக்கு விட்டிருந்தனர். குடிமக்கள் அவதிப்படக் கூடாது என அரசாங்கம் அந்த சின்ன கிராமத்திலும் டாஸ்மாக் கடையை திறந்திருந்தது. 

மல்லிகாவின் கணவன் கோபால் குடும்பத்திற்கு மகாமுனி குலதெய்வம் என்பதால் அவர்களது இரண்டு வயது மகனுக்கு முடியிறக்கி காது குத்தி கிடா விருந்து சாப்பிட மல்லிகா வீட்டு சொந்தங்களும் கோபால் வீட்டு சொந்தங்களும் நிறைந்து கிடந்தார்கள். கருப்பையாவின் மடியில் குழந்தையை வைத்து மொட்டை அடிப்பதாகவும் மல்லிகாவின் இரண்டாவது அண்ணன் சக்திவேல் மடியில் வைத்து காது குத்துவதாகவும் திட்டம். சக்திவேல் பல நாட்கள் வேலைக்கு செல்லாமல் குடி, சீட்டாட்டம் எனத் திரிபவன். திருமணம் செய்துவைத்தால் திருந்துவான் என கருப்பையாவும், அவனது பெற்றோரும் அதனை முயன்று பார்க்க இப்போது சக்திவேலின் மனைவி வனிதாவும் அவனால் வேதனைப்படுகிறாள். கருப்பையா மல்லிகாவின் குழந்தைக்கு அரை பவுனில் செயினும், சக்திவேல் சார்பில் சபையில் போடுவதற்கு அரை பவுனில் மோதிரமும் எடுத்துக் கொண்டான். இதற்கு கருப்பையாவின் மனைவி ரஞ்சிதம் கடுமையான எதிர்ப்பினைக் காண்பித்தாள்.
“குடிக்காரப்பயலுக்கு நீங்க எதுக்கு செய்யனும்.. ‘நானும் தானே உன் மவனுக்கு தாய் மாமேன்..” அப்படின்னு மல்லிகாகிட்ட அன்னைக்கு வீராப்பா கேட்டான்.. இன்னைக்கு செய்யட்டும்.. நீ எதுக்கு எடுத்துக் குடுக்குற” எனப் பொரிந்து தள்ளினாள் ரஞ்சிதம்.
“கூடப் பொறந்து தொலைச்சிட்டான்.. நீ போடி.. உன் வேலையப் பாரு.. எல்லாம் தெரியும்..”
கருப்பையாவிற்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. அதனால் சக்திவேலின் மகன் ஜெகனை தன் மகன் போல் பாசமாக பார்த்துக் கொண்டான். தோட்டத்தில் இருந்து திரும்பியதும் ஜெகனைத் தூக்கி கொண்டு கடைத் தெரு செல்வான். திண்பண்டம், விளையாட்டு பொம்மை என நிறைய வாங்கித் தருவான். ஆனால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி கருப்பையாவோடு சண்டை போடுவதும் “என் மவனை இனிமே நீ தூக்க கூடாது..” என விறைத்துக் கொள்வதும் சக்திவேலுக்கு வாடிக்கை. வீட்டு செலவுக்கு கூட சக்திவேலின் மனைவியிடம் கருப்பையா தான் பணம் கொடுப்பான். வனிதாவை பெண் பார்த்து முடித்தது எல்லாம் கருப்பையா தான். “தன்னால் தான் இந்த பெண்ணுக்கு இப்படி ஒரு அவஸ்தையான வாழ்க்கை” என்ற குற்றஉணர்வு முள்ளாய் அவனது நெஞ்சில் தைத்துக் கொண்டே இருந்தது.

லாரியை விட்டு இறங்கிய எல்லோரும் ஒவ்வொரு வேலையாக பார்த்தப்படி இருக்க சக்திவேல் மட்டும் அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தான். அவனைக் கவனித்த கருப்பையாவிற்கு நன்றாக தெரிந்துவிட்டது அவனது நிலைகொள்ளாமையின் காரணம். இருப்பினும் அவனிடம் சண்டை போட வேண்டாம் என நினைத்து சமையலுக்கு தேவையான பொருட்களை சரிப் பார்ப்பதில் கவனம் முழுவதையும் செலுத்தினான். வனிதாவும் ரஞ்சிதத்திற்க்கு உதவியாக வெங்காயம், தக்காளி நறுக்கிக் கொண்டிருந்தாள். சிறுவன் ஜெகன் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
சென்னையில் வேலை பார்க்கும் தன் அத்தை மகனிடம் சென்றான் சக்திவேல்.
