Image Courtesy: http://www.neerodai.com/

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த வினோத் அருகில் இருந்த மரபெஞ்சில் போய் அமர்ந்தான். அவளுடன் பேசிய வார்த்தைகளை மீண்டும் மனதுக்குள் ஓட்டிப் பார்த்தான். அப்படி ஆரம்பித்திருக்க கூடாதோ? இப்படி தொடங்கியிருக்கலாமோ? எனப் பலவாறு யோசித்துக் கொண்டிருந்தவன் எழுந்து லிப்ட் நோக்கி நடக்கத் தொடங்கினான். வினோத் எப்போது வருவான் எனக் காத்திருந்தவனைப் போல அவன் கேபினுக்குள் நுழைந்ததும் மதன் கேட்டான்.
"எங்கடா போயிருந்த..? கொஞ்ச நேரம் சீட்ல ஆள் இல்ல.."
அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் தன்னுடைய சீட்டில் அமர்ந்தான் வினோத்.
"என்னடா.. ஒண்ணும் பேச மாட்டேங்குற.. எங்க போயிருந்த இவ்ளோ நேரம்.."
அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு வினோத் சொன்னான்.
"ப்ரொபோஸ் பண்ண போயிருந்தேன்.."
"என்னடா டீ சாப்ட போன மாதிரி சொல்ற..?"
வினோத் பதில் எதுவும் பேசவில்லை.
"டேய்.. நெஜமாத்தான் சொல்றியா..?"
"அட.. ஆமாடா.."
"இங்க காட்டு.." எனக் கூறிவிட்டு வினோத்தின் தாடையைப் பிடித்து இரண்டு கன்னங்களையும் மாறி மாறிப் பார்த்தான் மதன்.
"ப்ச்.. என்னடா பண்ற.."
"இல்ல கன்னத்துல ஏதாவது செருப்பு அச்சு இருக்கான்னு பாக்குறேன்.."
"ச்சீ.. கைய எடு.."
"ஹ்ம்ம்.. சரி.. என்ன நடந்தது சொல்லு.."
சொல்லிமுடித்தான் வினோத்.
"சோகமா இருக்காடா..?" என்றான் மதன்.
"ஆமாடா.."
"த்து மூஞ்ச பாரு.. ஏண்டா.. இப்போ தான் ரெண்டு மாசமா அந்த பொண்ண பாத்த.. நல்லா கிடைச்சதெல்லாம் தின்னுட்டு கொழு கொழுன்னு வளத்து வச்சிருந்த உடம்ப "சிக்ஸ் பேக் வைங்க அத்தான்னு" அந்த பொண்ணு என்னமோ உங்கிட்ட வந்து சொன்ன மாதிரி டயட்டு, எக்ஸ்சைஸ்ன்னு லூஸு மாதிரி சுத்திட்டு இருந்த.. உன் பேரு கூட தெரியாத ஸ்டேஜ்ல போய் அந்த பொண்ணுகிட்ட "I love you"ன்னு சொன்ன உடனே "I love you too"ன்னு அந்த பொண்ணும் சொல்றதுக்கு நீ என்ன உன்ன ஆர்யா, மாதவன்னு நினைச்சிக்கிட்டியா..?"
"டேய்.. அவ நோ சொன்னதுக்காக நான் சோகமா இல்லடா.. நான் என்ன சொல்ல வந்தேன்னு முழுசா கேக்காமலே போய்ட்டாளே அதாண்டா சோகமே.."
"நின்னு கேட்டிருந்தா மட்டும் அந்த பொண்ணு மனசு மாறியிருக்குமா..?"
"இல்ல.. மனசுல இருக்குற எல்லாத்தையும் சொல்லிட்டோம்னு எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்திருக்கும்.."
"நிம்மதி தானே வேணும்.. எழுந்து வா.."
"எங்கடா.."
"ஹ்ம்.. நிம்மதி வாங்க.."
"டேய்.. போடா.."
"எங்கூட வா சொல்றேன்.."

