"Welcome back Sir.." என்றாள் ரேகா.
"Thank you madam.." என தலைவணங்கி வரவேற்ப்பை ஏற்றுக்கொண்டான் வினோத்.
இருவரும் சிரித்துக் கொண்டார்கள். அவளது சிரிப்பில் கொஞ்சமேனும் காதல் இருக்கிறதா என்றுத் தேடிப்பார்த்து ஏமாந்தான் வினோத்.
"புல்லா ரெக்கவர் ஆகிட்டியா?" என்றாள் அவனை சீண்டும் விதமாக.
"பாத்தா எப்டி தெரியுது..?" எனக் கைகளை விரித்து பாவனை செய்தான்.
"பட்டி, டிங்கரிங் பாத்த பழைய வண்டி மாதிரி இருக்கு.."
மனதுக்குள் அவளது கிண்டலை ரசித்தாலும் வெளியே கோபமாய் முறைப்பதை போல் பார்த்தான். ரேகா அவனுக்காக பாதாம் அல்வா சமைத்து கொண்டு வந்திருந்தாள். அவள் தன்னை "நெருக்கமானவனாக" நினைக்கத் தொடங்கிவிட்டாள் என்பது ஊர்ஜிதமானவுடன் உள்ளுக்குள்ளே உற்சாகம் கரை புரண்டாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக இருந்தான். பிறகு இருவரும் சிரித்துப் பேசியபடியே சாப்பிடத் தொடங்கினார்கள்.

விபத்திற்கு முன்பான சென்னையில் வினோத்தின் இயல்பு வாழ்க்கையில் ரேகா மட்டுமே புதிதாக இணைந்திருந்தாள். மற்றபடி எந்த மாற்றமும் இல்லாமல் நாட்கள் நகரத் தொடங்கின. ரேகாவை முழுதாக புரிந்து கொண்டிருந்தான் வினோத். அல்லது அவளைப் புரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தான். அதனால் பெரும்பாலும் அவளுக்கு கண்ட நேரங்களிலும் மேசேஜ் செய்வது கால் செய்வது போன்றவற்றைத் தவிர்த்தான். 'தன் அருகாமை கிடைத்துவிட்டதால் இப்போது நான் முக்கியமில்லை போலும்' என அவள் நினைத்து விடக் கூடாது என்பதற்காக சில நேரங்களில் அவளை தொந்தரவு செய்யவும் அவன் தயங்கவில்லை.

