அன்று காலை தான் சென்னை வந்திறங்கினேன். பள்ளி, கல்லூரி அனைத்தையும் திருச்சியை சுற்றியே முடித்ததால் சென்னை வரவேண்டிய அவசியம் எனக்கு இதற்க்கு முன்பு ஏற்பட்டதில்லை. ஆனால் கல்லூரி முடித்து 6 மாதம் ஆகிவிட்டதால் வீட்டார் மத்தியில் தன்மானம் காக்க வேண்டிய அவசியத்தின் பேரில் எனக்கு முன்பே சென்னைக்கு வந்து வேலை தேடிக் கொண்டிருக்கும் என் கல்லூரி நண்பர்கள் தியாகு, கோகுல் இருவருடன் சேர்ந்து வேலை தேடலாம் என்று வந்துவிட்டேன்.

தியாகுவிற்கு சொந்த ஊர் மதுரை அருகே சிறிய கிராமம். விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் முதல் என்ஜினீயர். டியூஷன் பீஸ், ஹாஸ்டல் பீஸ், ஸ்பெஷல் பீஸ் என  பல விதமான பீஸ்  கட்ட கல்லூரி வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறேன்  அவனுடைய அப்பாவின்  முகத்தில் படிந்திருக்கும் பெருமையை. அவருடைய பேச்சில் எப்போதும் இருக்கும் வெள்ளந்தித்தனமும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டுமென உரிமையுடன் எச்சரிக்கை செய்வதும் என் மனதுக்கு நெருக்கமாக அவரை உணரச் செய்திருந்தது. கோகுல் வீட்டில் அப்பா, அம்மா இருவரும் நன்றாக படித்தவர்கள். அப்பா அரசாங்க உத்தியோகம். நடுத்தர வர்க்கம் தான். அதனால் வசதியான  தன் சொந்தக்காரர்கள் முன்னால் நல்ல ஒரு நிலைமையை எட்டிப்பிடித்து ஜெயிக்க வேண்டும் என்பது சிறுவயது முதலே அவன் கொண்ட குறிக்கோள். 

 இரண்டு மாதமாக தியாகு, கோகுல் இருவரும் சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே குறைந்த வாடகையில் சின்ன ஹால், பாத்ரூம், கிச்சன் கொண்ட அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வேலை தேடிக் கொண்டிருந்தனர். காலையில் கிளம்பி மாலை வரை வேலை தேடி விட்டு அறைக்கு வந்து உடை மாற்றிக் கொண்டு அருகே இருக்கும் பீச் வரை நடந்துவிட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டிருந்தனர்.

நான் சென்னைக்கு புதிது என்பதால் வேலை தேடும் படலத்திற்கு விடுமுறை கொடுத்துவிட்டு இருவரும் அன்றைய பொழுதை என்னோடு கழித்தனர். வெளியே போய் ஏதாவது தியேட்டரில் படம் பார்க்கலாம் என்ற எனது யோசனையை இருவருமே ரசிக்கவில்லை.

"மச்சி.. சென்னை ஒன்னும் நம்ம திருச்சி மாதிரி இல்ல.. கைல இருக்குற காசு எப்படி காலியாகும்னே தெரியாது.. அதுவும் இல்லாம நாம இன்னும் வேலை தேடிட்டு தான் இருக்கோம்.. அதனால பாத்து செலவு பண்ணு.. ரெண்டு நாள் இருந்து பாரு உனக்கே தெரியும் காசோட அருமை " எனக் கூறி என்னை வாயடைக்க செய்துவிட்டான் கோகுல். படிக்கும் காலத்தில் ஒரு படம் விடாமல் எங்கள் அனைவரையும் தியேட்டர் தியேட்டராக இழுத்து சென்றவன் இப்படி பேசுவதை பார்த்ததும் எனக்குப் பெரும் ஆச்சர்யம். இரண்டே மாதத்தில் சென்னை பல விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறது போல என நினைத்துக் கொண்டேன். டிபனுக்கு பிறகும் லஞ்ச்க்கு பிறகும் இருவரும் சென்னையில் அடைந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். 

 "காலைல சாப்ட்டு இன் பண்ணிட்டு கிளம்புவோம் மச்சி.. ஒரு நாள்ல ரெண்டு கம்பெனி போவோம்.. ரெசூயும் கொடுப்போம்.. வாங்கி வச்சிட்டு 'வி வில் கால் யு' ன்னு சொல்வாங்க.. வந்துடுவோம்.. அப்படி வாங்கி வச்சிட்ட ஒருத்தனும் கால் பண்ணமாட்டான்.. சில கம்பெனில உள்ளேயே விடமாட்டானுங்க.." என்றான் கோகுல்.

