"ஊர்ல எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நீ ஏன் மச்சான் ஜெஸ்ஸிய லவ் பண்ண.." எனக் கேட்டுவிட்டு இடைவிடாமல் சிரிக்கத் தொடங்கினான் மதன்.  
எரிகிற தீயில் எண்ணெய்யென  இருந்தது வினோத்திற்கு.
"டேய்.. வெறுப்பேத்தாம சும்மா இரு.."
சிரித்து முடித்து ஓய்ந்தான் மதன்.
"மச்சான்.. நீ அந்த பொண்ணுக்கூட பிரெண்டாகிட்டேன்னு சொன்னதும் நான் கூட சந்தோஷப்பட்டேன்.. அந்த பொண்ணு கண்டிப்பா உனக்கு ஓகே சொல்லிடும்ன்னு.. ஆனா இப்ப நீ சொன்னியே மேட்டரு செம்ம.. இப்ப கண்பார்மா சொல்றேன்.. ஒரு பெர்ஸன்ட் கூட வாய்ப்பில்லை.."
வினோத் எதுவும் பேசாமல் அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"ப்ராக்டிக்கலா பாரு மச்சான்.. அம்மா அப்பா சொல்ற பையன தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குற பொண்ணு.. ப்ளஸ் கிறிஸ்டியன்.. இதுல மலையாளி.. 0.000001 கூட சான்ஸ் இல்ல.. சினிமால வர மாதிரி 'உன் லவ் ட்ரு லவ் மச்சான்.. கண்டிப்பா இந்த பொண்ணுக்கு உன்ன புடிக்கும்' அப்டின்னு நான் பேசுவேன்னு எதிர்பாக்காத.."
மதன் பேசியதற்கு எந்த பதிலும் கூறாமல் கைகளை பிசைந்தபடி அமர்ந்திருந்தான் வினோத்.
"சரி மச்சான்.. அந்த கவித நோட்ட என்னா பண்ண..?"
"அத அவகிட்டயே குடுத்துட்டேன்.."
"குடுத்துட்டியா.. எப்டி..?"
வினோத்திற்கு அந்த காட்சி மீண்டும் அவனுக்குள் ஓட ஆரம்பித்தது.
"தமிழ் படிக்க தெரியாதா..?" என மீண்டும் ரேகாவிடம் கேட்டான் வினோத்.
"ஆமா.." என்றாள்  ரேகா.
சில நொடிகள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
"சரி பரவால்ல.. இத வாங்கிக்கோங்க.."
"தமிழ் படிக்க தெரியாதுன்னு சொல்றேன்.. அப்பவும் இத வாங்கிட்டுப் போய் என்ன பண்ண போறேன்.."
"இல்லங்க.. எந்த பொண்ணுக்காகவும் இது வரைக்கும் கவிதை எழுதணும்னு தோணுனதே இல்ல.. மொத தடவையா உங்களப் பாக்கும் போது தான் தோணுச்சு.. இந்த நோட்ல இருக்குற ஒவ்வொரு எழுத்தும் உங்கள நினைச்சி உங்களுக்காக மட்டும் எழுதினது.. எழுதி முடிச்சப்பறம் இது எனக்கு சொந்தமானதில்ல அப்டிங்கிற மாதிரி ஒரு பீலிங்.. அதனால இத வாங்கிட்டுப் போய் நீங்க படிச்சாலும் சரி இல்ல படிக்காம தூக்கிப் போட்டாலும் சரி அது உங்க இஷ்டம்.. ஆனா இத நீங்க வாங்கிக்கிட்டா மட்டும் போதும்.."
வினோத் பேசி முடிக்கும் வரை குறுக்கே எதுவும் பேசாமல் இருந்த ரேகா அவன் முடித்ததும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
"நெறைய ரொமான்டிக் மூவிஸ் பாப்பீங்களா..?"