மதன், வினோத் இருவரும் கேன்டீனுக்குள் நுழைந்த போது அங்கங்கே சில ஆண்களும் நிறைய பெண்களும் இருந்தார்கள். இருவருக்கும் டீயை வாங்கிக் கொண்டு அமர்ந்திருக்கும் பெண்களை நன்றாக பார்க்கும் படியான ஒரு டேபிளை தேர்ந்தெடுத்து அமர்ந்தான் மதன்.
"இந்தா டீ.. இத அப்டியே கேஸுவலா குடிக்குற மாதிரி குடிச்சிகிட்டே அங்க இருக்குற பொண்ணுங்கள்ல உனக்கு புடிச்ச பொண்ண சைட் அடி.. நிம்மதி தானா வரும்.."
"ப்ச்.. போடா.. நீ வேற.. நேரம் தெரியாம விளையாடிட்டு இருக்க.."
வினோத் முகத்தை சீரியசாக வைத்துக் கொள்ள மதனும் சில நொடிகள் அமைதியாகிவிட்டான்.
"மச்சான்.. நெஜமாவே கஷ்டமா இருக்கா..? ஸாரி டா.. பர்ஸ்ட் லவ்ன்னு சொன்னல்ல..? மறக்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.."
"இல்லடா.. ஏற்கனவே லவ் பண்ணியிருக்கேன்.."
அதிர்ச்சியானான் மதன்.
"டேய்.. கேடி.. சொல்லவே இல்ல இத்தன நாளா ..?"
வினோத் மெலிதாக சிரிக்கவும் அவனது யோசனையை மாற்றுவதற்கு இதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் மதன்.
"சரி.. சொல்லு.. அந்த லவ் பத்தி.." என்றான் மதன்.
"டேய்.. வேணாம்டா.. விட்றா.."
"அதெல்லாம் முடியாது.. இன்னைக்கு சொன்னாதான் விடுவேன்.. சொல்லு.."
"சரி சொல்றேன்.."
மதன் தயாரானான். வினோத் சிரித்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தான்.
"அனு. அவ பேர். ரொம்ப அழகா இருப்பா.. ரெட்டை ஜடை போட்டுட்டு. அப்போ ரெண்டு பெரும் அஞ்சாவது படிச்சிட்டு இருந்தோம்.."
"பப்பி லவ்வா..?" எனக் கேட்டு விட்டு சிரிக்கத் தொடங்கினான் மதன்.
"டேய்.. உனக்கு கத சொல்லணுமா வேணாமா?"
"சரி சரி.. சொல்லு.. கோவிச்சிக்காத.."
"ஹ்ம்.. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் பிரெண்ட்ஸ்.. என் சாப்பாட அவ சாப்புடுவா.. அவ சாப்பாட நான் சாப்டுவேன்.. என் சைக்கிள அவ ஓட்டுவா.. அவ சைக்கிள நான் ஓட்டுவேன்.."
"ஹ்ம்ம்.. அப்றம்.. அவ ட்ரெஸ நீ போட்டுக்குவ.. உன் ட்ரெஸ அவ போட்டுக்குவாளா.."
"டேய்.."
"பின்ன என்னடா.. லவ் ஸ்டோரின்னு சொல்லிட்டு சாப்ட்ட கத சைக்கிள் ஓட்டுன கத எல்லாம் சொல்லிட்டு இருக்க..?"
"அந்த அளவுக்கு நாங்க க்ளோஸ் பிரெண்ட்ஸ்ன்னு சொல்ல வந்தேண்டா.."
"சரி.. நீங்க ரொம்ப க்ளோஸ் பிரெண்ட்ஸ்ன்னு எனக்கு புரிஞ்சிடிச்சி.. விஷயத்துக்கு வா.."
"ஹ்ம்ம்.. சரி.. இப்படியே நாங்க அஞ்சாவதுல இருந்து 12வது வரைக்கும் ஒரே ஸ்கூல்ல, ஒரே கிளாஸ்ல படிச்சோம்.. 11வது ஆனுவல் எக்ஸாம் முடிஞ்சி லீவ்ல இருக்கோம்.. எனக்கு எதையோ மிஸ் பண்ற மாதிரி ஒரு பீலிங்.. என்னடான்னு ஒண்ணும் புரியல எனக்கு.. அப்றம் தான் தெரிஞ்சது.. அவள பாக்காம இருக்கவும் தான் மனசு இப்படி இருக்குன்னு.."
