தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்வதற்கு வினோத்திற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. சில நிமிடங்கள் மட்டுமே பார்வையும் சிந்தனையும் மங்கலாக இருந்தது. பின்பு இரண்டும் தெளிவானவுடன் படுக்கைக்கு அருகிலும் எதிரிலும் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொண்டான். அழுதபடி அம்மா செல்வி நிற்க அருகில் அப்பா மணி ஆறுதலாக தோள்களை பிடித்துக் கொண்டு நின்றார். சற்று தள்ளி அக்கா, அக்காவின் கணவர் பாலு, தங்கை கீதா வரிசையாக சோகம் அப்பிய முகத்துடன் நின்றார்கள். கைகளும் கால்களும் கனமாக உணர்ந்தான். அசைக்க முயற்சி செய்யவில்லை. கைகளில் போடப்பட்டிருந்த கட்டினை அவனால் பார்க்க முடிந்தது. தலை பாரமாக இருந்தது. மருந்து நெடி நாசியை துளைத்தது.
"அம்மா.." என்று மெதுவாக முனகினான்.
"சாமீ.. என்னய்யா வேணும்..?" என அழுகையினூடே கேட்டார் செல்வி.
வினோத் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியானான். வினோத் படுத்திருந்தது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை. அது விபத்து மற்றும் அவசரப் பிரிவு அறை. அங்கே வரிசையாக போடப்பட்டிருந்த படுக்கைகளில் வினோத்தோடு விபத்தில் சிக்கிய மற்ற பயணிகள் கிடந்தார்கள். வினோத் தலையை அசைக்காமல் சுற்றிலும் ஒரு முறை பார்வையை மட்டும் ஓட விட்டான். மிகவும் சோர்வாக உணர்ந்தான். வலிக்காக உடலில் செலுத்தப்பட்டிருந்த மருந்து மீண்டும் அவனுக்கு தூக்கத்தை வரச் செய்ய கண்களை மூடிக் கொண்டான். 

நான்கு மணி நேரம் கழித்து கண்களை திறந்த போது அருகே அவனது அக்கா கோகிலா இருந்தாள்.
வலி கலந்த சிரிப்பொன்றை உதிர்த்தான் வினோத்.
"மகேஷ் இப்போ தான் அம்மா
வையும் அப்பாவையும் சாப்பிட கூட்டிட்டு போனான். நேத்து உனக்கு அடிபட்டதுலிருந்து நாங்க இங்க வர வரைக்கும் அவன் தான் கூட இருந்தான்." என்றாள் கோகிலா.
"அப்டியா..?" என மிக மெதுவாகப் பேசினான் வினோத்.
"உன் ஆபிஸ் பிரெண்ட்ஸ் ஈவினிங் வந்திருந்தாங்க.. நீ தூங்கிட்டு இருக்கவும் எழுப்ப வேணாம்னு பாத்துட்டு போய்ட்டாங்க."
"ஓ.."
சிறிது நேரம் அமைதியாக மற்ற படுக்கைகளைப் பார்த்தவன் கோகிலாவிடம் கேட்டான்.
"பஸ்ல எல்லாரும் பொழச்சிட்டாங்களா..?"
கோகிலா சில நொடிகள் தயக்கத்துப் பிறகு சொன்னாள்.
"இல்ல ரெண்டு பேரு இறந்துட்டாங்க.. ஒரு லேடி அப்புறம் ஒரு வயசானவரு.."
வினோத் சுயநினைவினை இழப்பதற்கு முன் கேட்ட அந்த முகம் தெரியாத பெண்ணின் அலறல் சத்தம் ஞாபகம் வந்தது.

ஒரு நாள் கழித்து மதன், PP, TL அஜய், மேனேஜர் விஜய், மற்றும் சிலரும் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களோடு பேசிக் கொண்டிருக்கட்டுமென அவன் வீட்டு ஆட்கள் வெளியே நின்றார்கள். அரை மணி நேரம் அவனுக்கு அதிகம் சிரமம் கொடுக்காத வண்ணம் பேசிக் கொண்டிருந்து விட்டு எல்லோரும் கிளம்பினார்கள். மற்றவர்களை நகர விட்டு மதனை மட்டும் அழைத்தான் வினோத்.
"அவளுக்கு தெரியுமா எனக்கு இந்த மாதிரி ஆனது.."
அத்தனை நேரம் அவன் கண்களிலிருந்த சோர்வு அவளைப் பற்றிப் பேசும் போது மட்டும் காணாமல் போனது மதனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.