“என்ன மாப்ள.. மாமன கண்டுக்கவே மாட்டேங்குற..”
“அப்டி எல்லாம் இல்ல மாமா.. நீ தான் வேலையா இருந்த..”
“நீ சின்ன பயலா இருக்கும் போது தோள்ல தூக்கி வச்சிட்டு சுத்துனவண்ட நான்.. இன்னைக்கு படிச்சி வேலைக்கு போனதும் மாமனக் கண்டுக்கணும் தோணல.. எல்லாம் பெரிய மனுசனாயிட்ட.. இனிமே கண்டுக்குவியா”
அவன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நெளியும் போது,
“சரி.. மாமாக்கு ஒரு நூறு ரூவா கொடு..” என்றான் சக்திவேல்.
“அய்யோ மாமா.. நீ பேசாம காச வாங்கிட்டு போய் குடிச்சிட்டு வந்துட்டேனா காச கொடுத்ததுக்கு பெரிய மாமா என்ன திட்டும்..”
“டேய்.. என் மவன் அய்சு கேட்டான்ட்டா.. அதுக்கு தான் கேக்குறேன்.. ஏண்டா விசேஷத்துக்கு வந்திருக்கோம்.. இங்க போய் மாமன் குடிப்பேனா.. அறிவில்ல எனக்கு..”
“மாமா.. காசு தரேன்.. தயவு செஞ்சி இங்க இருந்து போற வரைக்கும் சரக்க போட்டுறாத..”
“சரிடா மாப்ள.. குட்றா..”
காசை வாங்கியவன் சிறிதும் தாமதிக்காமல் கூட்டாளி ஒருவனோடு டாஸ்மாக் நோக்கி நடந்தான்.
நல்ல நேரம் கடப்பதற்குள் முடி இறக்க வேண்டுமென்று மல்லிகாவின் மாமனார் கூற, குழந்தையைத் தூக்கிக் கொண்டு மல்லிகா, அவள் கணவன், மாமனார், மாமியார் கோவிலுக்கு சென்றார்கள். கருப்பையா சமையல் கூடத்தில் இருந்த வனிதாவை அழைத்து “சக்திவேல் எங்க” என கேட்க அவள் உதட்டை பிதுக்கினாள். அவனும் தேடிப் பார்த்துவிட்டு அவன் இல்லாமல் போகவே கோவிலுக்கு ஓடினான். 

இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் கோவிலை சுற்றி சேரும் சகதியுமாக கிடந்தது. மொட்டை அடிக்குமிடம் முழுதும் மக்கள் திரள். நீரோடு கலந்து கிடக்கும் காணிக்கை முடி கால்களில் ஒட்டிக் கொள்ள மல்லிகாவின் குடும்பம் இருக்கும் இடத்திற்கு ஓடினான் கருப்பையா.
“என்னான்னே.. எங்கப் போன கூட வராம..” என சலித்துக் கொண்டாள் மல்லிகா.
“இந்த சத்தி பயலக் காணோம்.. அவனத் தேடிட்டு இருந்தேன்..”
“மச்சான்.. உங்க தம்பி இன்னேரம் எங்க போகணுமோ அங்க போயிருப்பாப்ள.. நீங்க வந்து உக்காருங்க” என்றான் மல்லிகாவின் கணவன் கோபால்.
கருப்பையாவின் மடியில் வைத்து மொட்டை அடித்து முடித்ததும் குழந்தையை குளிப்பாட்டி புதுசட்டை போட்டு கோவில் பிரகாரத்திற்கு சென்றார்கள். உடன் கூட்டி வந்திருந்த ஆசாரி ஊசியை வைத்துக் கொண்டு தயாராக இருந்தான். எல்லோரும் சிரித்தப்படி இருக்க கருப்பையா மட்டும் தவித்துக் கொண்டிருந்தான்.
“என்னானே.. நின்னுட்டு இருக்க.. உன் மருமவன மடியில வச்சிட்டு உக்காரு..”