"ச்சே.. செம்ம பீலிங் மச்சான்.. மேல சொல்லு.."
வினோத் பிரகாசமானான். தொடர்ந்தான்.
"ஸ்கூல் தொறந்த பெறகு அவளை புதுசா பாக்குற மாதிரி பாக்க ஆரம்பிச்சேன்.. லாஸ்ட் பெஞ்சுல இருக்குற என்னை மொத பெஞ்சுல இருந்து அடிக்கடி திரும்பி திரும்பி பாப்பா.. அப்டியே பறக்குற மாதிரி ஒரு பீலிங்.. ஒரு நாள் அவ கிட்ட போய் சொன்னேன்.."
இடைவெளி விட்டு நிறுத்தினான் வினோத்.
"ஆஹ்.. சொல்லுடா.. ஏன் நிறுத்திட்ட.." என்றான் மதன்.
"உனக்கு சஸ்பென்ஸ்.."
"மயிறு.. சொல்லித்தொலை.. என்ன சொன்னா அந்த பொண்ணு.."
"நான் உன்ன ஒரு பிரெண்டா தான்டா பாத்தேன்.. வேற எந்த நினைப்பும் என் மனசுல இல்ல.. சாரிடான்னு சொல்லிட்டா.."
சிரிக்கத் தொடங்கினான் மதன். கண்களில் நீர் வரும் வரை சிரித்துக் கொண்டே இருந்தான்.
"மச்சான்.. ஒன் சைடா லவ் பண்ணி அதையும் கான்பிடென்ட்டா போய் சொல்லி பல்பு வாங்கிட்டு வர்றத  ஒரு வேலையாவே வச்சிருக்க.."
"உங்கிட்ட போய் சொன்னேன் பாரு.. போடா" என்று எழுந்து போக எத்தனித்த வினோத்  "படாரென" மீண்டும் சேரில் தலை குனிந்து அமர்ந்து கொண்டான்.  புரியாமல் விழித்தான் மதன்.
"என்னடா ஆச்சி.."
"மச்சான்.. அந்த பொண்ணு வராடா.."
நிமிர்ந்து பார்த்தான் மதன்.
"டேய்.. அந்த பொண்ணு கவுண்டர்க்கு தாண்டா போகுது.."
வினோத் எழுந்து அவளுக்கு முதுகை காட்டியபடி வேறொரு சேரில் அமர்ந்து கொண்டான். 
"ஏன் மச்சான் அந்த பொண்ண பார்த்து இப்படி பயப்படுற.."
"நான் எதுக்குடா பயப்படணும்.. புடிச்சிருக்குன்னு நான் சொன்னேன்.. புடிக்கலன்னு அவ சொன்னா.. அவ்ளோதான்.. முடிஞ்சி போச்சி.. இப்போ என்னை இங்க பாத்தா சங்கடப்படுவா.. ஷையா பீல் பண்ணுவா.. அதான் எதுக்குன்னு திரும்பி உக்காந்துக்கிட்டேன்.."
"மச்சான்.. இந்த பச்ச தண்ணி குடிச்சிட்டு பாயசம் குடிச்ச மாதிரி பீலா உடுறவன பாத்திருக்கியா.."
"டேய்.. மூடு.. அதான் தெரியுதுல.. அப்றம் ஏன் நோண்டுற.. வா.. இந்த  பக்க டோர் வழியா வெளிய போய்டலாம்.."
"சரி வா.. பயத்துல பேண்டுலயே மூச்சா போய்ட போற.."
பொடனியில் ஒரு அடி வைத்து மதனை இழுத்துக்கொண்டு கேன்டீன் விட்டு வெளியே வந்து பெருமூச்சு விட்டான் வினோத்.

வேலை ஓடவில்லை. அவன் முன்னே இருக்கும் கம்ப்யூட்டரின் திரையை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.