"ஆக்சிடெண்ட் நடந்த அடுத்த நாளே மொத்த ஆஃபீஸ்க்கும் இது தான் பேச்சே.. நீ வேற பாட்டு போட்டில ஜெய்ச்சதால எல்லாருக்கும் உன்ன தெரிஞ்சிருந்தது.." என மதன் கூறிக் கொண்டிருக்கும் போதே இடைமரித்தான் வினோத்.
"டேய் அவளுக்கு தெரியுமா?"
"மொத்த ஆபிஸ்க்கே தெரியும் ஆக்சிடெண்ட் ஆனது உனக்குன்னு.. அவளுக்குத் தெரியாம இருக்குமா? சரி நான் வரேன்.. ரெஸ்ட் எடு.." எனக் கூறிவிட்டு மதன் செல்ல யோசனையில் ஆழ்ந்தான் வினோத். 'அவளுக்கு தெரிந்திருக்குமா? ஒரு வேளை தெரிந்திருந்தால் என்னைப் பார்க்க வேண்டுமென்று எப்படி அவளுக்கு தோணாமல் போனது? இத்தனை நாள் அவளோடு பேசியும் பழகியும் கூட எந்த பாதிப்பையும் அவளிடம் நான் ஏற்படுத்தவில்லையோ?' இப்படி பல கேள்விகள் அவனுக்குள் முளைத்துக் கொண்டே இருந்தன. அந்த கேள்விகள் அவனது குழப்பத்தையும் தவிப்பையும் அதிகமாக்கியதை தவிர வேறெதையும் செய்யவில்லை.
ஒரு மாதம் கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் எனும் நிபந்தனையோடு  ஆறாம் நாள் வினோத் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். மஹேஷும்  உடன் இருந்து வேண்டிய உதவிகளை செய்தான்.  வினோத்தின் அக்கா கணவரின் காரில்அவன் திருச்சிக்கு அழைத்துவரப்பட்டான்.

ஒரு மாத கால ஓய்வு வினோத்திற்கு  அலுத்துப் போயிருந்தது. எப்போது வார விடுமுறை வரும் எனத் திங்கள் கிழமையே யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு இந்த கட்டாய விடுமுறை என்னவோ போல் இருந்தது. மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற வேட்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை விட  ரேகாவை பார்க்க வேண்டும் என்ற உந்துதலேஅதிகமென சொல்லலாம். கைகளிலிருந்த காயங்கள் ஓரளவிற்கு குணமாகியிருந்தது. கால்கள் மெதுவாக எதையாவது தாங்கிப் பிடித்துக் கொண்டு  ஊன்றி நடக்க முடிந்தது. இன்னும் ஒரு மாதத்தில் பழையபடி நடக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. 

விபத்தில் அவனது மொபைல் நொருங்கிப் போயிருந்தது. கைகள் அசைக்க முடியாதபடி அடிபட்டிருந்ததால் மொபைல் தேவை இல்லாமல் அத்தனை நாளும் இருந்தான். மகேஷ் அல்லது மதன் இருவர் மட்டும் வினோத்தின் அப்பா மொபைலுக்கு அழைத்து அவ்வப்போது அவனோடு பேசினார்கள். கைகளில் காயம் கொஞ்சம் ஆறியிருந்ததால் கோகிலா அவனுக்காக புதிதாக மொபைல் வாங்கிக் கொடுத்தாள்.
"என்னக்கா.. வாங்குறதுக்கு முன்னாடி எங்கிட்ட கேட்டிருக்கலாம்ல என்ன மொபைல் வேணும்னு.." என்றான் வினோத்.
"எனக்கு என்னடா தெரியும்.. உன் மாமா தான் வாங்கிக் கொடுத்தாரு.. இப்போதைக்கு வச்சிக்கோ.. அப்றம் வேணா வேற வாங்கிக்கோ.." எனக் கூறிவிட்டு நகர்ந்து கொண்டாள் கோகிலா.
பழைய எண் கொண்ட சிம்மை வாங்கி வந்து கொடுத்தார் வினோத்தின் அப்பா. சிம்மைப் பொருத்தி மொபைலை ஆன் செய்த போது பல எண்களிலிருந்தும் மிஸ்டு கால் குறித்தான மெசேஜ்கள் வந்தன. அன்று மாலையே மகேஷ் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தான்.

மறுநாள் காலை உணவை முடித்துக் கொண்டு தன்னுடைய அறையில் சேரில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான் வினோத். சமையற்கட்டில் அவனுடைய அம்மா செல்வி மதிய உணவிற்கான தயாரிப்பில் இருந்தார். போன் மெலிதாக அலறியது. எடுத்துப் பார்த்த வினோத் திரையில் தெரிந்த நம்பரை சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஆன் செய்தான்.