ஒரு நாள் இருவரும் கேன்டீனில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ரேகாவின் மனதில் நீண்ட நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த ஒரு கேள்வியை வினோத்திடம் கேட்டாள்.
"வினோத்.. எனக்கு உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்.." எனத் தொடங்கினாள்.
"ம்.. சொல்லு ரேகா.." என ஆர்வமானான் வினோத்.
"எங்கிட்ட நீ ப்ரொபோஸ் பண்ணும் போது உன் பேரு கூட எனக்கு தெரியாது.. அதுக்கு முன்ன ரெண்டு இல்ல மூணு தடவ ஆஃபீஸ்ல அங்கங்க பாத்திருக்கேன்.. அவ்ளோதான்.. அப்டி இருக்கும் போது நீ என்ன நம்பிக்கைல வந்து எங்கிட்ட ப்ரொபோஸ் பண்ண?.." எனக் கேட்டுவிட்டு வினோத்தை உற்றுப் பார்த்தாள்.
5 நொடிகள் எதுவும் பேசாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு தலையை இடது வலமாக ஆட்டிக் கொண்டு மெலிதாக சிரித்தான். மேலும் சில நொடிகள் இலக்கற்ற ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளிடம் திரும்பி பேசத் தொடங்கினான்.
"நீ ஓகே சொல்லுவன்னு நினைச்சிட்டு வர தான் நம்பிக்கை வேணும்.. நான் தான் அப்டி வரலையே.. உன்ன பாத்தேன்.. பாத்த அந்த நிமிஷமே புடிச்சி போச்சி.. ஆமா அழகப் பாத்து வந்ததுதான் என் லவ்.. ஆனா அழகா எவ்ளோ பொண்ணுங்கள நான் பாத்திருக்கும் போது உங்கிட்ட மட்டும் ஏன் ப்ரொபோஸ் பண்ணனும்ன்னு தோணுச்சி எனக்கு..? ப்ச். தெரியல.. உண்மைய சொல்லனும்னா உன்ன யாரோ மாதிரி எனக்கு தோணவே இல்ல.. மொத தடவ பாக்கும் போதே ஏற்கனவே ரொம்ப நாள் பழகுன மாதிரி, ஏதோ எனக்குன்னே வந்தவ மாதிரி இருந்தது.. கேக்க கொஞ்சம் filmy தான் இருக்கும்.. ஆனா அது தான் நெஜம்.." நிறுத்தினான்.தன்னைக் கொஞ்சம் ஒரு நிலைப்படுத்திக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினான்.
"ஆஹ்.. உங்கிட்ட நான் ப்ரொபோஸ் பண்ணது நம்பிக்கைல இல்ல பயத்துல.. ஆமா.. உன்ன மாதிரி எந்த பொண்ணும் என் மேல இந்த அளவுக்கு இன்ஃப்ளுயென்ஸ் பண்ணதுல.. நீ எதுவுமே எங்கிட்ட கேக்கல ஆனா உனக்காக என்னன்னவோ பண்ணனும்னு தோணுச்சு..  இப்படி ஒரு பொண்ண பாத்தேன் ஒரு வேலையும் பண்ண முடியாம என்னைப் பைத்தியமாக்கிட்டான்னு ஓடிப் போய் ஒவ்வொருத்தர்கிட்டயும் சொல்லணும்னு தோணுச்சி.. இதுவரைக்கும் நான் சேர்த்துவச்சிருந்த மொத்த லவ்வையும் உன் மேல கொட்டணும்னு தோணுச்சி.. ஆனா இது எதையுமே என்னால பண்ண முடியும்ன்னு எனக்கு தோணல.. உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தா எனக்கு கிடைக்கப் போற வலிய நினைச்சி பயந்தேன்.. அதனால தான் உங்கிட்ட ப்ரொபோஸ் பண்ணேன்.. அதுக்கு அப்புறம் உன்ன பாக்கவே கூடாதுன்னு நினைச்சேன்.. அதே மாதிரி கிட்டத்தட்ட 20 நாள் உன்னைப் பாக்காமலேயே இருந்தேன்.."
அத்தனை நேரமும் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்த ரேகா இடைமறித்துப் பேசினாள்.
"அப்புறம் ஏன் மறுபடியும் என்கிட்ட வந்து பேசுன..? என்கூட பிரென்ட்டா இருந்தா என்னைப் புடிக்காம போகும்னு சொன்ன..?"
உடனே பதில் சொல்லாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு சொன்னான்.
"ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வீக்னஸ் இருக்குமில்லையா..? உன்னைப் பாக்காம இருந்த அந்த 20 நாள்ல தான் தெரிஞ்சிகிட்டேன்.. என்னோட வீக்னஸ் நீதான்னு.."
வினோத் சொல்லி முடிக்கும் போது பார்வையை டேபிள் மீது வைத்திருந்த பீங்கான் காபி கோப்பை மேல் பதித்தபடி அமர்ந்திருந்தாள் ரேகா. அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை. தீவிரமாக யோசிக்கிறாள் என்பது தெரிந்ததால் வினோத்தும் அவளை நிமிர சொல்லவில்லை. நொடிகள் நிமிடங்களாகின. இருவருக்குமிடையே அமைதி 'ஜம்மென' அமர்ந்திருந்தது. திடீரென எழுந்தவள் அவனிடம் எதுவும் பேசாமல் நடந்து செல்லத் தொடங்கினாள். வினோத் அவள் செல்வதை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