தொடர்ந்தான் தியாகு.

"படிச்சி முடிச்சதும் எல்லா கம்பெனிக்காரனும் வந்து வேலைய தூக்கி குடுத்துரு வாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன் மச்சி.. ஆனா இப்பத்தான் உண்மை என்னான்னு புரியுது.. நாய் பொழப்பா இருக்கு "

ஒரே வாரத்தில் ஏதாவது வேலையில் சேர்ந்து விடலாம் என்ற நினைப்பில் வந்த எனக்கு இவர்களின் வார்த்தைகள் பீதியைக் கிளப்பியது. 

 "ரெண்டு மாசமா வீட்டுல காசு வாங்கி தான் செலவப் பாத்துக்குறோம்.. இந்த மாசத்துல எப்படியாவது ஒரு வேலையில சேந்துடனும் மச்சி.. இல்லனா ரொம்ப அசிங்கமா இருக்கும் வீட்டுக்கு போறதுக்கே" என கோகுல் கூறும் போது தான் நினைவு கூர்ந்தேன் என் வீட்டின் நிலையையும். அந்த கோர்ஸ் படிக்கிறேன் இந்த கோர்ஸ் படிக்கிறேன் எனக் கூறி ஏற்கனவே அப்பாவின் பணத்தை வாங்கி செலவழித்து விட்டதால் இந்த முறை சென்னை வரவும் இங்கே ஆகும் செலவுக்கும் அக்காதான் பணம் கொடுத்தனுப்பினார். மறுமுறை பணம் கேட்க்கும் சூழல் வராது என நினைத்துக் கொண்டு தான் இங்கு வந்தேன். 

 என் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வதை உள்ளூர உணர்ந்தேன். 

மதிய சாப்பாட்டுக்கு பிறகு பேச்சு கல்லூரி கால நினைவுகள் குறித்து திரும்பியது. முதல் ஆண்டு தனியாக அறை ஒதுக்கப்படாமல் பெரிய ஹால் போன்ற அறையில் தங்க வைக்கப்பட்டது, "ஹாஸ்டல் டே" கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்கியது, விடியவிடிய கண் விழித்து கணக்கு பரீட்சைக்கு படித்துவிட்டு மறுநாள் தேர்வு எழுதும் அறையில் தூங்கி போனது, முதன் முதலாக குடித்துப் பார்த்த பீர், தாமதமாக எழுந்து  குளிக்காமல் அவசர அவசரமாக பல்லை மட்டும் விளக்கிவிட்டு ஓடிய நாட்கள் என பேச்சு நீண்டு கொண்டே போனது. வேலைப் பற்றியும் அடுத்த மாதம் வரப் போகிற பணப் பற்றாக்குறை குறித்தும் எங்களில் யாரும் பேசவில்லை. நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்ததில் பசி எடுத்தது. அறைக்கு வெளியே கொஞ்சமாக இருட்டத் தொடங்கி இருந்தது. அருகில் உள்ள ஒரு டீக்கடையில் சென்று சூடாக போடப்பட்டிருந்த வடை, பச்சி, போண்டா என எல்லாவற்றிலும் ஒவ்வொன்றாய் சுவைத்துவிட்டு டீ ஒன்றை குடித்து மாலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம். “அடுத்து என்ன” என்ற கேள்வி என் மனதுக்குள் எழுந்த அதே நிமிடம் “பீச்சுக்கு போலாமா மச்சி” என்றான் கோகுல். “ஆஹா.. அருகில் தான் மெரீனா இருக்கிறது என்று இருவரும் சொல்லியிருந்தும் எப்படி இத்தனை நேரமும் அதனை பார்க்க வேண்டும் என்று தோன்றாமல் இருந்தது?” என்ற ஆச்சர்யத்துடன் “சூப்பர் மச்சி.. வா போலாம்” என்றேன் நான்.