“எம்மா.. சக்திவேலு மடியில உக்கார வச்சி காது குத்தலாம்மா.. இல்லனா தண்ணிய போட்டு வந்து தகறாரு பண்ணுவான்.. கிருத்துவம்புடிச்ச பய”
“மச்சான்.. நல்ல நேரம் போய்டும்.. நீங்க வந்து உக்காருங்க.. சத்திக்கிட்ட சொல்லிக்கிடலாம்.. அவரு தானே இங்க இல்லாம போனாரு..” எனக் கோபால் சொல்ல,
“ஆமானே.. நல்ல நேரம் போய்டும்.. உக்காருன்னே..” என மல்லிகாவும் தொடர்ந்தாள்.
அரைமனதாக குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்தான் கருப்பையா. காது குத்தி முடித்ததும் அவன் சார்பாக செயினைக் குழந்தையின் கழுத்தில் போட்டவன், மோதிரத்தை சக்திவேல் போடட்டும் என அதை மட்டும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
பிறகு ஆட்டையும், சேவலையும் பலி கொடுக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றார்கள். மழையால் ஏற்ப்பட்ட சகதியோடு, பலி கொடுத்த ஆடுகளின் ரத்தமும் சேர்ந்து அந்த இடம் முழுவதும் வினோதமான வாசனை வீசியது. பலி கொடுக்கப்பட்ட மல்லிகாவின் கிடாய் அங்கேயே தயாராக இருக்கும் ஆடு உரிப்பவர்களால் பத்தே நிமிடத்தில் தோல், கரி, தலை, கால், குடல் என வகைவகையாக பிரிக்கப்பட்டு பாத்திரங்களில் நிரப்பப்பட்டது. சமையல் வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கும் போது அங்கு வந்து சேர்ந்தான் சக்திவேல். குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தப்பட்டது தெரிந்ததும் நேராக மல்லிகாவிடம் வந்தான்.
“உன் மவனுக்கு மொட்டை அச்சி காது குத்தியாஸா..” என நா குழறினான் சக்திவேல்.
“நீ எங்கப் போன.. உன்ன எம்புட்டு நேரம் தேடுறது.. அதான் நல்ல நேரம் போய்டும்ன்னு முடிச்சிட்டு வந்துட்டோம்..”
“அதான் உங்க பெரியண்ணே இருக்காரே எல்லாத்துக்கும்.. அப்றம் எதுக்கு என்ன வரவசி அஷிங்கபத்துனே..”
“மச்சான்.. உன்ன தேடுனோம்யா.. நீ ஆளக் காணோம்.. அதான் பெரிய மச்சானே ரெண்டுத்துக்கும் உக்கார சொன்னோம்..” என்றான் கோபால்.
“யோவ் மஸ்சான்.. தெரியும்யா.. கைல நாலு காசூ இருந்தா மதிப்பிங்க.. நான் தான் ஒண்ணும் இல்லாதவனாச்சே எப்டி மதிப்பிங்க..”
எல்லாத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கருப்பையா,
“டேய்.. என்னடா விட்டா பேசிட்டே இருக்க.. விசேஷத்துக்கு வந்த இடத்துல இங்க இல்லாம எங்கடா போன..” என கத்தினான்.
“ஏய்.. உங்கிட்ட பேசுனேனாடா.. ஒலுங்கு மரியாதையா போய்டு.. இல்ல அஷிங்கப்பட்டு போய்டுவ..” எனக் கூறவும்,
“அண்ணே.. நீ உள்ள போ.. அது நல்லா குடிச்சிட்டு வம்பிழுக்கணும்னே வந்திருக்கு.. நீ போ அந்தாண்ட..” என அவனை சமையல் கூடம் பக்கம் அழைத்துச் சென்றாள் மல்லிகா.
அங்கு சமையல் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்த வனிதாவிடம்,
“அண்ணி.. அண்ணே குடிச்சிட்டு வந்து வம்பிழுத்துக் கிட்டு இருக்கு.. நீ போய் அத சண்ட போட்டு ஒழுங்கா உக்கார வையி..” என மல்லிகா கூறவும்,
“இந்த மனுசனுக்கு இதே வேலையாப் போச்சி.. ஒரு நாலு கிழமன்னு ஒழுங்கா இருக்க மாட்டேங்குதே..” என்றபடியே சக்திவேல் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.