கொஞ்சம் பதட்டமாக இருந்த வினோத் சிரித்துவிட்டான்.
"ஆமா.. நெறைய.." என்றான்.
"தெரியுது.. இப்போ என்ன  இத நான் வாங்கிக்கிட்டா உங்களுக்கு போதும்..?"
"ஆமா.."
"அப்றம்.. நாளைக்கு வந்து அந்த நோட்ட படிச்சீங்களான்னு கேட்டு தொல்லை பண்ணக் கூடாது.."
"கண்டிப்பா மாட்டேன்.."
"சரி குடுங்க.."
வினோத்தின் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த காட்சி நின்றது.
"மச்சான்.. இந்த டயலாக் எல்லாம் நீயே எழுதிக்குறியா இல்ல பதினோரு பேர் கொண்ட குழு வச்சிருக்கியா..?" என்றான் மதன்.
"போடா *******.. உங்கிட்ட போய் சொன்னேன் பாரு.." எனக் கூறிவிட்டு வேலையைப் பார்க்க தொடங்கினான் வினோத்.

இரண்டு நாட்கள் ரேகாவை பார்க்க முடியவில்லை. வினோத்திற்கும் வேலைப்பளு அதிகமாக இருந்தது. ஆனால் அத்தனை வேலைப்பளுவிற்கிடையிலும் "ரேகா என்ன பண்ணிட்டு இருப்பா..? என்னை பத்தி யோசிப்பாளா..? கவிதைய படிச்சிருப்பாளா..? அவளுக்கு என்னை புடிக்குமா..?" என அவளைப் பற்றிய எண்ணங்களே வினோத்தின் மனதை ஆக்கிரமித்திருந்தன. 

பெரியப்பா மகன் திருமணத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு திருச்சி சென்றான் வினோத். சுற்றிலும் சொந்த பந்தங்கள் இருந்ததாலும் திருமண வேலைகளில் இருந்தாலும் பெரும்பாலும் ரேகாவின் நினைவுகள் அவனுக்குள் எழவில்லை. திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு மாலை நேரம் வீட்டிற்கு வெளியே சேரில் அமர்ந்திருந்தான் வினோத். அருகில் அவனது அம்மா செல்வியும்  தங்கை கீதாவும்  இருந்தார்கள். வினோத் வீடு இருக்கும் பகுதி இப்போது தான் குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் பகுதி என்பதால் வீடுகள் சொற்பமே. ஒவ்வொரு வீடும் சில அடிகள் தள்ளியே இருக்கும். மொபைலில் பேஸ்புக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வினோத் அவனது அம்மாவின் பேச்சினால் கவனம் கலைக்கப்பட்டான்.
"ஏன்டா.. செந்திலுக்கு அவன் மாமனார் வீட்டுல எவ்ளோ பவுனு போட்டாங்கன்னு தெரியுமா..?"
"யம்மா.. அது நமக்கு ரொம்ப முக்கியமா..?"
"இல்லடா.. 40 பவுனு போட்டாங்கன்னு உன் சித்தி சொன்னா அதான் கேட்டேன்.."
"அதெல்லாம் எனக்கு தெரியாதுமா..?"
அமைதியாக இருந்த கீதா இருவரின் பேச்சுக்கிடையில் நுழைந்தாள்.
"யம்மா.. நீ உன் மவனுக்கு கல்யாணம் பண்ணும் போது எவ்ளோ கேப்ப..?"
"போடி.. பவுனா முக்கியம்.. பொண்ணு நல்லா இருக்கணும்.. அதான் வேணும்.."
கீதா சிரித்துக் கொண்டே வினோத்திடம் சொன்னாள்.
"டேய் தெரியுமா.. அம்மா 'செம்பருத்தி' நாடகத்துல வர ஹீரோயின் மாதிரி செவப்பா அழகா இருக்குற  பொண்ணு தான் உனக்கு பாக்குமா..?"