இரவு அறைக்கு சென்ற பிறகு அவளுக்கு 'whatsapp' செய்தான். இரண்டு நொடிக்கொரு முறை அவளிடமிருந்து பதில் வந்திருக்கிறதா என பார்த்துக் கொண்டே இருந்தான். அவளிடம் பேசியதை மீண்டும் மீண்டும் மனதுக்குள் ஓட்டிப் பார்த்தான். தவறாக எதையாவது பேசிவிட்டோமோ என்று தவித்தான். மனம் சோர்வாக உணர்ந்தான். உடம்பின் வலு மொத்தமாய் கரைந்து போனதைப் போன்ற நிலையிலிருந்தான். மணி 10-ஐ நெருங்கும் போது அறைக்குள் நுழைந்தான் மகேஷ். லைட் எதுவும் போடாமல் இருட்டில் தூங்காமல் படுத்திருந்தான் வினோத்.
"என்னடா.. தூங்கலையா..?"
"ப்ச்.. இல்லடா.."
ஏதோ பிரச்சனை என்பதை வினோத்தின் முகமே மகேஷ்க்கு உணர்த்தியது.
"என்னாச்சிடா.. என்னவோ போல இருக்க..?"
மகேஷின் இந்த கேள்வியே அவனுக்கு போதுமானதாக இருந்தது. அவனுக்கும் ரேகாவிற்கும் நடந்த மொத்த உரையாடலையும் கிட்டத்தட்ட ஒப்பித்தான்.
"ஏன்டா.. இப்போ தான் அந்த பொண்ணு நல்லா பேசிட்டு இருந்தா.. அதுவும் ஒனக்கு ஆக்சிடென்ட் ஆகவும் பரிதாபப்பட்டு.. அத இப்டி கெடுத்துக்கிட்டியேடா.."
"டேய்.. அவ கேட்டதுக்கு தாண்டா பதில் சொன்னேன்.."
"சரி டா.. கேட்டா ரெண்டு வரில ஒரு பதில சொல்லிட்டு அமைதியா இருந்திருக்க வேண்டியது தானே.. அத விட்டுட்டு இப்படி பக்கம் பக்கமா பேசியிருக்க.. இப்போ அந்த பொண்ணுக்கு என்ன தோணியிருக்கும்? 'இன்னும் இவன் நம்மள லவ் பண்ணிட்டு தான் இருக்கான்.. இது சரியா வராது.. இனிமே இவன்கிட்ட பேசாம அவாய்ட் பண்ணிட வேண்டியது தான்'ன்னு தான் தோணியிருக்கும்.."
"டேய்.. நீயா ஒண்ணு சொல்லாதடா.. நான் மனசுல இருக்குறத தாண்டா பேசுனே.. இதுல என்னடா தப்பு.."
"இப்போயெல்லாம் மனசுல இருக்குறத அப்படியே மறைக்காம பேசுறவன் தான் தப்பானவன்.."
வினோத் பதிலுக்கு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
"சரி விடு.. பேசியாச்சி.. அந்த பொண்ணுக்கு மெசேஜ் பண்ணி டார்ச்சர் பண்ணாம ஒரு ரெண்டு நாலு பிரீயா விடு..அதுக்கப்புறம் பேசிப் பாரு.."
எனக் கூறிவிட்டு உடை மாற்றிக் கொள்ள தொடங்கினான் மகேஷ். யோசனையோடு அமர்ந்திருந்தான் வினோத்.

மகேஷ் சொன்னது போலவே இரண்டு நாட்களுக்கு அவளைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அவளிடமிருந்து மெசேஜ் எதுவும் வந்திருக்கிறதா என அடிக்கடி மொபைலைப் பார்ப்பதற்கு தவறவில்லை. ஆபிஸிலும் அவள் பிரேக் வரும் நேரங்களில் கேன்டீன் செல்வதை தவிர்த்தான். இரண்டு நாட்கள் மட்டும் என அவன் நினைத்தது ஒரு வாரத்தை தாண்டியது. வினோத் whatsapp செய்து பார்த்தான். எந்த பதிலும் அவளிடமிருந்து வரவில்லை. அழைத்துப் பார்த்தான். அழைப்பு துண்டிக்கப்பட்டது. தன் கண் முன்னேயே தான் கொண்டிருந்த அத்தனை நம்பிக்கையும் உடைந்து கொண்டிருப்பதாய் நினைத்தான். அவனிடம் பேசுவதற்கு அவள் விரும்பாத போது ஆஃபீஸ் வரும் வழியிலோ, பேருந்து நிறுத்தத்திலோ சந்திக்க முயற்சி செய்வது  நாகரிகமாக இருக்காது என்பதால் அந்த எண்ணத்தை கை விட்டான். 