"ஹலோ.." என்றான் மெதுவாக.
"ஹலோ.. வினோத்?" என்றது மறுமுனையில் ஒரு பெண் குரல்.
"ஆஹ் சொல்லுங்க.. யாரு.."
"நான் ரேகா பேசுறேன்.."
'மகிழ்ச்சியின் உச்சம் என்ன?' என்று யாராவது அவனிடம் அப்போது கேட்டிருந்தால் நிச்சயம் வினோத் "அவளது குரலை கேட்ட இந்த நொடி தான்" என சத்தியம்செய்திருப்பான். காது வரை சிரித்தான். வலியையும் மீறி எழுந்து நின்று கொண்டான். முடிந்திருந்தால் நிச்சயம் எகிறி குதித்திருப்பான். இவன் எதுவும் பேசாததால்மீண்டும் அவன் பெயரை அழைத்தாள்.
"வினோத்..?"
"ஆஹ்.. ரேகா.. சொல்லுங்க.. எப்டி இருக்கீங்க..?"
"அத நான் கேக்கணும் வினோத்.. எப்டி இருக்கீங்க..? காயம் சரியாகிடுச்சா..? இன்னும் வலி இருக்கா?"
"வலி.. ஹா கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் இருந்தது.. இப்போ ஒரு ரெண்டு நிமிஷமா எந்த வலியும் இல்லாம பயங்கர சந்தோஷமா இருக்கு.."
மறுமுனையில் அவள் அமைதியாக இருந்தாள். 'சிரிக்குறாளா இல்ல முட்டக் கண்ண விரிச்சி கோவப்படுறாளா' என யோசித்தான் வினோத்.
"ஸாரி வினோத்.. நீங்க ஹாஸ்பிடல்ல இருக்கும் போது வந்து பாக்க முடியல.. வெரி ஸாரி.."
"அய்யோ.. நீங்க இப்போ கால் பண்ணதே போதும்.. இதுலயே எனக்கு பாதி சரியான மாதிரி இருக்கு.."
வினோத்திற்கு அவள் சிரித்ததைப் போல் இருந்தது. விபத்தினையும், விபத்திற்கு பின்பான சிகிச்சையையும்  அவளிடம் கூறிக் கொண்டே வந்தான்.
"இப்போ கால் நடக்க முடியுதா..?" என்றாள் அவள்.
"ஸ்டிக் வச்சிட்டு நடக்க முடியும்.. நார்மலா நடக்க இன்னும் ஒன் மந்த் ஆகிடும்ன்னு நினைக்கிறேன்.."
"ஓ ஓகே ஓகே.."
சின்ன தயக்கத்துடன் சொன்னான்.
"ஹாஸ்பிடல்ல இருக்கும் போது நீங்க வருவீங்கன்னு ஒவ்வொரு நாளும் எதிர்பாத்தேன்.. அந்த வலியில கூட உங்க ஞாபகம் இருந்துட்டே தான் இருந்தது.."
"ஓகே வினோத்.. டேக் கேர்.. நான் வைக்கிறேன்.."
அவசர அவசரமாக அவளை தடுத்தான் வினோத்.
"ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்.." என அவளை நிறுத்திவிட்டு கேட்டான்,
"உங்களுக்கு எப்படி என் நம்பர் கிடைச்சது.."
சில நொடிகள் அமைதிக்குப் பின் சொன்னாள்.
"அன்னைக்கு கேன்டீன்ல உங்க பிரென்ட்ன்னு ஒருத்தர சொன்னீங்களே.. அவர்கிட்ட வாங்குனேன்.."
"ஓ.. மதன் கிட்டயா..? ஓகே.."
"ஓகே வினோத்.. Bye.." என போனை வைத்தாள் ரேகா.
அவள் இணைப்பை துண்டித்த பின்பு கூட போனையே பார்த்துக் கொண்டிருந்தான் வினோத். சந்தோஷம் மட்டுமே மனம் முழுக்க நிரம்பி வழிந்தது. யாரிடமாவது இதனை உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தலை வெடித்து விடும் போல இருந்தது அவனுக்கு. உடனே மதனை அழைத்தான். மதன் போனை எடுத்தவுடன் உற்சாகமாக பேச்சை ஆரம்பித்தான் வினோத்.
"மச்சான்.."
"என்னா மச்சி.. செம்ம எனர்ஜியா பேசுற..? என்ன விஷயம்..?"