நாங்கள் பீச்சை அடைந்த போது கடல் 90 சதவிகிதம் இருளில் காணாமல் போயிருந்தது. ஆனால் அந்த மணலில் கால்களை இழுத்து இழுத்து நடப்பது எனக்கு பிடித்திருந்ததால் கடலை அளப்பது போல சிறிது தூரம் அவர்களையும் நடத்திக் கொண்டிருந்தேன். பிறகு மூவரும் கால்களை அலைகளில் நனைத்தோம். அந்த உப்புக் காற்றும், கால் நனைத்துப் போன அலைகளும் சென்னையை எனக்கு சிறிது நேரம் நெருக்கமாக உணர்வதற்கு உதவின. ஈரக்கால்களில் மணல்களை அள்ளிக்கொண்டு அங்கு கூடியிருந்த ஜோடிகளை தொல்லை செய்யாத இடமாக பார்த்து அமர்ந்து கொண்டோம். கோகுல் தான் பேச்சை ஆரம்பித்தான்.

 “நானும் இவனும் பகல்ல வேலை தேடுவோம் மச்சி.. ஈவினிங் ஆனதும் இங்க வந்து உக்காந்துடுவோம்.. அப்றம் மாறிமாறி ரெண்டு பேரும் பொலம்பிட்டு இருந்துட்டு கெளம்பி போய்டுவோம்.. இப்படி தான் ரெண்டு மாசமா ஓடுது..”

 “வீட்ல டெய்லி போன் பண்ணி என்னடா ஏதாவது வேலை கிடைச்சதான்னு கேக்குறாங்க? என்ன பதில் சொல்றதுன்னே தெரியல” என்றான் தியாகு.

“சரி செலவுக்கு வீட்ல காசு கேக்காம பார்ட் டைமா ஏதாவது வேலை போகலாம்ன்னு நம்ம சீனியர் பாலா இல்ல அவர்கிட்ட ஐடியா கேட்டேன்.. பார்ட் டைமா போகலாம்ன்னு தான் போவ.. அப்றம் அதிலேயே இருக்குற மாதிரி ஆகிடும்ன்னு பயமுறுத்துராரு.. ஒரே குழப்பமா இருக்குடா”

“நீ வந்ததுல இருந்து ஜாப் பத்தி நல்ல விஷயமாவே சொல்லவே இல்லல.. சாரி மச்சி.. இங்க நாங்க இத்தனை நாள் பட்டத சொன்னோம்.. யாருக்கு தெரியும் ஒரே வாரத்துல கூட உனக்கு வேலை செட் ஆகலாம்.. பாப்போம்..”

 “டேய்.. அதெல்லாம் ஒண்ணுமில்லடா” என்றேன் நான் பீதியை மறைத்தப்படி. ஒவ்வொரு முறை அவர்கள் வேலை பற்றிக் கூறும் போதும் அடிவயிறு கலங்கியது. ஆனால் அதை அவர்களிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. வேலைவாய்ப்பின்மை பற்றிய பேச்சு கசப்பாக இருக்க, பேச்சை மாற்றும் விதமாக அவர்களிடம் கேட்டேன்.

“மச்சி.. எல்லாம் ஜோடி ஜோடியா உக்காந்து இருக்காங்க”

 “இது இங்க சகஜம் மச்சி.. பகல்லேயே சில பேர் மறைவா உக்காந்து கிஸ் அடிச்சிட்டு இருப்பாங்க.. நைட் எல்லாம் சொல்லவே வேணாம்.. ஆனா சில நேரம் போலீஸ் வந்து விரட்டி விட்டுடுவாங்க..” என்றான் தியாகு.

அப்போது கோகுல் எங்கள் வயது ஆண்களின் சுவாரசியத்தை தூண்டும் ஒரு விஷயத்தை சொன்னான்.

 “ஒரு நாள் தியாகு ஊருக்கு போயிருக்கவும் நான் மட்டும் தனியா இங்க பீச்சுக்கு வந்திருந்தேன் மச்சி.. இதே டைம் தான் இருக்கும்.. தோ அங்க கண்ணகி சிலைக்கு கொஞ்சம் தள்ளி உக்காந்து இருந்தேன். ஒரு லேடி வந்தது. எங்கிட்ட வந்து “ஏய்.. கை போடுறியா.. வெறும் 10 ரூவா தான்.. 5 நிமிஷம் நல்லா அமுக்கிக்கலாம்”ன்னு சொன்னுச்சி.. எனக்கு அப்டியே குப்புன்னு வேத்துடுச்சி.. இல்ல வேணாங்கன்னு சொல்லிட்டு எழுந்து ஓடிட்டேன்.. அதுக்கு அப்றம் தனியா வந்தா கொஞ்சம் ஆளுங்க இருக்குற, நல்லா வெளிச்சம் இருக்குற ஏரியாலேயே உக்காந்துக்குவேன்..”