அவளைப் பார்க்காமல் பத்து நாட்கள் கடந்திருந்தன. எல்லோரிடமும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே வெற்றிடத்தை உணர்ந்தான். கூட்டத்திலும் தனிமைப்பட்டு கிடந்தான். இந்த முறை மதனிடம் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் வினோத்தை நன்றாய் அறிந்திருந்த மதன் 'ஏதோ நடந்திருக்கிறது' என்பதை மட்டும் புரிந்து கொண்டான். அவனிடம் கேட்டுக் கொள்ளவில்லை. 

கம்ப்யூட்டர் திரையின் மீது கவனத்தை குவித்து வினோத் வேலை செய்து கொண்டிருந்த போது பாக்கெட்டில் இருந்த அவனுடைய செல்போன் அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தவனுக்கு தலைகால் புரியவில்லை. 
1 message received from Darling.
ஆர்வத்தோடு திறந்து பார்த்தான்.
Come to canteen.
உடனே டைப் செய்தான்.
I will be there in a minute.
செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுட்டு கம்ப்யூட்டரை லாக் செய்து கொண்டு எழுந்தான். அவன் மேஜை மீது இருந்த இண்டர்காம் அலறியது. சலிப்போடு எடுத்தான். மறுமுனையில் மேனேஜர் விஜய்.
"வினோத்.. கம் டு மை கேபின்.."
"ஓகே ஸார்.."
கூறிவிட்டு மனதுக்குள் திட்டினான். 'வேற நேரமே கிடைக்கலையா இந்த ஆளுக்கு.. ச்ச..' என்றபடியே விஜய்யின் கேபின் நோக்கி நடந்தான்.
அவன் உள்ளே நுழைந்த போது TL அஜய்யும் அங்கே இருப்பதைக் கண்டு கொஞ்சம் குழம்பினான். என்ன விஷயமாக இருக்குமென அவனால் யூகிக்க முடியவில்லை.
"வா வினோத்.." என பேச்சைத் தொடங்கினார் விஜய்.
"வினோத்.. ஒரு முக்கியமான விஷயம்.. உங்கிட்ட டிஸ்கஸ் பண்ணி சொல்லி அஜய் கிட்ட சொன்னேன்.. பட் அஜய் என்னையே பேச சொல்லிட்டான்.. அதான் கூப்டேன்.."
விஜய் எதைப் பற்றி பேசுகிறார் என்பது புரியாததால் எதுவும் பேசாமல் அவர் மேற்கொண்டு பேசுவதற்காக காத்திருந்தான் வினோத்.
"உனக்கு ஒர்க் லோட் எப்டி இருக்கு வினோத்..?"
என்ன நடக்கிறது என்ற குழப்பத்தோடு பதில் சொன்னான் வினோத்.
"ரெண்டு ப்ராஜெக்ட் பாத்துட்டு இருக்கேன் ஸார்.. ஒண்ணு பைனல் ஸ்டேஜ் தான்.. ஸோ அதுல ஒர்க் கிட்டத்தட்ட முடிஞ்சிடிச்சி.. இன்னொரு ப்ராஜெக்ட் லாஸ்ட் வீக் தான் ஸ்டார்ட் ஆச்சி.. இப்போதான் ஒர்க் வர ஆரம்பிச்சிருக்கு.. 70பெர்ஸன்ட் ஆக்குபேன்சி தான்.."
கவனமாக கேட்டுக் கொண்டார் விஜய். திரும்பி அஜய்யைப் பார்த்தார். வினோத் சொன்னதை ஆமோதிப்பதைப் போல் தலையை ஆட்டினான் அஜய்.