"சரி.. அந்த பொண்ணும் அழகான பையன் தான் வேணும்னு கேட்டா என்ன பண்ணுவாங்களாம்..?"
கொஞ்சம் வேகமாக பேசினாள் செல்வி.
"டேய்.. உனக்கு என்னடா.. நல்லா எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க..?"
"யம்மா.. சத்தியமா சொல்லு.. எம்.ஜி.ஆர நீ பாத்ததில்ல..?"
"டேய் போடா.. சும்மா விளையாடிக்கிட்டு.. நல்லா அழகா வேலையில இருக்குற பொண்ணாதான் உனக்கு பாப்பேன்.. தோ.. நம்ம கணேசன் மாமா இருக்குல்ல அவரோட பொண்ணு படிச்சி முடிக்க போறாளாம்.. உனக்கு தான் கேட்டாரு..  நான் அவரு பொண்ண பாத்ததில்ல.. பொண்ணு நல்லா இருந்தான் தான் சரின்னு சொல்லுவேன்.."
வினோத்தும் கீதாவும் சிரித்துக் கொண்டார்கள்.
"யம்மா.. ஏன் நம்ம ஜாதிலையே பொண்ண பாத்துக்கிட்டு.. வேற வேற ஜாதில  கல்யாணம்  பண்ணாதான்மா இந்த ஜாதியெல்லாம் ஒழியும்.."
"போடா.. ஏதாவது ஒண்ணுன்னா நம்ம ஜாதி சனம் வர வேணாமா..?"
"அட.. வேற ஜாதில கல்யாணம் பண்ணா அவங்கயெல்லாம் வராம போய்டுவாங்களா.. என்னமா நீ..?"
"அதெல்லாம் வேற ஜாதில வேணாம்.."
வினோத் சிறிது நேரம் அமைதியாக மொபைலை பார்த்தபடி இருந்தான். கீதாவும் அவனது அம்மாவும் எதையோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். வினோத்திற்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. மெதுவாக பேச்சைத் தொடங்கினான்.
"யம்மா.. நான் கிறிஸ்டியான மாறிடலாம்ன்னு இருக்கேன்.."
செல்வி புரியாமல் கேட்டாள்.
"அப்டினா..?"
"ம்மா.. இந்த ஏசு சாமி கும்பிடுவாங்கள அதுக்கு மார்ரென்னு சொல்றான்மா.." என்றாள் கீதா.
கேட்டதும் கோபமான செல்வி,
"அந்த வெளக்கமாத்த எடுத்துட்டு வாடி.." என்றாள்.
வினோத் வேகமாக எழுந்து வீட்டுக்குள் ஓடினான்.

அன்று காலை தான் சென்னை வந்திருந்தான் வினோத். குளித்து உடைமாற்றிக் கொண்டு ஆஃபீஸ் செல்ல தயாராக இருந்தபோதும் குளித்துக் கொண்டிருக்கும் மகேஷ் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தான். பாத்ரூமிலிருந்து  வெளியே வந்த மகேஷ் டிவி பார்த்தபடி அமர்ந்திருந்த வினோத்தை பார்த்து திகைத்தான்.
"டேய்.. என்னடா.. இன்னும் இருக்க.. நான் கூட நீ போயிருப்பன்னு நினைச்சேன்.."
"உங்கிட்ட பேச தாண்டா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.."
"ஏன் ஈவ்னிங் வந்து பேச முடியாதா..? அப்டி என்ன முக்கியமான விஷயம்.."
"சும்மா உங்கிட்ட இப்ப சொல்லணும்னு தோணுச்சு.. கெளம்பி வா.. டீ சாப்ட்டு போலாம்.."
"ஒனக்கு லேட்டாகாதா..?"
"அதெல்லாம் பரவால்ல.. நீ சீக்கிரம் கெளம்பி வா.."