 “டேய்.. நிஜமா வேணான்னு சொன்னியா.. நம்ப முடியலையே” எனக் கலாய்க்க முயன்றேன் நான்.

“அட நீ வேறடா.. ஏற்கனவே வேலையில்லாம சுத்திட்டு இருக்கேன்.. இதுல இந்த மாதிரி விஷயத்துல சிக்குனா அவளோ தான்”

மீண்டும் பேச்சு நீண்டு கொண்டே போனது. பசியே தெரியவில்லை. இதற்க்கு மேல் பேசுவதற்கு விஷயம் இல்லை எனத் தோன்றிய பிறகே எல்லோரும் போனில் மணியை பார்த்தோம். 10.30 ஆகியிருந்தது.

“சரி எந்திரிங்கடா போலாம்.. போலீஸ் வந்தாங்கன்னா என்னா இந்த நேரத்துல இங்கன்னு கேள்வி மேல கேள்வி கேப்பானுங்க” என்றான் கோகுல்.

 பேண்டின் பின்புறம் ஒட்டியிருந்த மணலைத் தட்டி விட்டு, மணலில் கால் புதைய கண்ணகி சிலையை அடைந்து அதற்கு நேரே செல்லும் பாதை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நான், தியாகு, கோகுல் என மூவரும் வரிசையாக ரோட்டின் ஓரமாக சென்று கொண்டிருந்தோம். தியாகு தான் பேசிக் கொண்டு வந்தான். நிச்சயம் எதுவும் முக்கியமானது இல்லை என்பது மட்டும் தெரியும். அப்போது எங்களுக்கு பின்னே வந்த வண்டியில் இருந்த ஒருவன் கோகுலின் முதுகில் “பளீரென” ஒரு அடி வைத்தான். எதிர்பாராத அந்த அடியில் பொறி கலங்கிப் போய் தரையில் உக்கார்ந்து கொண்டான் கோகுல். நாங்கள் சுதாரித்து கோகுலை பிடித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தோம். ஒரு பைக்கிற்கு நான்கு பேர் வீதம் இரண்டு பைக்கில் சிலர் சென்று கொண்டிருந்தார்கள். கோகுலை அடித்தவன் இரண்டாவது பைக்கில் கடைசியாக அமர்ந்திருந்தான்.

“மச்சி.. என்னாச்சிடா..” என்றான் தியாகு.

“முடியலடா.. வலிக்குதுடா.. ஆஹ” என்பதை தவிர கோகுல் எதுவும் பேசவில்லை.

“எதுக்குடா உன்ன அடிச்சான்.. வழியை மறிச்சிட்டு இருந்தியா”

“டேய்.. ஓரமா தாண்டா வந்துட்டு இருந்தேன்.. சும்மா அடிச்சிட்டு போறான்டா..”

“தேவிடியாபசங்க.. திமிரா அடிச்சிட்டு போறானுங்க பாரு.. கேனக்கூதிங்க..” என அவர்களை இன்னும் எழுத முடியாத வார்த்தைகளில் எல்லாம் வசை மழைப் பொழிந்தான் தியாகு.

கோகுலை ஒருவாறு தேற்றி எழுப்பி அவனை நடத்திக் கொண்டு சென்றோம். அடித்து விட்டு சென்ற கும்பல் அந்த சாலையின் முனையில் நின்று அவர்களுக்குள் விளையாடிக் கொண்டிருந்தனர். திருவல்லிக்கேணி ரயில்வே நிலையத்தை ஒட்டிய ஏரியாவை சேர்ந்தவர்கள் என்பதை அவர்களின் இயல்பான உடல்மொழியே கூறியது. அவர்களின் அருகே சென்றோம் நாங்கள். கோகுலை அடித்தவனின் அருகில் சென்று தியாகு,

“ஹலோ.. நீங்க தானே இவன அடிச்சிங்க.. சும்மா வந்துட்டு இருந்த இவன எதுக்கு அடிச்சிங்க” என்றான்.

உடனே அனைவரும் ஒரே குரலில், “அடீங்க..” என்றார்கள். அடித்தவன் தியாகுவின் அருகில் வந்து, “ஆமா.. நாந்தான் அச்சேன்.. இன்னா பண்ணுவ.. இந்த மறுவடியும் அடிக்குறேன்ப் பாரு..” எனக் கூறிக்கொண்டே கோகுலின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.