"ஓகே.. பைன்.. டேவிட் ஹாண்டில் பண்ணிட்டு இருந்த ப்ராஜெக்ட்ட கொஞ்ச நாள் நீ பாத்துக்கணும்.. டேவிட் மெடிக்கல் லீவ்ல போயிருக்காரு.. ரிட்டர்ன் எப்போ வருவாருன்னு தெரியாது.. ஸோ டேவிட் வரவரைக்கும் நீ தான் அந்த ப்ராஜெக்ட்ட ஹாண்டில் பண்ணனும்.. ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் எல்லாம் டாக்குமெண்ட் பண்ணி நம்ம ஷேர்பாயிண்ட்ல போட்டு வச்சிருக்காரு.. டவுன்லோட் பண்ணி டீடெயில்ஸ் பாத்துக்கோ.."
"ஓகே ஸார்.. நான் பாத்துக்குறேன்.." 
"ம் ஓகே வினோத்.."
தயக்கத்துடன் வினோத் கேட்டான்.
"ஸார்.. டேவிட்க்கு என்னாச்சி..?"
"யார்கிட்டயும் ஷேர் பண்ணிக்காத.. அவரோட வைப் சூசைட் அட்டென்ட் பண்ணிட்டாங்க.. ரொம்ப  சீரியஸ் கண்டிஷன் போல.. ஐசியூல வச்சிருக்காங்கன்னு சொன்னாரு.. ஈவினிங் நானும் அஜய்யும் ஹாஸ்பிடல் போய் பாத்துட்டு வரலாம்ன்னு இருக்கோம்.. விருப்பப்பட்டா நீயும் வேணா வா.."
தலையாட்டினான் வினோத். மீண்டும் கேட்டான்.
"ஸார்.. டேவிட் லவ் மேரேஜ் தானே..?"
"ஆமா.. பைவ் இயர்ஸ் லவ் பண்ணி ரெண்டு பேர் வீட்டையும் எதிர்த்து மேரேஜ் பண்ணிட்டாங்க.."
"அப்புறமும் எப்டி ஸார் இந்த மாதிரி சூசைட் எல்லாம்..?"
நன்றாக மூச்சை இழுத்து விட்டுக்  கொண்டு பேசினார் விஜய்.
"வினோத்.. லவ் பண்ணும் போது எல்லா லவ்வர்ஸும் நல்லா தான் இருப்பாங்க.. மணிக்கணக்கா போன்ல பேசுறது, பார்க், பீச், சினிமான்னு ஒரு இடம் விடாம ஊர் சுத்துறது, நீ இல்லனா நான் இல்ல, நான் இல்லனா நீ இல்ல அப்டின்னு சினிமா டயலாக் எல்லாம் பேசிக்குவாங்க.. மாறி மாறி லவ்வ வாரி கொட்டிக்குவாங்க.. அதே கல்யாணம் பண்ணிக்கிட்டா 'அதான் கூடவே இருக்காளே நம்மள விட்டுட்டு எங்க போக போறா?' அப்டிங்கிற அலட்சியத்துல பையனும்,  சமைக்கிறது, துணி துவைக்கிறது, வேலைக்கு போறது, குழந்தைய பாத்துக்குறதுன்னு ரெஸ்ட் எடுக்க கூட நேரமில்லாம சுத்துறல  பொண்ணும் வேற வேற ட்ராக்ல போய்டுறாங்க.. அப்றம் என்ன..? இருக்குற நேரத்துல ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் குறை சொல்லி சண்ட போட்டுக்குறதுலயே காலத்த ஓட்டுறாங்க.. உக்காந்து பொறுமையா மனச விட்டு பேசுனா  தீக்குற பிரச்சனைய ஒண்ணுத்துக்கும் உதவாத ஈகோவுக்காக பெருசாக்கிட்டே போய்டுறாங்க.. People makes relationship really complicated these days."