மகேஷ் உடைமாற்றிக் கொண்டு வினோத்தை பைக்கில் ஏற்றிக் கொண்டு அவர்கள் வழக்கமாக செல்லும் டீக்கடைக்கு சென்றான். வழக்கமான அதே டீ. வழக்கமான அதே மரத்தடி நிழல்.
"சொல்லு.. என்ன விஷயம்.." என நேரடியாக விஷயத்திற்கு வந்தான் மகேஷ். 
"மச்சான்.. அந்த பொண்ணு.."
"யாரு.. உன் ஆளா..?"
"ஹ்ம்ம்.. ஆமா.. அவ கிறிஸ்டியன்டா.."
"ஓ.. அப்டியா.. எப்டி தெரியும்.."
"கவித நோட்ட அவகிட்ட கொடுக்க போனேன்.. அப்போ தான் சொன்னா.."
"அப்போ கவித நோட்ட கொடுத்துட்டியா..?"
"ஹ்ம்ம்.. ஆமா.."
"பரவாலயே.. சரி விடு.. அந்த கவிதையெல்லாம் படிச்சிட்டு உன்ன பத்தி நல்ல இம்ப்ரெஸ்ஸன் கிடைக்கும் அந்த பொண்ணுக்கு.."
"க்கும்.. படிச்சாத்தானே..?"
"ஏன்டா அப்டி சொல்ற.."
"ஆமாடா.. அவளுக்கு தமிழ் படிக்க தெரியாதாம்.. அவ மலையாளி.."
"இது வேறயா..?"
மதன் சொன்ன வார்த்தைகளை மகேஷிடம் சொன்னான் வினோத்.
"மச்சான்.. உன் ஆஃபீஸ் பிரென்ட் சொன்னது தான் கரெக்ட்டு.. உனக்கு பேவரா ஒரு விஷயம் கூட இல்லை.. தயவு செஞ்சி அந்த பொண்ண விட்டுடு.."
"அதான் வீட்டுல கூட கேட்டேன்.. கிறிஸ்டியனா கன்வெர்ட் ஆகிடவான்னு.."
"அடப்பாவி.. அந்த அளவுக்கு போய்ட்டியா..?  என்ன சொன்னாங்க வீட்டுல..?"
"வெளக்கமாத்த எடுக்க சொன்னாங்க.."
சிரித்தான் மகேஷ்.
"பின்ன வேற என்ன சொல்லுவாங்க.. ஏன்டா ரெண்டு மாசம் தெரியுமா அந்த பொண்ண..? அதுவும் இப்ப ஒரு பத்துநாளா தான் அந்த பொண்ணுகிட்ட பேசவே செய்யுற.. அப்படி இருக்கும் போது அந்த பொண்ணுக்காக கிறிஸ்டியனா கன்வெர்ட் ஆகுறேன்னு சொல்றியே.."
"மச்சான்.. இப்போ எங்கிட்ட உன் பேமிலி முக்கியமா இல்ல அந்த பொண்ணு முக்கியமான்னு கேட்டா கொஞ்சம் யோசிச்சிட்டு என் பேமிலி தான் முக்கியம்ன்னு சொல்லுவேன்.. அதுவே அந்த பொண்ணு முக்கியமா இல்ல மதம் முக்கியமான்னு கேட்டா கொஞ்சம் கூட யோசிக்காம சொல்லுவேன் அவ தான் முக்கியம்ன்னு.."
"ஹ்ம்ம்.. ரைட்டு.. சரி நீ கன்வெர்ட் ஆகுற கதையெல்லாம் அந்த பொண்ணு ஒனக்கு ஓகே சொன்னா தானே..? எப்பிடியும் அது நடக்காது.. வா போலாம்.."
"டேய்.. என்னடா.."
"சரி வா.. ஆபீஸ்க்கு லேட்டாகுது.."
என வினோத்தை இழுத்துக் கொண்டு டீக்கடையிலிருந்து கிளம்பினான் மகேஷ்.


(தொடரும்..)