"டேய்.. வெறும் பிளாங்க் எக்ஸெல எவளோ நேரம் பாத்துட்டு இருப்ப.. சும்மாவது ஏதாவது பைலை ஓபன் பண்ணிவைடா.. இல்லனா லூஸு வந்து மொக்க போடுவான்.." என்றான் மதன்.
அவனுடைய டீம் லீடரைத் தான் "லூஸூ" என மரியாதையாக அழைத்தான் மதன். வேலை பார்ப்பதைப் போல் வேறு சில பைல்களை திறந்து வைத்தான் வினோத்.
"டேய்.. என்னடா.. ரொம்ப பீல் பண்ற.."
"இல்லடா..  அவளை பாத்ததுல இருந்து டெய்லி அவளுக்காக நான் எழுதின கவிதைடா இதெல்லாம்.. கடைசி வரைக்கும் இந்த நோட்ட வாங்காம போய்ட்டாளேடா.."
"இப்போ என்ன.. இந்த நோட்ட கொடுத்துட்டா அந்த பொண்ண மறந்துட்டு வேற வேலைய பாக்க ஆரம்பிச்சிடுவ.. அப்டி தானே..?"
"ஆமா.."
"சரி வா.."
"எங்கடா.."
"வாடா.."

வினோத்தை அழைத்துக் கொண்டு மீண்டும் வெளியே வந்தான் மதன். ரேகா இருக்கும் கேபின் நோக்கி மதன் செல்லவும் வினோத் மிரண்டு பின்வாங்கினான்.
"மச்சான்.. அங்க வேணாம்டா.. ஏதாவது பிரச்சனையாகிடப் போகுது.."
"டேய்.. அந்த பொண்ணோட ப்ராஜெக்ட்ல சௌந்தர்ன்னு  எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான்.. அவங்கிட்ட பேசி இந்த நோட்ட கொடுக்க சொல்லுவோம்.."
"செய்வானா..?"
"தெரியல.. வா கேட்டு பாப்போம்.."
கேபினுக்குள் நுழைந்து சௌந்தரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் மதன்.
"சௌந்தர்.. இவன் வினோத்.. என் ப்ராஜெக்ட்ல தான் ஒர்க் பன்றான்.." என வினோத்தை அறிமுகம் செய்து வைத்தான் மதன்.
"ஹலோ பாஸ்.." என  வினோத்தோடு கைகுலுங்கினான் சௌந்தர்.
"உங்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்கலாம்னு தான் வந்தேன்"
"சொல்லுடா மதன்.. என்ன ஹெல்ப்" 
சின்ன தயக்கத்துடன் சொல்லத் தொடங்கினான் மதன்.
"ஒண்ணும் இல்ல.. உங்க டீம்ல ரேகான்னு ஒரு பொண்ணு புதுசா  ஜாயின் பண்ணதுல அந்த பொண்ண இவன் லவ் பன்றான்.. அந்த பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் கூட பண்ணிட்டான்.. அந்த பொண்ணும் நோ சொல்லிட்டு போய்டிச்சி.. அந்த பொண்ணு நோ தான் சொல்லும்னு இவனுக்கும் தெரியும்.. இவன் மறுபடியும் வந்து அந்த பொண்ண டிஷ்டர்ப் பண்ண மாட்டான்..  இப்போ என்னான்னா இந்த நோட்ட மட்டும் அவ கிட்ட கொடுக்கணும்.. நீ கொடுத்துடுரியா..?"
இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த சௌந்தர் பதட்டமானான்.
"டேய்.. அந்த பொண்ணா..? போச்சி.."
"ஏன்டா.. என்னாச்சி.."
"டேய்.. அவ ஹெச்.ஆர். ப்ரியங்காவோட ரிலேட்டிவ்டா.. அவங்க ரெபர் பண்ணித்தான்.." என தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான் சௌந்தர். 
அவன் அதற்க்கு மேல் பேசிய எந்த வார்த்தைகளும் வினோத்தின் செவிகளை அடையாத வண்ணம் ஒரு யோசனை அவனுக்குள் ஓடத் தொடங்கியது.
"இன்னைக்கு ஈவினிங் போய் ரெஸுசுயூம் அப்டேட் பண்ண ஆரம்பிக்கணும்.."

(தொடரும்..)