விஜய் பேசியது புரிந்ததைப் போல தலையாட்டிவிட்டு வெளியே வந்தான் வினோத். அவனது கால்கள் தானாக கேன்டீன் நோக்கி செல்லத் தொடங்கின. ஆனால் விஜய்யிடம் பேசுவதற்கு முன்பிருந்த அவசரம் இப்போது அவனிடம் இல்லை. தீவிர யோசனையோடு நடந்தான். 
'ரேகா எனக்கு கிடைச்சா ஒரு வேளை நானும் விஜய் சொன்ன மாதிரி தான் இருப்பேனோ..? அவ மேல இருக்குற லவ் குறைஞ்சிடுமோ.. அவ சாதாரணமா எனக்கு தோண ஆரம்பிச்சிடுவாளோ.. ஒரு வேளை அவ கூட லைஃப்ல சேராம போய்ட்டா இப்போ எந்த அளவுக்கு புடிச்சிருக்கோ அப்டியே தானே கடைசி வரைக்கும் அவள புடிக்கும்.. ச்ச.. ரொம்ப சில்லியா திங்க் பண்றேனோ ..?'

கேன்டீன் நுழைந்தவுடன் தான் சுயநினைவிற்கு வந்தான். அவளைத் தேடினான். ஜன்னலை ஓட்டிப் போடப்பட்டிருந்த டேபிள் அருகே அமர்ந்திருந்தாள் அவள். டேபிளை நெருங்கினான். நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் குனிந்து கொண்டாள். சேரில் அமர்ந்தான். தொண்டையை செருமிக் கொண்டு பேசினான்.
"ஹாய் ரேகா.."
"ஹாய்.." என்றாள் பதிலுக்கு.
அடுத்து என்ன பேசுவதென்று அவனுக்கும் தெரியவில்லை. அவளே ஏதேனும் பேசுவாள் என எதிர்பார்த்து காத்திருந்தான். அவள் எதுவும் பேசாமல் இருந்ததால் மீண்டும் அவனே ஆரம்பித்தான்.
"ரேகா.. ஒனக்கு என் மேல ஏதாவது கோவமா..?"
அப்போதும் அவள் பேசவில்லை. காத்திருந்தான். பிறகு, 
"என் மனசுல இருந்தத தான்.." என வினோத் பேச தொடங்கும் போது,
"23/12, விஜயராகவபுரம் 2nd  ஸ்ட்ரீட், வடபழனி." என்றாள் ரேகா.
இடைமறிக்கப்பட்ட வினோத் அவள் என்ன பேசுகிறாள் என்பது புரியாமல் விழித்தான். 
"என்னது..?"
"அட்ரஸ்.."
"என்ன அட்ரஸ்..?"
"என் அப்பா அம்மா கிட்ட பேசணும்னு வீட்டு அட்ரஸ் கேட்டியே.. அதான்.." என்றாள்.
அவள் சொன்னதன் முழு அர்த்தம் புரிந்தவுடன் முகமெல்லாம் புன்னகையாக மாறினான்.
"அப்டினா.. ஒனக்கு.. ஓகே வா..?" என்றான்.
"ம்.." என்று மட்டும் பதிலளித்தாள் சின்ன புன்னகையுடன். 
நம்பவே முடியவில்லை அவனால். சிரித்தான். சிரித்தான். சிரித்தபடியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் குறும்பு புன்னகை செய்தபடியே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிமிட நேர புன்னகைக்குப் பிறகு அவள் பேசினாள்.
"சரி.. என் பேரெண்ட்ஸ் ஒத்துக்கலனா நீ என்ன பண்ணுவ..?" என்றாள்.
"அப்பா அம்மா சொல்ற பையன தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நீ தான் ஏற்கனவே சொல்லிட்டியே.. ஸோ.. அவங்க எஸ் சொல்ற வரைக்கும் கேட்டுகிட்டே இருப்பேன்.. எத்தன வருஷமானாலும்.."
"ம்.. டயலாக் எல்லாம் ஓகே.. பாக்கலாம்.. என்னை ஓகே சொல்ல வச்ச மாதிரி அவங்களையும் ஓகே சொல்ல வைக்குறியான்னு.." என்றாள்.
புன்னகை கொஞ்சமும் மாறாமல் பேசும் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.
"எனக்காக ஒரு நோட் புக் புல்லா கவித எழுதுனல.. இப்போ எனக்கொரு கவித வேணும்.. சொல்லு.." என்றாள்.
சந்தோஷத்தில் மயக்கமே வந்துவிடும் போல இருந்தது அவனுக்கு. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு டேபிள் மீதிருந்த அவளது கைகளைப் நடுக்கம் நிறைந்த தன் கைகளால் பிடித்தான். அவளது கண்களை பார்த்துக் கொண்டு சொல்லத் தொடங்கினான்.

"என்ன வரம் 
வேண்டுமென்று  
இறைவன் 
கேட்டால் 
யோசிக்காமல் 
சொல்வேன்..!
இப்போது போலவே 
எப்போதும் 
உன்னைக் காதலித்தே 
கரைந்து போக 
வேண்டுமென்று..!"

நல்ல புரிதல் கொண்ட காதலை எத்தனை ஊடல்கள் வந்தாலும் தகர்த்துவிட முடியாது. அப்படி ஒரு காதலாக வினோத்தின் காதலும் இருக்குமென நம்பி விடைபெறுவோம்.

(முற்றும்..)