எங்கும் இருள் சூழ்ந்திருக்க ஒரே ஒரு தெரு விளக்கு மட்டும் இருட்டை விரட்ட முயற்சித்துக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்டப்பட்டிருந்த வீடுகள். வளர்ந்து வரும் பகுதி என்பதற்கேற்ப பாதி கட்டிமுடிக்கப்பட்ட சில வீடுகள். அந்த பகுதியில் ஒரு பச்சை வண்ண வீட்டின் முதல் மாடியில் இருக்கும் அறையில் அவனும் அவளும் படுக்கையில் கிடந்தனர். ஒருவரை ஒருவர் ஜெயிக்க போராடிக் கொண்டிருந்தனர். முத்தத்தை தவிர எந்த சத்தமும் அங்கு இல்லை. காற்று புகுவதற்குக்கூட இருவருக்குமிடையில் எந்த இடைவெளியும் இல்லை. வேகமாக இயங்கி கொண்டிருந்த இருவரும் சில நிமிடங்களுக்குப் பிறகு ஆசுவாசமடைந்தனர். ஒருவரை ஒருவர் பிரிந்து படுக்கையில் சாய அவன் மட்டும் சிறிது நேரம் கழித்து சமையலறை நோக்கி நடந்தான். உடல் வலியையும் இழந்த வலிமையையும் மீட்டுக் கொள்வதற்காக பழரசமும், சில நொறுக்குத்தீனிப் பண்டங்களும் கொண்டு வந்து அவள் முன்பு வைத்தான். அதைப் பகிர்ந்து கொண்ட இருவரும் ஒரு வார்த்தையையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இருவரும் அவர் அவரின் சிந்தனைகளில் மூழ்கியபடி இருந்தனர். தான் செவிலியராக பணியாற்றும் மருத்துவமனையில் அவன் தனது அப்பாவை சேர்த்தது,  நட்பு கொஞ்சம் கொஞ்சமாய் காதலாய் மாறியது, யாரும் காட்டிராத அன்பின் எல்லையை அவன் காட்டியது என்று அவன் பற்றிய நினைவுகளில் கிடந்தாள் அவள். குடும்பத்துடன் பெண் கேட்டுப் போன இடத்தில் வேற்று சாதி ஆள் என்று அவளது தாய் தரக்குறைவாய் பேசியது, மனம் நொந்த போதும் அவனது தந்தை அதைப் பற்றி அவனோடு பேசாதது என்று இவனது நினைவுகள் ஒருபுறம் திரிந்தன. சிந்தனையைக் கடந்த இருவரும் கிடைத்த இரவினை வீணாக்க விரும்பாமல் மீண்டும் ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து போயினர். இரவு கரைய கரைய இருவரும் உறக்கத்தை மறந்து போயினர். காமம் மட்டும் அங்கு இருந்திருந்தால் களைப்பு அங்கு பிறந்திருக்கும். கட்டுக்கடங்காத காதலும் உடன் சேர்ந்து கொண்டதால் முடியாத நிகழ்வாக அது தொடர்ந்து கொண்டிருந்தது. 

இருட்டின் இறுதியிலும் வெளிச்சத்தின் தொடக்கத்திலும் இருந்த அந்த பொழுதினில் அவள் உடை மாற்றி கிளம்ப அவளை தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு “தெரிந்தவர்கள் யாரும் வருகிறார்களா” என்ற ஜாக்கிரதை உணர்வுடன் பேருந்து நிறுத்தம் நோக்கி சென்றான் அவன். நிறுத்தம் அடைந்த பின்பு வாகனம் இறங்கிய அவள் பேருந்து வரும் வழியில் விழி வைத்தப்படி இருந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு தொலைவில் வந்த பேருந்தைக் கண்டவுடன் தன் கைப்பையை துலாவி எடுத்த ஒரு கெட்டி அட்டைக் காகிதத்தை அவன் கைகளில் திணித்துவிட்டு நின்ற பேருந்தில் ஏறிக்கொண்டாள். விநாயகர் படம் போட்ட அந்த திருமண அழைப்பிதழ் அவனை ஏளனமாய் பார்த்து சிரித்தது. பேருந்தில் இருந்த அவள் தூர செல்லும்போது அவனது விழிகள் தன் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் இன்னொருவனின் பெயரை அசையாமல் பார்த்தப்படி இருந்தன.