"ஆமா மச்சான்.. செம்ம ஹாப்பியா இருக்கேன்.. என் ஆளு கால் பண்ணி இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தாடா.. அய்யோ.. நம்பவே முடியல மச்சான் அவ கிட்ட இவளோ நேரம் பேசிட்டு இருந்தத.."
"சரி சரி போதும்.. நார்மலாகு.. ஹார்ட் அட்டாக் வந்துட போகுது.."
"ஆமா மச்சான்.. உண்மையாவே வந்துடும் போல.. அப்டி தான் இருக்கு.."
அவளிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மதனிடம் கூறினான். 
"ஹ்ம்ம்.. எப்டியோ கெட்டதுலயும் ஒரு நல்லது மாதிரி இந்த ஆக்சிடென்ட்டால அவகிட்ட போன்ல பேசுறதுக்கு வாய்ப்பு கெடச்சிருச்சி.."
"ஆமா மச்சி.. தேங்க்ஸ் டூ யூ.."
"எனக்கு எதுக்குடா தேங்க்ஸ் சொல்ற..?"
"நீ தானே அவ கிட்ட என் நம்பர் கொடுத்த..?"
"டேய்.. நான் கொடுக்கல டா.."
"என்னடா சொல்ற.. நான் கேட்டதுக்கு உங்கிட்ட வாங்குனேன்னு சொன்னா..?"
"இல்லடா.. நான் கொடுக்கலயே.."
குழம்பினான் வினோத். 'அப்றம் ஏன் இவன்கிட்ட வாங்குனேன்னு சொன்னா..?'
"சரி மச்சி.. நான் அப்புறம் பேசுறேன்.." எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான் வினோத்.
யோசிக்கத் தொடங்கினான். சில நிமிட யோசனைக்குப் பிறகு மெலிதாக புன்னகைக்கத்தான். மீண்டும் போனை எடுத்தவன் அவளை அழைத்தான்.
"ஹலோ ரேகா..?" என்றான்.
"சொல்லுங்க வினோத்.."
"என் நம்பர் எப்டி கிடைச்சது உங்களுக்கு..?"
சில நொடி மௌனம்.
"அதான் சொன்னேனே.. உங்க பிரென்ட் கிட்ட வாங்கு.." 
அவள் முடிக்கும் முன்பே வினோத் பேசினான்.
"பொய்.."
அவள் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
"உண்மைய சொல்லுங்க.. என் நம்பர் எப்டி  கிடைச்சது..?"
அவள் பேசவில்லை.
"ரேகா..?"
"வினோத்.. நம்பர் எப்டி கிடைச்சதுங்கறது இப்போ ரொம்ப முக்கியமா? அதுக்கு போய் இவ்ளோ விசாரணை பண்ணிட்டு இருக்கீங்க.."
இத்தனை நேரம் அவனுக்கிருந்த சந்தேகம் இப்போது ஊர்ஜிதமானது. மகிழ்ச்சி பெருக்கெடுக்க சிரித்தான்.
"நான் சொல்லவா..? நான் கொடுத்த கவிதை நோட்ட நீங்க படிச்சிருக்கீங்க.. அதனால தான் கடைசி பக்கத்துல நான் எழுதி வச்சிருந்த என் போன் நம்பர் உங்களுக்குதெரிஞ்சிருக்கு.. கரெக்ட்டா..?"
அவள் மீண்டும் பேசாமல் அமைதியானாள்.
"என்ன ரேகா.. பேச்ச காணோம்..?"
அமைதி தொடர்ந்தது.
"பேசுங்க ரேகா.."
இந்த முறை அமைதி கலைத்தாள்.
"என்னங்க வேணும் உங்களுக்கு..?"
"என் நம்பர் உங்களுக்கு எப்டி.."
"ஆமா.. உங்க கவிதை நோட்டப் படிச்சேன்.. போதுமா..? வைங்க.."
முதன்முறையாக அவளின் கோபத்தை ரசித்தான். 'முட்டக் கண்ணி.. தமிழ் படிக்க தெரியாதுன்னு சொல்லிட்டு படிச்சிருக்கா..' சிரித்தான். விசிலடித்தான். மொபைலுக்கு முத்தமிட்டான். விபத்து ஏற்படுத்திய வலி கொஞ்சமும் அவன் நினைவில் இல்லை. அவனது மூளையின் ஒவ்வொரு செல்லும் ரேகாவை மட்டுமே அப்போது நினைத்துக் கொண்டிருந்தது.

(தொடரும்..)