“அம்ம்ம்மா..” என்ற அலறலோடு நடுரோட்டில் அமர்ந்து கொண்டான் கோகுல்.

தியாகு பதறியபடி கோகுலிடம், “டேய்.. என்னடா ஆச்சி..” என அவன் முகத்தை பார்த்துவிட்டு, அடித்தவனிடம், “ஹலோ.. ரொம்ப ஓவரா போறீங்க..” என்றான்.

“அப்பிடி தாண்டா பண்ணுவோம்” என அவன் குரல் உயர்த்தும் போது பின்னால் ஒரு போலீஸ் ஜீப் வந்தது. அதனைப் பார்த்ததும் அவர்கள் வண்டியை எடுத்துக் கொண்டு நகர எத்தனித்தார்கள். அப்போது இத்தனை நேரமும் அங்கே நடந்ததை பார்த்தப்படி இருந்த வாழைப்பழம் விற்கும் பாட்டி தியாகுவை அழைத்து, “தம்பி.. அந்த போலீஸ் கிட்ட போய் சொல்லுங்க.. இவனுங்களுக்கு இதே வேலையா போச்சி.. எவனையாது புடிச்சி வம்பிளுத்துக்கினே இருப்பானுங்க” என்றார். தியாகுவும் அதுதான் சரியென அவர்கள் நழுவும் முன் போலீசிடம் சொல்ல முற்படும் போது கோகுல் அவனை தடுத்தான்.

“டேய்.. வேணாம்.. வா.. போய்டலாம்..”

“ஏண்டா.. சொல்லலாம்டா போலீஸ்ட்ட”

“சொன்னக் கேளு.. போய்டலாம் வா..” என அறைக்கு செல்லும் பாதையில் முகத்தை மூடியப்படி நடக்கத் தொடங்கினான்.

நீங்கள் நினைப்பது சரிதான். இத்தனை நேரமும் நான் வேடிக்கைப் பார்ப்பதை தவிர வேறெதையும் செய்யவில்லை. இதுவரை பள்ளியிலோ, கல்லூரியிலோ யாருடனும் சண்டை போட்டதில்லை. போடுவதற்கான சூழ்நிலை வந்ததும் இல்லை, ஏற்படுத்திக் கொண்டதும் இல்லை. திடீரென தடி தடியாக இருந்த அத்தனை முரடர்களுடன் அதுவும் சென்னை வந்த முதல் நாளே அப்படி ஒரு சம்பவம் பெரும் பயத்தை எனக்கு கொடுத்தது.

அறைக்கு வந்த பிறகு தியாகு கேட்டான் கோகுலிடம், “ஏண்டா போலீஸ்ல சொல்ல வேணாம்ன்னு சொன்ன”

“டேய்.. ஏற்கனவே வேலை தேடலாம்ன்னு இங்க வந்து ரெண்டு மாசமா சும்மா உக்காந்துட்டு இருக்கோம்.. இதுல போலீசு அது இதுன்னு போய், விஷயம் வீட்டுக்கு தெரிஞ்சதுன்னா ‘நீ வேலை தேடி கிழிச்சது போதும்.. வீட்டுக்கு வந்து சேருன்னு’ சொல்லிடுவாங்க.. இப்போ அமைதியா வந்துட்டதால எந்த பிரச்னையும் இல்லை.. விடு..” எனக் கூறிவிட்டு முகத்தை துணியால் ஒத்தடம் கொடுப்பதை போல செய்து கொண்டே படுத்துக் கொண்டான் கோகுல்.

“தேவிடியாபசங்க..” என அவர்களை திட்டிவிட்டு கோகுலுக்கு வலது புறம் தியாகு படுத்துக் கொள்ள இடது புறம் நான் படுத்துக் கொண்டேன்.

கோகுல் அமைதியாக அழுதான். அவன் வலியை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தியாகுவும் நானும் எதுவும் அவனிடம் கேட்கவில்லை.

அத்தனை பேருக்கு மத்தியில் சிறிதும் பயம் கொள்ளாமல் அவர்களை எதிர்த்து நின்ற தியாகு அளவிற்கு கூட, எதிர்ப்பு காட்டாமல் பயந்து, ஒதுங்கி நின்ற என் போன்ற கோழையின் பெயர் உங்களுக்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.