அவனை சமாதானப்படுத்த முயன்றவர்களை எல்லாம் கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்தான் சக்திவேல். சரியாக நிற்க முடியாத அளவிற்கு போதை உச்சத்தில் இருந்தது.
“ஏ.. இங்க பாரு.. வந்த இடத்துல ஒழுங்கா இருக்காம வேலைய ஆரம்பிச்சிட்டியா.. மரியாதையா வந்து உக்காரு..” என்றாள் அவனை நெருங்கிய வனிதா.
ஏற்கனவே தன்னை எல்லோரும் சேர்ந்து அவமானப்படுத்தி விட்டார்கள் என கோபத்தில் இருந்த சக்திவேல் அவளுடைய இந்த பேச்சைக் கேட்டதும் “பளீர்” என கன்னத்தில் ஓங்கி அறைந்தான். எல்லோரும் அவனைப் பிடித்துக் கொள்ள அவர்களை உதறித் தள்ளிவிட்டு அவளை நெருங்கியவன்,
“போ.. போய் புள்ளைய தூக்கிட்டு வா.. ஊருக்கு போலாம்..” என்றான்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கவும்,
“போடி.. சொன்னது கேக்குல..” என்று கத்தினான்.
உள்ளே சென்ற வனிதா, ரஞ்சிதத்தின் மடியில் அமர்ந்திருந்த ஜெகனைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள். இருவரையும் அழைத்துக் கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தான் சக்திவேல். விஷயமறிந்து கருப்பையா, ரஞ்சிதம், மல்லிகா, கோபால் அவர்களைத் தேடி ஓடி வந்தார்கள். பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சக்திவேலிடம்,
“அண்ணே.. ஏன்ணே இப்டி பண்ற.. வா.. வந்து சாப்டு..” என்றாள் மல்லிகா.
“ஏய்.. கறிச்சோறு திங்க நாதியில்லாம இங்க வரல.. போ..”
“மச்சான்.. இப்டி கோவிச்சிட்டு போனா நல்லாவா இருக்கு.. பாக்குறவங்க என்ன சொல்லுவாங்க.. வாங்க..” என்றான் கோபால்.
“யோவ்.. போய்யா.. அதான் வசதியான உன் பெரிய மச்சான் இருக்காரே.. நான் எதுக்கு..”
“வனிதா.. அவன் போவட்டும்.. நீயும் புள்ளையும் வாங்க சாப்டுவிங்க..” என்றாள் ரஞ்சிதம்.
“ஏய்.. எவளாவது கூப்டானு போன காலை உடச்சிடுவேன்..”
“டேய்.. என்னடா மரியாத இல்லாம பேசிட்டு இருக்க” என கருப்பையா சத்தம் போட்டதும்,
“டேய்.. என்னடா என்னா..” என சக்திவேலும் எகிறத் தொடங்கினான்.
கோபால் இருவரையும் மறித்துக் கொண்டான்.
சரியாக அந்த நேரம் பேருந்து வரவும் வனிதாவையும் சிறுவன் ஜெகனையும் இழுத்துக் கொண்டு சக்திவேல் உள்ளே ஏறிக் கொள்ள பேருந்து நகரத் தொடங்கியது. ஜன்னலோரமிருந்து ஜெகன் மட்டும் அழுத விழிகளோடு கருப்பையாவை நோக்கி “டாட்டா” காட்டினான். கண்ணிலிருந்து பேருந்து மறையும்வரை அங்கே நின்று கொண்டிருந்துவிட்டு சமையல் கூடம் நடந்தார்கள் எல்லோரும். 

சமையல் முடிந்து பந்தி பரிமாறப்பட்டது. கருப்பையா பக்கத்தில் அமர்ந்திருந்த ரஞ்சிதம்,
“அந்த ஜெகன் பையன் கேட்டுட்டே இருந்தான்.. எப்போ பெரியம்மா கறிசோறு போடுவாங்கன்னு.. பாவம் புள்ள.. மகாமுனிக்கு படச்ச இந்த வேட்டை ரசத்தை சாப்பிடாமலே பசியோட போய்ட்டான்..” என்றாள்.
கருப்பையா எங்கோ வெறித்து பார்த்தபடி சாதத்தை நீண்ட நேரம் பிசைந்து கொண்டே இருந்தான்.